தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: வெந்தயம்


வெந்தயம் (டிரைகோனெல்லா ஃப்யோனம் கிரேகம்)
லெகுமினோசே

வெந்தய செடி

இரகங்கள் :கோ 1, பூசா எரிலி பன்சிங், லேம் தேர்வு 1, ராஜேந்திர கிராந்தி, கிஸார் சோனாலி, ஆர். எம்.டி 1 மற்றும் கோ 2.

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதியுள்ள கரிசல் அல்லது அங்ககச்சத்து மிகுந்த மணங்பாங்கான நிலத்தில் நன்கு வளரும். மிதமான தட்பவெப்பநிலை ஏற்றது.

பருவம் : ஜுன்  - ஜுலை மற்றும் அக்டோபர் - நவம்பர்

விதையளவு  : எக்டருக்கு 12 கிலோ விதைகள்

விதை நேர்த்தி
எக்டருக்கு 12 கிலோ விதைக்கு 1.5 கிலோ அசோஸ்பைரில்லம் + 50 கிராம் டிரைகோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைப்பு : நிலத்தை நன்கு உழுதபின்பு, 3.5 x 1.5 மீட்டர் அளவுள்ள பாத்திகளாகப் பிரித்து கொள்ள வேண்டும். விதைகளை 20 x 15 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். பயிர் முளைக்கும் முன் 700 மிலி ப்ளுகுளோரலின் களைக்கொல்லியை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் களையைக் கட்டுப்படுத்தலாம்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரம் : எக்டருக்கு 20 - 25 கிலோ தொழு உரத்தை கடைசி உழவின் போது இடவேண்டும். மேலும் 30 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும்.

மேலுரம் : விதைத்த 30 நாட்கள் கழித்து மேலுரமாக எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரத்தை இடவேண்டும்.

நீர் நிர்வாகம் : விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு மூன்றாம் நாளும் அதனைத் தொடர்ந்து 7-10 நாட்களுக்கு ஒரு முறையும் நீர்ப் பாய்ச்சவேண்டும்.

பின்செய்நேர்த்தி : விதைத்த 20-25 நாட்களுக்குப் பிறகு பயிர் களைதல் வேண்டும். களைந்த பயிரை பசுங்கீரையாக உபயோகப்படுத்தலாம். தேவையான போது களையெடுத்தல் வேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

பயிர் பாதுகாப்பு:

நோய்கள்:

வேரழுகல் :  நோய் தோன்றும் போது 0.5 கிராம் கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பாகத்தில் ஊற்றவேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி கலந்து  விதைநேர்த்தி செய்து விதைக்கவேண்டும். எக்டருக்கு 50 கிலோ புண்ணாக்கை நோய் தோன்றும் போது இடவேண்டும்.

சாம்பல் நோய் : நோய் தோன்றும் போது எக்டருக்கு 25 கிலோ சல்பரை தூவ வேண்டும் அல்லது 2 கிராம் நனையும் கந்தகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இலைமேல் தெளிக்க வேண்டும்.

வெந்தய பூ வெந்தய விதைகள்

அறுவடை : விதைத்த 20-25 நாட்கள் கழித்து அறுவடை செய்து பசுங்கீரையாக உபயோகப்படுத்தலாம். 90-100 நாட்களில் விதைகள் உருவாகிவிடும்.

மகசூல் : எக்டருக்கு பசுங்கீரை 4000 - 5000 கிலோ, விதைகள் 500-700 கிலோ.