|| | | |||
 

வெற்றிக் கதைகள் :: வேளாண்மை

tamil English
       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

வேளாண்மை

பொறந்த வீட்டு செந்தட்டை !

தொங்கும் புழு, பறக்கும் பூச்சி, படபடக்கும் கரன்சி - இனிக்குது இயற்கை

உளுந்து மகசூலை உயர்த்திப் பார்க்கும் உரக்குழி


பொறந்த வீட்டு செந்தட்டை !

மனிதர்கள் மற்றும் கால்நடைகளை வாழ வைத்த சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து கொண்டிருக்கின்றன. என்றாலும் ஒரு சிலர், இவற்றையெல்லாம் விடாமல் சாகுபடி செய்து கொண்டுள்ளனர். அந்த வரிசையில் தட்டைப் பயிறு விவசாயத்தை மானாவாரியில் மேற்கொண்டு. உழைப்புக்கேற்ற ஊதியத்தையும்  பெற்று வருகிறது. சிவன் மலையப்பன் - சுப்புலட்சுமி தம்பதி (அலைபேசி : 99427 - 18400).
ஈரோடு மாவட்டம், தாராபுரம் வட்டம், செங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த இத்தம்பதியின் தோட்டத்தில் கொத்துக்  கொத்தாக தட்டைக் காய்கள் காய்த்துக் குலுங்குகிறது.
நாலு ஏக்கர் பூமியில் கிணத்துப் பாசனம் பண்ணி கறவை மாட்டுக்காக பசுந்தீவனம் பயிர் பண்றோம். மானாவாரியில் சோளம் தான் முக்கியமான வெள்ளாமை, அதை மட்டும் தான் முக்கியமான வெள்ளாமை, அதை மட்டும் தான் ரொம்ப நாளா செய்துகிட்டிருந்தோம்.
5 கிலோ தட்டை விதையைக் எங்க தோட்டத்துல விதைச்சி விட்டோம். பத்து நாளைக்கு ஒரு தண்ணின்னு குறைவா இருக்கிறதால மனசு போல புடிச்சு நிக்குது வெள்ளாமை என்று செந்தட்டை சாகுபடியை சிறுகதையோடு சேர்த்து சொல்லி முடித்தது தம்பதி.
சாகுபடி தொழில்நுட்பங்கள்
ஒரு ஏக்கரில் செந்தட்டை பயிர் செய்ய, ஆட்டு எரு 1 லோடு கொட்டி இறைக்கவேண்டும். மண் பொலபொலப்பு ஆகும் வகையில் இரண்டு உழவு செய்யவேண்டும். பார் முறை பாத்திகள் அமைத்து, ஓர் அடிக்கு ஓர் அடி இடைவெளி விட்டு விதைகளை ஊன்றவேண்டும். 20 நாளில் ஒரு களை எடுத்து, 1 மூட்டை யூரியா வைக்கவேண்டும். பின்னர் 50ம் நாளில் பூ எடுத்தவுடன், ஒரு கலப்பு உரம் தரவேண்டும். செழித்து வளர்ந்த செடிகள், பூ நன்றாகப் பிடித்து உதிராமல் நிற்கும். காய்ப்புத் திறனும் கூடும்.
சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் வண்டுகள் நடமாட்டம் இருக்கும். இது பச்சையத்தை உறிஞ்சி இலைகளை வெளுப்பாகும். இதைப் போக்கிட, 30ம் நாளில் மற்றும் 60ம் நாளில் டைமெத்தேட் மற்றும் மோனோகுரோட்டபாஸ் மருந்துகளை தெளிக்கலாம்.
செந்தட்டையை தனிப்பயிராகவோ.. ஊடுபயிராகவோ விதைக்கலாம். நிலக்கடலை மற்றும் எள் சாகுபடி ஏற்ற ஊடுபயிர்களில் செந்தட்டைக்கு முக்கிய இடம் உண்டு.
விளைந்து அறுவடை செய்யப்பட்ட பயறுகளில் நல்ல ஊக்கமானவற்றை அள்ளி, நன்றாக முறம் கொண்டு புடைப்பதன் மூலம் பிஞ்சு, சொத்தை எல்லாவற்றையும் அப்புறப்படுத்திடவேண்டும். பிறகு, நல்ல வெயிலில் நான்கு நாட்கள் உலர்த்தவேண்டும். இல்லை என்றால் விதைகள் உளுத்துவிடும். மானாவாரியாக செய்கிறவர்கள். புரட்டாசிப் பட்டத்தில், விதைத்துவிட்டு மேல் உழவு ஓட்டிவிட்டால் போதும், அடுத்து கிடைக்கிற மழையில செழித்து வளரும்.
பக்குவமாக சாகுபடி தொழில்நுட்பங்களை விளக்கி முடித்த சிவன் மலையப்பன், நாங்க பங்குனிப் பட்டத்துல விதைச்சோம். நாறு மாசத்துல பலனுக்கு வந்துடுச்சி. எங்களைப் பொறுத்த வரை 800 கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்கும். இன்னிய தேதியில கிலோ 30 ரூபாய்க்கு குறைவில்லாம போகுது. ஒரு ஏக்கர்ல... மானாவாரியில.. நாலு மாசத்துல இந்த அளவுக்கு லாபம் கிடைக்கறதனால செந்தட்டை சாகுபடியை நாங்க விடாம செய்ய முடிவு பண்ணிட்டோம்.
ஒரு ஏக்கரில் செந்தட்டை சாகுபடி செய்ய செலவு - வரவு கணக்கு ரூபாய் மதிப்பில்

