Horticulture
தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் :: மரிக்கொழுந்து
மரிக்கொழுந்து
ஆர்டிமிசியாபேலன்ஸ் -ஆஸ்டரேசியே

நமது நாட்டில் மரிக்கொழுந்து வாசனை எண்ணெய் உற்பத்திக்காகவும், மணமுள்ள இலைகளுக்காகவும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் 500 எக்டர் பரப்பளவில் இதன் சாகுபடி உள்ளது.

மண்வளம்
இந்த வாசனைப் பயிரை சாகுபடி செய்ய செம்மண் மற்றும் மண் கலந்த பொறை மண் வகைகள் ஏற்றவை. கரிசல் மற்றும் வடிகால் வசதியுடைய வண்டல் மண் வகைகளிலும் சாகுபடி செய்யலாம்.

தட்பவெப்ப நிலை
தமழ்நாட்டில் சமவெளிப் பகுதிகளிலும், மலைப்பிரதேசங்களிலும் பயிர் செய்யலாம். வாசனை எண்ணெய் உற்பத்திக்கு பயிர் செய்யப்படும்போது தட்பவெப்ப நிலை மிகவும் முக்கியம். நவம்பர்-டிசம்பர் ஆகிய குளிர் காலங்களில் இலைகளை அறுவடை செய்ய வேண்டும். அப்போதுதான் இலை மகசூலும் எண்ணெய் உற்பத்தியும் அதிகமாக இருக்கும். உறை பனி இருக்கின்ற மலைப் பகுதிகளில் இப்பயிரை சாகுபடி செய்ய இயலாது.

பயிர்ப் பெருக்கம்
மரிக்கொழுந்து விதை மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யப்படுகின்றது.

நாற்றங்கால்
ஒரு எக்டரில் விதைப்பதற்கு 1.0-1.5 கிலோ விதைகள் தேவைப்படும். இரண்டு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம் மற்றும் 15 செ.மீ உயரமுள்ள மேடை நாற்றங்காலை தயார் செய்ய வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 10 கிலோ தொழு எரு இட்டு மண்ணுடன் கலந்து விதைக்க வேண்டும். விதைகளை 10 செ.மீ இடைவெளியில் நேர்க்கோடுகளை அமைத்து சீராக விதைக்க வேண்டும்.

நடும் பருவம்
நாற்றுகளை ஜ%ன், ஜ%லை மாதங்களில் நடவு செய்ய வேண்டும்.

நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்றாக உழது எக்டருக்கு 10 டன் தொழு எரு இட்டு மண்ணைப் பண்படுத்த வேண்டும். பிறகு 2 மீ X 2 மீ அளவிலான மேடைப் பாத்திகளை அமைக்க வேண்டும். பாத்திகளில் நன்றாக நீர்ப்பாய்ச்சி ஒரு மாத வயதுடைய நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்.

இடைவெளி
செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியும், வரிசைக்கு வரிசை 15 செ.மீ இடைவெளியிலும் நாற்றுக்களை நடவு செய்யலாம்.

உரமிடுதல்
ஒரு எக்டருக்கு 125 கிலோ தழைச்சத்து, 125 கிலோ மணிச்சத்து மற்றும் 75 கிலோ சாம்பல் சத்து தரவல்ல உரங்களை இட வேண்டும். இவற்றில் 50 கிலோ தழைச்சத்து மற்றும் முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை அடியுரமாக இட வேண்டும். மீதியுள்ள 75 கிலோ தழைச்சத்தை மூன்று பாகமாகப் பிரித்து இரண்டு மாத இடைவெளியில் மேலுரமாக இட வேண்டும்.

நீர்ப்பாசனம்
செடிகளை நட்ட முதல் மாதத்தில் வாரம் இரு முறையும் பிறகு வாரம் ஒரு முறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். தேவைப்படும்போது களைகளை எடுக்க வேண்டும்.

பயிர்ப்பாதுகாப்பு
வடிகால் வசதி குறைவான நிலங்களில் அழுகல் நோய் ஏற்படும். இதனைக் கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸிக் குளோரைடு மருந்தக் கரைசலை (ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு கிராம்) வேரின் அருகில் ஊற்ற வேண்டும்.

அறுவடை
எண்ணெய் உற்பத்திக்கு, செடிகளில் அதிகளவு பூக்கள் வெடிக்கின்ற தருணத்தில் அதாவது பிப்ரவரி மாதத்தில் தரையிலிருந்து 10 செ.மீ உயரத்தில் அறுத்து எடுக்கலாம். இலை மற்றம் தண்டுகளை நிழலில் இரண்டு நாட்களுக்கு உலர வைத்து ஆவி வடிப்புக்கு உட்படுத்தலாம்.

மகசூல்
ஒரு எக்டருக்கு 9,000 முதல் 10,000 கிலோ உலர்ந்த இலைகளும் 10-12 கிலோ வாசனை எண்ணெயும் மகசூலாகக் கிடைக்கும்.