பயிர் பாதுகாப்பு :: மிளகாய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

மிளகாயின் நாற்றழுகல் நோய் (Damping off)

நோய்காரணி : பிதியம் அஃபானிடெர்மேட்டம் (Pythium Aphanidermatum)
நாற்றழுகல் நோய்

  • நாற்றங்காலில் நாற்றுக்கள் மடிந்து சொட்டை சொட்டையாக இருப்பதற்கு இந்த நோயே காரணமாகும்
  • இப்பூசணத்தின் இழைகள் நிறமற்று குறுக்குச் சுவர்கள் இல்லாமலும் இருக்கும். பிரதான பூசண இழையின் விட்டம் 5 மைக்கிரான் ஆகும்.
  • பூசண இழைகள் பெருத்து ஒழுங்கற்ற வடிமுடிடைய வித்துப்பைகளை தோற்றுவிக்கின்றன

அறிகுறிகள்

  • மண்ணில் காணப்படும் இப்பூசணம் பாத்திகளில் விதையை விதைத்தவுடன் தாக்கத் தலைப்படுகின்றது.
  •  இப்பூசணம் விதைகளைத் தாக்கி அவற்றை முளைக்காமல் செய்கின்றன. இதனால் பாத்திகளில் நாற்றுக்கள் வெளிவராமல் திட்டு திட்டான இடங்கள் காணப்படும்.
  • இப்பூசணம் மண்ணுடன் தொடர்பு கொண்டுள்ள இளம் நாற்றுகளின் தண்டுப் பகுதியைத் தாக்கி மடியச் செய்கின்றன.
  • தண்டுப்பாகம் வலுவிழந்து விடுவதால் நாற்று சாய்ந்து விடுகின்றன.
  • நோயுற்ற நாற்றுக்கள் பழுப்பு நிறமாகவோ, வெளுத்தோ காணப்படும்.
  • தண்டின் அடிப்பகுதி அழுகி விடுகின்றன.
  • இந்த நோய் பொதுவாக தாழ்வான வடிகால் வசதியில்லாத நிழற் பாங்கான பகுதிகளில் அமைக்கப்பட்ட பாத்திகளிலும், தேவைக்கு அதிகமான அளவு விதையை விதைத்து அதிக நெருக்கமாக நாற்றுக்கள் வளர்ந்துள்ள பாத்திகளிலும், நீர் அதிகம் தேங்கியுள்ள பாத்திகளிலும் தென்படுகிறது.
  • விதை, மண் மூலமாக இது பரவுகிறது.

கட்டுப்பாடு

  • நாற்றங்கால் நிலத்தை வடிகால் வசதியுள்ள நிழல் இல்லாத பகுதிகளில் மேட்டுப் பாத்தியாக அமைக்க வேண்டும்.
  • போதிய அளவு விதையை மட்டும் கலக்கமாக விதைக்க வேண்டும்.
  • தேவைக்கு ஏற்ப தண்ணீரைப் பாய்ச்சுதல் வேண்டும்.
  • விதைகளை விதைப்பதற்கு முன்பு திராம் அல்லது கேப்டான் மருந்துடன் கிலோவிற்கு 4 கிராம் வீதம் மருந்திட்டு விதைக்க வேண்டும்.
  • மண்ணிலிருந்து தாக்கும் பூசணங்களையும் சிறிது காலத்திற்கு தடுத்து விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்கும். இதனால் நாற்றுக்கள் நன்கு வளரமுடிகிறது.
  • இளம் நாற்றுக்களில் நோய் தோன்றினால் தாமிரப் பூசணக் கொல்லி மருந்தை (2.5 கிராம்/ஒரு லிட்டர் தண்ணீர்) நாற்றங்கால் மண்ணில் ஊற்ற வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016