|| | | |||
 

வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

tamil English
       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

தோட்டக்கலை

சமவெளியில் கலக்கும் மலைப்பயிர்கள்

சரியும் தென்னை .. தாங்கும் கோக்கோ

சிரிக்குது செவ்வந்தி

தேனிச்சம்பா.. வருமானத்துல சீனிச்சம்பா..

நனவான கனவு

கொட்டிக் கொடுக்குது கொடை ஆரஞ்சு

பிரமாதமான பிரமிடு பந்தல் விவசாயத்தில் பலே யுக்தி

புல்லுக்காட்டுல கொள்ளை லாபம்

மலைக்க வைக்கும் மலைத் தோட்ட விவசாயம்


சமவெளியில் கலக்கும் மலைப்பயிர்கள்

 

மலைப்பிதேசத்துக்கே உரியவை என்றழைக்கப்படும் மிளகு, இஞ்சி, பாக்கு, ஏலக்காய், திப்பிலி, வாசனைப் பட்டை என்று பலவும் தஞ்சாவூரிலிருந்து விளார் கிராமத்துக்குச் செல்லும் வழியில் உள்ள வள்ளலார் வேளாண் பண்ணையில் விளைந்து நிற்கின்றன.  இதன் மூலம் மலை வெள்ளாமையை சமவெளியிலும் செய்யமுடியும் என்பதை எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும் இப்பண்ணையின் உரிமையாளர் வீரசிங்கம் (அலைபேசி : 98424 95781).
சுமார் 12 ஏக்கரில் அமைந்துள்ள இந்தப் பண்ணையில எங்க பார்த்தாலும் தாராளமாக தாவரமயம் தான் ‘இன்சுலின் செடி’.
“இந்த இலையைச் சாப்பிட்டாலே சர்க்கரை வியாதி வராது. ஏற்கெனவே வியாதி இருந்தாலும் கட்டுப்படுத்திடும். இது தான் பிரிஞ்சி இலைன்னு சொல்லப்படுற பிரியாணி இலைச்செடி.
மா, பலா, வாழை என முக்கனிகள். செழிப்பான வாழை மரங்கள், பெரிய பெரிய வாழைத் தார்கள், முழங்கை அளவுக்கு நீளமான வாழைப் பூக்கள் கண்களைக் கவர்ந்தன.
இரண்டு தென்னைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டிருக்கும் குழிகளில் குப்பை குப்பையாக இலை, தழைகள், ஒவ்வொரு தென்னைக்கும் அருகில் தலா இரண்டு சவுக்கு மரங்கள், சவுக்கு, தென்னை இரண்டுமே செழிப்பாக வளர்ந்து நிற்கின்றன. குலைகுலையாக தேங்காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தன.
தோட்டத்தின் ஜீவனே இதில்தான் !
இந்தத் தோட்டத்தோட ஜீவன்களே இதுல தான் இருக்கு. மண்புழு உரத்தைத் தனியா தயாரிக்கறதுதான் முதல்ல களத்துல இறங்கினேன். அதனால் புதுசா புழுக்கள் உருவாகவும் இல்லை: ஏற்கெனவே அதுல விட்ட புழுக்களும் கணிசமான அளவு குறைஞ்சிருந்தது. அதுக்குப் பிறகு தான், காலகாலமா வழக்கத்துல இருக்கற இயற்கை உரக்குழியைக் கையில எடுத்தேன். இந்தக் குழி இருக்குறதால மழை நீரும் முழுமையா சேகரமாகுது.
உரக்குழி அமைப்பது எப்படி ?
இரண்டு தென்னைக்கு நடுவே 10 அடி நீளம், 5 அடி அகலம், 3 அடி ஆழம் கொண்டதாக குழி எடுக்கவேண்டும் இரு தென்னைகளுக்க நடுவே இருக்கும் இடைவெளியைப் பொறுத்து குழியின் நீளத்தைக் கூட்டிக்கொள்ளலாம். அதே சமயம், வேர்கள் அடிபடாமல் இருக்க, ஒவ்வொரு தென்னை தவிர்த்த மற்ற மரங்களுக்கு 6 அடி நீளம், 5 அடி அகலம், 3 அடி ஆழம் உள்ள குழி இருந்தால் போதும், குழிகளில் வாழை மரங்களைத் துண்டு துண்டாக வெட்டிப் போட வேண்டும். அதன் மீது பாக்கு, பலா, தேக்கு, மா, முந்திரி, மிளகு என எதன் இலை, தழை கிடைத்தாலும் போடலாம். வேப்ப இலையைச் சேர்த்துப் போட்டால் பூச்சித் தாக்குதல் இருக்காது.
இப்படி இலை, சருகுகள், கால்நடைக் கழிவுகள், மழைநீர் என அடுத்தடுத்து சேர்ந்து குழி முழுமையாக நிரம்பியதும், தென்னை உரி மட்டைகளை படுக்கை வரிசையில் பல அடுக்குகளுக்கு அடுக்கவேண்டும். உரக்குழியில் உள்ள சத்து நீர் ஆவியாகாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு. குழியில் உள்ள இயற்கைப் பொருட்கள், மண்ணோடு மண்ணாக அமுங்க ஆரம்பித்ததும், உரிமட்டை அடுக்கின் மீது மண் போட்டு, அதையும் அமுக்கவேண்டும்.
மரங்கள், செடி, கொடிகள் தங்களுக்குத் தேவையான சத்துக்களை இந்த உரக்குழிகளில் இருந்தே எடுத்துக் கொள்ளும் மூன்றாண்டுகளுக்குத் தேவையான இயற்கை உரம் இதிலிருந்து கிடைத்து விடும். பல மாதங்கள் கழித்து, உரக்குழியை லேசாக கிளறிப் பார்த்தாலே நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம். ‘கொசகொச’வென மண்புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கும்.
இஞ்சியும் திப்பிலியும்
பண்ணையில் இருக்குற மாடுங்களுக்குத் தேவையான கோ - 3 இரகப் புல், இயற்கையான முறையில் பண்ணையிலேயே விளைவிக்கிறோம். சித்த மருத்துவத்துல முக்கியமா இருக்கற இஞ்சி, திப்பிலியும் கூட இங்க வளருது.
மிளகுக் கொடிகள், தென்னை, பாக்கு என்று மரங்களை முழுக்க வளைத்துக் கொண்டு வளர்ந்து கிடக்கும் இந்த மிளகு.


சரியும் தென்னை .. தாங்கும் கோக்கோ

 

