தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: காலிஃபிளவர்

இரகங்கள்

மலைப்பகுதிகளக்கு ஏற்ற இரகங்கள் : கீபாஜெயண்ட், பனிப்பந்து. செகண்ட் எரிலி, எர்லிகுன்வார்ஈ செகண்ட் கரிலிகுன்வார், பூசாதபோலி.

சமவெளிப்பகுதிகளுக்கு ஏற்ற இரகங்கள் : மார்வல், பாட்னா மீட்சீசன், எரிலிந்தெடிக், செகண்ட் எர்லி, பூசாதவோலி, அர்கா கந்தி.

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதியுடைய எல்லா மண்களிலும் பயிரிடலாம். பயிரிட குளிர்ச்சியான பனி மூட்டம்  தேவை. பொதுவாக இம்மாதிரி பனி மூட்டம் எல்லா மலைப்பகுதியிலும் கிடைக்கும். தமிழ்நாட்டில் சமவெளியில் இப்பயிர்களைக் குளிர் மாதங்களில் பயிர் செய்யலாம். இப்பயிரை கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரம் வரை பயிரிடலாம். மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 6.5 வரையுள்ள நிலங்கள் அவசியம்.

பருவம் : ஆகஸ்ட் - செப்டம்பர்  டிசம்பர் - ஜனவரி வரையுள்ள காலம் பயிர் செய்ய ஏற்றது. இக்காலத்தில் குளிரும் ஈரமும் சிறப்பாக இருக்கும்.

விதையும் விதைப்பும்

விதை அளவு : எக்டருக்கு 375 கிராம்.

நாற்றாங்கால் தயாரித்தல் : ஒரு எக்டர் பயிரிட 100 சதுர மீட்டர் அளவுள்ள இடம் தேவை. எக்டருக்கு 300 கிலோ தொழு உரம் இட்டு, மண்ணுடன் கலக்கச்செய்யவேண்டும். பின்பு 10 கிலோ 5ம் எண் கலப்பு உரம் (9:9:9 தழை:மணி:சாம்பல்) மற்றும் 50 கிராம் சோடியம் மாலிப்டேட், 100 கிராம் போரக்ஸ் இட்டு மண்ணை நன்கு கிளறிவிட்டு, ஒரு மீட்டர் அகலமுள்ள மேட்டுப்பாத்திகள் அமைக்கவேண்டும். பாத்தியைச் சுற்றி 2.5 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து ஊற்றவேண்டும். பின்பு பாத்திகளின் குறுக்கே 5 செ.மீ இடைவெளியில் கோடுகள் கிழித்து அவற்றில் விதைகளை ஒரே சீராகத் தூவி மண்ணினால் மூடி அதன்மேல்காய்ந்த புல்லைக் கொண்டு மெல்லிய போர்வை போன்று மூடி பூவாளி கொண்டு நீர் ஊற்றி வரவேண்டும்.

நடவு வயல் தயாரித்தல் : நடவு நிலத்தை 3-4 பார்கள் முறை நல்ல ஆழமாக உழுது அல்லர் கொத்திக் கிளறிவிட்டு வசதியான அளவில் பாத்திகள் அமைக்கவேண்டும். அவற்றினுள் ஆழமான வாய்க்கால்களுடன் பார்கள் அமைக்கவேண்டும். இதன் மூலம் அதிக மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளலாம். ஆரோக்கியமான 30-40 நாட்கள் ஆன நாற்றுக்களை நாற்றாங்காலிலிருந்து வேர்கள் சேதமடையாமல் மிக்க கவனத்துடன் பறித்து நடவு வயலில் நீர் பாய்ச்சி 60 x 30 செ.மீ அல்லது 60 x 45 செ.மீ இடைவெளியில்  நடவு  செய்யவேண்டும்.

நீர் நிர்வாகம்

மலைப்பகுதிகளுக்கு : ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

சமவெளிப்பகுதிகளுக்கு : வாரம் ஒரு முறை

ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை

மலைப்பகுதிகளுக்கு : நிலம் தயார் செய்யும்போது எக்டருக்கு 30 டன் தொழு உரம் இட்டு நன்கு கலந்துவிடவேண்டும். அடியுரமாக எக்டருக்கு 90 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 90 கிலோ சாம்பல் சத்து அளிக்கவேண்டும். பிறகு நட்ட 45 நாட்கள் கழித்து மேலுரமாக 45:45 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும்.

சமவெளிப்பகுதிகளுக்கு : நிலம் தயார்  செய்யும்போது எக்டருக்கு 15 டன் தொழு உரம் இட்ட மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும். அடியுரமாக எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து, 100 கிலோ மணிச்சத்து, 50 கிலோ சாம்பல்சத்து இடவேண்டும். பிறகு நட்ட நாட்கள் கழித்து மேலுரமாக 50 கிலோ தழைச்சத்துடன் 2 கிலோ இராசன உரம் கலக்காத காய்கறிப் பயிருக்கான நுண்ணூட்டக் கலவையை இடவேண்டும்.

