காப்புரிமை :: காப்புரிமைப் பற்றி

அறிமுகம்

காப்புரிமை என்பது ஒரு கண்டுபிடிப்பிற்கான முழு உரிமையையும் குறிப்பிட்ட காலம் வரை கண்டுபிடிப்பாளருக்கே உரியது என அரசாங்கத்தால் வழங்கப்படுவது ஆகும். இவ்வுரிமை ஒரு நாட்டிற்குள் / குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே வழங்க முடியும். இவ்வுரிமை உரிமையாளரைத் தவிர வேறெவரும் உருவாக்கவோ, உற்பத்தி செய்யவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாதென தடைவிதிக்கிறது. இச்சலுகை / உரிமை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே.

காப்புரிமை பெறத் தகுதிகள்

  • தனித்தன்மை
  • இதுவரை யாரும் அறியாததாக
  • பயன்பாடு உள்ளதாக இருத்தல் அவசியம்

கீழ்கண்ட கருத்துக்கள் நினைவில் கொள்ள வேண்டியவை

  1. காப்புரிமை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே (20 ஆண்டுகள்)
  2. குறிப்பிட்ட புவியியல் எல்லைக்குட்பட்டது
  3. விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள உரிமைகளுக்கு கட்டுப்பட்டது

இந்தியாவில் காப்புரிமை

பொருள் 1970 ம் ஆண்டுச் சட்டம் 2005 ம் ஆண்டு புதிய சட்டம்
மனித ஜீன்கள் காப்புரிமை அற்றவை காப்புரிமை அற்றவை
தாவரங்கள் / விலங்குகள் காப்புரிமை அற்றவை காப்புரிமை அற்றவை
நுண்ணயிரிகள் காப்புரிமை அற்றவை காப்புரிமை பெற்றவை
உயிரற்ற பதப்படுத்தும் முறைகள் காப்புரிமை பெற்றவை காப்புரிமை பெற்றவை
உயிரற்ற பொருட்கள் காப்புரிமை அற்றவை காப்புரிமை பெற்றவை
உயிர் இரசாயன மற்றும் உயிர்த் தொழில் நுட்ப பதப்படுத்துதல் காப்புரிமை பெற்றவை காப்புரிமை பெற்றவை
உயிர்ப் பொருட்கள் காப்புரிமை அற்றவை காப்புரிமை பெற்றவை
பயிர் இரகங்கள் காப்புரிமை அற்றவை பயிர்க் காப்புரிமை & பாதுகாப்பின் கீழ் காப்புரிமை பெற்றவை
கால்நடை இரகங்கள் குறிப்பிடப்படவில்லை குறிப்பிடப்படவில்லை
வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர் காப்புரிமை அற்றவை பொருட்கள் மற்றும் முறைகள் புதிதாகக் கண்டறியப்பட்டவையாக இருந்தால் காப்புரிமை பெறலாம்.

காப்புரிமை பெறுவதன் பயன்கள்

  1. காப்புரிமை உரிமையாளரின் கண்டுபிடிப்பிற்கு பாதுகாப்பளிக்கிறது.
  2. அதன் பயனை அவர் முழுமையாக அடைய உதவுகிறது.
  3. பிறர் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கிறது.
  4. உரிமையாளரின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது.

காப்புரிமை பெறப்படாத பொருட்களை யார் வேண்டுமானாலும் வணிக ரீதியாக பயன்படுத்த முடியும். 
எடுத்துக்காட்டு:

மஞ்சள்: 1995 ஆம் ஆண்டு இரு அமெரிக்க வாழ் இந்தியர்கள்    (சுமன் K. தாஸ், ஹரிஹர் P. கோலி) மிஸிப்பி மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் இருந்து மஞ்சள், காயங்களை ஆற்றும் தன்மை கொண்டதைக் கண்டுபிடித்துள்ளதாக கூறி காப்புரிமை பெற்றனர். (காப்புரிமை எண்: 54015041).

Patents

இதை எதிர்த்து இந்திய தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கழகம் “பழங்காலக் கலை” என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தது. இதன் கூற்றுப்படி மஞ்சளின் காயங்களைக் குணப்படுத்தும் திறன் பழங்காலத்திற்கு முன்பே கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக இந்திய மருத்துவக் கழகம் 1953 – ல் வெளியிட்ட ஒரு சஞ்சிகையையும் சமர்ப்பித்தது. பின்பு அமெரிக்க காப்புரிமை மஞ்சளுக்கான காப்புரிமையை இரத்து செய்தது. ஏனெனில் கண்டுபிடிப்பு என்பது.