அளவான சூரிய ஒளியும், தொடர்ந்த ஈரப்பதமும் இருந்தால். சமவெளிகளில் கூட கோக்கோ நன்றாக விளையும் என்பதால், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் தென்னை மற்றும் பாக்கு இவற்றுக்கு நடவே ஊடுபயிராக கோக்கோ பயிரிடுவது பரவ ஆரம்பித்துள்ளது. என்ஹெச்எம் என்னும் தேசிய தோட்டக்கலை மிஷன் (ஹைதராபாத்) தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை மற்றும் கேட்பரீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து, இந்தக் கோக்கோ பயிரை விவசாயிகளிடம் கொண்டு சென்று கொண்டிருக்கின்றன.
தென்னையின் வேர் மண்டலமும், கோக்கோவின் வேர் மண்டலமும் ஒன்றையொன்று போட்டி போடாமல் இணைந்திருக்கும் தன்மை உடையவை. ஒற்றைத் தடி மரவகையைச் சேர்ந்த தென்னையின் வேர்கள், மண் மட்டத்திலிருந்து ஒரு அடிக்கு கீழேயும், பக்கவாட்டில் சுமார் மூன்றரை அடி அளவில் மட்டுமே சல்ல வேர்களாக காணப்படும். கோக்கோவின் ஆணிவேர் சுமார் 5 அடி ஆழம் வரையிலும் செல்லும். பக்கவேர்கள் ஒரு அடி ஆழத்தில் சுமார் 5 அடி அகலம் வரை படர்ந்து காணப்படும்.
25 அடிக்கு 25 அடி இடைவெளி கொடுத்து நடப்படும் தென்னை ஒன்றுக்கு 625 சதுர அடி நிலம் கிடைக்கிறது. இந்த நிலப்பரப்பில் தென்னை மரம் பயன்படுத்துவது 137 சதுர அடி நிலம் மட்டுமே. மீதமுள்ள நிலம் பயன்படுத்தப்படாமலே இருக்கிறது. அந்த இடத்தை கோக்கோவுக்காகப் பயன்படுத்திக் கொள்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அத்தோடு, தென்னந்தோப்புகளின் அதிக நிழல், மிதவெப்பம் கோக்கோ பயிர்களுக்கு ஏற்புடையதாகவும் இருக்கும்.  கோக்கோ கலப்பு ஊடுபயிராக சாகுபடி செய்யும் போது தென்னையின் மகசூலும் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
கோக்கோவுக்கு வறட்சியைத் தாங்கும் திறன் அறவே கிடையாது. போதுமான தண்ணீர் வசதி வருடம் முழுவதும் கொடுக்க இயலும் எனும் விவசாயிகள் மட்டும் தான் அதைப் பயிர் செய்ய வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயமாகும். மழைநீர்த் தேங்காத, வடிகால் வசதியுள்ள, ஈரத்தன்மையை வைத்துக் கொள்ளக்கூடிய, பொலபொலப்பான, கார அமில நிலை 7.5 என்கிற அளவுக்குள இருக்கும் வளமான மண்ணே இதற்கு ஏற்றது. மண்ணின் ஆழமும் 5 அடிக்கு மேல் தேவை.
முதலில் சொட்டு நீர்
நடவு செய்ய நாற்றுக்களை வாங்க நினைக்கும் முன்னரே சொட்டு நீர்ப்பாசன வசதிகளை அமைப்பது முக்கியம். ஏக்கருக்கு 70 தென்னை மரம் நடும் போது இடைவெளியில் 175 கோகோ செடிகளைப் பயிர் செய்யலாம். தென்னைக்கு சுமார் 80 லிட்டர் தண்ணீர் தினசரி தேவை. கோக்கோவின் தேவை 25 லிட்டர். இதற்கு ஏற்ப சொட்டு நீர் பாசனத்தை திட்டமிடவேண்டும். 2.5 x 2.5 அடி சதுரம் கொண்ட, 2.5 அடி ஆழமும் கொண்ட குழிகளை எடுக்கவேண்டும். தோட்டத்தில் கிடைக்கும் கற்றாழை, வாழை மரத்துண்டுகள் போன்றவற்றைக் கொண்டு மூடிவிடவேண்டும். பிறகு, ஒரு மாதம் கழித்து நடவு செய்யலாம்.
சிறப்பான பாரஸ்டீரோ
கோக்கோ பயிரில் கிரையோல்லா, பாரஸ்டீரோ, டிரினிடாரியோ என மூன்று வகைகள் உண்டு. நமது சூழலுக்கு பாரஸ்டீரோ இரகம் சிறப்பாக உள்ளதாக தோட்டக்கரைத் துறையினர் கூறுகின்றனர். கேட்பரீஸ் நிறுவனம் கோக்கோ கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு கொடுப்பதோடு, கள அலுவலர்கள் மூலமாக விவசாயிகளுக்கு அறிவுரைகளையும் கூறுகிறது.
கோக்கோ கன்று நடவு செய்த முதல் மூன்று ஆண்டுகளுக்கு நிலத்தை களைகளின்றி பராமரித்தால், செடியின் வளர்ச்சி பிரமாதமாக இருக்கும்.
செடிகளை நட்டு நல்ல முறையில் பராமரித்து வந்தால் 40ம் மாதத்தில் பூக்கத் துவங்கிவிடும். செடியின் தண்டு மற்றும் இலையின் மென்பகுதியில் பூக்கள் பூக்கின்றன. வருடம் முழுவதும் பூப்பது தொடர்ந்தாலும் காலநிலையை அனுசரித்து பூக்களின் எண்ணிக்கை கூடவோ குறையவோ செய்யும். மகரந்தச் சேர்க்கை நடந்த 40ம் நாளில் சிறிய காய்கள் காணப்படும். முதல் 45 நாட்களின் வளர்ச்சி மந்தமாகவும், அடுத்த 75 நாட்களில் வேகமாகவும் முதிர்வடைகின்றன. பழமாக மாறுவதற்கு மொத்தம் 150 முதல் 170 நாட்கள் பிடிக்கும்.
அறுவடையில் கவனம்
நன்கு பழுத்த பழத்தைக் கூர்மையான கத்தியைக் கொண்டு, செடியின் பட்டைகளுக்கோ, பூ பூக்கும் மென்பகுதிக்கோ சேதம் ஏற்படாமல் அறுவடை செய்யவேண்டும். பிறகு, நான்கு நாட்களுக்கு அவற்றைச் சேமித்து வைக்கவேண்டும். அப்போது தான் பழத்துக்குள் ஏற்படும் நொதித்தல் மூலம் தரமான விதைகள் கிடைக்க ஏதுவாக இருக்கும்.

பழத்திலிருந்து விதைகளைப் பிரித்து எடுக்கும் போதும் அதிகக் கவனம் கொள்ளவேண்டும். உள்ளிருக்கும் விதைகளை வெட்டுப்படாமலும், சேதமடையாமலும் கவனத்துடன் எடுத்து, அதைச் சுற்றியுள்ள சதைப்பகுதியின் சாற்றை வடித்தெடுக்க வேண்டும். அதன் பிறகே சாக்லேட் வாசனை பெறுவதற்கான வேதி வினைகள் நடைபெறும். 3 கிலோ ஈரவிதையிலிருந்து 1 கிலோ உலர் விதைகள் கிடைக்கும். 3 வயது மரம், அரைக் கிலோவும், 4 வயது மரம், ஒன்றரைக் கிலோவும், உலர் கோக்கோ விதைகளை மகசூலாகக் கொடுக்கின்றன.
கவாத்து மறந்துடாதீங்க!
செடி சுமார் நான்கு அடி  வளர்ந்ததும் நுனிப்பகுதி 5 கிளைகளாகப் பிரியும். மேற்கொண்டு நுனியை வெட்டிவிடுவதன் மூலம் பக்கவாட்டு வளர்ச்சியை தேவையற்ற கிளைகளைக் கவாத்து செய்வதும் அவசியம்.
உரம் எப்படி ?

உர வகை

முதல் வருடம் செடி / கிராம்

இரண்டாம் வருடம் / கிராம்

மூன்றாம் வருடம் / கிராம்

தழைச்சத்து

33

66

100

மணிச்சத்து

13

26

40

சாம்பல் சத்து

46

92

140

ஒரு கோக்கோ பழத்தை உற்பத்தி செய்ய சுமார் 30 இலைகள் தேவை. ஆக எவ்வளவு இலைகள் எண்ணிக்கை உள்ளதோ அதற்கேற்ப மகசூல் கூடும். உரமிடலும் பயிர்ப் பாதுகாப்பும் இல்லாத விவசாயம் இல்லை. குப்பைக் கூளங்கள், தென்னை மட்டைகள், இலைதழைகள், மக்கிய எரு இவற்றைக் கொண்டு செடியைச் சுற்றி மூடாக்கு இடுவதும் நல்லது. ரசயான உரமோ, இயற்கை உரமோ எதுவாயினும் மேற்கண்ட அட்டவணைப்படி (உரம் எப்படி ?) அவற்றை அவசியம்  இடவேண்டும். சிவப்புத் தண்டு துளைப்பான், தேயிலைக் கொசு, வேர் புழுக்கள், மாவுப்பூச்சி, கூன் வண்டுகள், அசுவினிப் பூச்சிகள் ஆகியவற்றின் தாக்கதல் இருக்கும். இதற்குத் தேவையான இயற்கை அல்லது செயற்கை பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தலாம்.
செடி வளரும் பருவத்தில் வாஸ்குலர் டைபேக், கருங்காய் நோய், கரிப்பூட்டை நோய், சொறி நோய் போன்றவை தாக்கக்கூடும். ஒரு சதவிகித போர்டோக் கலவையை பயன்படுத்தி இவற்றை எதிர்க்க முடியும்.
எதிரிகள் ஜாக்கிரதை !
அணில், எலி, வெருகு பூனை என கோக்கோவுக்குச் சில எதிரிகள் உண்டு. இவற்றின் மூலம் கோக்கோ பழங்களுக்கும் விதைகளுக்கும் ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்த, பொறி, மருந்துகள் என்று பயன்படுத்தலாம். கேட்பரீஸ் நிறுவன அதிகாரிகள் காயவைத்த கோக்கோ விதைகளை ஒரு கிலோ 60 ரூபாய்க்குக் குறையாமல் எடுத்துக் கொண்டு, உடனடியாக பணம் பட்டுவாடா செய்கின்றனர்.  சொட்டு நீர வழியே உரம் கொடுக்கின்றேன். பூச்சி, நோய் தாக்குதல் இதுவரை இல்லை. தென்னை மட்டை விழுந்து ஒன்றிரண்டு கிளைகள் முறிந்தாலும் மீண்டும் துளிர்த்து சரியாகி விடுகின்றன.
செயல் ஒன்று பயன்கள் பல
கோக்கோ இலைச்சருகுகள் நிலத்துக்கு மூடாக்காகப் பயன்படுகின்றன. தோப்பின் சூழல் குளிர்ச்சியடைகிறது. வெயிலின் வெப்பத்தாக்குதல் மண்ணில் நேரடியாகப்படுவது குறைகிறது. நிலத்தில் நுண்ணுயிர், மண்புழு பெருக்கம் அதிகமாகிறது.
ஒரு செடியின் செலவு வரவு கணக்கு