பயிர்

 

 

இடவேண்டிய சத்துக்கள்(கிலோ)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ)

 

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

சூப்பர் பாஸ்பேட்

காலிஃபிளவர்

மலைப்பகுதிகளுக்கு

அடியுரம்

90

90

90

347

120

0

 

 

மேலுரம் நட்ட 30-45 நாட்கள் கழித்து

45

45

45

147

60

0

 

சமவெளிப்பகுதிகளுக்கு

அடியுரம்

50

125

22

85

90

64

 

 

மேலுரம் நட்ட 30-45 நாட்கள் கழித்து

50

-

-

0

109

0

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

பின்செய்நேர்த்தி : நட்ட 20வது நாள், பயிர் எண்ணிக்கையை பராமரிக்கவும், பயிர்கள் சீராக வளரவும் பயிர் களைதல்வேண்டும். பிறகு 30 மற்றும் 45வது நாளில் பயிருக்கும் மண்ணுக்கும் அதிக சேதம் ஏற்படாமல் களைக்கொத்து கொண்டு களை நீக்கம் செய்யவேண்டும். பார்களின் பக்கப் பகுதியிலும் வாய்க்கால்களிலும் கறுப்பு பாலித்தீன் தாள் விரிப்புகளை விரித்து வைப்பதன் மூலம் மண்ணிலிருந்த ஈரம் ஆவியாக வெளியேறாமல் தடுத்து மண்ணின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கலாம். இதன் மூலம் செடிகளின் வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும். எனினும் வைக்கோலினால் போர்வை அமைத்தால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். நெல் உமியைப் பரப்பி வைப்பதினால் மண்ணின் ஈரம் காக்கப்பட்டு, செடிகளின் வளர்ச்சி அதிகமாகி மகசூலையும் அதிகரிக்கலாம்.

பூக்கட்டிகளை சூரியவெப்பம் படாமல் மூடிவைத்து வளர்த்தல்

காலிபிளவர் பயிர் செய்வததில் இது முக்கிய தொழில்நுட்ப முறையாகும். இதன் மூலம் நல்ல தரமான பூக்கட்டிகளைப் பெறமுடியும். பூக்கட்டிகளைச் சுற்றியுள்ள நன்கு வளர்ந்த பெரிய இலைகளை இழுத்து மூடிகட்டிவிடவேண்டும். இவ்வாறு செய்வதால் கூரிய வெய்யிலின் கடுமையிலிருந்து பூக்கட்டிகளைப் பாதுகாக்கலாம். பூக்கள் மஞ்சள் நிறமாக மாறுவது தடுக்கப்படும். மேலும் பனிவிழும் பகுதிகளில் நேரடிப் பனித்தாக்குதலிலிருந்தும் பாதுகாக்கலாம். இதன் மூலம் பூக்கட்டிகள் நறுமணத்துடன் கவர்ச்சியான தோற்றத்துடனும் கிடைக்கும், கோடைக் காலத்தில் சுமார் 3-5 நாட்கள் வரையிலும் குளரி காலத்தில்  8-10 நாட்கள் வரையிலும் இவ்வாறு பூக்கட்டிகளை மூடி வைக்கலாம். இதற்கு மேல் மூடிவைத்தால் வெப்பப்பருவத்தில் பூக்கட்டிகள் அழுகி அதன் இயற்கையான நிறத்தை இழந்துவிடும். பூக்கட்டிகளைச் சுற்றியுள்ள இலைகளும் அழுகிவிடும். குளிர் காலத்தில் இவ்வாறு அதிகமாக மூடிவைக்கும் போது பூக்கட்டிகள் பிரிந்து இலைகள் உருவாகி மலர்கள் தோன்றுவதற்கு ஏதுவாகும். எனவே இம்முறையை மிக கவனமாகக் கையாளவேண்டும்.

தழைச்சத்து பற்றாக்குறை இருந்தாலும் வயதான நாற்றுக்களை நடுவதாலும், இலைகள் சரியாக வளர்ச்சியடையாமல் பூக்காம்புகளும் வளராமல் மிகச்சிறியதாக இருக்கும். இக்குறைபாட்டினைத் தவிர்க்க பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தினை இடவேண்டும். சரியான தருணத்தில் நாற்றுக்களை நடவு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி மற்றும் வெட்டுப்புழுக்கள், வைரமுதுகு அந்துப்பூச்சி போன்றவை காலிபிளவரை தாக்கும் முக்கியமான பூச்சிகளாகும். அசுவினிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒட்டும் மஞ்சள் அட்டை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும். வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது ஒரு லிட்டர் நீரில் டை மெத்தோயேட் 2 மில்லி மற்றும் 0.5 மில்லி டீப்பாலை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த கலவையுடன் சேர்த்துத் தெளிக்கவேண்டும்.

வெட்டுப்புழுக்கள் : இதனைக் கட்டுப்படுத்த கோடைக் காலத்தில் விளக்குப்பொறி வைக்கவேண்டும். குளோரிபைரிபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து மாலை வேளைகளில் தெளிக்கவேண்டும்.

