|
கால்நடை
பீர் பூசா சேகோ திப்பி கறவைமாடு வளர்ப்பில் கைகொடுக்கும் மாற்றுத் தீவனங்கள்
நூறு ஏக்கருக்கு இரண்டே வேலையாள்..இதோ, ஓர் அதிசய இயற்கைப் பண்ணை!
தேனீ வளா்ப்பு
ஜோரான வருமானம் தரும், ஜோடிப் புறா!
கைகளால் இயக்கினால், கறக்குது பால்!
தினமும் 18 லிட்டர் பால்! சந்தோஷம் பொங்க வைக்கும் சிந்து சமவெளி மாடு .. !
இணையற்ற லாபம் தரும் இயற்கை மீன் வளர்ப்பு!
ஜோரான வருமானம் தரும், ஜோடிப் புறா! |
|
தீவனச் செலவு, பராமரிப்பு இல்லை.குஞ்சுப் புறாக்களுக்குத்தான் கிராக்கி ,பொழுது போக்குடன் கூடிய வருமானம்.
விவசாயம் வில்லங்கமாகும் போது, விவசாயிகளுக்குக் கைகொடுத்து கரை சேர்ப்பது.. கால்நடை வளர்ப்புத்தான். ஆனால், அதிலும் முதலீடு, நோய்த் தாக்குதல், தீவனச் செலவு என சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ஆனால், மிகக்குறைந்த முதலீடு, தீவனச் செலவு, நோய்த் தாக்குதல் என எந்தச் சிக்கலும் இல்லாமல்.. பொழுதுபோக்குடன், வருமானத்திற்கும் வழிவகை செய்கிறது புறா வளர்ப்பு!
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள குஞ்சாம்பாளையம், சீதாபாரதி, பல ஆண்டுகளாக புறா வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர். அவரிடம் இதைப் பற்றிக் கேட்ட போது.. கண்களில் உற்சாகம் படபடக்கப் பேசத் தொடங்கினார்.
“எங்களுக்குனு இருக்கிற ஒரு ஏக்கர் நிலத்தில், மாட்டுக்குத் தேவையான பயிர், பச்சையை மட்டும் விதைப்போம். மத்தப்படி விவசாயத்துல பெரிதாக வருமானம் இல்லை. ரொம்ப வருடமாக நாங்க செய்துகிட்டு வர்ற புறா வளர்ப்புதான் ஓரளவு கைக்கொடுக்குது. ஆரம்பத்தில் பொழுதுபோக்கா பழைய பெட்டியில் இரண்டு ஜோடியை விட்டு வளர்த்தோம். அது இன்றைக்கு ஒரு தொழிலா வளர்ந்து நிற்கிறது” என்ற சீதாபாரதி, புறா வளர்ப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் விவரித்தார்.
‘கோழி, முயல், காடை வளர்ப்பில் வருமானம் அதிகம். என்றாலும், அதற்கு ஏற்ப கொட்டகை, மின்சாரம், தண்ணீர், தீவனம் என செலவுகளும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அதே போல ஒவ்வொரு சீசனுக்கும் ஏதாவது ஒரு நோய் தாக்குதல் இருக்கும். ஆனால், புறா வளர்ப்பில் இது போன்ற எந்தத் தொல்லைகளும் இல்லை. புறாக்கள் தங்குவதற்கு மட்டும் ஒரு கூண்டு ஏற்பாடு செய்தால், போதும். மற்றபடி, எந்தத் தொல்லையும் வைக்காமல் அவை வெளியே சென்று இரையைத் தேடிக்கொண்டு, திரும்பிவிடும்.
தீவனச் செலவே இல்லை!
சிறிய அளவில் நான்க அல்லது ஐந்து ஜொடிகளை மட்டும் வளர்க்க நினைப்பவர்கள், பழையப் பெட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தது 50 ஜோடிகளை வளர்க்க நினைப்பவர்கள் 10 அடி நீளம், 6 அடி அகலம், ஆறடி உயரத்தில் ஓர் அறையைக் கட்டிக்கொள்ள வேண்டும். சுக்கான் அல்லது செம்மண்ணைக் குழைத்துதான் எழுப்ப வேண்டும்.
மண்ணைக் குழைத்து சுவர் எழுப்பும் போது, இடையில் செங்கல் அல்லது கருங்கல் வைப்பதற்கு பதிலாக மண்பானைகளை நெருக்கமாக வைத்து கட்ட வேண்டும். இந்தப் பானைகளின் வாய்ப்பகுதி, அறைக்கு உள்பக்கமாக இருக்க வேண்டும். இதில்தான் புறாக்கள் வசிக்கும்.