விவரம் செலவு

குழி எடுக்க

4

உரம், மண்போட

3

நாற்றின் விலை

4

முதல் வருட பராமரிப்பு

10

முதல் வருட பராமரிப்பு

15

மூன்றாம் வருட பராமரிப்பு

25

மொத்தம்

61

மூன்றாம் ஆண்டிலிருருந்து ஒரு செடி மூலம் கிடைக்கும் மகசூல் கணக்கு.

ஆண்டு எடை (கிலோ) விலை (ரூ)
3 0.5 30
4 1.5 90
5 2.0 120

அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டரை கிலோ வரை விதைகள் கிடைக்கும். அதற்கு மேல் ஏற வாய்ப்பில்லை. ஏக்கருக்கு 200 செடிகள் நட்டால் செலவு, பராமரிப்பு போக ரூ. 20 ஆயிரம் ரூபாய் நிகர லாபம் கிடைக்கும்.

 


சிரிக்குது செவ்வந்தி


காந்தி கிராமம் பகுதியைச் சேர்ந்த வேலுமணி அவர்கள் பத்து ஆண்டுகளாக செவ்வந்திப் பூ விவசாயத்தில் கோலோச்சிக் கொண்டிருப்பவர். இவர் செவ்வந்தி பூ சாகுபடியைப் பற்றி கூறுகையில் “இந்தப் பகுதியில் மருகு, கோழிக்கொண்டை, செவ்வந்தின்னு பல வகைப் பூ சாகுபடி நடக்குது. வெங்காயம், கீரை மாதிரியான பயிர்களையும் பருவத்துக்குத் தக்கபடி மாத்தி மாத்தி செய்றோம்”.
பூவைப் பொறுத்தவரை ஐப்பசி, கார்த்திகை மாசத்துல செவ்வந்திப் பூவுக்கு தேவை அதிகமாயிருக்கும். நல்ல விலையும் கிடைக்கும். சித்திரையில் செடி நட்டா, ஐப்பசியில அறுவடை செய்ய முடியும்.
மஞ்சள் செவ்வந்தி, வெள்ளை செவ்வந்தி, சின்ன செவ்வந்தி (இதுவும் மஞ்சளாக இருக்கும்) மூணு வகை இருக்கு. இந்தப் பகுதியைப் பொறுத்தவரைக்கும் பரவலாக வெள்ளையும், மஞ்சளும் தான் பயிர்  செய்றோம்.  நடவுசெய்த ஏழு மாசத்துல அறுப்புக்கு வந்துடும். வாரம் ஒரு தடவை வீதம் அஞ்சு இல்லன்னா ஆறு தடவை பூ எடுக்கலாம். மொத்தம் எட்டு மாச சாகுபடி, ஒரு தடவைக்கு 800 கிலோ  கிடைக்கும். ஏக்கருக்கு கணக்குப் பார்த்தா, சராசரியாக 4,000 முதல் 4,500 கிலோ வரை பூ கிடைக்கும். சந்தையில இருக்கிற பூக்களின் வரத்தைப் பொறுத்து கிலோ பத்து ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் வரைக்கும் விலை போகும்.
சராசரி மகசூல் நாலாயிரம் கிலோ சராசரி விலை கிலோ 25 ரூபாய் அப்படின்னு கணக்குப் போட்டாலே, ஒரு லட்ச ரூபாய் வரை கிடைக்கும்.
பெரிய (மஞ்சள்) செவ்வந்தியை வேர் மூலமாகத்தான் உற்பத்தி செய்யவேண்டும். கரிசல் மண் தவிர மற்ற எல்லா வகை மண்ணிலும் செவ்வந்தி நன்றாக வளரும். நாற்றுக்காக விட்டிருக்கும் பாத்தியில இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி, தழையவிட்டு, அந்தச் செடிகளின் மேல் கட்டையை நீக்கி, வேரை மட்டும் வெட்டி எடுக்கவேண்டும் அவற்றை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, சிறு சிறு  கட்டுகளாக கட்டிக்கொள்ளவேண்டும். ஏக்கருக்கு நானூறு முதல் நானூற்று ஐம்பது கட்டுகள் வரை தேவைப்படும்.
நிலத்தை நன்கு உழவு செய்து, வெங்காய பாத்திபோல அமைத்து, நாலு விரல் இடைவெளி இருப்பது போல் இரண்டு இரண்டு வேர்களாக வரிசையில் நடவேண்டும். வேர்களை நடும் போது, அடிவேர், நுனிவேர் பார்த்து ஜாக்கிரதையாக நடவேண்டும். அடிவேரைப் பார்த்து நிலத்தில் நடவேண்டும் மாற்றி நடவு செய்தால், செடிகள் வளராது.
நாற்பது நாள் இடைவெளியில் மொத்தம் மூன்று தடவை களை எடுக்கவேண்டும். வாரத்துக்கு இரண்டு தடவை தண்ணீர் கொடுக்கவேண்டும். முதல் தடவை களை எடுப்பதற்கு 20 ஆட்களும், அடுத்தடுத்த இரண்டு களைகளுக்கு 15 ஆட்கள் வீதமும் மொத்தம் 50 ஆட்களுக்கு வேலை இருக்கும். களையெடுத்த பிறகு இரண்டு மூட்டை டிஏபி இத்துடன் நூறு கிலோ கடலைப் பிண்ணாக்கு கொடுக்கவேண்டும்.
பூ வெடிக்கும் சமயத்தில் செடி கீழே சாய்வதற்கு வாய்ப்பு இருக்கும். அதைத் தடுக்க, செடிகளுக்கு மண் அணைப்பதோடு, அருகில் சிறு குச்சிகளை நட்டு, அவற்றில் கயிறு மூலம் கட்டிவிடுவது அவசியம். அசுவினி, வெள்ளை ஈ இரண்டும் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கு மோனோகு ரோட்டோபாஸ், செவின் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து அடிக்கவேண்டும். மழை அதிகமாக இருந்தால் செடிகள் கீழே சாய்ந்து விடும். எல்லாவற்றையும் சமாளித்து முடித்தால் நல்ல அறுவடை தான்.
சித்திரையில் விதைப்பவர்கள், ஊடுபயிராக வெங்காயத்தையும் சேர்த்து விதைப்பார்கள். ஒரு வரிசையில் செவ்வந்தி, அடுத்த வரிசையில் வெங்காயம் என விதைப்பார்கள். 45ம் நாளில் வெங்காயம்  அறுவடை ஆகிவிடும். இதன் மூலம் செலவு போக ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
நீர்க்கருகல் ஜாக்கிரதை
செவ்வந்தி தோட்டத்தில் தண்ணீர் தேங்குவது ஆபத்தானது. அப்படித் தேங்கி நின்றால் நீர்க்கருகல் நோய்த் தாக்கும். கீழிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இலை அழுக ஆரம்பித்து, முழுச்செடியும் அழுகிவிடும். அதனால் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
மற்ற செவ்வந்தி பூக்களைவிட, வெள்ளை செவ்வந்திக்கு மழை ஆகாது. மழையைப் பொறுத்து கிடைத்தவரை லாபம் என்று முன்கூட்டியே அறுவடை செய்துவிடவேண்டும். இல்லையென்றால் முதலுக்கே மோசம் வந்துவிடும். இந்தக் காரணத்தால் தான், வெள்ளை செவ்வந்தி சாகுபடி குறைந்த அளவில் நடக்கிறது.
ஒரு ஏக்கருக்கான செவ்வந்தி சாகுபடி
செலவு - வரவு கணக்கு (ரூபாயில்)

விவரம்  செலவு வரவு

உழவு

1,500  

தொழு உரம்

1,200  

பார் அமைத்தல்

1,000  

நாற்று (வேர் வெட்டுதல், வேர் நீக்குதல் உட்பட)

1,180  

தண்ணீர் பாய்ச்சும் கூலி (மாதம் ரூ. 1,000 வீதம் ஏழு மாதத்துக்கு)

7,000  

நடவு

1,200  

களை எடுக்க

3,000  

உரம் இரண்டு தடவை (டிஏபி கடலை புண்ணாக்கு)

2,700  

பூச்சி மருந்து (தெளிப்புச் செலவு உட்பட)

850  

இதரச் செலவுகள்

750  

பூ விற்பனை மூலம் வரவு

  70,000

மொத்தம்

20,380 70,000

நிகர லாபம்

  49,620

தேனிச்சம்பா.. வருமானத்துல சீனிச்சம்பா..