விவரம்
செலவு வரவு
அடியுரம் ஆட்டு எரு 500  
உழவு இரண்டு தடவை 400  
பாத்தி அமைக்க 300  
விதை 5 கிலோ 200  
நடவு செய்ய 300  
தண்ணீர் பாய்ச்சல் 1,000  
களை எடுத்தல் (இரண்டு தடவை) 700  
உரம் (இரண்டு தடவை) 750  
பூச்சி மருந்து (இரண்டு தடவை) 450  
பறிப்புக் கூலி அறுவடை 800  
மகசூல் : 800 கிலோ கிலோ 30 ரூபாய் வீதம் (800 x 30)   24,000
செந்தட்டைக் கொடி   1,500
மொத்தம் 5,400 25,500
120 நாளில் நிகர லாபம்   20,100

(சொந்த ஆட்களின் கூலியும் கணக்கில் அடக்கம்)


தொங்கும் புழு, பறக்கும் பூச்சி, படபடக்கும் கரன்சி - இனிக்குது இயற்கை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் அருகே இருக்கும் அரண்மனைவலசு என்னும் குட்டி கிராமத்திலிருக்கும் குப்புசாமி (அலைபேசி : 98426 73274) இயற்கை விவசாயம் செய்கிறார்.
ரசாயன உரம், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி எல்லாம் போட்டுத்தான் நானும் விவசாயம் செய்துகிட்டிருந்தேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி ஆறு ஏக்கர்ல நிலக்கடலை போட்டிருந்தேன். கடலையில் ஒட்டுப்புழு தாக்குதல் அதிகமா இருக்கும். அப்படி புழு தாக்குற பருவமா பார்த்து எனக்கு ஒரு அவசர வேலை. வெளியூர்ல தங்க வேண்டியதாயிருச்சி. ஊருக்குத் திரும்பி வந்தப்ப, செடியெல்லாம் ஒரே புழு. அந்த நேரம் பார்த்து கையில காசு வேற இல்ல. கடன் வாங்கவும் யோசனை. அதனால மருந்து அடிக்க முடியல. ‘புழு முத்திப்போச்சு, இனி மருந்தடிச்சு பிரயோசனமில்லைன்னு அக்கம் பக்கத்து சம்சாரிகளும் சொல்லிட்டாங்க. கடலை விளைஞ்சா விளையட்டும், இல்லாட்டி அப்படியே மண்ணு திங்கட்டுன்னு எந்த மருந்தும் அடிக்காம விட்டுட்டேன். தண்ணி மட்டும் ஒழுங்கா காட்டிக்கிட்டிருந்தேன். அதே சமயம், பக்கத்து தோட்டங்கள்ல ஒட்டுப்புழு தாக்குற பருவம் முடிஞ்சி, அடுத்த நோவு தாக்கி. அதக்கு மருந்து கொடுத்துகிட்டிருந்தாங்க. ஆனா, என்னோட கடலைக்கு மட்டும் எந்த நோவும் வரலை. அறுவடை சமயத்துல பார்த்தா, மத்தவங்களைக் காட்டிலும் கூடுதலாகவே எனக்கு மகசூல் கிடைச்சிச்சி. ஆகா அற்புதமான உண்மையைக் கண்டுபிடிச்சிட்டோமேன்னு ரசாயனத்தையெல்லாம் மூட்டைக்கட்டி வெச்சிட்டேன்.
அடுத்த வெள்ளாமையப்ப களைக் கொல்லியை எதுக்கு அடிக்கணும் : அதையும் விட்டு பாக்கலாமேன்னு முடிவெடுத்தேன். அந்தத் தடவையும் நல்ல விளைச்சல். அதிலிருந்து களைக்கொல்லி அடிக்கிறதையும் விட்டுட்டேன். முழுக்க இயற்கை விவசாயம்  தான். மண்ணுக்கு ஊட்டமேத்தறதுக்கு சாணம் மட்டும் தொடர்ந்து கொடுக்குறேன். மத்த எந்த உரமும் கிடையாது. இந்த முறையில சாகுபடி செய்தா, வீரிய இரக விதை ஒழுங்கா விளையமாட்டேங்குது. நாட்டு இரகம் மட்டும் நல்லா வர்றதால, எப்பவுமே நாட்டு இரகம் தான் போடுறேன். நாட்டு வகைக்கு எப்பவுமே நல்ல விலை கிடைக்கும். அதில்லாம என்னோட தோட்டத்துக் காய் எப்பவுமே அளவுக் கொஞ்சம் பெரிசா இருக்குறதால கூடுதல் விலை கிடைக்குது. அணில் கடிச்ச கொய்யாப்பழம் ருசிக்கும்ன்னு சொல்ற மாதிரி, பல பூச்சிங்க தின்னப் பயிர் தான் என் தோட்டத்துல இருக்கு. இதுக்கு நல்ல மணம், பளபளப்பு, சதைப்பற்று, ருசி எல்லாமே இருக்கு என்றார்.