வாசலுக்கான இடைவெளியைத் தவிர, வேறு எந்தப் பக்கமும் இடைவெளி இல்லாமல் வெளிப்புறச் சுவற்றை சிமெண்ட் வைத்து வழவழப்பாக பூசிவிட வேண்டும். வெளிச்சுவர் வழவழப்பாக இருந்தால்தான் விஷப்பூச்சிகள் சுற்றின் மீது ஏறி அறைக்குள் வராது. அதே போல அறையின் கீழ்பகுதிகளிலும், விஷப்பூச்சிகள் நுழையாதவாறு இடைவெளி இல்லாமல் அடைத்து விட வேண்டும்.
இரை தேடி, வெளியே போய் வருவதற்கு வசதியாக. சுவற்றில் ஐந்தரை அடி உயரத்தில், வீடுகளில் வெண்டிலெட்டர் வைப்பதைப் போல, சிறியதாக சதுர வடிவில் இரண்டு பக்கமும் இடைவெளி விட வேண்டும். கூரைக்கு ஓலை, தகரம், கான்கிரீட் என வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.
புறாக்களை அறைக்குள் விட்டுவிட்டால், ஜோடிஜோடியாக பானைகளுக்குள் சென்று அடைந்து கொள்ளும். மழைக் காலத்தில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும் போது, மட்டும் கம்பு, சோளம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பருவம் வந்தவுடன் பெண் புறா முட்டையிடும். ஒரு பெண்புறா, இரண்டு முட்டையிட்டவுடன் அடைக்கு உட்கார்ந்து விடும். அருகிலுள்ள மற்றொரு பானையில் ஆண் புறா வசிக்கும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், முட்டையைக் கையால் தொடக் கூடாது, அப்படி தொட்டால் அந்த முட்டை பொறிக்காது. அடை உட்கார்ந்த 28 நாட்களில் குஞ்சு பொறிக்கும். 15 நாட்களில் தாயிடமிருந்து குஞ்சுகளை தனியாகப் பிரித்து விட வேண்டும். அப்போது தான், அடுத்த முப்பது நாட்களில் மறுபடியும் தாய்ப்புறா முட்டை போடத் தொடங்கும். ஒரு பெண்புறா மூலமாக ஓராண்டுக்கு குறைந்தது 10 குஞ்சுகள் வரை கிடைக்கும்.
ஆண்டுக்கு ரூ 50 ஆயிரம்!
வியாபார ரீதியா புறா வளர்க்க நினைப்பவர்கள், குஞ்சு பொறித்த 15 –ம் நாளில் குஞ்சுகளைப் பிரித்து, தனியாக வைத்து தீவனம் கொடுத்து வளர்த்தால்.. கூடுதல் எடை கிடைக்கும். புறா வளர்ப்பைப் பொறுத்தவரை இளம் குஞ்சுகளுக்குத்தான் கிராக்கி. 25 நாள் வயதுள்ள குஞ்சுகள் ஒரு ஜோடி 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. இளம் குஞ்சுகளை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
இளம் குஞ்சுகளின் ரத்தத்தை மூட்டுவலி உள்ள இடத்தில் தடவினால், வலி குணமாகிவிடும் என்று அதற்காகவும் குஞ்சுகளை வாங்கிச் செல்கிறார்கள். அதே போல குஞ்சுகளில்தான் கறி அதிகமாக இருக்கும். பெரிய புறாவில் எலும்பு மட்டும் தான் இருக்கும். 25 நாள் வயதுள்ள குஞ்சு 300 முதல் 400 கிராம் எடை இருக்கும். குஞ்சுகளின் கறியை பக்கவாதம், மூலம் மாதிரியான நோய்களுக்கு மருந்தாக சிபாரிசு செய்கிறார்கள். பெரிய புறா ஜோடி 60 ரூபாய்க்குதான் விற்பனையாகும்.
ஒரு குஞ்சு 100 ரூபாய் வீதம் விற்பனை ஆனாலே .. ஒரு ஜோடிப் புறா மூலமாக ஆண்டுக்கு 1,000 ரூபாய் கிடைக்கும். 50 ஜோடிகள் இருந்தால், அதன் மூலமாக 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். முதலீட்டைப் பொறுத்தவரை அறை கட்டுவதற்கு அதிகபட்சம் ரூ பத்தாயிரம்
தொடர்புக்கு:
சீதாபாரதி
அலைபேசி :98427-67355
ஆதாரம் : www.vikatan.com பசுமை விகடன் வெளியிடான தேதி,
10.2.11
கைகளால் இயக்கினால், கறக்குது பால்! |
|
ஜனவரி 3 ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை சென்னை அருகேயுள்ள காட்டாங் கொளத்தூர், எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக வளாகத்தில் தேசிய அறிவியல் மாநாடு நடைபெற்றது. அதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியில், ஏர் கலப்பை முதல் ஏவுகணை வரை பலவிதக் கருவிகள் இடம் பெற்றிருந்தன.
அந்த வரிசையில், தேசியக் கண்டுபிடிப்பு மையம் (National Innovation Foundation) அமைத்திருந்த அரங்கில், கிராமப்புற அடிமட்டக் கண்டுபிடிப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில், கைகளால் இயங்கும் பால் கறவை இயந்திரம், அனைவரையும் ஈர்ப்பதாக இருந்தது.
