organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண் நுட்பங்கள்

அங்கக வேளாண்மையின் நெறிமுறைகள்

அங்கக வேளாண்மை நான்கு நெறிமுறைகளை கொண்டது:

1. ஆரோக்கியம்:

அங்கக வேளாண்மையானது மண், செடி, விலங்கு, மனிதன் மற்றும் உலகின் ஆரோக்கியத்தை ஒருங்கிணைத்து நிலைநிறுத்தி மேம்படுத்த வேண்டும். தனி மனித மற்றும் சமூகத்தின் ஆரோக்கியமானது இந்த சுற்று சூழலின் ஆரோக்கியத்துடன் பிணைக்கப்பட்டது என்று இந்த நெறி முறை வலியுறுத்துகிறது. வளமான மண், வளமான பயிர்களை விளைவிக்கிறது. இவை மனிதன் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தை பேணுகிறது.

2. சுற்றுச்சூழல்:

அங்கக வேளாண்மையானது, சுற்றுப்புற சூழல் மற்றும் சுழற்சிகளை சார்ந்திருக்க வேண்டும். அவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு அவற்றை நிலைநாட்ட வேண்டும். அங்கக வேளாண்மை என்றுமே சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைக்காத்து அதனுடன் இணைந்து செயல்படுதல் வேண்டும்.

அங்கக மேலாண்மை, இடம், சுற்றுச்சூழல், நடைமுறை இவற்றிற்கு ஏற்றார்போல் மாறுபடும். உள்ளீடு பொருட்களின் அளவை குறைக்க மறுசுழற்சி, மறு உபயோகம், சிறந்த பொருள் மேலாண்மை மற்றும் சக்தி மேலாண்மையை பின்பற்றுதல் வேண்டும். இது இயற்கை மூலதனப் பொருட்களை சிக்கனமாக உபயோகிக்க உதவுகிறது.

3. நம்பகத்தன்மை:

அங்கக வேளாண்மை மற்ற உயிரினங்களுக்கு வாழ நல்லதோர் இயற்கை சூழலை அமைத்து தருவதாக இருக்க வேண்டும். உணவுப் பற்றாக்குறையை நீக்கி மக்களுக்கு தரமான வாழ்வினை அளிக்க வல்லதாக இருத்தல் வேண்டும்.

வருங்கால சந்ததியினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இயற்கை மூலதனத்தை உபயோகப்படுத்தும் முறையாக அங்கக வேளாண்மை அமைய வேண்டும்.

4. கவனித்தல்:

அங்கக வேளாண்மையை பின்பற்றுபவர்கள் உற்பத்தியின் தரத்தையும் அளவையும் அதிகப் படுத்த முயற்சிக்க வேண்டும். அம்முயற்சி பாதுகாப்பானதாகவும் சிக்கனமானதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு செய்தல் நமது சுற்றுச்சூழலை பேணிக்காக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு தீங்கு விளைவிக்காததாகவும் அமையும்.