தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை

இதர ஊட்டச்சத்துக்கள்

1. போரான் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இதன் அறிகுறிகள் புதிதாக தோன்றிய ஓலைகளில் இருக்கும்.  இந்த ஓலைகள் முதிர்ந்த பின்பும் அறிகுறிகள் காணப்படும்.
  • போரான் பற்றாக்குறையின் தொடக்க நிலையில்,  தென்னையின் ஓலைகளில் சிற்றிலைகளின் நுனிகள் வளைந்து இருக்கும். இவைகள் கொக்கி ஓலைகள் என்று அழைக்கப்படுகிறது. ஓலைகளின் ஓரங்களில் கூரிய பற்களைப் போன்று வளைந்து காணப்படும்
  • மற்ற பொதுவான அறிகுறியானது,  புதிதாக தோன்றும் ஓலைகள் நன்கு விரிவடையாது.  சீர்கேடுற்ற நிலையில்,  மரத்தின் நுனியில் நிறைய விரிவடையாத ஓலைகள் காணப்படும்.
  • போரான் பற்றாக்குறையானது, பூங்கொத்து மற்றும் காய்களிலும் காணப்படும்.  பூங்கொத்து மற்றும் காய்கள் காய்ந்து காணப்படும்.

கண்டறியும் முறைகள்:

போரான் பற்றாக்குறையின் அறிகுறிகள் நன்கு தெரியும்.  இந்தப் பற்றாக்குறையை கண்டறிய இதன் அறிகுறிகளே போதுமானது.  மாங்கனீஸ் பற்றாக்குறையின் அறிகுறியும் இது போன்றே இருக்கும்.  போரான் பற்றாக்குறையின் அறிகுறிகள் நிலையற்ற தன்மையைக் கொண்டது.  இந்த மூலக்கூறானது மரத்தின் உள்ள ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு செல்லாது. இந்த பற்றாக்குறையானது மொட்டுப்பகுதியின் உள்ளே காணப்படும். ஓலையின் அடிக்குருத்து வளர்ச்சியை மட்டும் பாதிக்கிறது. இலைச் சோதனையானது இதை கண்டறிய உதவாது. 

கட்டுப்படுத்தும் முறைகள்: 

இலைவழித்தெளிப்பானால் 0.2% (1லி. தண்ணீருக்கு 2 கிராம்) போராக்ஸை ஒரு நாற்றுக்கு 75-100 மி.லி. தெளிக்க வேண்டும். பொதுவாக தென்னங்கன்றுகளுக்கு நாற்றங்கால் நிலையில் தெளித்தல் முறையானது கடைபிடிக்கப்படுகிறது.

  • 1 வருட மரம் - போராக்ஸ் 5-10 கிராம்/மரம் ஒன்றிற்கு ஒரு வருடத்திற்கு
  • 2-3 வருட மரம் - போராக்ஸ் 15-20 கி/மரம் ஒன்றிற்கு/ ஒரு வருடத்திற்கு
  • 4 வருட மரம் மற்றும் அதற்கு மேலாக உள்ள மரங்களுக்கு 30-50 கிராம் போராக்ஸ் ஒரு மரத்திற்கு ஒரு வருடத்திற்கு இட வேண்டும்.

பற்றாக்குறை அறிகுறிகள்





2. மாங்கனீசு பற்றாக்குறை 

அறிகுறிகள்

மாங்கனீசு பற்றாக்குறையானது களர் மண்ணில் பொதுவாக காணப்படும். இளம் ஓலைகளில் பச்சையம் குன்றி நீண்ட காய்ந்த கோடுகள் காணப்படும். இந்த பற்றாக்குறையின் தொடர்ச்சியாக புதிதாக தோன்றும் சிற்றிலைகள் காணப்படும். மேலும் சிற்றிலையின் அடிப்பகுதி வாடி இருக்கும். இந்த வாடுதல் காரணமாக இளம் இலைகள் சுருண்டு மரத்தின் நுனியில் சுருட்டையாக காணப்படும் (நுனிசுருட்டை). மாங்கனீசு அதிக பற்றாக்குறையின் காரணமாக மரத்தின் வளர்ச்சி தடைப்பட்டு புதிதாக தோன்றும் இலைகளின் அடித்துாறு காய்ந்தும் காணப்படும்.