கர்நாடக மாநிலம், மங்களூரைச் சேர்ந்த ராகவ கவுடா என்கிற விவசாயி தான் இரத வடிவமைத்திருக்கிறார். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, “பத்து மாடுகள் வைத்திருந்தேன், எ்போதாவது வெளியூர்களுக்குச் செல்ல நேரிடும் போது, பால் கறக்க சம்பளத்துக்கு ஆட்களை வைக்கலாம் என்று தேடிப்பார்த்தால், ஆள் கிடைப்பது அரிதாக இருந்தது. அந்த மாதிரி இக்கட்டான சமயங்களில் வீட்டில் உள்ளவர்களே எளிதாக கறப்பதற்கு ஏற்ப கருவி இருந்தால், வசதியாக இருக்குமே என்று யோசித்தபோது உருவானதுதான் இந்த இயந்திரம். இதன் மூலம் ஐந்து நிமிடத்தில் பாலைக் கறந்துவிட முடியும். ஒரே சமயத்தில் இரண்டு மாடுகளிடம் கூட பால் கறக்கலாம். இதன் அடக்க விலை.. 11,500 ரூபாய். இந்தக் கண்டு பிடிப்புக்காக கடந்த 2005 ம் ஆண்டு ‘தேசிய கண்டுபிடிப்பு மையம் ‘ எனக்கு விருது கொடுத்து பாராட்டியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வணிக ரீதியாக தயாரித்து விற்பனை செய்வதற்கும் உதவி வருகிறார்கள்’ என்று சொன்னார் ராகவ கவுடா.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய கண்டுபிடிப்பு மையத்தின் விஞ்ஞானி டாக்டர். ஆர்.கே. ரவிக்குமார், “மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் உதவியால் பேராசிரியர் அனில் குப்தா 2000 ம் ஆண்டு இந்த அமைப்பைத் தொடங்கினார். இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறோம். ஆண்டு தோறும் போட்டி அறிவித்து சிறந்த அடிமட்டக் கண்டுபிடிப்பாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவி வருகிறோம். இந்த ஆண்டுக்கானப் போட்டி தற்போது அறிவிக்கப்பட்டள்ளது. விவசாயம், கால்நடை.. சார்ந்த சிறியக் கருவிகள், புதியத் தொழில் நுட்பங்கள் வைத்துள்ளவர்கள் பங்கேற்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31” என்ற தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
தொடர்புக்கு
அலைபேசி : 098250-71992
இணையதளம்: www.nif.org.in
ஆதாரம் : www.vikatan.com பசுமை விகடன் வெளியிடான தேதி,
10.2.11
தினமும் 18 லிட்டர் பால்! சந்தோஷம் பொங்க வைக்கும் சிந்து சமவெளி மாடு .. ! |
|
காட்டு வாழ்க்கையிலிருந்து, நாகரிகப் பாதையில் நடைபோடத் தொடங்கிய மனிதன், பாலுக்காக மட்டுமில்லாமல்.. உழவு, பாரம் இழுத்தல், போக்குவரத்து என பல வகையிலும் உதவும் என்பதற்காக தன்னுடன் சேர்த்துக் கொண்ட விலங்குகளில் ஒன்றுதான் மாடு!
கன்னியாகுமரி தொடங்கி, காஷ்மீர் வரை பல்வேறு பெயர்களில் வகைவகையான இன மாடுகள் இங்கே இருக்கின்றன. ஆனால், காலப்போக்கில் ... ‘அதிக பால’ என்கிற கோஷம் இந்தியாவில் உரத்து ஒலித்ததோடு, மாடுகளின் பிற தேவைகளும் குறைய ஆரம்பித்து விட்டது. இதனால், நம் நாட்டு ரக மாடுகள் எல்லாம் ‘அடிமாடு’ என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டு, வெளிநாட்டுக் கலப்பின மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.
அதே சமயம், ‘நம் நாட்டு மாடுகளிலும் அதிக பால் கொடுக்கும் மாடுகள் இருக்கின்றன’ என்கிற உண்மையை உணர்த்த தமிழக விவசாயிகளில் சிலர், வடமாநிலங்களிலிருந்து அத்தகைய மாடுகளை வாங்கி வந்து வளர்த்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம், கோனூர் கிராமத்தைச் சேர்ந்த திம்மையா, அவர்களில் ஒருவர். நாட்டு மாடுகளைப் பற்றி கேட்டால், மடை திறந்த வெள்ளமாக வந்து விழுகின்றன அவரிடமிருந்து வார்த்தைகள்..
ஒரு டோஸ் விந்து 1,500 ரூபாய்!
“விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்குற குடும்பம் எங்களோடது. அப்பா திடீர்னு இறந்ததும் விவசாயத்தை நான் கையில் எடுக்க வேண்டியதாயிடுச்சு. விவசாயத்துக்காக அப்பா கடன் வாங்கியருந்தார். கொஞ்ச நிலத்தை வித்து, அதையெல்லாம் அடைத்தேன். ‘வருடம் முழுக்க ஓய்வில்லாமல் உழைத்தாலும், விவசாயத்தில் கடன் மட்டுமே மிச்சமாகிறது ஏன்.. என்ன காரணம்?’னு அடிக்கடி யோசிச்சிக்கிட்டே இருப்பேன். அப்பத்தான் இயற்கை விவசாயத்தைப் பற்றி தெரிய வந்தது. இப்ப, 10 வருடமா இயற்கை விவசாயம்தான். சுபாஷ் பாலேக்கரோட ‘ஜீரோ பட்ஜெட் பயிற்சி’யில கலந்துகிட்ட பிறகு, நாட்டு மாடுங்க மேல் தனி மரியாதை வந்துடுச்சு. உடனே, உம்பளாச்சேரி ரக மாடுங்க இரண்டை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். பயிருங்களுக்கத் தேவையான ஜீவாமிர்தத்துக்கு சாணம், மாட்டுச் சிறுநீர் இதுக்கெல்லாம் பிரச்சனை இல்லாம போயிடுச்சு.
இதெல்லாம் சரி.. கலப்பின மாடுங்க மாதிரி அதிகமா பால் கிடைக்க மாட்டேங்குதேனு ஒரு யோசனையோட, நாட்டு மாடுகள் பத்தின தகவல்களைத் திரட்டத் தொடங்கினேன். வெளிநாட்டு மாடுகளுக்கு சமமா பால் கொடுக்கிற நாட்டு ரக மாடுகள் வட இந்தியாவில் இருக்கிறது தெரிந்து, அதை வாங்குகிற முயற்சியில் இறங்கினேன். இதற்க்கு நடுவில், ‘கிர்’ மாட்டோட விந்தை, உம்பளச்சேரி பசுவுக்கு செயற்கை கருவூட்டல் செய்யலாமே’னு ஒரு யோசனை தோணுச்சு. அதுக்காக சேலத்தில் இருக்கிற ஒருத்தர்கிட்ட கேட்டேன். ஒரு டோஸ்.. 1,500 ரூபாய்னு சொன்னார். நாட்டு மாட்டு விந்துவுக்கு உள்ள கிராக்கியைப் பார்த்த பிறகு, செயற்கை முறை கருவூட்டறது தொடர்பான பயிற்சி எடுத்துக்கிட்டு, அந்த வேலையையும் செய்ய ஆரம்பித்தேன்.
ஒரு மாடு .. 60 ஆயிரம் ரூபாய்!
மாடு வாங்கறதுக்காக குஜராத், பஞ்சாப், ஹரியானா பகுதிகளுக்கு நேரில் சென்றேன். அதில் என்னை அதிகமாக கவர்ந்தது.. சாஹிவால் ரக மாடுங்கதான். சாதாரணமா மேய்ச்சலுக்கு போயிட்:டு வந்து, 15 லிட்டர் தொடங்கி, அதிகபட்சம் 20 லிட்டர் வரை பால் கறக்குறது நேரில் பார்த்ததும், ஆச்சரியமா போயிடுச்சு. மேய்ச்சலைத் தவிர வேறெந்த தீவனத்தையும் கொடுக்காமலே இவ்வளவு பால் கறக்குதே.. இதை வாங்கிட்டு போயே தீரணும்னு முடிவெடுத்தேன்.
எங்ககூட வந்திருந்தவங்களோட சேர்ந்து 10 மாடுகளை வாங்கினேன். ஆனா, அதுங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கிறது சாமானியப்பட்ட வேலையா இல்லை. நம்ம ஊரில் லாரிகளில் மாடுகளை ஏத்திக்கிட்டு போனா.. யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டாங்க. வட மாநிலங்களில் அங்கங்க கராம மக்களே வண்டியை மறிச்சுடறாங்க. ‘அடிமாட்டுக்கு கொண்டு போகலை. வளர்க்கறதுக்குத்தான் கொண்டு போறோம்’னு ஆதாரத்தோட புரிய வைத்துவிட்டு வர்றதுக்குள்ள தாவு தீர்ந்து விடும். அது போக அனுமதி, போக்குவரத்துனு செலவும் அதிகமா பிடிக்கும். அதாவத, ஒரு மாட்டோட விலை தமிழ்நாட்டுக்கு வரும் போது 60 ஆயிரம் ரூபாய் ஆயிடுச்சு.
குறைந்த பராமரிப்பு!
