மண்

நிலத்தை தயார் செய்தல்

மறுதாம்புப் பயிர்

இடைவெளி மற்றும் நடவு செய்தல்

அடர் நடவு முறை

பயிர் திட்டம்

இடை உழவு முறைகள்

வாழை இலை சாகுபடி

 

 

மண்

  • வாழை மிகக் குறைவானது முதல் மிக அதிகமான ஊட்டச்சத்து உள்ள மண்ணிலும் வளரும்

  • சாகுபடி செய்ய தொடங்கும் முன் மண்ணை ஆய்வு செய்ய வேண்டும்

  • மண் நல்ல வடிகால் வசதியுடன், போதுமான வளத்துடன், ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்.

  • ஆழமான, ஊட்டசத்து நிறைந்த இரும்பொறை மண் மற்றும் கலந்த இரும்பொறை மண்ணில் 6 – 7.5 கார அமிலத் தன்மையுடன் உள்ள மண்ணில் வாழை நன்றாக வளரும்

  • நன்கு நீர் வடியாத, காற்றோட்டம் இல்லாத, ஊட்டச்சத்துக் குறைந்த மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல.

  • அதக களிமண், மணல் கலந்த மண், களர் மற்றும் உவர் நிலங்களில் வாழையை சாகுபடி செய்ய முடியாது.

  • நீர் வடியாத அதிக கரிசல் மண், அதிக மணல் கலந்த மண், மேடு பள்ளங்களில் சாகுபடி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

  • மண் அதிக அமிலத்தன்மையுடன் அல்லது அதிகக் காரத் தன்மையுடனோ இருக்கக் கூடாது. அதிக தழைச் சத்துடன் அதிக அங்ககப் பொருளுடன் இருக்க வேண்டும். போதுமான மணிச்சத்தும், அதிகமான சாம்பல் சத்தும் உள்ள மண் சாகுபடி செய்யத் தேவை.

மேலே செல்க

நிலத்தை தயார் செய்தல்

  • நன்செய் நிலம் : இதற்கு எந்த விதமான உழவு முறையும் தேவையில்லை. லேசாக மண்ணைப் பறித்து, அதன் மேல் நேர்த்தி செய்த கன்றுகளை நட்டுப் பின் மண் அணைக்க வேண்டும்.

  • தோட்டக்கால் நிலங்களுக்கு : 2 முதல்  4 முறை நன்கு உழ வேண்டும்.

  • படுகை நிலங்களுக்கு : மண் வெட்டியால் ஒரு அடி ஆழத்திற்குக் கொத்திவிட வேண்டும்.

  • மலைப் பகுதிகளுக்கு : வனப்பகுதியை சரி செய்து சமஉயர வரப்பு அமைக்க வேண்டும்.

  • பயிரிடுவதற்குமுன், பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப்பூண்டு, தட்டைப்பயிறு, வகைகளை பயிர் செய்து, நிலத்திலேயே உழுது விடவேண்டும்.

  • சுழல் கலப்பை (அ) பலுகு கொண்டு மண்கட்டிகளை உடைத்து நிலத்தைப் பண்படுத்த வேண்டும். நிலத்தைத் தயார் செய்யும் போது, எருவை (50 டன்/எக்டர் கடைசி முறை பலுகு கொண்டு உழும்போது) அடியுரமாக இட்டு, மண்ணுடன் கலக்க வேண்டும்.

  • கத்தி பலுகு (அ) லேசர் சமப்படுத்தும் கருவிக் கொண்டு நிலத்தைப் பண்படுத்துதல் என்பது பாசன நீரை சேமித்து வைக்கப் பயன்படும் ஒரு புதிய தொழில்நுட்பமாகும். வயல் முழுவதும் லேசர் கற்றை உதவியுடன் எந்த இடத்தில் சரிவு உள்ளது என்பதைக் கண்டறிந்து நிலத்தைப் பண்படுத்துகிறது.

  • அதிக மேடுபள்ளங்கள் உடைய நிலங்களில் கூட, இந்த லேசர் எல்லா இடங்களுக்கும் பரவுகிறது. இதனால் மண்ணில் நீர் சேமிக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்களை சரியாக பயன்படுத்த முடிகிறது. துல்லிய பண்ணையம் செய்ய ஏற்றது. அதிக விளைச்சல் பெற உதவுகிறது.

  • சால்கள் தேவைப்படும் இடைவெளியில் நீளவாக்கில் மற்றும் குறுக்குவாக்கில் அமைக்கப்படுகிறது. சால் குழிகளின் அளவு 0.6 x0.6x0.6 மீ இருக்குமாறு குழிகள் வெட்டி கன்றுகளை நட தயார் செய்யப்படுகிறது.

சுழல் கலப்பையுடன் இயங்கும் மிகச் சிறிய டிராக்டர்

 

சட்டிக் கலப்பை

சுழல் கலப்பை

 

மேலே செல்க

 

மறுதாம்பு பயிர்

வாழை தொடர்ந்து சந்ததிகளை உருவாக்கும் பல்லாண்டு தாவரம் ஆகும். நடவு செய்த பின்பு வருகின்ற முதல் சுற்று பயிர் முதல் பயிர் நிலை எனப்படுகிறது.  மறுதாம்பு பயிரானது அறுவடைக்கு பின்பு தோன்றும் பக்க கன்று அல்லது தொடர் கன்று ஆகும். இரண்டாவது  சுற்று கன்று முதல் மறுதாம்பு பயிர் என‌வும், மூன்றாவது சுற்று கன்று இண்டாவது மறதாம்பு பயிர் எனப்படுகின்றது

வாழையின் வாழ்க்கை சுழற்சியில் இரு நிலைகள் உள்ளன :
      • வளர்ச்சி நிலை

      • இனப்பெருக்க நிலை

  • வளர்ச்சி நிலை அல்லது தண்டு உருவாகும் நிலை ஆனது நடப்பட்ட திசுவளர்ப்பு கன்றிலிருந்து இலைகள் விடுவதுடன் ஆரம்பித்து, நுனியில் மஞ்சரி தோன்றுவதுடன் முடிவடைகிறது.  இனப்பெருக்க நிலை, வளர் நுனி மஞ்சரி நுனியாக மாறுவதுடன் ஆரம்பமாகிறது.  இவ்விரு பிரிவுகளும் விதிப்படி அல்ல.  பொதுவாக மரத்தின் உச்சியில் மஞ்சரியானது நடவுக்கு பின்‌பு 7-8 மாதங்களில் தோன்றுகிறது. காய் வளர்ச்சி அடையும் காலம் அதாவது பூப்பதற்கும் அறுவடைக்கும் இடையே உள்ள காலம், வளர்ச்சிப் பருவத்தின் இனப்பெருக்க காலத்தை நிறைவு செய்கிறது.

வாழ்க்கை சுழற்சியில் வாழை மரம் மூன்று முக்கிய பகுதிகளை தோற்றுவிக்கிறது.
  1. தரை கீழ் கிழங்கு , வேர் மற்றும் பக்க கன்றுகளை தோற்றுவிக்கிறது.

  2. பொய்தண்டு , இலை உறையால் சுற்றப்பட்டும் , இலைகளையும் கொண்டுள்ளது.

  3. மஞ்சரி, கனியாக மாறுகின்ற பெண் மலர்கள் கொண்டது.

  • வாழ்க்கை சுழற்சியின் நீளம் இரகத்தினை பொறுத்தது. நன்கு வளரும் நிலையில், இரண்டாவது சுழற்சியின் மகசூல் முதல் மகசூலை விட அதிகமாக இருக்கும். தாய் மரம் மற்றும் மறு தாம்பு பயிர் ஆதாரத்திற்கு போட்டியிடும், மறுதாம்பு பயிரானது, பொதுவாக போதுமான அள‌‌வு பாசன வசதியுள்ள பகுதிகளில் பின்பற்றப்படுகிறது. வளர்ச்சி நிலையின் போது ஆதாரத்தின் பெரும்பகுதி தாய் மரத்திற்கு திருப்பி விடப்படுகிறது.  பூக்கும் பருவத்தின் போது மறுதாம்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌பு வளர்ச்சி அதிகரிக்கிறது.  எனவே சரியாக பராமரிப்பது அல்லது பக்க கன்றுகளை அகற்றுவது மிக முக்கியம் ஆகும்.  முறைப்படி, தொடர்கன்று அல்லது பக்க கன்று நடப்பட்ட  மரத்தில் மஞ்சரி தோன்றியவுடன் மட்டுமே விடப்படுகிறது, முதல் பயிருக்கான அதே சாகுபடி முறைகள் மட்டுமே மறுதாம்பு பயிருக்கும் தொடரப்படுகிறது.  திசு வளர்ப்பு மூலம் பெறப்பட்ட கன்றுகள் சீரான வளர்ச்சி ‌, விரைவான மற்றும சீரான முதிர்ச்சி, முறையான மறுதாம்பு நிர்வாகம் ஆகியவை சீரான மறுதாம்பு பயிரையும் தரும்.  ஆகையால், 30 மாத காலத்திறகுள் (அதாவது 12 மாத நட‌‌‌‌வு பயிர்‌, அடுத்தடுத்து அறுவடைக்கு பின்பு 9 மாதங்கள் கழித்து) மூன்று பயிர், ஒன்று நடவு பயிர் மற்றும் இரண்டு மறுதாம்பு பயிரினை மகசூல் குறைபாடு இன்றி அறுவடை செய்யலாம்.

மறுதாம்பு நிர்வாகம்

  • பொதுவாக வயல், அதனை சுற்றியுள்ள பகுதிகளை களைகளின்று வைப்பது நோய் தொற்று பரவுவதை தடுக்கிறது. திசு வளர்ப்பு பயிர்கள் பொதுவாக ஆரோக்கியமாக, வைரஸ் தொற்றின்றி இருப்பினும்‌ வயல்களை களைகளின்றி சுத்தமாக வைப்பதன் மூலம் மட்டுமே வயல்களின் நோய் தொற்றினை தவிர்க்க முடி‌‌யும்.

  • மறுதாம்பு நிர்வாகம் நிலையான வருமானத்திற்கு அவசியமாகும். தேனி போன்ற இடங்களில் மூன்று மறுதாம்பு பயிர் 24-25 மாதங்களில் எடுக்கப்படுகிறது.

  • ஒருமுறை பூக்கள் பூத்து காய்கள் முழுதும் திறந்த‌வுடன், குலைகள் பாவாடை பை கொண்டு மூடப்படுகிறது.  இது பழங்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாப்பதுடன் சீரான வெப்ப நிலையை‌யும் உட்புறத்தில் பராமரிக்கிறது. இது பழம் மற்றும் அதன் நிறத்திற்கு முக்கியம் ஆகும்.

