காப்புரிமை :: பதிப்புரிமை

பதிப்புரிமை என்பது ஒரு வேலை முடிந்தவுடன் அமலுக்கு வருவது. இதற்கு காப்புரிமை போல பதிவு செய்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கல்வித் துறையின் பதிப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியம். இங்கு பதிவு செய்வது சட்டப்படி முதனிலை உரிமையாகக் கருதப்படுகிறது.பதிப்புரிமை என்பது புதினம், கவிதைகள், நாடகங்கள், பத்திரிக்கைகள், கணிணித் திட்டங்கள், புள்ளி விவரங்கள், படங்கள், இசை, கலவைகள், சிலைகள், கட்டிட வடிவங்கள், விளம்பரங்கள், வரைபடங்கள் மற்றும் தொழில்நுட்ப ஓவியங்கள் போன்ற பல்வகைப் படைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

பதிப்புரிமைச் சட்டம் 1957 என்பது 1958 ம் ஆண்டு ஜனவரியிலிருந்து அமுலுக்கு வந்தது. இச்சட்டம் 1983, 1984, 1992, 1994, 1999 என ஐந்து முறை மாற்றம் செய்யப்பட்டது. இதில் 1994 ஆம் ஆண்டு மாற்றம் முக்கியமானதாகக் கருதப்பட்டது.

பதிப்புரிமை பெற புதுதில்லியில் கல்வித் துறையின் கீழ் உள்ள பதிப்புரிமை அலுவலகத்தில் படிவம் IV ல் விண்ணப்பிக்கலாம். இதனுடன் பதிவு செய்யும் படைப்பின் 4 நகல்கள் மற்றும் அறிக்கை விவரம் விண்ணப்பக் கட்டணத்துடன் சேர்த்து விண்ணப்பிக்கலாம். முதலில் பதிவு அலுவலர்கள் ஒரு பதிவு எண், பதிவு தேதி மற்றும் இரசீது ஆகயவற்றை வழங்குவார்கள். பின்பு அந்த விண்ணப்பம் அலுவலர்களால் பரிசோதிக்கப்பட்டு ஏதேனும் குறைபாடு இருந்தால் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படும். அவ்வாறின்றி படைப்பு புதியதாக இருந்தால் அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

பதிப்புரிமைக் காலம்:
ஒவ்வொரு வகைப் படைப்பிற்குமான பதிப்புரிமைக் காலம் மாறுபடும். ஏனெனில் பதிப்புரிமை பல வகைப்படும். இலக்கியம், இசை போன்ற புகைப்படம் தவிர பிறவற்றிற்கு படைப்பளரின் ஆயுட்காலம் வரையிலும் மற்றும் அவரது இறப்பிற்குப் பிறகு  60 ஆண்டுகள் வரையிலும் பதிப்புரிமை வழங்கப்படும். படைப்பளரின் ஆயுட்காலம் வரையிலும் அப்படைப்பு வெளியிடப்படவோ விற்கப்படவோ இல்லையெனில் பின்பு 60 ஆண்டுகாலம் வரை உரிமை நீட்டிக்கப்படும்.

சினிமா படக்கலைத்துறை படங்கள், புகைப்படங்கள், கணினித் திட்டங்கள் போன்றவை 60 வருடங்கள் பதிப்புரிமை பெற்று பின்பு அப்படைப்புகள் பொது உபயோகத்திற்கு வந்து விடும். அதேபோல் ஒலிப்பதிவுகள் பதிவு செய்ய விண்ணப்பித்த நாளிலிருந்து 60 வருடங்கள் வரை செல்லும்.

பதிவுரிமைச் சின்னத்தின் (©) பயன்பாடு
பதிப்புரிமை பெற்ற எவரும் தமது படைப்புரிமையை பொது மக்களுக்கு வெளிப்படுத்த இச்சின்னத்தை பயன்படுத்தலாம். இச்சின்னம் C என்ற ஆங்கில எழுத்தைச் சுற்றி ஒரு வட்டத்துடன்  கூடியதாக இருக்கும். 
பதிப்புரிமை (©) என்ற குறியீட்டைத் தொடர்ந்து பதிப்புரிமையாளரின் பெயர் முகவரி மற்றும் முதல் வெளியீட்டு ஆண்டு என்றவாறு இருக்கும்.

எ.கா: (©) ip firms directory 1999.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014