தேனிச் சம்பாவை 30 வருஷமா விடாமப் பயிர் பண்ணிக்கிட்டிருக்கேன் என்றார் ஈரோடு மாவட்டம், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லக்குமாரபாளையம் விவசாயி தங்கமுத்து.
குவியலாகக் கிடந்த மிளகாய்ப் பழங்களை பிரித்தபடியே பேசத் தொடங்கினார் தங்கமுத்து (அலைபேசி : 90475 72404) “குண்டு மிளகாய், குடை மிளகாய், உருண்டை, குட்டச்சம்பா, பெரியச் சம்பான்ன பல இரக மிளகாய் இருக்கு. எங்க மண்ணுக்கும், தண்ணிக்கும் மிதமான சீதோஷணத்துக்கும் தேனிச் சம்பா நல்லபடியாகவே கை கொடுக்குது. இந்தப் பகுதியில் மட்டும் 2,000 ஏக்கருக்கு மேல் தேனிச் சம்பா காய்ச்சிக் கிடக்கு.
“வைகாசிப் பட்டத்துல தான் தேனிச் சம்பா நல்லா வரும். ஒரு ஏக்கர்ல நடவு செய்றதுக்கு, நாலு பாத்தி நாத்து தேவைப்படும். வெளியில வாங்கினா 900 ரூபாய் ஆகும். பழுத்ததும் பறிச்சி வெயில்ல காய வெப்போம். ‘மொறுமொறு’ன்னு காய்ஞ்சதும் ரெண்டா கிள்ளினா விதைங்க ‘பொலபொல’ன்னு விழும். அப்படியே அள்ளி நாத்தாங்கால் பாத்தியில விதைச்சி, குச்சியை வெச்சி குறுக்கு நெடுக்கா கீறி விட்டா போதும். ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவைப்படும். வடிகால் வசதி இருக்கிற இடத்துல பாத்தி அமைக்கணும். விதைக்கறதுக்கு முன்ன பாத்திக்கு பத்து கிலோ அடியுரம் இறைத்து விடுகிறது நல்லது. மூணு நாளுக்கு ஒரு தண்ணி, இடையில் ஒரு கைக் களை மட்டும் போதும், 60 நாள்ல மிளகாய் நாத்து மிடுக்குக் காட்டி நிக்கும்.
கோழி எரு ஒரு டிராக்டர் கொட்டி, ரெண்டு உழவு பிடிச்சி, பத்து ஆட்கள விட்டுப் பார் வாய்க்கால் அமைச்சி, நிறையத் தண்ணி விட்டு, அது கண்டுனதும் ஒன்றரை அடிக்கு, ஒன்றரை அடி இடைவெளியில் செடிகளை நடணும். வைகாசி முதல் வாரத்துல நடவை முடிச்சிடணும். முதல் 75 நாளுக்குள்ள மூணு தடவை களை எடுக்கலாம். 75 நாளிலேயே காய் பறிப்புக்கு வந்துடும். தொடர்ந்து 120 நாளைக்கு காய்ப்பு கங்கணம் கட்டி நிக்கும். தேனிச் சம்பாவோட வயசு மொத்தம் 195 நாள். இதுல 120 நாளுக்கு மகசூல் கிடைக்கும். 20 நாளுக்கு ஒரு தடவைன்னு சுழற்சி முறையில ஆறு தடவை அறுவடை செய்யலாம். 5 முதல் 8 டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும்.
பத்தாவது நாள், ரெண்டு மூட்டை டிஏபி உரத்தை அடியுரமா கொடுக்கணும். இருபதிலிருந்து முப்பது நாளுக்குள்ள ரெண்டு மூட்டை யூரியாவை செடிக்குச் செடி வெச்சித் தண்ணி பாய்ச்சணும். அதிலிருந்து இருபது நாள் இடைவெளியில 17:17:17 கலப்பு உரம் ஒரு தடவைக்கு இரண்டு மூட்டை வீதம் முணு முறை கொடுக்கணும்.
இலை முரணை, வெள்ளைப் பேன் இதெல்லாம் செடிகளைத் தாக்கும். இதுக்கு டைமெத்தேயேட் 500 மில்லியை 120 லிட்டர் தண்ணியிலக் கலந்து தெளிச்சாப் போதும் “பறிச்ச மிளகாயை ஒட்டன்சத்திரம் சந்தைக்குத் தான் அனுப்புறோம். இப்போதைக்கு கிலோ 8 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்குது கிணத்துல மட்டும் போதுமான தண்ணி இருந்தா போதும். தேனிச் சம்பா எங்களுக்கு சீனிச் சம்பாவா இனிக்கிற வெள்ளாமை தான்”  (தொலைபேசி : 04258-243409).
ஒரு ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்ய செலவு - வரவு கணக்கு (தங்கமுத்து)

விவரம் செலவு வரவு
உழவு 600  
கோழி எரு 1 லோடு 3,000  
இறைப்புக்கூலி 300  
பாத்தி 500  
விதை மற்றும் நாற்றாங்கால் 1,200  
நடவு 400  
களை 1,200  
உரம் 4,000  
பூச்சிமருந்து 1,500  
பறிப்புக்கூலி (160 ஆள், ரூ. 80 வீதம்) 12,800  
வேன் வாடகை (கிலோவுக்கு 60 பைசா) 4,800  
சந்தைக் கமிஷன் 10,000  
தண்ணீர்ப் பாய்ச்சுதல் 4,000  
மகசூல் 8 டன் ரூ. 10 வீதம்   80,000
மொத்தம் 44,300 80,000
வருமானம்   35,700

“இந்தப் பகுதியில் உவர் தண்ணிதான் கிடைக்கும். அதை வெச்சு புகையிலை, பருத்தி சோளம்ன்னு வெள்ளாமை வெச்சோம். இந்த சமயத்துல தான் தேனீச் சம்பா இங்க அறிமுகமாச்சி. அதனால ஒவ்வொரு விவசாயித் தோட்டத்துலயும் முப்பது செம்மறி ஆடுகளுக்கு குறையாம இருக்கும். வெள்ளாமை முடிஞ்ச பிறகு, நாலஞ்சு மாசம் இந்த ஆடுகளை வெச்சிப் பட்டி போடுறோம். அதனால, ஏகத்துக்கும் சொட்டை இல்லாம ஆட்டு எரு நிலத்துல விழும். அப்புறம் நல்லா உழவு பிடிச்சி, அந்த நிலத்துல மிளகாய் நட்டு வெச்சாப் போதும். செடிகளுக்கு எதிர்ப்புச் சக்தியும் கூடும். யூரியா போடுறத கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிக் கிட்டே வர்றேன். பூச்சி மருந்து தெளிக்கிற வேலையெல்லாம் எப்பவுமே கிடையாது. 8 டன் வரைக்கும் மகசூல் எடுக்கிறேன். பருவ நிலை மட்டும் கைவிடாம இருந்தாலே போதுமானது. ராகி, சோளம், புகையிலை தான் அதிகமா விதைப்பாங்க. வீட்டுச் செலவுக்காக புறக்கடையில காய்கறி போடுறப்ப, அதுல மிளகாய் செடியும் இருக்கும். தேனி விவசாயிக்கு கொடுத்த சீதனம் தான் இந்த மிளகாய் அதனாலயே ‘தேனிச் சம்பா’ங்கிற பேரு நிலைத்திருக்கிறது.