மேலே செல்க

 

இடைவெளி மற்றும் நடுதல்

இடைவெளி

 
வீரிய ஒட்டு இரகங்கள்

 

 
தமிழ்நாடு ரகங்கள் - இடைவெளி

 

 

கர்நாடகா இரகங்கள் - இடைவெளி

 

கேரளா இரகங்கள் - இடைவெளி

 

நடவு செய்தல்

மே – ஜுன் அல்லது செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடவு செய்யலாம். பக்கக் கன்று ஒன்றை சிறிய குழிகளின் நடுவில் மண்ணிற்கு மேலே 5 செ.மீ. அளவிற்கு தண்டுப் பகுதி வெளியே தெரியுமாறு நடவேண்டும். நட்டபின் பக்கக் கன்றை சுற்றி மண்ணை அழுத்தி அமுத்துவதால் காற்றிடைவெளிகளை தவிர்க்கலாம். திசு வளர்ப்பு கன்றுகள் குழிகளின் மேலாக மண் மட்டத்திற்கு நடவேண்டும். கன்றுகளை நடுவதற்கு முன் வேர்களுக்கு எந்த வித சேதம் ஏற்படாமல் பாலித்தீன் பைகளை அகற்றவேண்டும். கன்றுகளை நட்டபின் பாசனம் செய்யவேண்டும். கன்றுகளை நட்ட உடனேயே பகுதியளவிற்கு நிழல் ஏற்படுத்தவேண்டும்.

  • வருடம் முழுவதும் வாழையைப் பயிரிடலாம். அதிகக் குளிர் மற்றும் அதிக மழை பெய்யும் மண்ணில் பயிரிடமுடியாது.

  • பருவ மழைக்குப் பிறகு நடவு செய்ய தகுந்த காலம் (அக்டோபர் – நவம்பர்) ஆகும்.

  • பாசன நீர் சரியாக கிடைத்தால், கன்றுகளை பிப்ரவரி – மார்ச் மாதத்தில் கூட நடலாம்.

  • கன்றுகளின் எண்ணிக்கை, பயிரிடும் வகை, நிலத்தின் அமைப்பு மண்ணின் தரத்தைப் பொறுத்து நடவு செய்யப்படுகிறது.

  • ஒரு பயிருக்கு 25 கிராம் சூடோமோனஸ் ப்ளுரோசென்ஸ் என்ற அளவில் கன்றுகளை நடும் போது குழிகளில் இடவேண்டும்.

பக்கக் கன்றுகளை முன்நேர்த்தி செய்தல்

  • கிழங்குகளின் அழுகிய பகுதிகளை, வேர்களை வெட்டி சரி செய்யவும். தண்டுப்பகுதியின் 20 செ.மீ அளவு இருக்குமாறு கிழங்கை வெட்டி, பக்கக்கன்றுகளை அளவுக்கேற்றவாறு தரம் பிரிக்க வேண்டும்.

  • ரஸ்தாளி, மொந்தன், விருப்பாட்சி இரகங்களில் வாடல் நோயைத் தவிர்க்க, தாக்கிய வேர்கிழங்கை வெட்டி, 0.1% எமிசான் கரைசலில் (1 லிட்டர் நீரில் 1 கிராம்) 5 நிமிடங்களுக்கு நனைத்து எடுக்க வேண்டும்.

  • ஒரு பக்கக் கன்றுக்கு 40 கிராம் கார்போப்யூரான் 3ஜி குருணைகளை எடுத்து நேர்த்தி செய்ய வேண்டும். ( 4 பங்கு களிமண், 5 பங்கு நீர், கார்போப்யூரான் கலந்த கலவையில் கிழங்கை நனைப்பதால் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்)

  • மாற்றாக, கிழங்கை 0.75% மோனோகுரோட்டோபாஸ் கரைசலில் நனைத்து, 24 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும்.

  • 5-6 இலைகளை உடைய திசு வளர்ப்பு வாழையைப் பயன்படுத்த வேண்டும்.

நடவு செய்யும் வகை முறைகள்

வாழை சாகுபடியில் 4 விதமான நடவு முறைகள் உள்ளன. அவை,

அ.ஒற்றை வரிசை முறை

ஆ.இரட்டை வரிசை முறை

இ.சதுர நடவு முறை

ஈ.முக்கோண வடிவ நடவுமுறை

ஒற்றை வரிசை முறை

 

 

  • இந்த முறையில், வரிசைகளுக்கு உள்ளே இடைவெளி குறைவு, வரிசைக்கு இடையே உள்ள இடைவெளி அகலமாக இருக்கும்.

  • இந்த முறை மூலம் நல்ல காற்றோட்டமும், ஈரமான இலைகள் விரைவில் உலரவும், பூஞ்சாண நோய் தாக்குதல் குறையவும் வாய்ப்புள்ளது.

  • ஆனால், தோட்டத்தில் குறைவான எண்ணிக்கையில் மரங்கள் இருப்பதால் விளைச்சல் குறைந்துவிடும்.

இரட்டை வரிசை முறை

 

  • இந்த முறையில், 2 வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளி 0.9 – 1.20 மீ. மற்றும் மரத்திற்கு மரம் இடைவெளி 1.2 – 2 மீ.

  • இந்த இடைவெளியில் இடை உழவு செயல்களை எளிதாக செய்ய முடிகிறது. சொட்டுநீர்ப் பாசனத்திற்கு ஆகும் செலவும் குறைகிறது.

சதுர நடவு முறை:

 

  • இந்த முறை பொதுவாக பின்பற்றப்படும் முறையாகும். இந்த முறையில் வாழைத் தோட்டத்தை வடிவமைப்பது எளிது.

  • 1.8x1.8 மீ. இடைவெளி விடவும்.

  • இந்த முறையில் கன்றுகளை சதுரத்தின் மூலைக்கு ஒன்றாக நடவேண்டும்.

  • நான்கு மரங்களுக்கு நடுவில் உள்ள இடைவெளியில் குறுகிய கால பயிர்களை பயிரிடலாம்.

  • இந்த முறை ஊடுபயிரிடவும், இரண்டு திசைகளில் சாகுபடி செய்யவும் பயன்படுகிறது.

முக்கோண நடவு முறை
  • இந்த முறை திசு வளர்ப்பு வாழைக் கன்றுகளை நடவு செய்ய ஏற்ற முறையாகும்.

  • இதில் வரிசைகளுக்கு இடையே 1.5 மீ. இடைவெளியும், மரத்திற்கு மரம் 1.8 மீட்டரும் விடவேண்டும்.

நடவு முறைகள்

வாழைக் கன்றுகளை மே – ஜீன்  மாதங்கள் அல்லது செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடவு செய்யலாம். வாழைப் பக்கக் கன்றுகளை  தனித்தனியாக  குழிகளின் நடுவில், 5 செ.மீ. அளவு தண்டுப்பகுதி மண்ணிற்கு மேலே இருக்குமாறு, நேராக நடவேண்டும். பக்கக் கன்றுகளை சுற்றியுள்ள மண்ணை நன்றாக அழுத்தவேண்டும். இதனால், பக்கக் கன்றுகளை சுற்றி உள்ள காற்று இடைவெளிகளை  தடுக்கலாம்.தரை மட்டத்தில் குழிகளின் மேற்புறத்தில் திசு வளர்ப்பு கன்றுகளை நடலாம். கன்றுகளை நடுவதற்கு முன்,பக்கக் கன்றுகளின் வேர்கள் சேதம் அடையதவாறு பாலித்தீன் பைகளை அகற்ற வேண்டும்.கன்றுகளை நடவு செய்த பின் பாசனம் செய்யவேண்டும்.கன்றுகளை நட்ட பின் நிழல் இருக்குமாறு உடனடியாக செய்யவேண்டும்.

குழியில் ஊன்றும் முறை

  • சால் முறை

  • அகழி நடவு முறை

குழியில் ஊன்றும் முறை
  •  புன்செய் நில சாகுபடி முறையில், குழியில் ஊன்றும் முறை பொதுவான ஒரு முறையாகும். 60x 60 x60 செ.மீ. அளவுள்ள குழிகளை தோண்டி, அதில் மண், மணல், தொழு உரம் 1:1:1 என்ற விகிதத்தில் உள்ளவாறு கலந்து, நிரப்பவேண்டும்.  இதில், ஒரு குழிக்கு 2 (அ) 3 (அ) 4 பக்கக் கன்றுகள் நடுவார்கள். பக்கக் கன்றுகளை குழியின் நடுவில் நட்டு, மண்ணைச் சுற்றி அணைக்கவேண்டும். பிப்ரவரி முதல் மே மாதத்தில் நடவு செய்வார்கள். ஆனால், வட இந்தியாவில், ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் நடவு செய்வார்கள். தென்னிந்தியாவில் கோடைக் காலம் தவிர, எந்த நேரத்திலும் நடவு செய்வார்கள். இது பொதுவாக குட்டை கேவண்டிஷ், ரஸ்தாளி, ரொபஸ்டா, பூவன் மற்றும் கற்பூரவள்ளி வாழை இரகங்களில் பின்பற்றப்படுகிறது. இருந்தாலும், இந்த முறையில் அதிக ஆட்கள் தேவையும் மற்றும் அதிக செலவும் ஆகும். இந்த முறையில் தேவையான ஆழத்தில் நடவு செய்வதால், மண் அணைத்தல் தேவையற்று போகிறது. தற்பொழுது இந்த முறை அதிகம் நடைமுறையில் இல்லை.

குழியில் ஊன்றும் முறை

குழியில் ஊன்றும் முறை

குழியில் ஊன்றும் முறை

 

சால் முறை
  • இந்த முறை பொதுவாக பின்பற்றப்படும் முறையாகும். நிலத்தை தயார் செய்த பிறகு, 20 -25 செ.மீ ஆழமுடைய குழிகளை டிராக்டர் கொண்டு (அ) பார்அமைக்கும் கருவி கொண்டு 1.5 மீ இடைவெளி இருக்குமாறு பக்கக் கன்றுகளை சால்களில்  தேவையான இடைவெளி விட்டு நடவேண்டும். தொழு உரத்தை மண்ணுடன் கலந்து இட்டு, பக்கக் கன்றுகளை சுற்றிலும் மண்ணை இறுக்கமாக அணைக்கவேண்டும். வருடா வருடம் சாகுபடி செய்யும் முறைகளில் சால்களில் நடும் முறையே பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் கிழங்குகள் வெளியே தெரிவதால், மண் அடிக்கடி அணைக்கவேண்டும்.