பெரும்பாலும் பாலுக்காக மட்டும்தான் இப்பெல்லாம் மாடுகள் வளர்க்கறாங்க. அதனால் தான், வெளிநாட்டு மாடுகளை வளர்க்கிறதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுறாங்க. ஆனால், அந்த மாடுகளுக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை,சாஹிவால் மாதிரியான நம்ம நாட்டு மாடுகள். கிடைத்ததைத் தின்னுட்டு, நாளொன்றுக்கு அதிகபட்சம் 20 லிட்டர் வரைக்கும் பால் கொடுக்கிறது சாஹிவால் ரக மாடுகள். வெளிநாட்டு மாடுகளை வெயில், மழைக்கு பாதுகாத்து வளர்த்தாலும், பால் மூலமா வர்ற வருமானத்தில் சரிபாதி தீவனத்துக்கே செலவாகிறது. ஆனால், இந்த மாடுகளை வளர்த்தால்.. தீவனச் செலவை பற்றி அதிகமாக அலடிக்க தேவையில்லை. குறைந்த செலவு, குறைந்த பராமரிப்புலேயே அதிக பால் கொடுக்கும்.
வருடத்தில் 6,000 கிலோ பால்!
இந்தியாவில் பாலுக்கான சிறந்த பசு இனம்னா.. அது இந்த சாஹிவால் ரக மாடுங்கதான். ஒரு ஈத்தில் (305 நாட்கள்) 3,000 கிலோ முதல் 6,000 கிலோ வரைக்கும் பால் கொடுக்கற அற்புதமான இனம். இதோட பாலில் 4 முதல் 4.5 சதவிகிதம் கொழுப்புச் சத்து இருக்கிறது. பெரிய மடி, நல்ல சிவப்பு நிறம், கனமான குட்டைக் கொம்பு, சிறிய திமில், கம்பீரமான உடமைப்பு என்று பார்க்கிறதுக்கே அம்சமா இருக்கும். கடுமையான வெப்பம், கடுமையானப் பனி, மழைனு எதற்கும் சளைக்காது. வெளிநாட்டு மாடுகள், குளிர்காலத்தில் அதிகமாகவும், வெயில் காலத்தில் குறைந்தளவும் பால் கொடுக்கும். ஆனால், சாஹிவால் உள்ளிட்ட நாட்டு மாடுகள், எப்பவும் ஏற்றத் தாழ்வு இல்லாம ஒரே அளவில் பால் கொடுக்கும்.
பஞ்சாப் மாநிலத்தில்தான் இந்த மாடுகளை அதிகமாக வளர்க்கிறார்கள். நம்ம ஊரில் செம்மறி ஆடுகளை மந்தையாக மேய்க்கிறது மாதிரியே, இந்த மாடுகளை மந்தை, மந்தையா மேய்க்கிறாங்க. அதனால் இ்ந்த மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடறதே இல்லை. ரொம்ப தூரம் வரைக்கும் மேய்ச்சலுக்கெல்லாம் போயிட்டு வருது. கை வளர்ப்பா வளர்த்தா சொன்னதெல்லாம் கேட்கிற அற்புதமான மாடு சாஹிவால், நம்ம ஊரில் மாடுகளை முன்னவிட்டு, பின்னாடி போறோம். வட நாட்டில் மேய்க்கறவரு முன்னாடி போக, அவருக்கு பின்னாடியே போகிறது மாடுகள். அதுக்கு காரணம் மாடுகளை வளர்க்கிற முறைகள் தான்.
அன்புக்கு அடிமை!
சாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடித்து அடக்கணும்னு நாம் நினைத்தால் கண்டிப்பா அடங்காது. முரண்டு பிடிச்சுக்கிட்டே இருக்கும். அதே நேரத்தில் தடவிக் கொடுத்து அன்பா வளர்த்தா, நாய்க் குட்டி மாதிரி காலை சுத்திக்கிட்டே இருக்கும். பொதுவா எந்த மாடாக இருந்தாலும், ஒரே இடத்தில் கட்டிப் போட்டு வளர்க்க கூடாது. தினமும் 3 மணி நேரமாவது சூரிய ஒளி மாடுகளின் உடலில் படுகிற மாதிரி நடக்க விடணும்.
சாஹிவால் மாடுகள் 18-ம் மாசத்தில் பருவத்திற்கு வந்துவிடும். நான் வாங்கிட்டு வந்த மாடுகளை மேய்ச்சல் முறையில் வளர்க்கிறேன். ஒரு பசுவுக்கு சராசரி 13 லிட்டர் பால் கிடைக்கிறது. இந்த ரக மாடுகள் கூட்டமாக இருக்கிறததான் விரும்பும். அதனால் குறைந்தது 5 மாடுகளையாவது ஒன்றாக சேர்த்துதான் வளர்க்கணும். நம்ம ஊரில் இந்த மாடுகளை இப்பதான் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுகளோட எண்ணிக்கை அதிகரிக்கிறப் பொழுது இங்கேயே விலை குறைவாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது” என்று விரிவாகப் பேசி முடித்தார் திம்மையா..