 


கொட்டிக் கொடுக்குது கொடை ஆரஞ்சு


உயரமான இடங்களில் வளர்வதோடு, தம்மை வளர்த்தெடுக்கும் விவசாயிகளையும் பொருளாதார ரீதியில் உயர்த்திக் கொண்டு தான் இருக்கிறது ஆரஞ்சு, தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு என்று கடல் மட்டத்திலிருந்து 1,200 மீட்டருக்கும் உயரமான பகுதிகளில் வெள்ளாமை விவசாயிகளுக்கு அமுதசுரபியாகவே இருக்கிறது இந்த ஆரஞ்சு. அந்த வரிசையில், கொடைக்கானலை ஒட்டிக் கொண்டிருக்கும் தாண்டிக்குடி உள்ளிட்டப் பகுதிகளிலும் சக்கைப் போடு போடுகிறது.
தாண்டிக்குடியில் காபி, ஆரஞ்சு, அவகோடா, பலா, இஞ்சி என மலைப்பகுதி வேளாண்மை கொடி கட்டி பறக்கிறது. இங்கு விளையும் ஆரஞ்சுகள் கொடை ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு என அழைக்கப்படுகின்றன. இதனுடைய தோல், லேசாக உரித்ததும் கையோடு வந்துவிடுவதால் லூஸ் ஜாக்கெட் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஆரஞ்சு பழங்களில் சாறு அதிகம் இருப்பதோடு, இனிப்புச் சுவையும் கூடுதலாக இருப்பதால் விற்பனையில் இவை சக்கைப் போடு போடுகின்றன.
தாண்டிக்குடியின் மொத்த ஆரஞ்சு விளைப்பரப்பில், குறிப்பிடத்தக்க அளவுக்கு தன் வசம் வைத்திருப்பவர், இங்கே ஆரஞ்சு சாகுபடியில் பல ஆண்டகளாக ஈடுபட்டிருக்கும் கதிரேசன் (அலைபேசி : 94863 73767). பொதுவாக மலைப்பகுதிகளில் ரசாயன விவசாயமே மேற்கொள்ளப்பட்டு வரும் வித்தையைக் கற்றுக் கொண்டு, இயற்கை வேளாண்மை மூலம் ஆரஞ்சு விளைவிக்க ஆரம்பித்துள்ளார் இந்தக் கதிரேசன்.
“ இருபது ஏக்கர்ல ஆரஞ்சு சாகுபடி செய்றேன். ஊடுபயிரா காபி போட்டிருக்கேன். பல வருஷமா ரசாயன உரத்தைப் போட்டுத்தான் விவசாயம் செஞ்சிகிட்டிருந்தேன். இந்த நிலையில் பசுமை விகடனைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு, திண்டுக்கல்லுல போன வருஷம் நடந்த ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புல கலந்துகிட்டேன். அதுக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமா இயற்கை விவசாயத்துக்கு மாற ஆரம்பிச்சிருக்கேன்.

என்கிட்ட நாட்டு ரக மலைமாடுங்க கொஞ்சம் இருக்கு. அதுகளோட சாணம், மூத்திரத்தை வெச்சி ஜீவாமிர்தத்தை நானே தயாரிச்சி, தண்ணியோட சேர்த்துப் பாய்ச்சறேன். இதுக்காக தனியா டிரம்மெல்லாம் வெச்சி, குறிப்பிட்ட அளவு ஜீவாமிர்தம், பாசன நீர்ல கலக்கற மாதிரி சிலக் கருவிகளை நான் அமைச்சிருக்கேன். இப்பப் பயிர்கள்ல ஒரு தெளிவு தெரியுது.  மகசூல் கூடுதலா கிடைக்குது. இதெல்லாம் ஒரு பக்கமிருக்கு.. ரசாயன உரத்தோட செலவு குறைஞ்சி போனது கூடுதல் லாபம்.
என்கிட்ட இப்ப இருக்கிறது எட்டு வருஷ மரங்கள், முழுக்க இயற்கை முறையிலே சாகுபடி செய்றதுக்காகவே தனியா நாலு ஏக்கருல புதுசா ஆரஞ்சு நடப்போறேன். ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு மாறிட்டாலும், சாம்பல்நோய், பழ ஈ இது ரெண்டையும் சமாளிக்கறதுக்காக இன்னமும் நான் ரசாயன மருந்துகளைத் தான் பயன்படுத்தறேன். என்று சொல்லி இடைவெளி கொடுத்த கதிரேசன், அதைப் பற்றி விவரித்தார்.
“ஆரஞ்சு சாகுபடியை அதிகம் பாதிக்கறது சாம்பல் நோய், பழ ஈ இது ரெண்டும் தான். இதைக் கட்டுப்படுத்த ரசாயன முறையில் கந்தகப் பவுடரை ஒரு ஏக்கருக்கு பத்து கிலோ தூவுவாங்க. அல்லது நனையும் கந்தகத்தை தண்ணியில கலந்து தெளிப்பாங்க. அடுத்தது, பழ ஈ இதுங்களோட தாக்குதல் காரணமா அதிகளவு பழம் சேதமாகும். இதைக்கட்டுப்படுத்த கருவாட்டுப் பொறி வைப்பாங்க. அதாவது, பிளாஸ்டிக் பையில் தண்ணியை ஊத்தி, அதுல டைக்ளோர் வாஷ் மருந்தை பஞ்சுல நனைச்சி உள்ளே போட்டுடுவாங்க. பாக்கெட் மேலே கருவாட்டுத் துண்டைக்கட்டி, பையின் பக்கவாட்டில் நாலைந்து ஓட்டைகளைப் போட்டு, ஒரு ஏக்கர் நிலத்தில் இருபது இடங்களில் கட்டித் தொங்க விட்டுட்டா.. கருவாட்டு வாசனைக்காக அதைத் தேடி ஓடுற ஈயெல்லாம், பாலித்தீன் துளை வழியா பைக்குள்ள புகுந்து, அந்த மருந்தை சுவாசிச்சு இறந்துடும்.
இதைத்தான் நானும் செய்துகிட்டிருந்தேன். ஆனா, ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாறின பிறகு ‘சுக்கு அஸ்திரா’ கரைசல் பயன்படுத்தினேன். ஆனா, எதிர்பார்த்த நனையும் கந்தகம், கருவாட்டுப் பொறி இதைத்தான் இப்போதைக்கு பயன்படுத்திக்கிட்டிருக்கேன். சுக்கு அஸ்திராவை நான் தயாரிச்ச விதம் சரியில்லையா.. இல்ல, சாம்பல் நோய், பழ ஈ இது ரெண்டையும் விரட்ட, ஜீரோ யோசனை இருக்கான்னு தெரியல.. அதைப் பத்தி பாலேக்கர்கிட்ட கேட்டுச் சொன்னா, புண்ணிமயமாப் போகும். (பார்க்கப் பெட்டிச் செய்தி)
பூச்சி, நோய்க்குத்தான் இப்போதைக்கு வழி தெரியல.. மத்தபடி ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் மூலமா.. ஆரஞ்சுல நல்ல மகசூல் பார்க்கிறேன். அதேபோல, இந்த சுக்கு அஸ்திரா ஆரஞ்சுக்கு கைக்கொடுக்கலையே தவிர, காபிக்கு நல்லாவே பயன்படுது.  பயிர் ஊக்கமா வளர்றதோட, செடியில காயும் நிறையப் பிடிச்சிருக்கு என்றவர், ஆரஞ்சு சாகுபடி பற்றியப் குறிப்புகளைச் சொன்னார். அவை.
செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலம் தான் ஆரஞ்சு நடவுக்கு மிகவும் ஏற்ற காலமாகும். இந்தப் பருவத்தில் கிடைக்கும் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழை, பயிர்கள் வளர உதவியாக இருக்கும். ஒட்டுக் கன்றுகள் மூலமோ அல்லது நாற்றுக்கள் மூலமோ ஆரஞ்சு நடவு செய்யலாம். தடியன் குடிசை என்ற இடத்தில் இருக்கும் தோட்டக்கலை அலுவலகத்திலும் நாற்றுக்கள் கிடைக்கும். அரசுப் பண்ணைகளில் ஒரு நாற்று பத்து ரூபாய் விலையில் ஆரம்பித்து, வெவ்வேறு விலையில் கிடைக்கிறது. நம் தோட்டத்தில் இருக்கும் மரங்களிலேயே அதிக மகசூல் கொடுக்கும் மரங்களிலிருந்து விதைகளை எடுத்து நாற்று தயார் செய்வதன் மூலம், நாற்றுக்களை வெளியில் வாங்கும் செலவை
க் குறைக்கலாம். நாற்றுக்களாக நடவு செய்து மரங்களை வளர்த்தெடுத்தால், நீண்டகாலம் மகசூல் கிடைக்கும். அதே சமயம், ஒட்டுக் கன்றாக நடவு செய்யும் போது குறுகிய காலத்திலேயே மகசூல் முடிந்துவிடும். ஆனால், ஒட்டுக்கன்று முறை மூலம் மகசூல் அதிகமாகக்  கிடைக்கும். ஆரஞ்சு மட்டுமே நடவு செய்து தனித் தோப்பாக பராமரிக்கலாம். ஊடுபயிர் செய்யும் போது கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, காபியை ஊடுபயிர் செய்யும் போது நல்ல வருமானம் கிடைக்கும்.