சால் முறை

சால் முறை

சால் முறை

 
அகழி நடவு முறை
  • தமிழ்நாட்டில் காவேரி டெல்டா பகுதியின் நன்செய் நில சாகுபடியில் இந்த அகழி நடவு முறை வழக்கத்தில் உள்ளது. நெல்லைப் போன்று அதிகப்படியான நீர் பயன்படுத்தி, நிலம் தயார் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு நீரை வயலில் நிறுத்தி வைத்து, பின்  வயலிலிருந்து நீரை வெளியேற்றவேண்டும். சேற்று வயலில் பக்கக் கன்றுகளை மண்ணில் அமிழ்த்தி நடவு செய்யப்படுகிறது. ஒரு வாரம் கழித்து 15 செ.மீ. ஆழமுள்ள அகழிகள் தோண்டி, ஒவ்வொரு பாளத்திலும் 4 (அ) 6 செடிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். பக்கக் கன்றுகள் 1-3 இலைகள் வரும் வரை நடவு செய்து ஒரு மாதத்திற்கு பிறகு 20-25 செ.மீ. ஆழத்திற்கு அகழிகளை ஆழப்படுத்தவேண்டும். மழைக்காலத்தில் நடவு செய்த மூன்றாவது மாதத்தில் அகழிகளை 60 செ.மீ. க்கு   அகலப்படுத்தி, ஆழப்படுத்தவேண்டும். சில அகழிகள் வடிகால்களாக பயன்படுத்தப்படுகிறது. 2 மாதங்களுக்கு பிறகு, அகழிகளை சுத்தப்படுத்தவேண்டும். அங்கக சுழற்சிக்காக பயிர்களின் மட்கிய கழிவுகள் உரமாக பயன்படுகிறது.  

அகழி நடவு முறை
அகழி நடவு முறை
அகழி நடவு முறை

 

மேலே செல்க

 

அடர் நடவு முறை

  • அடர் நடவு முறை என்பது பொதுவாக பரிந்துரைக்கப்படும் இடைவெளியை விட குறைந்த இடைவெளியில் நடவு செய்வதாகும்.

  • ஓர் அலகு பரப்பிலிருந்து கிடைக்கும் அதிக உற்பத்தித் திறனுக்கும் சாதாரண முறையில் கிடைக்கும் வரையறுக்கப்பட்ட விளைச்சலுக்கும் இடையில் உள்ள இடைவெளியை ஈடுகட்ட சரியான பயிர் இடைவெளியை தேர்ந்தெடுக்கவேண்டும்.

  • மிக அதிக விளைச்சல் கொண்ட நல்ல தரமுடைய பழத்திற்காக, நிலையான பொருளாதார வாழ்விற்காகவும்  உகந்த பயிர் அடர்த்தியை பராமரிக்கவேண்டும்.

  • இடம், சாகுபடி செய்யும் முறைகள், மண் வளம், மேலாண்மை மற்றும் பொருளாதார நிலைமையைப் பொருத்து பயிர்களுக்கு இடையேயான உகந்த இடைவெளி வேறுபடுகிறது.

  • நிலவும் காலநிலை, தோட்டத்தின் வீரியம் மற்றும் நீடித்து வாழ்தல் போன்ற காரணிகள் பயிரின் அடர்த்தியை தீர்மானிக்கின்றன.  

  • இந்த முறையில் ஒரு எக்டருக்கு 4444 – 5555 வாழை மரங்களை வளர்க்கலாம். மகசூலும் ஒரு எக்டருக்கு  55 – 60 டன் அதிகமாகக் கிடைக்கும்.

  • பொதுவாக சதுர அமைப்பு ( அ) செவ்வக அமைப்பு முறையில் நடவு செய்யப்படுகிறது.

  • ஒரு குழியில் மூன்று பக்கக் கன்றுகளை 1.8x2.0 மீ ( 4600 கன்றுகள்/எக்டர்) என்ற இடைவெளி கேவண்டிஷ் இரகத்திற்கும், நேந்திரன் இரகத்திகு 2 x3 மீ ( 5000 கன்றுகள் /எக்டர்) என்ற இடைவெளியும் விடப்படுகிறது.

அடர் நடவு முறை
அடர் நடவு முறை
அடர் நடவு முறை

 

பயிர் பரப்பு மற்றும் ஒளி குறுக்கீடு:

  • மற்ற பழ வகைகளைப் போல் அல்லாமல், வாழையில் தழை வளர்ச்சி, பூத்தல், பழத்தின் வளர்ச்சி பருவத்தைப் பொருத்து இல்லை. வாழையின் வளர்ச்சி நடவு செய்யும் காலம், நடவு செய்யும் கன்றுகளின் வகை மற்றும் அளவு, நிலவும் வெப்பநிலை போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றது.

  • பயிரின் அடர்த்தி மற்றும் அதன் குறுக்கீடு. 1.2 x1.2மீ. அளவு பயிர் இடைவெளி விடும் போது, குறைந்த அளவு சூரிய ஒளி படுவதால் சக்தியாக மாற்றுத் திறன் அதிகமாக இருக்கும். 2.1x2.1மீ. அளவு இடைவெளி விடும் போது சக்தியாக மாற்றும் திறன் குறைவாக இருக்கும்.

ஒளி குறுக்கீடு
ஒளி குறுக்கீடு

 

பயிரின் உயரம் மற்றும் தடிமன்:

  • இடைவெளியை குறைப்பதால் தண்டின் உயரமும் அதிகரிக்கும்.

  • ரகங்களைப் பொருத்து, பயிரின் உயரம் மாறுபடும்.

  • பயிரை அடர்த்தியாக நடவு செய்வதால் தண்டின் தடிமன் குறைகிறது.

  • ரொபஸ்டா வாழையின் தடிமன் பயிரின் அடர்த்தி வேறுபடுவதால் மாறுவதில்லை. 1.2 x1.2 மீ். அளவு குறைந்த இடைவெளியிலும் உயரமான மரங்கள் வளர்கின்றன.

  • பூவன் ரகத்தில், 2.1 x2.1மீ. அளவு இடைவெளியிலிருந்து 1.5x1.8 அளவு  இடைவெளிக்கு குறைக்கும் போது மரத்தின் உயரம் அதிகரிக்கிறது, தண்டின் தடிமனும் குறைகிறது.  

பயிரின் உயரம் மற்றும் தடிமன்
பயிரின் உயரம் மற்றும் தடிமன்

 

இலைகளின் எண்ணிக்கை மற்றும் இலை பரப்பமைவு குறியீடு

  • இலை பரப்பு தனித்தன்மைகளான இலை பரப்பமைவு குறியீடு மற்றும் சூரிய ஒளிக் கதிர்களை ஒளிச்சேர்க்கை செயல் மாற்றம் செய்யும் விகிதம் ஆகிய பண்புகள் பயிர் அடர்த்தியுடன்  நேரடி தொடர்புடையவை.

  • அடர் நடவு செய்வதால் இலைபரப்புக்குள்ளே குறைவான வெப்பநிலை நிலவுவதால் புதிதாக இலை வெளிவருவது குறைகிறது.

இலைகளின் எண்ணிக்கை
இலைகளின் எண்ணிக்கை

 

பக்கக் கன்று உற்பத்தி மற்றும் வேர் வளர்ச்சி:

  • அடர் நடவு முறையை விட அதிக இடைவெளி விட்டு நடும் போது  ஒரு மரத்தில் பக்கக் கன்றுகளின் எண்ணிக்கை அதிகளவில் தோன்றும்.

  • ரொபஸ்டா மற்றும் பூவன் ரகங்களில் குறைந்த இடைவெளி விட்டு நடும் போது பக்கக் கன்றுகளின் எண்ணிக்கை குறையும்.

  • பயிரின் அடர்த்தி அதிகமாகும் போது, வேரின் நீளமும் அதிகரிக்கும்

பக்கக் கன்று உற்பத்தி மற்றும் வேர் வளர்ச்சி
பக்கக் கன்று உற்பத்தி மற்றும் வேர் வளர்ச்சி

 

களை வளர்ச்சி

  • அடர் நடவு முறையில் (ஒரு எக்டருக்கு 4440 முதல் 6950 மரங்கள்) களை வளர்ச்சி, காராமணியுடன் ஊடுபயிரிடுட்டாலும் குறைவாக உள்ளது.

  • அடர் நடவு முறையில், பயிரின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் களை வளர்ச்சி குறையும். காராமணி ஊடு பயிராக பயிரிடும் போது, களை வளர்ச்சி தடைபடுவதோடு, மண்ணின் வளம் மேம்படுகிறது.

களை வளர்ச்சி

 

பூத்தல் மற்றும் பழம் முதிர்ச்சியடைதல்

  • குட்டை கேவண்டிஷ் வாழைக்கு குறைந்தது 3.24 மீ. அளவு பரப்பளவு தேவைப்படுவதால், அதற்கு 1.8 x1.8 மீ (அ) 2.7x1.2 மீ. அளவு இடைவெளி விடவேண்டும்.

  • ஒரு எக்டருக்கு 1600 முதல் 10000 மரங்கள் என்ற பயிர் அடர்த்தியுடன்,1.0x1.1 முதல் 2.0x2.0 மீ. அளவு இடைவெளி இருந்தால், பூத்தல் மற்றும் பழம் முதிர்ச்சியடைதல் தாமதமாகிறது.

பூத்தல் மற்றும் பழம் முதிர்ச்சியடைதல்
பூத்தல் மற்றும் பழம் முதிர்ச்சியடைதல்

 

குலை எடை மற்றும் தரம்

  • குட்டை கேவண்டிஷ் ரகத்தில், 1.8x1.8 மீ் இடைவெளியில் ஒரு குழிக்கு இரண்டு கன்றுகள் என்று நட்டால், மகசூல் அதிகமாகலாம் அல்லது குலை அளவு மற்றும் பயிர் முதிர்ச்சியடையும் காலத்தை பாதிக்காது.

  • ரொபஸ்டா ரகத்திலும் கூட இரண்டு கன்றுகள் நட்டால், விளைச்சல் அதிகமாகும்.

குலை எடை மற்றும் தரம்

 

மகசூல்

  • வாழையில் அடர் நடவு முறையால் அதிக மகசூலைப் பெறலாம்.

  • அடர் நடவு முறையில்  காராமணி பயிருடன் ஊடுபயிரிடுதல், சரியான நேரத்திற்கு பாசனம் மற்றும் உரமிடுதலால், ரொபஸ்டா வாழை ரகத்தில் சீப்பின் அளவு மற்றும் வடிவத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், மகசூல்  மட்டும்  அதிகரிக்கும்.

  • அடர் நடவு முறையில் 1.8x3.6 மீ. இடைவெளியில் ஒரு குழிக்கு மூன்று – நான்கு பக்கக் கன்றுகள் நடும் போது உரங்களின் தேவையும் வேறுபடும்.

  • பரிந்துரைக்கப்பட்ட உர அளவில் 50,75 மற்றும் 100 சதம் அளவு தழை, மணி, சாம்பல் சத்துக்களை மூன்று முறை பிரித்து அளிக்கவேண்டும்.