  1. தனித்தன்மை
  2. புதியதாக
  3. பயன்படக்கூடியதாகஇருக்க வேண்டும்.

மஞ்சள் வழக்கு தனித்தன்மை மற்றும் புதியதாக இல்லை ஆதலால் இரத்து செய்யப்பட்டது.

வேம்பு:
வேம்பு மரம் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இது மருந்துப்பொருள், பூச்சிக் கொல்லி, பூஞ்சாணக் கொல்லி மற்றும் உரமாகவும் பயன்படுவதால் சர்வதேச அளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

1994 – ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த WR. கிரேஸ் அன் கோ மற்றும் யு.எஸ். டி. ஏ என்ற உர நிறுவனங்களுக்கு ஐரோப்பிய காப்புரிமை நிறுவனம் வேம்புக் கொட்டையிலிருந்து பூஞ்சாணக் கொல்லி தயாரிக்கும் உரிமையை அளித்தது.

Patents

            இதை எதிர்த்து அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர். வந்தன சிவா என்பவர் இரு ஆதாரங்களைச் சமர்ப்பித்தார். வேம்புக் கொட்டையை இந்திய விவசாயிகள் பூஞ்சான மற்றும் பூச்சிக் கொல்லி மேலாண்மைக்கு பயன்படுத்தியுள்ளதையும், இரு இந்திய அறிவியலாளர்கள் வேம்பின் பூஞ்சானத் தாக்குதல் பற்றி ஆராய்ச்சி செய்த கட்டுரைகளையும் சமர்பித்தார். எனவே ஐரோப்பிய காப்புரிமை நிறுவனம் 2005 – ல் காப்புரிமை இரத்து செய்தது.

பாஸ்மதி:
இந்தியாவின் சிந்து, பஞ்சாப் பகுதிகளில் விளையும் தரமுள்ள நெற்பயிர் பாஸ்மதி. பாஸ்மதி என்ற சொல்லுக்கு ‘மண் வாசனை’ என்று பொருள். இது இதன் மெல்லிய நல்ல வாசனை, நீளமான தன்மை ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. இத்தன்மையினால் இது அதிக ஏற்றுமதி மதிப்பு வாய்ந்தது.

            1997 – ஆம் ஆண்டு அமெரிக்க காப்புரிமை நிறுவனம் ரைஸ் டெக் கோ என்ற நிறுவனத்திற்கு டெக்ஸ்மதி என்னும் நெல்லுக்கு (20 உரிமைகள்) காப்புரிமை (எண்: 5663484) அளித்தது. இந்த டெக்ஸ்மதி எனும் இரகம் 16 உரிமைகளில் இந்திய பாஸ்மதியை ஒத்தது. புவிசார்ந்த காப்புரிமையின் கீழ் பாஸ்மதி இந்திய இரகம் மற்ற நாடுகளில் காப்புரிமை பெறக்கூடாது.

Patents

            இந்த அமெரிக்காவின் காப்புரிமைகளால் இந்திய பாஸ்மதியின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் பல விவசாயிகள் இதனால் பாதிக்கப் பட்டுள்ளனர். நமது பாஸ்மதி என்னும் பிராண்டு பெயரும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் ஏற்றுமதி நிறுவனம் இக்காப்புரிமையை இரத்து செய்யும்படி வழக்குப் பதிவு செய்தது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்திலிருந்து சான்றுகள் அனுப்பப்பட்டன. இதில் பதிவு செய்யப்பட்ட 20 உரிமைகளில் 16 இந்திய பாஸ்மதியைப் போல் இருப்பதால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. எனினும் வெறும் 4 உரிமைகளுடன் டெக்ஸ்மதிக்கு காப்புரிமை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் பெற:http://www.american.edu/ted/basmathi/html

பொன்னி:

            மலேசியாவில் உள்ள ஒரு அரிசி வியாபாரி பொன்னி அரிசிக்கு வணிகக் குறியீடு பெற்றிருந்தார். பொன்னி என்பது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் 1986 – ல் வெளியிடப்பட்ட இரகம் ஆகும். வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் ஏற்றுமதி நிறுவனம் (அப்பிடா) இதை எதிர்த்து வழக்குப் பதிவு செய்துள்ளது. கூடிய விரைவில் பொன்னி வணிகக் குறியீடு அப்பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டு விடும் என்று அப்பிடா நிறுவன தலைவர் திரு. அசிட் திருப்பதி கூறினார்.
(தி இந்து, பிசினஸ் லைன், ஆகஸ்ட் 7, 2008)