பாலுக்கான நாட்டு ரக மாடுகள் |
ரகங்கள் |
கிடைக்கும் இடங்கள் |
கிர் |
குஜராத். ராஜஸ்தான் |
சாஹிவால் |
பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் |
ரெட் சிந்தி |
ஆந்திரா |
வறட்சியைத் தாங்கும் இனங்கள் |
மால்வி |
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் |
நாகேரி |
டெல்லி, ஹரியானா, உத்திரப்பிரதேசம் |
ஹாலிக்கார் |
கர்நாடகா |
காங்கேயம் |
தமிழ்நாடு |
பொதுவான ரகங்கள் |
ஹரியானா |
ஹரியானா, பீகார், பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திரா |
ஓங்கோல் |
ஆந்திரா |
காங்கிரேஜ் |
குஜராத் |
தார்பார்க்கர் |
குஜராத், ஆந்திரா |
தொடர்புக்கு :
திம்மையா, அலைபேசி : 94861 -11653
ஆதாரம் : www.vikatan.com பசுமை விகடன் வெளியிடான தேதி,
10.2.11
இணையற்ற லாபம் தரும் இயற்கை மீன் வளர்ப்பு! |
|
செழிப்பான நீர்வளம் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கான சிறந்த உபதொழிலாக இருப்பது மீன் வளர்ப்பு. வழக்கமாக பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்களையும், அதிகளவிலான அடர்தீவனங்களையும் பயன்படுத்திதான் மீன்களை வளர்க்கிறார்கள். அவர்களுக்கிடையில் கொஞ்சம் வித்தியாசமாக அடர்தீவனத்தைக் குறைத்து, அதிகளவில் பசுந்தீவனங்களை மட்டுமே கொடுத்து சிறப்பான முறையில் மகசூல் எடுத்து வருகிறார், மயிலாடுதறை அருகே இருக்கும் ஆனந்தக்குடியைச் சேர்ந்த பிச்சை பிள்ளை.‘விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, சொந்தமாக மூணு ஏக்கர் நெல் வயல் இருக்கு. படிப்பு முடிந்ததும் பாஸ்போர்ட் ஆபிஸீல வேலை கிடைத்தது. அங்கே வேலை பார்த்து்கிட்டே இடையில் கொஞ்சம் விவசாயத்தையும் பாத்துக்கிட்டு இருந்தேன். பயி ஓய்வுக்கப்பறம் முழுநேர விவசாயியா மாறிவிட்டேன். மூணு ஏக்கர்ல், 100 குழி (33 சென்ட்) நிலத்தை மட்டும் ஓதுக்கி, அரசாங்க உதவியோட பண்ணைக்குட்டை வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்தேன். மீதி இடத்துல் வழக்கம்போல நெல்சாகுபடி நடக்கிறது.
நானும் ரசாயன விவசாயந்தான செய்துக்கிட்டிருந்தேன். ரசாயன உரத்தால வர்ற தீமைகளை அடிக்கடி கெள்விப்படுறப்போ எனக்குள்ள ஒரு உறுத்தல் வந்தது. அதனால, இயற்கைக்கு மாறனும்னு பயிற்சிகளில் கலந்துக்கிட்டேன். விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல பசுமை விகடனும் அறிமுகமாகவே, முழுசா இயற்கை வழி விவசாயத்துக்கு மாறிட்டேன்.
மீன் வளர்ப்புத் துறையில இருக்கற பெரும்பாலான விஞ்ஞானிகள், உரம் போட்டுத்தான் மீன் வளர்க்கச் சொல்றாங்க, விவசாயத்துலயே ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்கணும்னு பேசிக்கிட்டிருக்கறப்போ, ‘மீன் வளர்க்கறதுக்குப் போய் ரசாயனத்தைப் பயன்படுத்தணுமா?னு ஒரு கேள்வி எனக்குள்ள உருவாகியது. குளத்துக்கு அடியில் இருக்குற மீனுக்கானத் தீவனத் தாவரங்கள் வேகமா வளர்றதுக்குத்தான் ரசாயன உரம் பயன்படுத்தறாங்க. ஆனா, அதோட தாக்கம் தண்ணீர் மூலமாக கட்டாயம் கொஞ்ச அளவுக்காவது மீன் உடம்புக்குள்ளேயும் இருக்கத்தான் செய்யும். அதனால உற்பத்திச் செலவு அதிகரிக்கிறதோட மீனோட சுவையும் குறைந்துவிடும். எனக்கு இதில் ஒப்புதல் இல்லாததால இலை, தழைகளைக் கொடுத்தே மீன் வளர்க்கலாம்னு முடிவு பண்ணினேன். இயற்கையாவே ஆறு, குளத்துலயெல்லாம் வளர்ற மீன்களுக்கு யாரும் உரம் போடுறதில்லையே.