மகசூல்
மகசூல்

 

நோய் தாக்கம்

  • குறிப்பாக அதிக மழைப் பொழிவு மற்று ம் கடற்கரையோர பகுதிகளில் அடர் நடவு முறை செய்யும் போது சிகாடோகா இலைப்புள்ளி நோய் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

  • வட கர்நாடகாவில், ராஜ்பூரி வாழையின் இரண்டாம் மறுதாம்பு பயிரில், அதிக இடைவெளியால் (2.4x2.4 மீ.) நோய் பாதிப்பு குறைவாக இருக்கும். திருச்சியில் அதிக இடைவெளி விடுவதை விட அடர் நடவு முறையில் ( ஒரு குழிக்கு 3 பக்கக் கன்றுகள்)  சிகாடோகா இலைப் புள்ளி நோய் பாதிப்பு குறைவாக இருக்கும்.

  • இரட்டை வரிசை நடவு முறையில், அதிக அடர்த்தி நடவால் ஒப்பு ஈரப்பதம் அதிகரிக்கிறது. இதனால், இலை ஈரப்பதம் நீண்ட நேரத்திற்கு இருப்பதால் நோயின் தாக்கம் அதிகமாகும்.

நோய் தாக்கம்
நோய் தாக்கம்

 

மேலே செல்க

பயிர்த் திட்டம்

முன்னுரை

  • உலகம் முழுவதும் உள்ள விவசாயிகள் வாழையை பலதரப்பட்ட சாகுபடி முறைகளில் உற்பத்தி செய்கிறார்கள். குறிப்பிட்ட மண், வானிலை நிலைமைகள் மற்றும் சந்தைவாய்ப்புகளில் விவசாயிகளின் நுண்மை, அனுபவம், பாரம்பரியத்தை இந்த சாகுபடிமுறைகள் எடுத்துக் காட்டுகின்றன.

  • பணம் மற்றும் வேலைவாய்ப்புகளில் பழப் பயிர் ஏற்றுமதி முக்கிய பங்கு வகித்தாலும், இவர்கள் பொருளாதார அல்லது சமூக ரீதியாகவும் பின்தங்கியுள்ளனர். ஒரே பயிரை தொடர்ந்து பயிரிடுவதால் சுற்று சூழல் பாதிப்படைகிறது. சந்தைகளில் பொருளுக்கு பொருள் விற்பனையில் போட்டி நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல், நுகர்வோரின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரே தீர்வு என்னவென்றால், பராம்பரியமாக ஒரே பயிரை பயிரிடும் முறையிலிருந்து பலதரப்பட்ட பயிர்களை பயிரிடும் முறைக்கு மாறவேண்டும்.

    1. புறக்கடை தோட்டம்
    2. பயிர் சுழற்சி
    3.ஊடுபயிரிடுதல்
    4. கலப்புப் பயிரிடுதல்
    5. பல் அடுக்கு பயிரிடுதல

புறக்கடைத் தோட்டம்

  • பராம்பரியமாக வாழை விளையும் பகுதிகளில் வாழையை புறக்கடை தோட்டத்தில் வளர்ப்பது பொதவான ஒன்றாகும்.ஏனென்றால், இதை அமைப்பது எளிதான ஒன்று,பண்ணை வீட்டை சுற்றியுள்ள இடங்களில் பயிரிடலாம், குறைவான முதலீடு, எளிதான பராமரிப்பு, குடும்ப நபர்களே பராமரித்துக் கொள்ளலாம். முறையற்ற இடைவெளி, உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகள் தேவைக்குக் குறைந்த அளவு பயன்படுத்துதல், அதிக உற்பத்தி திறன், நீண்ட பயிர்க் காலம் போன்றவை புறக்கடைத் தோட்ட முறையின் அம்சங்களாகும். கேரளாவில் சிறு விவசாயிகளின் நிலப்பரப்புகளில் பலப் பயிர்களை கலந்து பயிரிடும் புறக்கடைத் தோட்ட முறை  பராம்பரியமான ஒன்றாகும்.

  • இந்த பயிர்த் திட்டமானது, கேரள மக்களின் குடும்பத் தேவையைப் பொருத்து பயிர்களை உற்பத்தி செய்யும் முறையாகும். அவரவருடைய குடும்பங்களின் தேவைகள், அந்த பகுதியில் நிலவும் வானிலை, பொருளாதார காரணிகள், உணவு பழக்கவழக்கங்கள் போன்றவற்றைப் பொருத்து அமையும். பொதுவாக, பல்லாண்டு பயிர்களான தென்னை, பலா, தேக்கு, பாக்கு, முந்திரி மற்றும் பல பயிர்கள் மேல் அடுக்குகளிலும், அதைத் தொடர்ந்து மா, ஜாதிக்காய், மிளகு, பட்டை, கிராம்பு போன்ற பயிர்கள் இரண்டாவது அடுக்குகளிலும் பயிரிடப்படும்.

  • வாழை, மரவள்ளிக் கிழங்கு, சேனைக்கிழங்கு போன்றவை மூன்றாவது அடுக்கிலும், கடைசி தரை அடுக்கில் இஞ்சி, மஞ்சள், பைனாப்பிள் மற்றும் பலதரப்பட்ட காய்கறிப் பயிர்கள் பயிரிடப்படும். கேரளாவின் வீட்டுத் தோட்டங்களில் கால்நடைகளுடன் இணைத்து பயிரிடப்படுவதால் நிலையான உற்பத்தியும், வருமானமும் கிடைக்கிறது. கால்நடைகளில் பசுக்கள், ஆடுகள், எருமைகள் மற்றும் கோழிகள் வீட்டுத் தோட்டத்துடன் இனைந்து செய்வதால், குடும்பத்திற்கு கூடுதலான வருமானமும் கிடைக்கிறது.  

பயிர் சுழற்சி முறை

  • ஒரே நிலத்தில் இரண்டு பயிர் அல்லது அதற்கு அதிகமான பயிர்களை ஒரு பயிருக்கு பின் அடுத்தடுத்து பயிரிடுவதே பயிர் சுழற்சியாகும்.

  • முந்தைய பயிர் குடும்பம் இல்லாமல் பயிர் செய்வது நல்ல பலனைத் தரும். பயிர் சுழற்சியை 2 (அ) 3 வருடங்கள் வரை பின்பற்றலாம்.

  • இதனால், பண்ணை வருமானம் அதிகரிக்கும். களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

  • நோய் மற்றம் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது.

  • மண் அமைப்பு, மண்தரம், மண்ணில் அங்ககப் பொருளின் அளவை மேம்படுத்தலாம்

  • வாழையுடன் நெல், கரும்பு, பயிறு வகைகள், காய்கறிகள் போன்றவற்றுடன் பயிர் சுழற்சி செய்யலாம்

கலப்புப் பயிரிடுதல்

  • ஒரே நிலத்தில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர்களை சேர்த்து பயிரிடும் முறையே கலப்புப் பயிரிடுதலாகும். இதை பல பயிரிடுதல் முறை எனவும் கூறலாம். இதனால், மண்ணின் வளமும் மேம்படுகிறது, பயிர் மகசூல் அதிகரிக்கிறது. ஏனென்றால், இரண்டு பயிர்களையும் சரியாக தேர்ந்தெடுத்திருக்கும் போது, ஒரு பயிரின் வளர்ச்சியால் மற்றொரு பயிரின் வளர்ச்சி பாதிக்காது.

  • சாதகமற்ற வானிலை நிலவும் போது, கலப்புப் பயிர்களால் வருமானத்திற்கு உத்திரவாதம் கிடைக்கிறது. பழனி மற்றும் சேர்வராயன் மலைக் குன்றுகளில், வாழை அதிகமாக காப்பி பயிருக்கு நிழல் தரும் மரமாக வளர்க்கப்படுகிறது. கலப்பு பயிரிடுதல் முறையில், வாழை நிழல் தருவதற்கும், கோகோ, காப்பி, மிளகு மறறும் ஜாதிக்காய் போன்ற பயிர்களுக்கு நிழல் தரவும் பயிரிடப்படுகிறது.

  • கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசத்தின் கடற்கரையோரப் பகுதிகளில், தென்னை மற்றும் பாக்கு தோட்டங்களில் நெட்டை ரகங்களுடன் சேர்த்து பயிரிடப்படுகிறது. இது தவிர, வாழைத் தோட்டங்களில் மஞ்சள், இஞ்சி, சேனைக்கிழங்கு, பருத்தி, கொடி வகைகள் மற்றும் இதர காய்கறிகளுடன் ஊடுபயிரிடப்படுகிறது.   

கலப்புப் பயிரிடுதல்
கலப்புப் பயிரிடுதல்

 

பல் அடுக்கு பயிரிடுதல்

  • பொதுவாக கர்நாடகா மற்றும் கேரளா கடற்கரையோரங்களில் வேறுபட்ட மட்டங்களில் பயிர்கள் பயிரிடப்படுகிறது. அடர் நடவு முறையில்  மேல் அடுக்குகளில் தென்னை மற்றும் பாக்கு தோட்டங்களுக்கு அடுத்து வாழையும், அதைத் தொடர்ந்து மரவள்ளிக்கிழங்கு பயிரும், கீழ் மட்டத்தில் சேப்பங்கிழங்கு, மஞ்சள், இஞ்சி, பூண்டு பயிரும் பயிரிடப்படுகிறது. இதில் அதிகளவு இடுபொருள் மேலாண்மை முக்கிய அம்சமாக உள்ளது.

  • இந்த முறையில் பகுதி நெட்டை வாழை ரகமான பூவன் மற்றும் நெய் பூவன் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் வாழை சாகுபடி/தோட்டம் பல்அடுக்கு தோட்டமாக மஞ்சள் மற்றும் இஞ்சி பயிர்கள் தரை மட்டத்திலும், சேனைக் கிழங்கு முதல் அடுக்கிலும், செவ்வள்ளி இரண்டாவது அடுக்கிலும், வாழை மூன்றாவது அடுக்கிலும் பயிரிடப்படுகிறது.