கண்டறியும் முறைகள்

இந்த குறைபாட்டை பார்வையில் தென்படும் அறிகுறிகளைக் கொண்டு எளிதில் கண்டறியலாம்.  ஆனால் இலை ஊட்டச்சத்து சோதனையும் இதைக் கண்டறிய பரிந்துரைக்கப்படுகிறது.  ஏனெனில் இதன் அறிகுறிகளானது போரான் பற்றாக்குறையை போன்றே காணப்படுகிறது.  காலம் கடந்த நிலையில் பொட்டாசியம் பற்றாக்குறையின் அறிகுறியை மாங்கனீஸ் பற்றாக்குறையின் அறிகுறியிலிருந்து பேறுபடுத்தி அறிவது கடினம். கூர்ந்து கவனிப்பதன் மூலம் இலைகளில் காணப்படும் நீண்ட கோடுகள் மற்றும் அடிப்பகுதி அறிகுறிகளையும் கண்டறியலாம். 

கட்டுப்படுத்தும் முறை

ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ மாங்கனீசு சல்பேட்-யை மண்ணில் இடவேண்டும்.

மாங்கனீசு பற்றாக்குறை அறிகுறிகள்

3. மெக்னீசிய சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

மெக்னீசியம் பற்றாக்குறையானது முதிர்ந்த ஓலைகளில் தோன்றும் பரந்த மஞ்சள் நிறப்பட்டைகள் ஓலையின் நுனி மற்றும் நடுப்பகுதியில் காணப்படும். ஓலையின் மற்றப் பகுதிகள் பச்சையாக இருக்கும். இந்த பற்றாக்குறை முற்றிய நிலையில் இலையின் நுனிப்பகுதிகள் காய்ந்து காணப்படலாம். முதிர்ந்த ஓலைகள் வெண்கல நிறத்தில் காய்ந்து காணப்படும். ஓலைகள் பார்ப்பதற்கு காய்ந்து பழுப்பு கலந்த சிவப்பு நிறத்தில் தெளிவான புள்ளிகளைக் கொண்டு காணப்படும். மஞ்சள் நிறமானது இலையின் நுனியில் தொடங்கி அதன் அடிப்பகுதிக்கு பரவும்.

கண்டறியும் முறை

மெக்னீசியம் பற்றாக்குறையை பார்வையில் தென்படும் அறிகுறிகளைக் கொண்டே  எளிதில் கண்டறியலாம். மெக்னீசியம் பற்றாக்குறையின் அறிகுறியானது பொட்டாசியம் பற்றாக்குறையின் அறிகுறியிலிருந்து வேறுபட்டு இருக்கும். பொட்டாசியம் பற்றாக்குறையின் அறிகுறியானது ஆரஞ்சு வெண்கல நிறத்துடன்  இலையின் அடிப்பகுதியில் பச்சை நிறத்தில் காணப்படும். ஆனால் மெக்னீசியம் பற்றாக்குறை உள்ள ஓலையின் நடுப்பகுதி பச்சையாகவும் ஓரங்களில் அதிக எலுமிச்சை மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். 

கட்டுப்படுத்தும் முறைகள்

வருடத்திற்கு மரம் ஒன்றிற்கு 1-2 கிலோ மெக்னீசியம் சல்பேட்டை மண்ணில் இடுதல்,  200 மில்லி லிட்டர் அல்லது 2% மெக்னீசியம் சல்பேட் வருடத்திற்கு இரண்டு முறை வேர்வழியாக செலுத்துதல்.