  1. கண்டுபிடிப்பாளர்கள் தமது கண்டுபிடிப்பால் பொருளாதார ரீதியில் பலன் பெறாவிடில், அவர் தமது கண்டுபிடிப்பை பிறர்க்குப் பயன்படும் வகையில் ஏதேனும் தனியார் நிறுவனத்திலோ அல்லது வேறொருவரிடமோ விற்று விட காப்புரிமையில் அனுமதியுண்டு.
  2. காப்புரிமை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் தொழில்வளர்ச்சிக்கு அடிகோலுகிறது.
  3. காப்புரிமையில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்ய அடிப்படையாக அமையும்.
  4. இந்த காப்புரிமையானது மேலும் பல ஆராய்ச்சிகள், முன்னேற்றக் கண்டுபிடிப்புகளை செய்யத் தூண்டுகோலாக அமையும்.
  5. காப்புரிமை வர்த்தகத் தொழில்துறைக்கு ஒரு சொத்தாக அமைகின்றது. அதிகக் காப்புரிமை பெற்ற நிறுவனங்கள் பொருளாதார அளவில் வசதி படைத்ததாக கருதப்படுகிறது.
  6. குறிப்பிட்ட காப்புரிமைக் காலம் முடிந்தஉடன் அக்காப்புரிமை பெற்ற பொருள் அல்லது தொழில் நுட்பம் பொது உபயோகத்திற்கு வந்துவிடுகிறது.

காப்புரிமை பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

Apply Patents

காப்புரிமை பெற கண்டுபிடிப்பைப் பற்றிய இருவகையான குறிப்பேடுகள் வழங்கப்படவேண்டும். 
அவை:

  1. தற்காலிக குறிப்பேடுகள்
  2. முழுமையான குறிப்பேடுகள்
1. தற்காலிக குறிப்பேடுகள்

தற்காலிக குறிப்பேடுகள் என்பது முன்னுரிமைக்காக ஆராய்ச்சியை முடிக்கும் முன்னரே பதிவு செய்து வைப்பதாகும். இந்த ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பு பற்றி முழுமையாகத் தரவேண்டியதில்லை. எனினும் தற்காலிக குறிப்பேடுகள் காப்புரிமை ஏதும் வழங்காது. இது ஒரு கண்டுபிடிப்புப் பற்றிய முன்னுரிமையைப் பெற மட்டுமே வழிவகுக்கிறது. தற்காலிகக் குறிப்பேடு பதிவு செய்த 12 மாதங்களுக்குள் முழுமையான குறிப்பேடு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இயலாத பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்படும். ஒரு கண்டுபிடிப்பை முடித்து விட்டால் நேரடியாக முழுமையான குறிப்பேட்டிலும் பதிந்து கொள்ளலாம். தற்காலிகக் குறிப்பேடு பெற்றிருத்தல் என்பது கட்டாயம் இல்லை.

2. முழுமையான குறிப்பேடுகள்

காப்புரிமை பெற கண்டுபிடிப்பு அல்லது தொழில்நுட்பம் பற்றிய முழுமையான குறிப்பேடு காப்புரிமை அலுவலகத்தில் சமர்பிக்கப்படுதல் அவசியம். ஒரு முழுமையான குறிப்பேட்டில் கீழ்க்காணும் அம்சங்கள் கட்டாயமாக இருத்தல் வேண்டும்.

  1. கண்டுபிடிப்பின் பெயர் / தலைப்பு
  2. அக்கண்டுபிடிப்பு எந்தத் துறையைச் சேர்ந்தது
  3. அக்கண்டுபிடிப்பு பற்றிய முழு வரலாறு. அத்துறையில் கண்டுபிடிப்புடன் தொடர்புடைய முந்தைய கண்டுபிடிப்புகள் பற்றிய விவரம்.
  4. கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி பற்றிய முழு ஆராய்ச்சி முடிவுகள்.
  5. கண்டுபிடிப்பை புரிந்து கொள்ள படங்கள்
  6. கோரப்படும் உரிமைகள் பற்றிய விவரம் தெளிவாக இருத்தல் அவசியம். என்னென்ன பண்புகளுக்குக் காப்புரிமை தேவைப்படுகிறது, காப்புரிமை விண்ணப்பதாரர் பெயரில் மட்டும் வழங்கப்பட்டால் போதுமா அல்லது வேறு நபருடன் சேர்த்துக் கோருகிறாரா என்பன போன்ற தகவல்கள் சரியாக இருத்தல் வேண்டும்.