பல் அடுக்கு பயிரிடுதல்
பல் அடுக்கு பயிரிடுதல்

 

பயிர் திட்ட முறைகள்

பயிர் திட்ட முறை, பொதுவாக வாழை பயிரிடப்படும் இடத்தைப் பொருத்தும், அந்த பகுதியில் உள்ள பூச்சி, நோய், நூற்புழுக்கள் மற்றம் அவை தாக்கும பயிர்கள், மண்ணின் வளம் ஆகியவந்நை பொருத்து அமைகிறது. தமிழ்நாட்டில் திருச்சி, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில நெல் சாகுபடிக்கு அடுத்து வாழை பயிரிட்படுகிறது அல்லது நெல், பயிறு வகைகள், வாழை என்ற அடிப்படையில் பயிர் சுழற்சி செய்யப்படுகிறது. இந்த பயிர் சுழற்சி முறையில் நெல் பயிரிடப்படுவதால் நிலத்தில் 3 மாதத்திற்கு மேலாக தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. அதனால் வாழையைத் தாக்கும் பியுசேரியம் வாடல் நோயின் வித்துக்கள் அழிக்கப்படுகின்றன. மேலும் பயிறு வகைகளும் பயிரிடப்படுவதால் தழைச்சத்து மண்ணில் சேர்ந்து, மண்ணின் வளம் அதிகரிக்கிறது. இந்த மாதிரியான பயிர் சுழற்சி ( நெல்-பயறூவாழை) முறையானது மொந்தன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி முதலிய ரகங்கள் வாகுபடி செய்வதற்கு மிகவும் ஏற்றதாகும்.
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து அதிகமான லாபத்தை எடுப்பதற்கு தமிழ்நாட்டில் தேனி, மதுரை, கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஊடுபயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பிரதானப் பயிரான வாழையில் அவரை, முள்ளங்கி, அகத்தி பயிரிடப்படுகின்றன. இந்த முறை சாகுபடியில் முள்ளங்கி மற்றும் அவரை நிகர லாபத்தை அதிகரிக்கச் செய்கிறது. அகத்தி பயிரானது, மண் வளத்தை அதிகரிக்கச் செய்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில், தென்னை நடவு செய்து 3 வருடங்கள் வரை வாழை ஊடுபயிராக வாகுபடி செய்யப்படுகிறது. கீழ்பழனி மலைப் பகுதிகளில் ஏலக்காய் தோட்டங்களில், வாழை ஊடுபயிராக சாகுபடி செய்யப்படுகின்றது. இந்த முறையில், முடிக்கொத்து நச்சுயிரி நோயை பரப்பும் அசுவுணியானது, அதிக அளவில் ஏலக்காயில் இருப்பதால், இந்த அசுவுணியானது வாழைக்கும் பரவி, அதிக அளவில் முடிக்கொத்து நோய் வாழையில் ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு

 

மாவட்டம்
பயிர்சுழற்சி
ஊடுபயிர்

திருச்சி

வாழை – நெல்
வாழை – நெல் – பயறு
வாழை – நெல் – கரும்பு
வாழை –  வெற்றிலை - நெல்

வாழை –  பருத்தி - நெல்

தென்னை + வாழை
வாழை +பூசணி வகைகள்
வாழை +பருத்தி
வாழை+வெண்டை+ கத்தரிவாழை+ வெங்காயம்

தஞ்சாவூர்

வாழை – நெல் – பயறு வகைகள்

தென்னை + வாழை

கரூர்

வாழை –  வெற்றிலை - நெல்

              ----

மதுரை

வாழை – நெல்
வாழை – நெல் – பயறு

வாழை –  வெற்றிலை - நெல்

வாழை + நிலக்கடலை

தேனி

வாழை – வெங்காயம் – தக்காளி
வாழை – வெங்காயம் - அவரை

வாழை – நெல்

வாழை + முள்ளங்கி

அவரை + அகத்தி

கடலூர்

வாழை – நெல்
வாழை – காய்கறிப் பயிர்கள்

வாழை – நெல்

              ----

விழுப்புரம்

வாழை – நெல்

              ----

கோயமுத்தூர்

வாழை – நிலக்கடலை
வாழை – காய்கறிப்பயிர்கள்
வாழை – நெல்

வாழை – மஞ்சள் - எள்

பாக்கு + வாழை
வாழை + புகையிலை

வாழை + வெங்காயம்

புதுக்கோட்டை

வாழை – நெல்

வாழை – நெல் - நிலக்கடலை

முந்திரி + வாழை

மாங்காய் + வாழை

தூத்துக்குடி

வாழை - நெல்

              ----

சேலம்

வாழை (ஏற்காட்டில் இது ஒரு பல்லாண்டுப் பயிர்)

              ----

நாகர்கோவில்

வாழை - நெல்

              ----

திண்டுக்கல்

விருப்பாட்சி வாழை - காப்பி

வாழை + ஏலக்காய்

 

மேலே செல்க

ஊடுபயிரிடுதல்

  • ஒரே நிலத்தில் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர்கள் பயரிடும் முறையே ஊடுபயிரிடுதல் முறையாகும்.

  • வாழையுடன் இதர பயிர்களை சேர்த்து ஊடு பயிரிடுவதால் மண்ணின் வளத்தன்மையும் கூடுகிறது.  

  • வருடாந்திர பயிர்களுடன் வாழையை ஊடு பயிரிடுவது நல்ல வருமானம் தருகிறது. விவசாயிகள் குறைந்த வளங்களுடன் தங்களுடைய நிலங்களில் ஒரு பயிருடன் பல பயிர்களை சேர்த்து பயிரிடுவதால் ஏற்படும் இடர்பாடுகளை குறைக்கலாம். மேலும், நிலையான ஊட்டச்சத்து கிடைக்க வழிவகை செய்யலாம் மற்றும் அதிக வருமானமும் கிடைக்கப் பெறலாம்.

  • சிறு மற்றும் குறு விவசாயிகள் பெரும்பாலும் வாழையை பயிரிடுகிறார்கள். ஒரு எக்டருக்கு குறைவான நிலம் கொண்டவர்கள், வாழையை மட்டுமே நம்பி பயிரிடுகிறார்கள்.

ஊடுபயிரிடுதல்
ஊடுபயிரிடுதல்
ஊடுபயிரிடுதல்

 

தமிழ்நாடு

  • வாழையின் ஆரம்ப நிலை வளர்ச்சியின் போது, ஊடு பயிரிடுவது எளிதாகும். இந்தியாவின் சில பகுதிகளில் கலப்பு பயிர் முறையும் பின்பற்றப்படுகிறது. வாழையை தொடர்ந்து, கத்திரி, கரணை கிழங்கு, மஞ்சள், மிளகாய், காளிபிளவர், முட்டைகோஸ், கொடி பசலை, மக்காசோளம் முதலியன ஊடு காலநிலையை பொறுத்து பயிரிடப்படுகின்றன. வாழை, தென்னை பாக்கு ஆகியவற்றை கலப்பு பயிரிடுவது, பொதுவாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பின்பற்றப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காப்பி‌, கோகோ, ரப்பர், இளம் மாமரங்கள் மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றிற்கு வாழையை நிழல் தரும் மரமாக வளர்க்கப் படுகின்றன.

கர்நாடகா

  • வெள்ளிரிக்காய்  மற்றும் கீரைகளை வாழையுடன் செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் பயிரிடுவது லாபகரமானதாக‌வும், குலை எடையை பாதிக்காத வண்ணமும் இருக்கும். காய்கறிகளுக்காக பயன்படுத்தும்போது வெள்ளரிக்காயை   95  நாட்களுக்குள் அறுவடை செய்யலாம், விதைக்கான வெள்ளரியை  130  நாட்களில் அறுவடை செய்யலாம். நேந்திரன் இரகத்துடன் சேனைக் கிழங்கினை ஊடு பயிரிடுவது இலாபகரமானது.

  • வாழை- கரும்பு (அ) மஞ்சள் (அ) நெல்

கேரளா

  • பல்லாண்டு  பயிரான  காப்பியின் ஆரம்ப வளர்ச்சி பருவத்தில் வாழை, நிழலுக்காக  ஊடுபயிரிடப்படுகிறது. காப்பியும், அவற்றின் ஆழமான வேர் அமைப்பின் மூலம் சத்துக்களை மறுசுழற்சி செய்து வாழைக்கு பயன்பட செய்கிறது.

  • ஓராண்டு பயிரான பீன்ஸ் பொதுவாக வாழையுடன் சேர்த்து பயிரிடப்படுகிறது. இந்த இரு பயிர்களும் பல் அடுக்கு பயிர் முறையில் இணக்கமான பயிராகும்.  ஏனெனில் நிலத்திற்கு மேல் அது வாழையுடன் போட்டியிடுவதில்லை, மேலும் மற்ற உண‌வு பயிர்களைக் காட்டிலும் நிழல் தாங்கி வளரக் கூடியது.

  • இளம் வாழை‌யுடன் மக்காச்சோளம், சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவை ஊடுபயிரிடப்படுகின்றன, இலைப்பரப்பு மூடும்போது அறுவடை செய்யப்படுகின்றது.

  • பழ வகைகளான பலா மற்றும் பப்பாளி ஆகியவை தோப்புகளில் நடப்படுகின்றது. அவை பழத்திற்காகவும், காற்றுத் தடுப்பான்களாக‌வும் செயல்படுகிறது.

  • வாழை – நெல் (அ) காய்கறிகள் (அ) சேனைக்கிழங்கு (அ) மரவள்ளி

வாழையடி வாழை சாகுபடி முறை

விவசாயிகள் தங்களுடைய புதிய வாழைத் தோட்டத்தில் அடுத்த தோட்டத்திலிருந்து பெறப்பட்ட பக்கக் கன்றுகளையோ அல்லது திசு வளர்ப்பு முறை மூலம் உருவாக்கப்பட்ட இளம் செடிகளையோ நடுவார்கள். ஒவ்வொரு புது மரமும் ஒரே ஒரு குலையை உற்பத்தி செய்யும், ஆனாலும், பல பக்க கன்றுகளை தன்னுடைய தண்டுப்பகுதியின் பக்கவாட்டில் உருவாக்கும். பக்கத் தண்டுகள் வளர்ந்து அது தனியே குலைகளை உருவாக்கும். அறுவடை செய்யும் போது குலைகளைத் தாங்கிய தண்டை வெட்டுவார்கள். தாய் மரம் மற்றும் தொடர்ந்து பக்கவாட்டுக் கன்றுகளை துளிர்க்கும். இதை முளைக் கட்டைகள் அல்லது பக்கக் கன்று வாழை என்றழைக்கப்படுகிறது.

ஒரு தண்டில் எவ்வளவு இலைகள் இருக்கும்?

ஒவ்வொரு பக்கக் கன்று (அ) புதிய செடியிலும் புதிய இலைகள், பூக்கள், காய்கள் தோன்றும் வளர்ச்சி நுனி இருக்கும். இந்த வளர்ச்சி நுனியானது இலையுறைகள் இணைந்த பகுதியில் நிலத்திற்கு மேல் உள்ள வேர்க் கிழங்கின் மையப்பகுதியில் காணப்படும்.
வளரும் நுனி 30 – 50 இலைகளை உருவாக்கும். குட்டை வாழைகளில் சில இலைகளே உருவாகும். உயரமான வாழை மரங்களில் பூ பூப்பதற்கு முன் நிறைய இலைகளை உருவாக்கும். ஒரே இன வாழைகளில் இலைகளின் எண்ணிக்கை ஒரே மாதிரியாக இருக்கும். முதலில் தோன்றும் இலைகள் சிறியதாக பார்ப்பதற்கு கெட்டியாக இருக்கும். ஆரம்பகாலத்தில் ஒவ்வொரு இலையும் முன்னதை விட பெரியதாக இருக்கும். புதிய இலைகள் பழைய இலைகளின் நடுவிலிருந்து தோன்றும். இலையுறைகள் தண்டுப் பகுதியில் இறுக்கமாக மூடி முதல் சில மாதங்களில் உயரமாகிறது.