மெக்னீசிய சத்து  பற்றாக்குறை அறிகுறிகள்

4. துத்தநாக சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

இளம் இலைகளில் காணப்படும். இலைகளின் அளவானது 50% ஆக குறைந்து காணப்படும்.  சிற்றிலைகள் பச்சையம் இழந்து சிறுத்து காணப்படும். பற்றாக்குறையின் தாக்குதலால் பூப்பது காலதாமதப்படும். மேலும் இதனால் குரும்பை உதிர்வதும் ஏற்படும்.

கட்டுப்படுத்தும் முறை

ஜிங்க் சல்பேட்டை ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ என்ற விகிதம் மண்ணில் இடுதல்.

துத்தநாக சத்து பற்றாக்குறை அறிகுறிகள்



5. இரும்பு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இரும்புசத்து பற்றாக்குறையானது, குறைந்த காற்றோட்டமுள்ள மண்ணில் பொதுவாக காணப்படும். அல்லது அதிக ஆழங்களில் நடப்பட்ட பகுதிகளில் காணப்படும். தண்ணீர் தேக்கம் உள்ள மண்ணில் மற்றும் ஆழமாக நடப்பட்ட பகுதிகளில், வேரின் சுவாசமானது தடைப்பட்டு இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளும் வீரியம் குறைந்து காணப்படும். 
  • இதனுடைய முக்கியமான அறிகுறியானது பச்சையம் அற்ற (அல்லது) புதிய ஓலைகளில் நரம்புகளுக்கிடையில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் (ஒரே மாதிரியான பச்சையமற்ற புதிய இலைகள், நுனிகள் காய்ந்து மற்றும் இலைகளின் அளவு குறைக்கப்பட்டு இருக்கும்).

கட்டுப்படுத்தும் முறை

பெர்ரஸ் சல்பேட்டை 0.25-0.5 % என்ற விகிதத்தில் ஒரு மரத்திற்கு ஒரு வருடத்திற்கு இட வேண்டும். 

இரும்பு சத்து பற்றாக்குறை அறிகுறிகள்

6. கால்சியம் பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகளின் ஓரங்களில் குறுகிய வெள்ளைநிறப்பட்டைகள் வெளிப்படுத்துதல்
  • நரம்பு இடைவெளிப்பகுதி பச்சையமற்று காணப்படும்
  • இலை நுனி துருப்பிடித்து காணப்படுதல்
  • இலைகள் சுருண்டு காணப்படுதல்
  • அமிலத்தன்மை கொண்ட மண்ணில் மட்டும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை

சுண்ணாம்பு சத்தின் தேவையை பொறுத்து சுண்ணாம்புச்சத்தை மண்ணில் இடுதல் 1% கால்சியம் நைட்ரேட் கரைசலை வேர் வழியாக செலுத்த வேண்டும்.

கால்சியம் பற்றாக்குறை அறிகுறிகள்

 



7. தாமிரச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • வெண்கல நீல நிற ஓலைகள்
  • விறைப்புத் தன்மை குறைவால், நுனி ஓலைகள் சுருண்டு காணப்படுதல்
  • ஓலைகள் பார்ப்பதற்கு வெண் சாம்பல் நிறத்தில் காணப்படும்
  • பூக்கள் உற்பத்தி இல்லாமல் இருத்தல்

கட்டுப்படுத்தும் முறை

ஒரு ஹெக்டருக்கு, 25 கிலோ காப்பர் சல்பேட்டை மண்ணில் இடுதல்

தாமிரச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்

8. மாலிப்டினம் பற்றாக்குறை

அறிகுறிகள்

  • வெளிறிய இலைகள்
  • சிறிய மெல்லிய இலைகள்
  • சாட்டை வால் அறிகுறிகள்

கட்டுப்பாட்டு முறைகள்

0.05% (0.5 கிராம்/ லிட்டர் தண்ணீர்) சோடியம் மாலிப்பேட்டை வேர் மூலம் செலுத்தவும்.

மாலிப்டினம் பற்றாக்குறை அறிகுறிகள்

 


சந்தைப்படுத்தல்


நடமாடும் விற்பனை

சாலையோர கடைகள்

ஒழுங்கு முறை விற்பனைக்கூடம்

 

Update : December 2014