மொத்தம் பதினஞ்சு ஏக்கர்ல விவசாயம் செய்யறேன். மூணு ஏக்கர்ல மட்டும் பந்தல், நாட்டுக் குட்டைப் புடலை, நாட்டு பீர்க்கன் போட்டிருக்கேன்.பூச்சிகளைக் கட்டுப்படுத்தறதுக்காக பெரிசா மெனக்கெட வேண்டிதில்லை. தோட்டத்தில பத்து பதினஞ்சு நாட்டுக் கோழியை வாங்கிவிட்டா போதும். புழு, பூச்சியை அதுக பிடிச்சு தின்னுப்புடும். கோழிக்கு நாம இரை போட வேண்டியதில்லை. தானாவே வளந்துடும். அப்படியும் தப்பிக்கிற பூச்சிகளை காக்கா, கொக்கு, குருவி எல்லாம் சாப்பிட்டுக்கும். வேற மருந்தே தேவையில்ல..  நோவு தாக்கிக் கருகினாலும்.. அப்படியே விட்டுட்டா, தானா நோவு சரியாயிடுது.
களையைக் கொல்ற மருந்து, கட்டாயம் நாம வேளாண்மை பண்ணியிருக்கிற செடியையும் பாதிக்கத்தானே செய்யும். அதனாலயே நான் தோட்டத்துல களையெடுக்கறதே இல்லை. முழங்காலுக்கு மேல  வளந்து நின்னா, காய் எடுக்குறப்ப கஷ்டமா இருக்கும். அதனால ரொம்ப வளந்தா மட்டும் வழிச்சு அப்படியே தோட்டத்துலேயே போட்டுடுவேன். தண்ணி மட்டும் ஒழுங்கா கட்டுனா போதும். அப்பப்ப பச்சைச் சாணியை தண்ணியில கலந்து விடணும். இப்படி பண்ணுனா முட்டுவளிச் செலவுல முழுகிப்போக, வேண்டிய அவசியமே இருக்காது.
காடு நம்ம காடு.. இலவச மின்சாரத்துல தண்ணி.. எடுத்து வெச்ச நாட்டு விதை.. மத்தபடி வேற செலவே கிடையாது. விளைஞ்ச வரைக்கும் லாபம் தான். அறுப்புக்கூலி, போக்குவரத்து, சுங்கம், கமிஷன்னு இது தான் செலவு. ரெண்டு ஏக்கர்ல தோட்டத்துக்காரங்களே ரெண்டு பேர் ஒழுங்கா வேலை பாத்தா, கண்டிப்பா காய்கறியில வருஷத்துக்கு மூணு லட்சத்துக்கு குறையாம சம்பாதிக்கலாம்.
வீட்டுத் தேவைக்குன்னு மிளகாய், கத்தரி, தக்காளி, முருங்கை எல்லாமே இதே முறையில தான் வெள்ளாமை பண்ணிக்கிறேன். அறுவடையப்போ தேவைப்பட்டா ஒரு ஆளை கூடுதலா வெச்சுக்குவேன். யாரு வேணாலும் எந்நேரமும் என் தோட்டத்தை வந்து பாக்கலாம். எல்லாத்தையும் சொல்லத் தயாரா இருக்கேன் என்ற குப்புசாமி.
இதுவரைக்கும் ஏதோ எனக்குத் தெரிஞ்ச முறையில இயற்கை சாகுபடியை பண்ணிக்கிட்டிருக்கேன். இப்ப எல்லாரும் இயற்கை விவசாயத்தைப் பத்தித்தான் பெரிசா சொல்றாங்க. ஜீரோ பட்ஜெட்டுன்னு ஒண்ணு புதுசா வந்திருக்கு. இது எதுவுமே இவ்வளவு நாளாத் தெரியாது. இனிமே தான் கத்துக்கணும் குறிப்பா ஜீரோ பட்ஜெட் சூத்திரத்தை கத்துக்க ஆசை. ஏன்னா, அவங்க சொல்றதும் இயற்கை விவசாயம் தானே.அதைக் கத்துக்கிட்டா, கூடுதல் லாபம் பார்க்கலாமே என்று சொன்னார்.
ரசாயனம் விவசாயம் - இயற்கை விவசாயம்
வரவு - செலவு ஒப்பீடு
ரசாயன உரம் மூலம் புடலை