பழைய இலைகளின் மேலே புதிய இலைகள் உருவாகும். நல்ல தரமான மரம் 10 -15 இலைகளை ஒரே சமயத்தில் உருவாக்கும். ஒரு மரம் 30 -50 இலைகளை உருவாக்கியவுடன், பூ மொட்டு உருவாகிறது. இதற்குப் பிறகு இலைகள் உற்பத்தி ஆவதில்லை. பூ மொட்டு உருவாகும் போது, தண்டின் உள்ளே 11 இலைகள் வெளியே வருவதற்காக இருக்கும். 

தண்டுப் பகுதி எப்படி வேகமாக வளர்ந்து குலையை உருவாக்ககிறது

தகுந்த வளர்ச்சி நிலைகளில் (வெப்பநிலை, நீர், வெளிச்சம், ஊட்டச்சத்துக்கள், மண்) ஒவ்வொரு புதிய இலையும்  6-8 நாட்களில் உருவாகும். தகுந்த வளர்ச்சி நிலைகள் ஒரு செடிக்கு இருந்தால், முதல் இலையிலிருந்து கடைசி இலை வரை 245 – 320 நாட்கள் (8 -11 மாதங்கள்) ஆகும். இருந்தாலும், ஓரு பக்கக் கன்றை (அ) திசு வளர்ப்பு செடியை நடும் பொழுது, அவை முதலிலேயே சில இலைகளை உருவாக்கியிருக்கும். சிறிய பக்கக் கன்றுகள் சில இலைகளை பயிரிடும் காலம் வரை உருவாக்கும். பெரிய பக்கக் கன்றுகள் நிறைய இலைகளை உருவாக்கும். நட்ட பின் பூ பூக்கும் வரை சில இலைகளை உருவாக்கும்.

அனைத்து இலைகளும் ஒரே இடைவெளியில் உருவாகுமா?

தகுந்த நிலைகளில், முதல் இலைகள் 4 நாட்களுக்கு ஒரு முறை உருவாகும். அடுத்த இலை உருவாவதற்கான இடைவெளி அதிகமாக இருக்கும். கடைசி இலை வரை ஒவ்வொரு இலையும் விரிய 7-10 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

தகுந்த நிலைகளில் இலை உருவாவதற்கான இடைவெளி

இலைகள் 1 -10           = 43 நாட்கள்
இலைகள் 11 -20         = 54 நாட்கள்
இலைகள் 21 – 30       = 65 நாட்கள்
இலைகள் 31 – 40       = 76 நாட்கள்
மொத்த நாட்கள்          = 238 நாட்கள் (8 மாதங்கள்)
ஒவ்வொரு இலை உருவாகும் கால இடைவெளி = 6 நாட்கள்

ஒரு தலை முறையில் குலை தள்ளுவதற்கும் அடுத்த தலைமுறைக்கும் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்ளும்?

வாழை உற்பத்தி திறனில் இது ஒரு முக்கியமான காரணியாகும். முதல் தலைமுறை குலை தள்ளுவதற்கும், அடுத்த தலைமுறை குலை தள்ளுவதற்கும் உள்ள கால இடைவெளி  அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தாய் கிழங்கில் பூ மொட்டு உருவாகும் பொழுது பக்க மொட்டுகளையும் உருவாக்கும். பூ விரிய ஆரம்பிக்கும் பொழுது தண்டின் உள்ளே 11 இலைகள் விரியாமல் இருக்கும். பக்க கன்று வரை ஆரம்பிக்கும் பொழுது, ( தாய் மரத்தின் வளர்ச்சிக்கும், அடுத்த தலைமுறை வளர்ச்சிக்கும் இடையே  பகுதியொத்திருத்தலை, மறுதாம்பு பயிர் என்றழைக்கப்படுகிறது) குலை உருவாவதற்கான காலமும், 11 இலைகள் உருவாக ஆகும் காலமே ஆகும். முடிவில், முதல் குலையின் அறுவடையிலிருந்து, இரண்டாவது குலையின் அறுவடைக்கும் இடையே 180 நாட்கள் ( 6 மாதங்கள்) ஆகும். மற்ற பயிரிடும் வகைகளில், புதிய பக்கக் கன்றுகள் உருவாவது, பூ உருவாவதைப் பொறுத்து இருக்காது. பூ உருவாவதற்கு முன்பே பக்கக் கன்றுகள் உருவாகி, தொடர்ந்து வளரும். பக்கக் கன்றுகள் குலை தள்ளிய பின் உள்ள தாய்மரத்தில் தோன்றாது.

வேர்கள் எப்படி வளரும்?

வாழை உற்பத்தியில் வேர் அமைப்பும் முக்கியமான ஒன்றாகும். கிழங்கின் உள் அடுக்கிலிருந்து நிறைய வேர்கள் உருவாகும். இரண்டாவது வேர்கள் முதல் வேர்களை விட மெலிதாக இருக்கும். வளரும் நுனி சேதமடைந்தாலோ (அ) வெட்டுப்பட்டாலோ, பக்கவாட்டு வேர்கள் உருவாகி சரிசெய்து விடும். இருந்தாலும், வளரும் நுனியிலிருந்து 20 செ.மீக்கு அதிகமாகி சேதம் ஏற்றட்டால், வளர்ச்சி நின்று விடும். வேர்களும் இரண்டாவது வேர்களை உற்பத்தி செய்யாது.
பக்கக் கன்றை நடும்போது, முதல் சதைப்பகுதியில் வேர்கள் முன்பே உருவாகி இருக்கும். அவை 40 செ.மீ வரை வளரும். அடுத்த வேர்த் தொகுப்பு வர பல வாரங்கள் ஆகும். முதல் வேர் ஒரு நாளைக்கு 2 செ.மீ வரை வளரும். பூ பூக்க ஆரம்பித்த உடன் கிழங்கிலிருந்து வேர் உருவாவது நின்றுவிடும். தாய் மரத்திலிருந்து பக்கக் கன்றுக்கும் வேர்கள் இணைந்திருக்கும். மரத்தின் அடிப்பகுதியில் 60 -100 செ.மீ அளவில் வேர்கள் சூழ்ந்திருக்கும்.

உற்பத்தி திறன் குலைகளின் எண்ணிக்கையை பொறுத்து அமைகிறதா ?

குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் உற்பத்தியாகும் குலைகளின் எண்ணிக்கை மிக முக்கியமானது, மேலும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு மரங்கள் இருக்கும் என்பதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். உற்பத்தித் திறனானது, ஒரு தண்டு உருவாக்கும் மொத்த இலையை பொறுத்தது. இலை உற்பத்தி அளவானது, பக்க கன்று உருவாகும் போது தாய் மரத்தின் வாழ்க்கை சுழற்சியைப் பொறுத்தது. இந்த சிலக் காரணிகள் வாழை வகைகளைப் பொறுத்தது. மற்றவை வளர்ச்சி நிலைகளைப் பொறுத்து அமையும்.  

மேலே செல்க

இடை உழவு முறைகள்

..... இடைக்கன்றினை நீக்குதல்

..... முட்டு கொடுத்தல்

..... மூடாக்கு போடுதல்

..... உதிர்ந்து போன சூல்தண்டு மற்றும் பூவிதழ்களை நீக்குதல்

..... இலைகளை அகற்றுதல்

..... களை மேலாண்மை

.... மட்டாக்குதல்

..... மண் அணைத்தல்

.... குலையை மூடுதல்

..... கொப்பூழ் /தொப்புள் நீக்கம் ( ஆண் மொட்டு நீக்கம்)

.... சீப்பு நீக்குதல்

.... பூத்தார் தண்டு | கொண்ணை உரித்தல்

.... அடையாளக் குறியிடல்

.... காற்றுத் தடுப்பான்

 

இடைக்கன்றினை நீக்குதல்

  • அதிகப்படியான மற்றும் தேவையில்லாத இடைக் கன்றினை வாழையிலிருந்து அகற்றுவது இடைக் கன்றினை நீக்குதல் எனப்படுகிறது.

  • இடைக்கன்று தாய்மரத்திலிருந்து, நிலமட்டத்திலிருந்து வெட்டப்பட்டு, அகற்றப்படுகிறது  அல்லது மரத்திலிருந்து அகற்றாமல் கன்றின் மையப்பகுதி அழிக்கப்படுகிறது.

  • தோட்ட நிலம் மற்றும் புன்செய் நிலங்களில் மாத இடைவெளியில் இடைக்கன்று நீக்கப்படுகிறது.

  • மழை வாழையில், ஒரு குற்றில் இரண்டு குலை தாங்கியுள்ள மரங்கள் மற்றும் இரண்டு இடைக்கன்றுகள் விடுவது போதுமானதாக கருதப்படுகிறது . மீதமுள்ளவை அகற்றப்படுகின்றன.

  • ஒரு மரத்திற்கு ஒரு இடைக்கன்று மட்டுமே மறுதாம்பிற்காக விடப்படுகிறது.

  • இந்த கன்றுகளை 2 மாத நிலையில் நுனி வெட்டப்பட்டு, நுனி வளர்ச்சி தடை செய்யப்பட்டு, கிழங்கு பெரிதாவதற்காக விடப்படுகிறது.

  • முதல் பயிரை அறுவடை செய்யும் போது, இந்தக் கன்றுகள் அடுத்த மறுதாம்பிற்கு தயாராக இருக்கும்.

இடைக்கன்றினை நீக்குதல்
இடைக்கன்றினை நீக்குதல்

 

முட்டு கொடுத்தல்

  • குலை தள்ளும் சமயத்தில், பொய்த் தண்டிற்கு தாங்கி நிற்பதற்காக ஒரு ஆதாரம் தேவைப்படுகிறது.

  • உயரமான, அதிக எடையுள்ள குலைகளை தரும் இரகங்களுக்கு முட்டுக் கொடுப்பது அவசியம் ஆகும்.

  • 3-4 வயதுள்ள மூங்கில் அல்லது ச‌தரவுக்கு மரங்கள் பொதுவாக முட்டு கொடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது.

  • கயிறு அல்லது பாலித்தீன் கம்பியையும் முட்டு கொடுக்க பயன்படுத்தலாம்.

முட்டு கொடுத்தல்

 

மூடாக்கு போடுதல்

  • மூடாக்கு  என்பது உலர்ந்த, தாவர பொருள் அல்லது பாலித்தீன் விரிப்பு ஆகும். இது மண்ணை மூட பயன்படுகிறது. இது நீர் ஆவியாவதை குறைக்கவும், ஈரப்பதத்தை தக்க வைக்கவும், மண் அரிப்பை குறைக்கவும், களை வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் மற்றும் அவை மட்கும் போது தாவரத்திற்கு சத்தளிக்கவும் உதவுகின்றது. மூடாக்கை நடவு செய்வதற்கு முன்பும், பின்பும், இளம் கன்றுகளை சுற்றியும் பயன்படுத்தலாம். வாழை இலை சருகு மூடாக்கு மற்றும் பாலித்தீன் விரிப்பு என்று இரு விதமான மூடாக்கு வாழை சாகுபடியில் பயன்படுத்தப்படுகின்றது. .
மூடாக்கு போடுதல்
மூடாக்கு போடுதல்

 

உதிர்ந்து போன சூல்தண்டு மற்றும் பூவிதழ்களை நீக்குதல்

  • நோய் பரவலைத் தடுக்கவும், முதிர்ந்த இலைகள் தண்டைச் சுற்றி ‌தொங்காமல் இருக்கவும், ஒளி படுவதை அதிகரிக்கவும் காய் சேதத்தைத் தடுக்கவும் பழைய, உதிர்ந்த இலைகளை அகற்றுதல் அவசியம்.