பிரமாதமான பிரமிடு பந்தல் விவசாயத்தில் பலே யுக்தி


திண்டுக்கல் மாவட்டம், மெட்டூரைச் சேர்ந்த வேலுச்சாமி (அலை பேசி: 97872 59142) அவரைக்காய் சாகுபடி செய்து கொண்டிருக்கும் இவர், அது பிரமிடு பந்தல் ஒரு சென்ட் நிலத்தில் பிரமிடு வடிவப் பந்தலை ஏற்படுத்தி, அதில் அவரை விதைத்து இயற்கை முறையில் பராமரித்து லாபம் பார்ப்பதோடு, அந்தப் பந்தலுக்குள்ளேயே ஆடு, கோழிகளையும் வளர்த்து வருகிறார் வேலுச்சாமி.
கனகாம்பரம், கடலை, மக்காச்சோளம்ன்னு வெள்ளாமை பண்ணினேன். ஆரம்பத்துல ரசாயன உரத்தையும், மருந்தையும் பயன்படுத்தினேன். 2005 ஆம் வருஷத்திலிருந்து இயற்கை முறையில விவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டேன்.
அவரை, திராட்சை, பீர்க்கன், புடலை, பாகல்ன்னு எல்லாவிதமான பந்தல் வெள்ளாமையையும் இந்த பிரமிடு பந்தல் மூலமா செய்யலாம். குறைஞ்ச இடத்துல மூணு மடங்கு வருமானம் கிடைக்கறதோட, உழைப்பும் குறையுது. இந்த முறையில பந்தல் அமைக்க, 5,000 ரூபாய் வரை தான் செலவு. ஒரு தடவை அமைச்சிட்டா குறைஞ்சுது பத்து வருஷத்துக்குப் பிரச்சனை இல்லை. நடைமுறையில ரெண்டு சென்ட் இடத்துல  கிடைக்குற மகசூலை, பிரமிடு பந்தல் முறையில் ஒரு சென்ட் இடத்துலயே எடுக்கலாம் என்ற நம்பிக்கையாகப் பேசியவர், தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்களை பாடமாகப் படித்தார்.
பிரமிடு பந்தல் தயாரிப்பது எப்படி ?
குறிப்பிட்ட நிலப்பகுதியைத் தேர்ந்தெடுத்து 21 அடிக்கு 21 அடி அளந்து கொண்டு, ஒவ்வொரு மூலையிலும் கருங்கல் தூண்களை நடவேண்டும்.  ஒவ்வொரு தூணுக்கும் இடையில், இன்னொரு தூண் தேவைப்படும். எட்டுத் தூண்களில் இருந்தும் கம்பிகளைக் கட்டி, 60 டிகிரி கோணத்தில் இரும்புக்குழாயின் உச்சியில் அவற்றைக் கட்டவேண்டும். நன்றாகக் கட்டிவிடவேண்டும் நான்க சமபக்க முக்கோண வடிவத்தில் பிரமிடு பந்தல் தயார்.
ஆவணிப்பட்டம் அமோகம்!
பந்தலின் நான்கு மூலைகளிலும் மூன்று அடி நீளம், அகலம் இரண்டு அடி ஆழம் கொண்ட குழியெடுத்து, மக்கிய தொழு உரத்தைப் போட்டு, விதைகளை நடவு செய்யவேண்டும். அவரையைப் பொறுத்தவரை  நடவு செய்தால், இரண்டு மாதத்தில் காய்களை எடுக்கலாம். கொடி வேலையும் குறைவு. அதிகக் காய் பிடிக்கும். மாசியில் நடவு செய்தால், காய் எடுக்க நான்கு மாதங்களாகும். வேலைப்பாடு அதிகம். ஆனால், காய்க்கு விலை அதிகமாகக் கிடைக்கும்.
ஆவணியில் நடவு செய்தால், புரட்டாசியில் பந்தல் முழுக்க கொடி அடைத்துக் கொள்ளும். எழுபதாவது நாளில் காய் பறிப்புக்குத் தயாராகிவிடும். பிரமிடு பந்தல் முறையில் கொடிகளுக்கு நல்ல காற்றோட்டம் கிடைப்பதால் நோய்த் தாக்குதல் குறைவாகவே இருக்கும். ஏதாவது நோய் தாக்கினாலும் மஞ்சள்பொடி, சாம்பல் இந்தப் பந்தல் கோபுரம் போல இருப்பதால், நிழலானது ஒவ்வொரு பக்கமும் மாறி மாறி கிடைக்கும். குடத்தில் கொண்டு சென்று ஊற்றினால் கூட போதும. 70ம் நாளில் காய் பறிப்பு ஆரம்பித்து, ஆறு நாளைக்கு ஒரு தடவை என்று ஆழு மாதங்களுக்கு மகசூல் தொடரும். முதல் பறிப்புக்கு பத்துக் கிலோ கிடைக்கும். அது படிப்படியாக உயர்ந்து ஐந்தாவது பறிப்பின் போது 25 கிலோ வரை கிடைக்கும். மாதத்துக்கு ஐந்து பறிப்பு வீதம் 25 கிலோ அளவில் முதல் மூன்று மாதங்களுக்கு பறிக்கலாம். ஒரு சென்ட் நிலத்தில் ஒரு பட்டத்துக்கு  சராசரியாக 500 கிலோ மகசூல் கிடைக்கும். அவரைக்காய் சில நேரங்களில் கிலோ 25 ரூபாய் வரைக்கூட விலைபோகும். சமயங்களில் பத்து ரூபாய் என்று குறைந்துவிடும். குறைந்தபட்ச தொகையான பத்து ரூபாயை வைத்துக் கணக்கிட்டாலே ஒரு சென்ட் நிலத்தில் 5,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அதுவும் இயற்கை முறை விவசாயம் என்பதால் செலவு 500 ரூபாய்க்குள் தான் ஆகும். மற்றபடி எல்லாமே லாபம்தான்.
அடடே ஆடு, கோழி
கொடிகள், பிரமிடு பந்தலை அடைத்தவுடன், பந்தலுக்குள்ளேயே நல்ல நிழல் கிடைக்கும். இதில் ஆடுகளைக் கட்டி வளர்க்கலாம். கொடிகளை கவாத்து செய்துபோடும் இலைகளை ஆடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம். ஆடுகளின் கழிவுகளைக் கொடிகளுக்கு உரமாகப் போடலாம். ஒரு சென்ட் இடத்தில் அமைக்கப்படும் பிரமிடு பந்தலுக்குள் இரண்டு ஆடுகள் மற்றும் ஐந்து கோழிகளை வளர்க்கலாம். இதன் மூலம் நமக்குக் கூடுதல் லாபம் கிடைக்கும். விதைக்கும் சமயமாகப் பார்த்து, இரண்டு ஆட்டுக்குட்டிகளை 1,500 ரூபாய்க்கு வாங்கிவிட்டால், அறுவடை முடியும் சமயத்தில் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் ரூபாய் வரை விலைபோகும். 15 ரூபாய் விலையில், நாட்டுக்கோழிக் குஞ்சுகள் ஐந்து வாங்கி விட்டால், ஆறு மாதத்தில் ஒவ்வொன்றும் ஒன்றரை கிலோ அளவுக்கு வளர்ந்து விடும். கிலோ 100 ரூபாய் வீதம் விற்றால் 750 ரூபாய் கிடைக்கும். இந்த ஆறு மாதத்தில் கோழிகள் மூலமாகக் குறைந்தது 50 முட்டைகள் கிடைக்கும். நாட்டுக்கோழி முட்டை 5 ரூபாய் என்று விலைப்போகும். இதன் மூலம் 250 ரூபாய் வருமானம் கிடைக்கும். வீட்டுக்குப் பக்கத்துல சும்மா இருக்கிற ஒரு சென்ட் நிலத்தைச் சரியா பராமரிச்சா வருஷத்துக்கு 7,500 ரூபாய் வரைக்கும் வருமானம் பார்க்கலாம்.
நடைமுறைப் பந்தலை மிஞ்சும் பிரமிடு
நிலத்தை உழுது பார் பிடிச்சி, ஒன்றரை அடி இடைவெளியில விதையை நடணும். வரிசைக்கு வரிசை பத்தடி இடைவெளி தேவை. நாலு நாளைக்கொரு தண்ணீர்க் கட்டினாப் போதும். கொடி முளைச்சதும் ஊற வெச்ச கடலைப் புண்ணாக்கை (10 கிலோ) தண்ணியில கலந்து விடணும். 25 நாள்ல பந்தல் கொடி ஏறினதும் காம்ப்ளக்ஸ் உரம் பத்து கிலோவை தண்ணியில கலந்து விடுவேன். இடையில யூரியா ஒரு பத்து கிலோவை தண்ணியில கலந்து விடுவேன். செடியில செல் விழுந்தா மோனோகுரோட்டோபாஸ் அடிப்பேன்.
ஐப்பசியில ஆரம்பிச்சி தை வரைக்கும், நிறையக் காய் கிடைக்கும். அதுக்குப் பிறகு குறைய ஆரம்பிச்சிடும். ஒரு எடுப்புக்கு 100 கிலோ காய் வரைக்கும் வருது. மொத்தமா சேத்தா சராசரியா 2,000 கிலோ ரூபாய்க்கு போட்டாலும் இருபதாயிரம் கிடைக்கும். குத்தகைப் பங்கு 5 ஆயிரம் ரூபாய் போக, 10 ஆயிரம் ரூபாய் வரும்படி கிடைக்கும். 15 சென்ட் நிலத்தில் சாகுபடி செலவு வரவு