வைர முதுகு அந்துப்பூச்சி : இப்பூச்சி பழுப்பு நிறத்தில் மிகச்சிறியதாகவும் மூங்கில் வைரம் போன்ற அமைப்பும் இருக்கும். இப்பூச்சி அதன் முட்டைகளை இலை, குருத்து மற்றும் தனித்தனியாகவோ, குவியலாகவோ இடும். இம்முட்டைகள் ஓரிரு நாட்கள் பொறித்து இளம் புழுக்கள் வரும். இப்புழுக்கள் செடியினை அரித்துச் சாப்பிடும். இப்புழுக்களால் தாக்கப்பட்ட இளம் செடிகளின் வளர்ச்சி நின்றுவிடும். வளர்ச்சி அடைந்த செடிகளின் இலைகள், ஓட்டைகள் நிறைந்ததாகவும் முக்கியமான பாகமாகிய பூக்கள் சிறியதாகவும், மிகவும் சேதமடைந்ததாகவும் இருக்கும். இதனால் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படும்.
இப்பூச்சியைக் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட முறைகளை மேற்கொள்ளவேண்டும்.

  1. கடுகுப் பயிரை ஊடுபயிராக 20:1 என்ற விகிதத்தில் பயிரிடவேண்டும்.
  2. இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும்.
  3. ஒரு கிராம் கார்டாப் ஹைட்ரோ குளோரைடு மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.
  4. இப்பூச்சியின் புழுப்பருவத்தை தாக்கி அழிக்கும் தன்மை வாய்ந்த பேசில்லஸ் தூரியன்சிஸ் என்ற பாக்டீரியாவைக் கொண்டு தயாரித்த உயிர் பூச்சிக்கொல்லி மருந்தை எக்டருக்கு 1.50-2.00 மில்லி என்ற அளவில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
  5. எக்டருக்கு 50,000 என்ற எண்ணிக்கையில் புழு ஒட்டுண்ணிணை நட்ட 60 நாட்கள் கழித்துவிடவேண்டும்.

நோய்கள்

இலைப்புள்ளி நோய் : இதனைக் கட்டுப்படுத்த கார்பென்டாசிம் ஒரு கிராம் அல்லது மேன்கோசெய் 3 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்துத் தெளிக்கவேண்டும்.

வேர்முடிச்சு நோய் : நோயைத் தடுக்க நாற்றுக்களை நடும்முன் நடவு வயலில் ஒரு கிராம் கார்பன்டசிம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து ஊற்றவேண்டும். அல்லது நாற்றுக்களை நடுமுன் மேற்கண்ட கரைசலில் இரண்டு நிமிடம் வைத்திருந்து நடவேண்டும். மேலும் முட்டைக்கோஸ் பயிரின் குடும்பத்தைச் சார்ந்த பயிர்களைக் கொண்டு பயிர்ச்சுழற்சியை மேற்கொள்ளவேண்டும். தாக்கப்பட்ட செடிகளை நிலத்திலேயே விட்டு வைக்காமல் அவ்வப்போது அகற்றி எரித்துவிடவேண்டும்.

நுண்ணுட்டப் பற்றாக்குறை

சாட்டைவால் : இக்குறைபாடு மாலிப்டினம் சத்துக் குறையினால் ஏற்படுகிறது. இக்குறைபாட்டினால் இலைகளின் ஓரங்கள் சரியாக வளர்ச்சியடையாமல், சாட்டைவால் போன்று இருக்கும். குறைபாடு தீவிரம் ஆகும்போது இலைகளின் நடுநரம்புப் பகுதி மட்டுமே உருவாகும்இ இது பெரும்பாலும் அமிலத்
தண்மையுள்ள நிலங்களில் காணப்படும். இதனை நிவர்த்தி செய்ய எக்டருக்கு 100 கிராம் சோடியம் மாலிப்டேடம் கலவையை 500 லிட்டர் நீரில் கரைத்து நாற்று நட்ட 30 நாட்கள் கழித்துத் தெளிக்கவேண்டும்.

பழுப்பு அழுகல் : போரான் சத்து குறைபாட்டினால் இது ஏற்படுகிறது. இலைகளில் சிறிய பழுப்புநிறப்புள்ளிகள் முதலில் தோன்றும். கரும்பழுப்பு நிறம் இலை முழுவதும் பரவிக் காணப்படும். இதனைத் தவிர்க்க எக்டருக்கு ஒரு கிலோ போராக்ஸ் கலவையை 500 லிட்டர் தண்ணீரில் கரைத்து நாற்று நட்ட 30 நாட்கள் கழித்துத் தெளிக்கவேண்டும்.

பூக்கள் வெளிவராதநிலை : பூச்சி தாக்குதல் (அ) குறைந்த அளவு வெப்பத்தின் மூலம் மொட்டுக்கள் (அ) பூக்கள் வெளிவராத நிலையில் இருக்கும். எனவே பரவ காலம் நோக்கி, பயிர் இரகம் நோக்கி நடவு செய்யவேண்டும்.

அறுவடை

காலிபிளவரில் விதைகள் வருவதற்கு முன்னால் கெட்டியான பூக்கட்டிகளை அறுவடை செய்யவேண்டும்.

மகசூல் : எக்டருக்கு 20-30 டன்கள் வரை கிடைக்கும்.