விவரம்
செலவு வரவு
மரத்தூண் பந்தல் 30,000  
தொழு உரம் 8,000  
விதை 200  
உழவு, நடவு, அறுவடை, குழி, களை எடுக்க கூலி 20,000  
உரங்கள், புண்ணாக்கு, பூச்சி மருந்துகள் 15,000  
போக்குவரத்து, சுங்கம், கமிஷன் 25,000  
25 டன் காய் விற்ற வரவு   1,50,000
மொத்தம் 98,200 1,50,000
வரவு   51,800

                       
முதல் அறுவடையில் பந்தல் செலவு 30 ஆயிரம் ரூபாய் சேரும். அடுத்தடுத்த அறுவடையில் அந்தத் தொகை லாபக் கணக்கில் வரும் போது, 81,800 என்றாகிவிடும்.

குப்புசாமியின் இயற்கை முறையில் புடலை

விவரம்
செலவு வரவு
பந்தல் 30,000  
ஆறு மாத வேலையாள் கூலி 12,000  
சாணம் 5,000  
விதை 200  
போக்குவரத்து, சுங்கம், கமிஷன் 25,000  
25 டன் காய் விற்ற வரவு   1,50,000
மொத்தம் 72,200 1,50,000
வரவு   77,800

முதல் அறுவடையில் பந்தல் செலவு 30 ஆயிரமும் சேரும், அடுத்தடுத்த அறுவடையில் அது லாபக் கணக்கில் சேரும் போது, 1,07,800 ரூபாய் கிடைக்கும்.