வீட்டு ஓரங்கள்ல தோட்டக்கால் வேலிகளில் முருங்கை, அகத்தி, சூபாபுல், சிறியாநங்கை, துளசி மாதிரியான தாவரங்கள வளர்த்து, அதையே வளர்ப்பு மீன்களுக்கு உணவா கொடுக்கலாமேனு யோசித்து அதையே நடைமுறைப் படுத்திக்கிட்டிருக்கேன். குளத்துக்குள்ள நுண்ணுயிர்கள், பாசி வளர்றதுக்கு சாணம் மாதிரியான இயற்கைக் கழிவுகளையும் கொடுக்குறேன். இப்படி வளர்த்தாலே ஆறே மாதத்தில் மீன் ஒவ்வொண்ணும் ஒரு கிலோ எடைக்கு வந்துவிடுகிறது. சுவையாவும் இருக்கு. அப்பறம் எதுக்குத் தேவையில்லாம ரசாயனத்தைப் பயன்படுத்தணும்? என்று கேள்வி எழுப்பியவர், 33 சென்ட் பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பதற்கானத் தொழில்நுட்பத் தகவல்களை, அழகாக விளக்குகிறார்.
35 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், ஒன்றரை மீட்டர் ஆழம் இருக்குமாறு குளம் வெட்டிக் கொள்ள வேண்டும் (விவசாயத் தேவைக்கான நீராதாரத்தைப் பெருக்குவதற்காக, அரசு செலவில் பண்ணைக் குட்டை அமைத்துத் தரும் திட்டத்தை வேளாண்துறை நடை முறைப்படுத்தி வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, மீன் வளர்ப்பையும் மேற் கொள்ளலாம்). அதில் தண்ணீரை நிரப்பி, குறிப்பிட்ட அளவுக்கான நீர், தொடர்ந்து தேங்கி நிற்கிறதா என்பதை உறுதி செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அதிகமாக தண்ணீர் உறிஞ்சக்கூடிய பகுதியாக இருந்தால், குளத்தின் அடியில் கரம்பை மண்ணைப் பரப்பி, தண்ணீரைத் தேக்கலாம். ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் அருகில் இருக்கும் பகுதியாக இருந்தால், கவலையேபடத் தேவையில்லை. தண்ணீர் உறிஞ்சப்படாமல் தேங்கி நிற்கும்.
பண்ணைக் குட்டையில் மூன்றடி உயரத்துக்கு மட்டும் தண்ணீர் நிரப்பி, இரண்டு மாட்டு வண்டி அளவுக்கு கட்டி இல்லாத ஈர சாணத்தை தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். ஒரு வாரத்திலேயே சாணத்தில் இருந்து நுண்ணுயிர்கள் பெருகி விடும்.பிறகு அருகில் உள்ள மீன் விதைப் பண்ணைகளில் இருந்து, இரண்டு மாத வயதுடைய மீன்குஞ்சுகளை வாங்கி வந்து குளத்தில் விடவேண்டும். மீன்கள், அவை வளர்க்கப்படும் பகுதியைப் பொறுத்து மூன்று வகைகளாக அழைக்கப்படுகின்றன. அடி மீன் (சி.சி. காமன் கார்ப், மிர்கால்), நடுத்தட்டு மீன் (ரோகு, கெண்டை), மேல் மீன் (கட்லா, சில்வர்) எனப்படும் இந்த மூன்று வகைகளையும் கலந்து வளர்க்கும் போது குளத்துக்குள் இட நெருக்கடி இல்லாமல் மீன்கள் வளரும்.
பொதுவாக அனைத்து வகை மீன் குஞ்சுகளும் ஒரே விலையில் தான் விற்கப்படுகின்றன. வளர்ந்த மீன்களை மொத்தமாக விற்கும் போதும் சராசரியாக விலை நிர்ணயித்துதான் வியாபாரிகள் வாங்கவார்கள். அதனால் பல ரகங்களைக் கலந்து வளர்க்கும் போது விற்பனையில் பிரச்சனை இருக்காது. ஒரு வேளை நேரடி விற்பனை செய்வதாக இருந்தால், நமது பகுதி சந்தை நிலவரத்துக்கேற்ற அளவுக்கு ஒவ்வொரு ரக மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், 33 சென்ட் அளவு குளத்துக்கு 1,200 குஞ்சுகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குஞ்சுகளை விட்ட பிறகு நீர்மட்டத்தை நான்கடிக்கு உயர்த்தி, எப்போதும் அதே தண்ணீர் மட்டம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
குஞ்சுகளை விட்டதில் இருந்து இரண்டு நாளைக்கு ஒருமுறை தொடர்ந்து 25 கிலோ அளவுக்கு பசுஞ்சாணத்தைக் குளத்தில் கலந்து விடவேண்டும். ஒரு மாத காலம் வரை தினமும் 5 கிலோ அரிசித் தவிடு, ஒரு கிலோ தேங்காய் பிண்ணாக்கு, ஒரு கிலோ அரிசியில் வடித்த சாதம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, மூன்று பங்காகப் பிரித்து சிறிய ஓட்டைகள் உள்ள சாக்கில் இட்டு, மூன்று இடங்களில் தண்ணீரின் மேல்மட்டத்தில் மூழ்குமாறு வைக்க வேண்டும். வழக்கமாக கடலைப் பிண்ணாக்கைத்தான் அனைவரும் பயன்படுத்துவார்கள். அதைவிட குறைவான விலையில் கிடைக்கும் தேங்காய்ப் பிண்ணாக்கிலும் அதற்கு ஈடான புரதச்சத்து இருப்பதால், தீவனச்செலவு கணிசமாகக் குறையும். தவிர, தேங்காய் வாசனைக்கு மீன்கள் போட்டிப் போட்டு வந்து சாப்பிடும். இரண்டாவது மாதத்திலிருந்து அரிசித் தவிடை மட்டும் மூன்று கிலோ கூட்டிக் கொள்ள வேண்டும்.