காப்புரிமை பெற விண்ணப்பிக்க இந்தியாவில் ஆகும் கட்டணம்

            காப்புரிமைக்கு விண்ணப்பிக்க இந்திய அரசு தனிநபருக்கு ரூ. 700/- , குழுக்கள், நிறுவனங்கள், போன்றவைகளுக்கு ரூ.4000/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு விண்ணப்பதாரர் விண்ணப்பித்த 48 மாதங்களுக்குள் பரிசோதனைக்கு வருமாறு பரிசோதனைக் குழுவிற்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும். இதற்கு நபர் ஒருவருக்கு ரூ. 1000/- ம் நிறுவனங்களுக்கு  ரூ. 3000/- ம் செலுத்தப்பட வேண்டும். அதோடு பதிவுசெய்வதற்கென தனிநபர் ரூ. 1500/- ம் நிறுவனங்கள் ரூ. 5000/- ம்  காப்புரிமை பெறும் சமயத்தில் செலுத்த வேண்டும்.

விண்ணப்ப வெளியீடு:

            விண்ணப்பங்கள் விண்ணப்பித்த தேதியிலிருந்து 18 மாதங்கள் கழித்தோ அல்லது முன்னுரிமை கோரப்பட்ட தேதியில் எது முன்னதாக இருக்கிறதோ அந்தத் தேதியில் வெளியிடப்படும். இரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டிய விண்ணப்பங்கள் பிரிவு 35 – ன் கீழ் அலுவலகப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இந்த விண்ணப்பங்கள் மட்டும் பொது அறிக்கைக்கு வெளியிடப்படாது. இவ்வாறு வெளியிடும் போது விண்ணப்ப தேதி, விண்ணப்ப எண், விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி போன்ற தகவல்கள் வெளியிடப்படும்.

            விண்ணப்பித்த 48 மாதங்களுக்குள் விண்ணப்பதாரர் வடிவம் 19-ஐப் 
பூர்த்தி செய்து பரிசோதனைக்கு வருமாறு அழைத்தால் ஒழிய பரிசோதனை செய்யப்படமாட்டாது.

பரிசோதனை மற்றும் அறிக்கை:

            எல்லா விண்ணப்பங்களும் அந்தந்த தொழில்நுட்ப வல்லுநர்களால் பரிசோதனை செய்யப்படுகிறது. (படிவம் 19 ஐ பூர்த்தி செய்து அனுப்பிய பிறகு ) கண்டுபிடிக்கப்பட்ட முறை, தொழில்முறைப் பயன்பாடு போன்ற அனைத்து தகவல்களும் அலசி ஆராயப்படுகின்றன.

            மேலும் அத்துறையின் பழைய கண்டுபிடிப்புகள், புதிய கண்டுபிடிப்பின் தன்மை போன்றவற்றையும் காப்புரிமை அலுவலகத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி ஆராய்வர். பின்பு அக்கண்டுபிடிப்பு இந்திய அல்லது சர்வதேச தரத்தில் பார்த்துப் பிரிக்கப்படுகிறது.

காப்புரிமை அளிப்பு மற்றும் தெரியப்படுத்துதல்:

            காப்புரிமைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டபின் அதை விண்ணப்பதாரருக்கு கட்டுப்பாட்டு அலுவலர் தெரியப்படுத்துவார். அதோடு முழுமையான குறிப்பேட்டை இந்திய அரசாங்க அறிக்கையில் பகுதி – III , பிரிவு 2 ன் கீழ் வெளியிடுவார். இது ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வெளியாகிறது.

காப்புரிமை வழங்க எதிர்ப்பு:

            ஒரு காப்புரிமைக்கு யாரேனும் எதிர்ப்புத் தெரிவிக்க விளைந்தால் 4 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும். ஒரு மாதம் நீட்டிக்கலாம். இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிப்பவர் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் அவர் எதற்காக, என்னென்ன பண்புகளை எதிர்க்கிறார் என்ற முறையான விளக்கங்கள் கொடுக்க வேண்டும். இந்த விளக்கம் எழுத்து வடிவத்தில் என்னென்ன குறிப்புகளை தெரிவிக்கிறார் என ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். கட்டுப்பாட்டு அலுவலர் இவ்விளக்கம் மற்றும் ஆதாரங்களைப் பார்த்துக் காப்புரிமை அளிப்பு பற்றி முடிவு செய்வார்.