உளுந்து மகசூலை உயர்த்திப் பார்க்கும் உரக்குழி

திரு.கணேசன், தஞ்சாவூர் மாவட்டம், சோழகன்கரை சிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஏக்கருக்கு 9 குவிண்டால் உளுந்து மகசூலை உயர்த்திப் பார்க்கும் உரக்குழி பற்றி கூறுகிறவதாவது. 100 அடி நீளம், 9 அடி அகலம், 3 அடி ஆழம் கொண்ட குழியெடுத்து, மாட்டுக் கொட்டகையிலிருந்து வரும் கழிவுநீர்க் குழாயை அந்தக் குழியில் அணைத்திருக்கிறார். அந்தக் குழியின் கரைகளில் கொட்டாரப் பந்தல் அமைத்து,  அதில் அவரை, புடலை போன்ற கொடிகளை நிழலுக்காகப் படரச் செய்துள்ளார். இந்தக் கொடிகள் உதிர்க்கும் இலை, தழைகள் குழியில் விழுந்து கொண்டே இருக்கின்றன. இதோடு, துளசி ஆடுதொடா இலை, வேம்பு உள்ளிட்ட இலை, தழைகளையும் இதில் கொட்டுகிறார். சாணம், மூத்திரம் எல்லாம் ஒன்றாகக் கலந்து, உரக்குழியாக மாறியிருக்கிறது. பயிர்களுக்கான தண்ணீரை.
“ஒன்றரை ஏக்கர்ல உளுந்து விதைச்சுருக்கேன். மொத்தத்துக்கும் உரக்குழி தண்ணிதான் பாசனமாயிட்டிருக்கு. இந்த உளுந்துச் செடியில இலைகள் அடர்த்தியாகவும், அகலமாகவும் இருக்குறதுனால களைகளே இல்ல. ஒரு செடிக்கு சராசரியா 20 கிளைகளும், மொத்தம் 150 முதல் 200 காய்களும் பிடிச்சிருக்கு. விதைச்சு 50 நாட்களுக்கு மேல ஆகுது. இதுவரைக்கும் பூச்சி, நோய்த் தாக்குதல் கொஞ்சம்கூட இல்ல.
இதுவே ரசாயன முறையில உளுந்து சாகுபடி செஞ்சப்ப, 25ம் நாள் அசுவணித் தாக்குதல், 35-ம் நாள் மஞ்சள் நோய் தாக்குதல், இலைச் சுருட்டுப் புழுத் தாக்குதல், 40-50 நாட்கள்ல காய்ப்புழுத் தாக்குதல்னு தொடர்ச்சியா பூச்சிமருந்து அடிச்சுக்கிட்டே இருப்போம். விதைச்ச 25-ம் நாள், ஒரு ஏக்கருக்கு ஒண்ணரை மூட்டை டி.ஏ.பி. போடுவோம். 35-ம் நாள் மற்றும் 60-ம் நாள் தலா ரெண்டு லிட்டர் டி.ஏ.பி. கரைசல் தெளிப்போம். ஆனாலும், விளைச்சல் சுமாராதான் இருக்கும் . ஒரு செடிக்கு அதிகபட்சம் 100 காய்கள்தான் இருக்கும். அதிலும்கூட 15 பொக்கையா இருக்கும். அதிகபட்சம் ஏக்கருக்கு 6 குவிண்டால் கிடைச்சதுதான் பெரிய மகசூல்.
இயற்கை உரக்குழி வழியா தண்ணி பாய்ச்சி, உளுந்து சாகுபடி செய்யத் தொடங்கினேன். இதுல, ஒரு தடவை மட்டும்தான் களையெடுக்கற செலவு. அடுத்தது அறுவடைதான் (ரசாயன முறையில் இரண்டு தடவை களை எடுக்க வேண்டும்). உரக்குழி மூலமா போன வருஷம் சாகுபடி செஞ்சப்ப, ஒரு செடிக்கு 140-170 காய்கள் இருந்துச்சு. ஏக்கருக்கு 10 குவிண்டால் வரை மகசூல் கிடைச்சுது. இந்த வருஷம் அதைவிட அதிகமாக கிடைக்கும்னு தோணுது. ஒரு செடிக்கு 200 காய்கள் வரைக்கும் இருக்குறதுனால கண்டிப்பா 12 குவிண்டால் மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். இது ரசாயனத்துல விளைஞ்சது பசுமையே இல்லாம காய்ஞ்சு கிடக்கு. இலைகள் அடர்த்தியா இல்லாம, அதிகமாக களை  மண்டிக் கிடக்கு. மஞ்சள் நோய் தாக்குதல், இலைச்சுருட்டுப்புழுத் தாக்குதலும் அதிகமா இருக்கு. என் வயல்ல ஆடுதுறை 5 ரக உளுந்தை ஏக்கருக்கு 12 கிலோ விதைச்சேன். என் வயல்ல இருக்கற, அதே மண்கண்டம்தான் (செம்மண், மணல் கலந்த மண்) இங்கயும் இருக்கு.
தொடர்புக்கு
கணேசன்
சோழகன்கரை கிராமம்
தஞ்சாவூர் மாவட்டம்
அலைபேசி 96266-95141

 

[ 1 2 3 ]

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்