இந்த தீவனங்கள் மட்டுமில்லாமல் தினமும் 5கிலோ அளவுக்கு முருங்கை, அகத்தி, சூபாபுல், புல்வகைகள் என பசுந்தீவனங்களையும் கலந்து குளத்தில் இட வேண்டும். துளசி, சிறியாநங்கை போன்ற மூலிகைகளையும் கலந்து இடலாம். நாம் இடும் பசுந்தீவனத்தில் எந்த வகையான இலைகளை மீன்கள் உண்ணாமல் கழிக்கிறதோ அந்த வகைகளை இடுவதை உடனே நிறுத்திவிட வேண்டும். அதே போல முதல் நாளே அதிகளவில் பசுந்தீவனத்தைக் கொட்டி விடாமல், கொஞ்சமாகக் கொட்டி மீன்கள் சாப்பிடும் அளவுக்கேற்ப அதிகரிக்க வேண்டும். அதிகமாகச் சாப்பிட்டால், அதிக எடை கூடுமே தவிர, வேறு தவறான விளைவுகள் எதுவும் வராது. தவிர, எந்த வகையான உயிரினமாக இருந்தாலும், தேவையான அளவுக்குத்தான் சாப்பிடும் என்பதால், தினமும் நாம் அளிக்கும் தீவனத்தில் மீன்கள் எவ்வளவு சாப்பிடுகின்றன, என்று தொடர்ந்து கவனித்து வந்தாலே எளிதாக மீன்களின் உணவுத் தேவையைக் கணித்து விடலாம்.
இதுபோல வளர்த்து வந்தால், மீன்களின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். ஆறு மாதத்திலேயே ஒரு மீன், ஒரு கிலோவில் இருந்து ஒன்றரை கிலோ வரை எடை வந்து விடும். மீன்கள் ஒரளவுக்கு எடை வந்த பிறகு அறுவடை செய்து விற்பனை செய்யலாம்.
வளர்ப்பு விதங்களைச் சொல்லி முடித்த பிச்சை பிள்ளை, “போட்லா வகை மீன்கள் இயல்பாவே அதிக எடை வந்துடும். நாம இந்த மாதிரி வளக்குறப்போ ஆறு மாசத்துல ஒரு மீன் அதிகபட்சமா நாலு கிலோ வரைகூட எடை வருது. கட்லா ஆறு மாசத்துல இரண்டரை கிலோ வரை எடை வரும். புல்கெண்டை, மிர்கால் மாதிரியான மீன்கள் இரண்டு கிலோ வரை எடை வரும். சி.சி.சாதாக் கெண்டை மீன்கள் ஒன்றரை கிலோ வரையும், ரோகு அரைகிலோ எடை இருக்கும்.
33 சென்ட் நிலத்தில் 6 மாதங்களில் மீன் வளர்ப்பு செய்ய ஆகும் வரவ –செலவு கணக்கு |
விவரம் |
செலவு |
வரவு |
மீன்குஞ்சு |
3,000 |
|
தீவனம் |
6,000 |
|
சாணம் |
2,000 |
|
உரங்கள் |
1,000 |
|
மீன் மூலம் வரவு (700X85) |
|
59,500 |
மொத்தம் |
12,000 |
59,500 |
நிகர லாபம் |
|
47.500 |
இரண்டு மாத வயதுள்ள குஞ்சுகளை வாங்கி வந்து வளர்க்கிறப்போது இறப்பு விகிதம் குறைந்துவிடறதால் எண்பது சதவிகிதம் மீன்கள் வளர்ந்து வந்துவிடும். அதனால் கூடுதல் லாபம் கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும் இந்த எல்லா வகை கலந்து 1,200 குஞ்சுகள் விட்டோம்னா சராசரியாக 1,500 கிலோவுக்கு குறையாம அறுவடை பண்ண முடியும். சராசரியாக கிலோ 70 ரூபாய்னு வியாபாரிங்க எடுத்துக்குறாங்க. ஆக, 1,05,000 ரூபாய்க்கு விற்பனை பண்ண முடியும். கரன்ட், தீவனம், பராமரிப்பெல்லாம் போக 75,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
தொடர்புக்கு :
பிச்சை பிள்ளை
அலைபேசி : 80985 – 54747
ஆதாரம் : www.vikatan.com பசுமை விகடன் வெளியிடுகள் |
|