காப்புரிமை அளித்தல்:

            எதிர்ப்பாளரின் தரப்பு நிரூபிக்கப்பட்டால் காப்புரிமை இரத்து செய்யப்படும். விண்ணப்பதாரர் தரப்பு கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டால் காப்புரிமை வழங்கப்படும். இக்காப்புரிமை விண்ணப்பதாரரின் விருப்பப்படி நேரடியாகவோ அல்லது முத்திரையிடப்பட்ட உறையினுள் வைத்தோ வழங்கப்படும். முத்திரையிடப்பட்ட உறையினுள் வைத்து வழங்க தனி கட்டணம் வசூலிக்கப்படும். இக்கட்டணம் முழுமையான குறிப்பேடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட 6 மாதங்களுக்குள் செலுத்தப்பட வேண்டும். இக்காலம் 3 மாதங்கள் நீட்டிக்கப்படும். காப்புரிமை உறையிடப்பட்டு ஒப்படைக்கப்பட்டால் தான் காப்புரிமை பெற்றதாக கொள்ளப்படும். வருடத்திற்கு ஒரு முறை காப்புரிமையைப் புதுப்பிக்க சந்தா செலுத்த வேண்டும்.

உலக அளவில் (சர்வதேச தரத்தில்) காப்புரிமை பெறுவது எவ்வாறு?

            இன்றைய நடைமுறை அளவில் உலக அளவில் காப்புரிமை பெற வழியில்லை.  பொதுவாக நாம் எந்த நாட்டில் பயன்படுத்துகிறோமோ அந்நாட்டில் உள்ள வழிமுறைப்படி காப்புரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும். சில நாடுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது வட்ட அளவில் காப்புரிமை பெறுவதற்கான ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் அல்லது ஆப்ரிக்க வட்டார அறிவு சார்ந்த காப்புரிமை அலுவலகம் என்ற நிறுவனங்கள் ஆங்காங்கு தோன்றியுள்ளன. இவை அக்குறிப்பிட்ட நாடுகள் / பகுதிகளுக்கான காப்புரிமைகளை வழங்குகின்றன. கூட்டுறவுக் காப்புரிமை உடன்பாடு உலக அளவில் (சர்வதேச தரத்தில்) காப்புரிமைகளை வழங்குகிறது. எனினும் அவை ஒரு நாட்டு காப்புரிமை போலவே பயன்பாடு உடையவை.

இந்தியாவில் உள்ள காப்புரிமை அலுவலகங்கள்

            இந்தியக் காப்புரிமை அலுவலகம் தொழில்துறை ஆவணம் மற்றும் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்துறை வடிவங்கள் போன்றவற்றிற்கு காப்புரிமை வழங்குகின்றது. தலைமை அலுவலகம் கொல்கத்தா, மும்பை, சென்னை மற்றும் புதுதில்லியில் உள்ளது. அந்தந்தப் பகுதிகளின் காப்புரிமை விண்ணப்பங்களை பரிசீலித்து இவை காப்புரிமை அளிக்கின்றன.

தலைமை அலுவலகம்
கட்டுப்பாட்டு அலுவலர் காப்புரிமை, வடிவங்கள் மற்றும் வர்த்தக 
குறியீடுகள்,
பழைய CGO கட்டிடம்,
101, M.K.சாலை,
மும்பை – 400 002.
இந்தியா
தொலைபேசி: +91 – 22 – 201 7368
+91 – 22 – 203 9050
தொலைப்பிரதி: +91 – 22 – 205 3372 
மின்னஞ்சல்: http://www.patentoffice.nic.in

மண்டல காப்புரிமைக் அலுவலகங்கள்

கட்டுப்பாட்டு அலுவலர் காப்புரிமை, வடிவங்கள் மற்றும் வர்த்தக குறியீடுகள்,
புத்திக் சம்படா பவன், 
ஏன்டாப் மலை அருகில்,
தலைமை அஞ்சல் அலுவலகம்,
S.M.சாலை,
ஏன்டாப் ஹில்,
மும்பை – 400 037

தொலைபேசி:            022 – 241 23311
தொலைப்பிரதி:        022 – 241 23322 
வலைதளம்:               http:// www.ipindia.nic.in