  • நல்ல குலை வளர்ச்சிக்கு குறைந்தது 6 முதல் 8 ஆரோக்கியமான இலைகள் வாழையில் பூக்கும் பருவத்தில் இருப்பது அவசியம்.

  • இலைகளை முற்றிலும் நீக்குவதும் குலை வளர்ச்சியைப் பாதிக்கும்.

  • இலைகளை நீக்குவதால் அறுவடை செய்யப்பட்ட காயின் சேமிப்‌‌‌‌‌‌‌‌‌‌புக் காலம் குறைக்கப்படுகிறது

உதிர்ந்து போன சூல்தண்டு மற்றும் பூவிதழ்களை நீக்குதல்
உதிர்ந்து போன சூல்தண்டு மற்றும் பூவிதழ்களை நீக்குதல்

 

இலைகளை அகற்றுதல்

  • சில இரகங்களில் சூல் தண்டுகள் நிலையாக, குலை முதிர்ச்சியடையும் வரையிலும், காய்களின் மீதே இருக்கின்றன.

  • பூ விரிந்த சில நாட்களில் பிரஷ் கொண்டு முழுவதுமாக தடவினால் இவை விழுந்துவிடும். இவற்றை அப்படியே விட்டுவிட்டால் பழுப்பு நிறமாக மாறி சுருங்கிக் காணப்படும் இதனை நீக்குவது கடினம்.

  • காய் நுனியில் இவை நீக்காமல் விடப்படும்போது சாப்ரோஃ பைட் பூஞ்சைகள் தாக்கி நோய் உண்டாக்கக் காரணமாக அமையும்..

இலைகளை அகற்றுதல்
இலைகளை அகற்றுதல்

 

களை மேலாண்மை

    • வாழையில் அதிக மகசூலைப் பெற களைகளைக் கட்டுப்படுத்துவது மிகவுமு் அவசியமாகும். களைகளை உரிய நேரத்தில் கட்டுபடுத்தவில்லையென்றால், இடுபொருள்களான தண்ணீர், உரங்கள் போன்றவற்றிற்காக, களைகள் வாழையுடன் போட்டி போட்டு, வாழையின் மகசூலை வெகுவாக குறைப்பது மட்டுமல்லாமல், வாழைக்காய்களின் தரமும் வெகுவாக குறைந்துவிடும். மேலும், வாழைத் தோட்டங்களில் மிக அதிகமாக களைகள் இருந்தால், வாழையின் நோய் மற்றும் பூச்சிகள் அதிகமாவசற்கும் களைகள் துணை நிற்கின்றன. களைகள் பூத்து, விதைகள் உருவாகுவதற்கு முன்பே, களைகளின் தன்மைகளைப் பொருத்து மண்வெட்டி கொண்டோ அல்லது கையால் பிடுங்கியோ, களைகளை அழித்துவிட வேண்டும்.

       

      வாழைத் தோட்டங்களில் வரக்கூடிய களைகளின் பொது மற்றும் அறிவியல் பெயர்கள்:

    பொதுப்பெயர்

    அறிவியல் பெயர்

    அருகு

    சையனடான் டேக்டைலான்

    கோரை

    சைப்ரஸ் ரொடன்டஸ்

    குப்பைமேனி

    அகாலிபா இண்டிகா

    துத்தி

    அபுட்டிலான் இண்டிகா

    மூக்குத்திப்பூ

    ட்ரைடாக்ஸ் புரோக்கும்பன்ஸ்

    கொளிஞ்சி

    தெப்ரோஸியா பர்பூரியா

    கீரை வகைகள்

    அமராந்தஸ்

    அம்மான் பச்சரிசி

    ஈபோர்பியா ஹிர்டா

    பருப்பு கீரை

    போர்டுலக்கா வகைகள்

    எருக்கு

    கலோட்ராபிஸ் ஜைஜாண்டிகா

    ஆவாரை

    கேஸியா ஆரிகுலேட்டா

    நாய்க்கடுகு

    க்குலோம் விஸ்கோஸ்

    மூக்குத்திப்பூண்டு

    வெர்னோனியா ஸ்பேன்ஸ்

    கொட்டகரந்தி

    ஸ்பீராந்தஸ் இண்டிகஸ்

    தொட்டாச்சுருங்கி

    மைமோஸா புடிகா

    நாவுருவி

    பைலாந்தஸ் நைரூரி

    பார்த்தீனியம்

    பார்த்தீனியம் ஹிஸ்டோபோரம்

    கரிசாலாங்கண்ணி

    எக்லிப்டா ஆல்பா

    மயில்கொண்டை

    குலோரிஸ் பார்பேட்டா

     

    ஒருங்கிணைந்த முறையில் களை நிர்வாகம்:

    • தோட்டக்கால் நிலங்களில், நிலத்தை நன்றாக உழது, எல்லாக் களைகளையும் வேருடனோ அல்லது கிழங்குடனோ பிடுங்கி, தீ வைத்து அழித்திடல்வேண்டும்.

    • வாழைக்கன்றுகள் நட்ட பின்பு, அவ்வப்பொழுது முளைக்கும் களைகளை, அவை பூ பூத்து, விதைகள் உருவாவதற்கு முன்னரே அழித்திடல்வேண்டும்.

    • படர்ந்து வளரக்கூடிய பயிர்களான தட்டைப்பயறு அல்லது பசுந்தாள் ஆகியவற்றை, வாழையின் இரண்டு வரிசைகளுக்கும் இடையேயுள்ள இடைவெளியில் பயிர் செய்து, அந்த பயிர்கள் பூக்கும் முன்பே அவற்றை பிடுங்கி, மண்ணிற்குள் புதைத்துவிடவேண்டும். இதனால் களைகள் கட்டுப்படுவதோடு, தழைச்சத்து ஆகியவை வாழைக்கு கிடைக்கின்றது.

    • வைக்கோல் அல்லது கரும்புத் தோகை அல்லது இலைப்புள்ளி இல்லாத முதிர்ந்த வாழை இலைகள் ஆகியவற்றை வாழைகளுக்கு இடையிலான இடைவெளியில் பரப்பி, மண்ணின் மேற்பரப்பை மூடலாம். இவ்வாறு செய்வதால், களைகள் வளர்வது தடைசெய்யப்படுவதோடு, மண்ணில் ஈரம் காக்கப்பட்டு, மண்ணிற்கு உரச்சத்துக்களும் கிடைக்கின்றன.

    • எப்பொழுதெல்லாம் களைகளின் வளர்ச்சி அதிகமாகி, அவற்றை நீக்குவதற்கு கஷ்டமாக இருக்கிறதோ, அப்பொழுது மட்டும், கீழே கொடுத்துள்ள அட்டவணையின்படி, களைக்கொல்லிகளை பயன்படுத்தி, களைகளை அழிக்கவேண்டும். ஆனால், களைக்கொல்லியை, களைகளின் மேல் மட்டும் படுமாறு, கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், களைக்கொல்லிகள் வாழை இலைகளின் மேல் படக்கூடாது.

    குறிப்புகள்:

    • வாழைத்தோட்டங்களில் அருகுகள் இல்லாமல் மற்ற களைகள் இருந்தால், கன்று நட்ட 40 நாட்களுக்குள், மேலே கொடுத்துள்ள மருந்தின் அளவில், கால் அல்லது அரைப்பகுதி மட்டும் தெளித்தால் போதுமானது.

    • டையூரான் களைக்கொல்லியை, கைத்தெளிப்பான் கொண்டு தெளித்தால் நல்லது.

    • களைக்கொல்லியுடன், ஒரு டேங்க் மருந்து கலவைக்கு, 20 கிராம் அம்மோனியம் சல்பேட் அல்லது யூரியாவை கலப்பதனால், களைகள் மருந்தை எளிதில் கிரகித்து, மிக எளிதில் அவை அழிந்துவிடும்.

    பொதுவாக களைக்கொல்லி மருந்தை பயன்படுத்துவதைவிட, கைக்களை எடுப்பது தான் நல்லது. இதனால், மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு, வேர் வளர்ச்சி அதிகமாகி, வாழை வேகமாக வளர்ந்து, அதிக மகசூலை பெறலாம். ஆனால் களைக்கொல்லியை பயன்படுத்துவதில் உள்ள ஒரே நன்மை என்னவென்றால், குறந்த செலவில், களைகளை முழுவதுமாக அழித்துவிடலாம்.

     

    மட்டாக்குதல்

    • அறுவடை முடிந்தபின், தண்டினை 0.6.மீ  உயரத்தில் விட்டு வெட்டி விட வேண்டும்.

    • இம் செயல் முறை மட்டாக்கி ஆகும்

    • இவ்வாறு விடப்பட்ட தண்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருள் பக்கக்கன்றுகளுக்கு ஊட்ட மளித்து இலைகள் உயரும் சமயத்தில் பாதுகாப்பளிக்கின்றன

    மட்டாக்குதல்
    மட்டாக்குதல்

     

    மண் அணைத்தல்

    • மண் அணைப்பு செய்வது பயிரின் அடிப்பாகத்திற்கு வலிமையையும், நல்ல வேர் மண்டலத்தின் உருவாக்கத்திற்கும் உதவி‌‌‌‌‌‌‌‌‌‌‌புரிகிறது..

    • மண் அணைப்பு, மழைக்காலத்தில் செய்வதன் மூலம் நீர் தேங்குவதை தவிர்க்கலாம்.

    • இது பயிருக்கு ஒரு வடிகால் வசதியை ஏற்படுத்தித் தருகின்றது

    மண் அணைத்தல்
    மண் அணைத்தல்

     

    குலையை மூடுதல்

    • சணல்பை அல்லது பாலித்தீன் கொண்டு குலையை மூடுவதால் காய்களை அதிக சூரிய ஒளி, காற்று மற்றும் தூசிகளிலிருந்து பாதுகாக்கலாம்..

    • கேவண்டிஷ் மற்றும் நேந்திரன் வாழைகளில் குலையை மூடுவதன் மூலம் நல்ல செழிப்பான நிறம் கிடைக்கிறது.

    • குலையை மூடுவதற்காக பயன்படுத்தப்படும் துளையிடப்பட்ட அல்லது பாலித்தீன் பைகளால் மகசூலை 15 – 20% வரை அதிகரிக்கச் செய்யலாம்.