விவரம் செலவு வரவு
உழவு 500  
விதை (அரைக்கிலோ) 50  
பார் பிடிக்க 300  
நடவு 180  
இலைக்கிள்ளக்கூலி 660  
களை 300  
கடலைப்புண்ணாக்கு 210  
உரம், மருந்து 500  
காய் எடுப்புக்கூலி 1,200  
தண்ணீர் கட்டக் கூலி மற்றும் போக்குவரத்துச் செலவு 1,100  
நில குத்தகைச் செலவு 5,000  
அறுவடை ரூ. 10 வீதம் மொத்தம் 2,000 கிலோ   20,000
மொத்தம் 10,000 20,000
நிகர லாபம்   10,000

ஒரு சென்ட் நிலத்தில் பிரமிடு பந்தல் முறையில் அவரைப் பயிரிட செலவு வரவுக் கணக்கு

விவரம் செலவு வரவு
கல்தூண் (நான்கு) 800  
கம்பி 2,000  
மையக்குழாய்,வெல்டிங் சேர்த்து 500  
பந்தல் அமைக்கக் கூலி 1,700  
ஆட்டுக்குட்டிகள் (இரண்டு) 1,500  
கோழிக்குஞ்சுகள் (ஐந்து) 75  
பராமரிப்பு    
அவரை மொத்த அறுவடை ரூ. 10 வீதம் 500 கிலோ   5,000
ஆடு விற்பனை மூலம்   4,000
கோழி விற்பனை மூலம்   750
முட்டை மூலம்   250
மொத்தம் 7,075 10,000
நிகர லாபம்   2,925

இதில் பந்தல் அமைக்கும் செலவு ரூ. 5,000 ஒரு முறை செய்யும் முதலீடுதான். அடுத்த ஆண்டிலிருந்து இந்த 5,000 ரூபாய் வருமானத்தில் சேர்ந்து விடும்.
பட்டமும் அறுவடையும்
கோழி அவரை, பெல்ட் அவரை, பட்டை அவரை என அவரையில் பல வகைகள் உள்ளன. நிலப்பரப்பிலும். மலைப்பகுதிகளிலும் இவைப் பயிரிடப்படுகின்றன. அனைத்து மாதங்களிலும் நடவு செய்யலாம் என்றாலும், ஆவணிப் பட்டம் தான் சிறந்தது. இந்தப்பட்டத்தில் நடும் போது கொடி வேகமாக வளர்ந்து, இரண்டு மாதத்தில் மகசூல் கொடுக்கும். இதுவே மாசிப்பட்டமாக இருந்தால், கொடி வளர்வதற்கு நான்கு மாதங்கள் ஆகும். ஒரு ஏக்கரில் நடவு செய்ய மூன்று கிலோ விதைகள் தேவைப்படும்.
அவரையைப் பொறுத்தவரை பட்டத்துக்கு ஏற்ப அறுவடைக் காலம் மாறும். சித்திரைப்பட்டம் என்றால், 110 நாட்களில் அறுவடை ஆரம்பிக்கும். வைகாசி கடைசி அல்லது ஆனியில் அமையும் பட்டத்துக்கு 100 நாட்கள், ஆடிப்பட்டத்துக்கு 90 நாட்கள், ஆவணி அல்லது புரட்டாசிப் பட்டத்துக்கு 70 நாட்கள், மாசிப் பட்டத்துக்கு 120 நாட்கள் என்று அறுவடை அமையும்.

 


புல்லுக்காட்டுல கொள்ளை லாபம்


நாகர்கோவிலில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது காளக்குடி, ‘ராம்ஜி கார்டன்’ தான் ராமச்சந்திரனின் புல்தோட்டம். ஆறு ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்திருக்கிறது இவரது தோட்டம். ஐம்பத்து ஐந்து வயது பெரியவரான ராமச்சந்திரன், பள்ளிப் படிப்பையே தாண்டாதவர். இன்று சுயதொழில் மூலமாக அமோக வருமானம் ஈட்டி, பலரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
எனக்கு நாலு நர்சரி கார்டன் இருக்கு. அதுல செடி வாங்க வர்றவங்க, புல் தரை வளர்க்கணும்னா என்ன பண்ணணும்ன்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அப்பத்தான் நாமளே புல்லையும் வளர்த்துப் பார்த்தா என்னனு ஒரு யோசனை வந்துச்சி. அதைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சேன். பெங்களூர் தான் புல் வளர்ப்புல சிறப்பா இருக்குன்னு கேள்விப்பட்டேன். நேரடியா அங்கப் போனேன். விதைப்புல் வாங்கிட்டு வந்து முதல்ல ஒரு ஏக்கர்ல்ல போட்டுப் பார்
த்தேன். சீக்கிரமே புல் வளர்ப்பு எனக்கு பிடிபட்டுப் போகவே, இன்னிக்கு ஆறு ஏக்கர்ல வளர்க்கற அளவுக்கு நான் வளர்ந்துட்டேன்” என்ற சொல்லிச் சிரித்த ராமச்சந்திரன், தொடர்ந்தார்.

இந்தப்புல்லை மண்ணோடு சேர்த்து சதுரம் சதுரமான வெட்டி எடுத்துத் தேவையான வீடுகளுக்கு கொண்டு போய் பதிச்சிக்கலாம். ஒரு சதுர அடி புல் வளர்க்க ஐந்திலிருந்து ஆறு ரூபாய் வரைக்கும் செலவு பிடிக்கும். தோட்டத்திலேயே வித்தா பத்து ரூபாய்க்கும், வீடுகளுக்குப் போய் பதியவெச்சிக் கொடுத்தா இருபது ரூபாயும் வாங்குறோம். இதுலயே எங்களுக்கு போதிய லாபம் கிடைக்குது. ஒரு ஏக்கர்ல முணு மாசத்துக்கு ஒரு முறை முப்பதாயிரம் ரூபாய் வரை புல் விக்க முடியும்.

இப்போல்லாம் வீடு கட்டுற எல்லாருமே தோட்டம் வெக்க ஆசைப்படுறாங்க. அதனால புல் வளர்ப்பு ஏகத்துக்கும் லாபம் தரும் விவசாயமாத்தான் இருக்கு. ஆனா, தேவையான அளவுக்கு நம்ம பகுதிகள்ல புல் வளர்ப்பு நடக்கல. அது தான் விலை அதிகமா இருக்கக் காரணம். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிட்டு பலரும் புல் வளர்க்க ஆரம்பிச்சா நல்ல லாபம் பார்க்கலாம் என்று ஆலோசனைகளைச் சொன்னார்.  
முத்தின, பழுப்பு நிறமான புல் தான் விதைக்கறதுக்கு சரியானது. அதைத் தேரிமணல் (செம்மண்ணில் ஒரு வகை) நிலத்துல தூவி, அது மேல் தேரிமணலை பரப்பி, இலை தழைகளை உரமாப் போட்டு தண்ணி பாய்ச்சிகிட்டு வந்தா போதும். ஒரு சதுர அடியில தயார் செய்ற விதைப்புல்லை, அஞ்சி சதுர அடியில நடமுடியும். தினமும் மூணு வேளை தண்ணி பாய்ச்சிகிட்டே வந்தா மூணு மாசத்துக்குப் பிறகு அறுவடைக்குத் தயாராகிவிடும். இது தான் புல் விவசாயம்.