காப்புரிமை அலுவலக முகவரிகள்

  1. உதவி / இணை கட்டுப்பாட்டு அலுவலர் காப்புரிமை, வடிவங்கள்
  2. காப்புரிமை அலுவலகம்,
    அறிவுசார்ந்த  உரிமை அலுவலக கட்டிடம்,
    CP – 2 துறை V
    உப்பு ஏரி நகர்,
    கொல்கத்தா – 700 091
    தொலைபேசி :  23671945, 1946, 1987
    தொலைப்பிரதி: 033 – 2367 – 1988
    மின்னஞ்சல்: kolkatta-patent@nic.in

  3. உதவி / இணை கட்டுப்பாட்டு அலுவலர் காப்புரிமை, வடிவங்கள்
  4. காப்புரிமை அலுவலகம்,
    அறிவுசார்ந்த  உரிமை அலுவலக கட்டிடம்,
    GST சாலை, 
    கிண்டி
    சென்னை – 600 032
    தொலைபேசி :    044 – 22502081 – 84
    தொலைப்பிரதி:  044 – 22502066
    மின்னஞ்சல்: chennai-patent@nic.in

  5. உதவி / இணை கட்டுப்பாட்டு அலுவலர் காப்புரிமை, வடிவங்கள்
  6. காப்புரிமை அலுவலகம்,
    அறிவுசார்ந்த  உரிமை அலுவலக கட்டிடம்,
    பிளாட் நெ. 32, துறை (பிரிவு) – 14 
    டுவார்க்கா, புதுதில்லி – 110 075
    தொலைபேசி :    011 – 28031032, 28031039, 28031044
    தொலைப்பிரதி:  011 – 28031883
    மின்னஞ்சல்: delhi-patent@nic.in
  7. உதவி / இணை கட்டுப்பாட்டு அலுவலர் காப்புரிமை, வடிவங்கள்
  8. காப்புரிமை அலுவலகம் (வடிவுப் பிரிவு),
    அறிவுசார்ந்த  உரிமை அலுவலக கட்டிடம்,
    CP – 2 துறை V
    உப்பு ஏரி நகர்,
    கொல்கத்தா – 700 091
    தொலைபேசி :  23671945 – 46, 1987
    தொலைப்பிரதி: 033 – 23671988
    மின்னஞ்சல்: kolkatta-patent@nic.in

குறிப்பு:  வடிவத்திற்கான விண்ணப்பப் படிவங்களை சென்னை, மும்பை, புதுதில்லி ஆகிய மூன்றில் எந்த ஒரு அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளப்படும்.

படிவங்கள்:

படிவ எண் பிரிவும் விதிகளும் தலைப்பு
1 பிரிவு 5 (2), 7, 54, 135 மற்றும் விதி 39 காப்புரிமை வழங்கும் விண்ணப்பம்
1 A பிரிவு 7 (1 A ) ; விதி 20 (1) கூட்டுறவுக் காப்புரிமை உடன்பாட்டின் கீழ் சர்வதேச காப்புரிமை பெறும் விண்ணப்பப் படிவம்
2 பிரிவு 10 ; விதி 13 தற்காலிக / முழுமையான குறிப்பேடுகள்
3 பிரிவு 18 ;  விதி 12 அறிக்கை மற்றும் எடுத்துக் கொள்ளல்
4 பிரிவு 8 (2), 9 (1), 25 (1),       28 (4), 43 (3), 53 (3); 
விதி  12 (4), 13 (6), 24 (5), 
56 (1), 73 (3) அல்லது 130
கால நீட்டிப்பிற்கு விண்ணப்பிக்கும் படிவம்
5 பிரிவு 10 (6); விதி 13 (6) கண்டுபிடிப்பை அறிவித்தல்
6 பிரிவு 20 (1), 20 (4), 20 (5);
விதி 34 (1), 35 அல்லது 36
விண்ணப்பதாரரின் வாரிசு உரிமையில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தெரிவித்தல்
7 பிரிவு 25; விதி 55 காப்புரிமைக்கு எதிர்ப்பு தெரிவித்தல்
8 பிரிவு 28 (2), 28 (3) அல்லது
28 (4) மற்றும் 66,67,68
கண்டுபிடிப்பாளரின் பெயரை அப்படியே குறிப்பிட வேண்டுதல்
9 பிரிவு 43 மற்றும் விதி 73 (1) காப்புரிமை முத்திரையிட்டு வழங்க கோருதல்
10 பிரிவு 44 மற்றும் விதி 75 காப்புரிமையில் திருத்தம் கோரும் விண்ணப்பம்
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014