    • துளையிடப்பட்ட சணல்/ பாலிதீன் பைகள் கொண்டு மூடுவதால் காம்பு‌ அழுகுவதைக் குறைக்கலாம்.

    குலையை மூடுதல்
    குலையை மூடுதல்

     

    கொப்பூழ்/தொப்புள் நீக்கம்(ஆண் மொட்டு நீக்கம்)

    • பெண் பூக்கள் முற்றிலும் மலர்ந்த நிலையில் ஆண் மொட்டுக்களை நீக்குவது இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    • இதன் மூலம் ஒளிச்சேர்க்கையில் உருவாகும் சத்துக்கள் அனைத்தும் இங்கு சேர்வது தவிர்க்கப்பட்டு காய் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.

    கொப்பூழ் /தொப்புள் நீக்கம் (ஆண் மொட்டு நீக்கம்)
    கொப்பூழ் /தொப்புள் நீக்கம் ( ஆண் மொட்டு நீக்கம்)

     

    சீப்பு நீக்குதல்

    • வாழைக் குலையில் 7 முதல் 8 சீப்புகள் மட்டும் இருக்குமாறு  அடிப்பகுதியில் சிறிய அளவில் உள்ள ஒன்றிரண்டு சீப்‌‌புகளை நீக்கிவிடுவது சிறந்தது.

    சீப்பு நீக்குதல்
    சீப்பு நீக்குதல்

     

    பூத்தார் தண்டு|கொண்ணை உரித்தல்

    • வாழை மரத்திலிருந்து, குலைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், ஒளிச்சேர்க்கை அணுக்கள், நீர் போன்றவற்றை எடுத்துச் செல்வது கொண்ணையாகும்.

    • குலை முதிர்ச்சி பெறும் சமயத்தில் நல்ல சூரிய ஒளி அதிகம் படும்போது கொண்ணையில் எரிந்தது போன்ற காயங்கள் தோன்றும்

    • இக்காயத்தில் பூஞ்சை, பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் தாக்கக் கூடும்.

    • இச்சூழ் நிலையில் கொண்ணை பாதிக்கப்படுவதால் காய்களுக்குக் கிடைக்க வேண்டிய ‌நீர், சத்துகள் மற்றும் ஒளிச்சேர்க்கைப் பொருட்கள் கிடைக்கப் பெறாததால் காய்கள் சரியாக வளர்ச்சியடையாமல், கீழே விழுந்து விடவும் வாய்ப்‌‌‌‌புள்ளது.

    • எனவே அதிக சூரிய ஒளிபடும் நாட்களில் கொண்ணையானது கொடி நிலை அல்லது வாழை இலைகள் கொண்டு மூடப்பட வேண்டும்.

    பூத்தார் தண்டு|கொண்ணை உரித்தல்
    பூத்தார் தண்டு|கொண்ணை உரித்தல்

    அடையாளக் குறியிடல்

    • குலை தள்ளிய நாள் மற்றும் அதனை மூடிய நாளை குறித்து வைக்கவேண்டும்.

    அடையாளக் குறியிடல்
    அடையாளக் குறியிடல்

     

    காற்றுத் தடுப்பான்

    • சிற்றகத்தி, சவுக்கு போன்ற காற்றுத் தடுப்புத் மரங்களை, வயல் ஓரங்களில் கிழக்கு மேற்கு திசைகளில் வளர்ப்பதன் மூலம் அதிவேக காற்றினால் மரங்கள் சாய்வதைத் தடுக்கலாம்.

    காற்றுத் தடுப்பான்

     

    வாழை இலை சாகுபடி:


    பொதுவாக பல இடங்களில் வாழையை பழத்திற்காக மட்டும் பயிரிடுகின்றனர். ஆனால் திருச்சி, தஞ்சாவூர், கோயமுத்தூர், தூத்துக்குடி, மதுரை, தேனி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் வாழையை இலைகள் அறுவடை செய்வதற்காகவும் பயிரிடுகின்றனர். வாழையை காய்களுக்காக சாகுபடி செய்வதைவிட, இலைக்காக சாகுபடி செய்வது சில சமயங்களில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. மதுரை மாவட்டத்தில், வாழை காய்கள் மற்றும் இலை ஆகிய இரண்டிற்காகவும் பயிரிடப்படுகிறது. இம்முறையில் வாழை நட்ட முதல் வருடத்தில் காய்களை அறுவடை செய்கின்றனர். பின்பு, தாய்மரத்திலிருந்து வரக்கூடிய பக்க்க்கன்றுகளை வெட்டாமல், அப்படியே விட்டு விட்டு, அதிலிருந்து வரக்கூடிய இலைகளை அறுவடை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறுகின்றனர்.


    திருச்சி மாவட்டத்தில் பூவன் ரகத்தையும்,   கோயமுத்தூர் மாவட்டத்தில் பூவன் மற்றும் கதளி  ரகங்களையும், மதுரை மற்றும் விருதுநகர்  போன்ற மாவட்டங்களில் மொந்தன், சாக்கிய (எ) சக்கை, ரஸ்தாளி போன்ற ரகங்களை இலைக்காக அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர்.


    மற்ற எல்லா ரகங்களையும் விட, பூவன் ரகம் மட்டும், இலைக்காக அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், இந்த இரகத்தின் இலையானது மென்மையாகவும், இலைகளை கட்டும் பொழுதும், வாழை இலைகளை மார்கெட்டிற்கு எடுத்து செல்லும்  பொழுதும் எளிதில் கிழியாமல் இருப்பதால் தான்.


    சாகுபடி செய்முறைகள்:

    1. சாகுபடி செய்யப்போகும் நிலத்தை, மிக நன்றாக 3 முதல் 4 முறை உழவேண்டும். பின்பு, 10 முதல் 15 டன் மக்கிய தொழு உரத்தை, சீராக நிலம் முழுவதும் பரப்பிவிடவேண்டும்.
    2. கருங்கோடு தேமல், பூமடல் தேமல், முடிக்கொத்து நச்சுயிர் மற்றும் பியுசேரியம் வாடல் நோய்  போன்ற நோய்கள் தாக்காத, தாய் வாழை மரங்களை தேர்வு செய்து, அதிலிருந்து பக்க்க் கன்றுகளை பிரித்தெடுக்கவேண்டும். பின்பு, இந்த பக்கக் கன்றுகளின் கிழங்கினை, கார்பென்டசிம் (1கிராம்/ஒரு விட்டர் தண்ணீர்) மோனோகுரோட்டாபாஸ் (14 மில்லி/ஒரு லிட்டர்தண்ணீர்) இரண்டும் கலந்த மருந்து கலவையில், 30 நிமிட நேரம் கிழங்கின் பாகம் முழுவதும் நனையுமாறு வைத்திருந்து பின் நடவு செய்யவேண்டும்.
    3. வாழைக்கன்றுகளை 41/2 அடி x 41/2 அடி என்ற இடைவெளிளயில் நடவு செய்திடவேண்டும். 15 நாட்கள் கழித்து, 2 முதல் 3 கி மக்கிய  தொழு உரம், 15 கிராம் டிரைக்கோடெர்மா மற்றும் 15 கிராம் சூடோமோனாஸ், 500 கிராம் வேப்பம்புண்ணாக்கு அல்லது கடலை புண்ணாக்கு அல்லது 1 கி மண்புழு உரம் ஆகியவற்றை கன்றைச் சுற்றி, கிண்ணம் பறித்து இடவேண்டும். பின்பு இவற்றை, மேல் மண்ணால் மூடி, நன்றாக தண்ணீர் பாய்ச்சவேண்டும்.
    4. 200 முதல் 250 கிராம் தழைச்சத்து, 50 கிராம் மணிச்சத்து, 350 கிராம் சாம்பல் சத்து ஆகியவற்றை சம அளவில் பிரித்து, ஒரு மரத்திற்கு 4 அல்லது 5 முறை இட்டு, நன்றாக உரங்கள் கரையுமாறு நீர் பாய்ச்சவேண்டும்.
    5. மண் வகை மற்றும் சீதோஷ்ண நிலையை பொருத்து, 4 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.
    6. வருடத்திற்கு 3 முதல் 4 முறை களை எடுக்கவேண்டும்
    7. பக்க கன்றுகளை அகற்றகூடாது. பொதுவாக வாழையைத் தாக்க கூடிய பூச்சிகளை அழிக்க, மோனோகுரோட்டாபாஸ் (2 மில்லி/ஒரு லிட்டர் தண்ணீர்) மருந்தினையும் மற்றும்  நோய்களை அழிக்க, புரோப்பிகோனசால் (1 மில்லி/ஒரு லிட்டர் தண்ணீர்) மருந்தினையும், ஒட்டுந்திரவத்துடன் கலந்து, இலையின் மேல் விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும்.

    இலை அறுவடை செய்தல்:   


    வாழை நடவு செய்த 5 மாதங்கள் கழித்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள், தொடர்ந்து இரண்டு மாத காலத்திற்கு, விரியாத இளம் இலைகளை அறுவடை செய்யலாம். பொதுவாக, மாலை அல்லது மாலை நேரங்களில் அறுவடை செய்யவேண்டும். இலைகளை அறுக்கும் பொழுது, அடுத்ததாக வெளிவரக்கூடிய இலைகள் அறுபடாமல் இருக்க, 10லிருந்து 15 செ.மீ. நீளம் இலைக்காம்பை விட்டு, இலைகளை அறுவடை செய்யவேண்டும். இலையின் அளவு பொதுவாக 5 அடி நீளமும், 2 அடி அகலமும் இருக்கும். வாழையில், சராசரியாக 6 முதல் 8 நாட்களுக்கு ஒரு முறை, ஒரு இலை வெளி வருகிறது. ஆனால்  கோடைகாலங்களில், ஒரு இலை வெளி வரவதற்கு 14 நாட்களும், மழைக்காலங்களில் 4 முதல் 6 நாட்களும் ஆகின்றன. ஒரு வருடத்திற்கு ஒரு வாழை மரத்திலிருந்து, 35 முதல் 45 இலைகளை அறுவடை செய்யலாம். பக்க கன்றுகளிலிருந்தும் இலைகளை அறுவடை செய்யலாம்.


    இலைகளை அறுவடை செய்த பின்பு, 200 இலைகளாக வைத்து. மிக கவனமாக அதன் மேற்பரப்பில் காய்ந்த இலைகளை மவத்துக் கட்டி மார்கெட்டிற்கு அனுப்பவேண்டும். பொதுவாக, ஒரு இலைக்கட்டானது (200 இலைகள்) ரூ. 40 முதல் ரூ.100 வரை விற்கப்படுகின்றது. ஆனால், பண்டிகை காலங்களில் இவை, ரூ. 400 முதல் ரூ.600 வரையிலும் விற்கப்படுகின்றது.

     

    மேலே செல்க