வீடு கட்டுறது தொடர்ந்து நடக்கறதால புல் வளர்ப்புக்கு எல்லாக் காலத்துலயும் தனி மவுசு இருக்கு. ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர் வெச்சிருக்கிறவங்க கூட துணிஞ்சி புல் வளர்க்கலாம். ஆனா சம்பந்தப்பட்ட ஏரியாவுல எப்படியெல்லாம் விற்பனை வாய்ப்பிருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு அதுல இறங்குறது நல்லது.
நெல்லுக்கு இறைத்த நீர் ஆங்கே புல்லுக்கும் பாயுமாம் என்பார்கள். ராமச்சந்திரனோ, புல்லுக்கே நீர்ப் பாய்ச்சி நெல்லை விட லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது சந்தேகமில்லாமல் சாதனை தானே !
தொடர்புக்கு
தொலைபேசி
04652-265030
அலைபேசி
93675-11413


மலைக்க வைக்கும் மலைத் தோட்ட விவசாயம்


ஒரு ஏக்கர் நிலமும், தண்ணீர் வசதியும் இருந்தால், நடவு செய்த நான்காவது மாதத்திலிருந்து வாரம்தோறும் வருமானம் பார்க்கலாம். நோய்  தாக்குதல் அதிகம் இருக்காது என்பதோடு, மலைத்தோட்டப் பயிர்களில் அதிகப் பராமரிப்பு தேவைப்படாத ஒன்றாக இருப்பதாலும் முக்கியப் பயிராக விளங்குகிறது செளசெள.
திண்டுக்கல்லை சுற்றியுள்ள மலைப்பகுதிகளான சிறுமலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, ஆடலூர், பன்றி மலைப் பகுதிகளில் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. சிறுமலையிலிருக்கும் பழையூரைச் சேர்ந்த அய்யப்பன் (தொலைபேசி : 0451 2558381) செளசெள விவசாயத்தில் தன்னுடைய அனுபவத்தை எடுத்து வைக்கிறார்.
செளசெள காயைப் பொறுத்தவரை ஒவ்வொரு  மலைப்பகுதிகளிலும் ஒவ்வொரு பருவத்திலும் நடுவார்கள். சிறுமலையில அக்டோபர் மாதம் நடவு செய்தால் ஜனவரியில் காய் வரும். சமவெளிப் பகுதியைப் போல இங்கே உழவு செய்ய முடியாது. நிலத்தில் இருக்கும் புதர்களை நீக்கிவிட்டு 15 அடிக்கு 15 அடி இடைவெளியில இரண்டடி ஆழ, அகலத்தில் குழி எடுத்து.. பத்து நாளைக்கு ஆறப்போடவேண்டும். ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட 200 குழி வரும். குழி எடுப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே விதைக்கான காய்களை கொடியிலிருந்து எடுத்து.. பதியம் போட்டு வைக்கவேண்டும்.  முற்றியக் காய்களைப் பறித்து, மேடான இடத்தில் பாத்தி அமைத்து மண்ணைப் போட்டு மூடிவிட்டால் இது தான் பதியம். நான்காவது நாள் முளை விட்டுவிடும். பத்து நாட்களுக்குள் வசதிக்கு ஏற்றாற்போல அவற்றை எடுத்து நடவு செய்யலாம். காயை உரிய நேரத்தில் அறுவடை செய்யாமல் கொடியிலேயே விட்டு விட்டால் சில தினங்களில் தானாக முளைப்புத் தோன்றும். அவற்றை அப்படியே எடுத்தும் நடவு செய்யலாம். குழிக்கு நான்கு காய்கள் வீதம் நடவேண்டியிருக்கும். ஆனால், பதியம் போடும் போது மூன்று காய்களை நடவு செய்தாலே போதும். அத்துடன் முளைப்புத் திறனும் அதிகமாக இருக்கும்.
தோண்டி வைத்தக் குழி நன்கு ஆறிய பின் ஐந்து கிலோ வீதம் எருவைப்போட்டு, பிறகு விதைக்காயை போட்டு மூடி, தண்ணீர் விடவேண்டும். மூன்று நாட்களுக்கொரு தடவை தண்ணீர் அவசியம். நடவு செய்த ஐந்தாவது நாளில் முளைவிடும். பத்து நாளில் கொடி தரையில் படர ஆரம்பிக்கும். குச்சிகளை ஊன்றி கொடியை அதில் ஏற்றி விடவேண்டும். அதன் பிறகு பந்தலை போட்டு வைத்தால், கிட்டத்தட்ட எழுபத்தைந்தாவது நாளில் பந்தலைத் தொட்டுவிடும். (ஒரு தடவை பந்தல் போட்டால், ஐந்து வருடங்களுக்குத் தொடர்ந்து சாகுபடி செய்யலாம்.
கொடி தழையத் தொடங்கியதும் அதன் தூரை (அடிப்பாகம்) சுற்றி நான்கு அடிக்கு சதுர பாத்தி எடுக்கவேண்டும். பந்தல் முழுக்க கொடி படரும் காலம் வரை இரண்டு களை எடுக்கவேண்டும்.  நடவு செய்த 45 நாட்களுக்குப் பிறகு மாதம் ஒரு தடவை வீதம் மூன்று மாதங்களுக்கு 200 கிராம் வீதம் யூரியாவை குழிகளில் வைக்கவேண்டும். நான்காவது மாதத்தின் தொடக்கத்தில் அரைக் கிலோ கலப்பு உரம் வைக்கவேண்டும். அதைத் தொடர்ந்து 21 நாளைக்கு ஒரு தடவை 200 கிராம் யூரியா கொடுக்கவேண்டும். பந்தலில் கொடி அடர்த்தியாக படர்ந்தபிறகு, 45 நாட்களுக்கு ஒரு தடவை பழுத்த இலைகளைக் கிள்ளி எடுப்பது முக்கியம். ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட முப்பது ஆட்கள் வரை தேவைப்படும். சில சமயம் செளசெள ஈ வந்து உட்காரும். இதற்கு நுவாக்ரான், பெவஸ்டின் இரண்டு மருந்தையும் அடிக்கலாம். பிஞ்சுகள் வெம்பிக் கொட்டிவிடும். இதைத்தடுக்க உரக்கடையில் கிடைக்கும் நுண்ணூட்டச்சத்துக்களை வாங்கிப் போடவேண்டும்.

நடவு செய்த 100வது நாளில் பூக்கத் தொடங்கி, 120வது நாளில் காய் அறுவடைக்கு வந்துவிடும். அன்று தொடங்கி எட்டு மாதங்களுக்கு வாரம் ஒரு முறைக் காய் பறிக்கலாம். மொத்தம் ஒரு சாகுபடி பறிப்புத் தொடங்கிய முதல் நாலு மாதங்களைவிட, அடுத்த நான்கு மாதங்களில் விளைச்சல் கொஞ்சம்  குறையும் .
ஒரு பறிப்புக்கு ஒரு ஏக்கரிலிருந்து சராசரியாக 40 சிப்பம் (முப்பது கிலோ மூட்டை) வரைக்கும் எடுக்கலாம். சிப்பம் குறைந்தபட்சம் 80 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 350 ரூபாய் வரை போகும். சராசரி விலை ரூ. 175 கிலோக் கணக்கில் சொன்னால் 4 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை ஆகும். மொத்த மகசூல் 27 டன்.  செலவெல்லாம் போக ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை ஒரு ஏக்கரிலிருந்து லாபம் பார்க்க முடியும்.

பண்ணைக்காடு விவசாயி விவேகானந்தன் (அலைபேசி: 94862 08018) இதைப்பற்றிச் சொல்லும் போது, எனக்கு பதினேழு ஏக்கர்ல விவசாயம். காபிதான் வெள்ளாமை. அதுக்கு ஊடுபயிரா ஆரஞ்சு, மிளகு, வாழை, சீத்தா, கொய்யான்னு பலதையும் போட்டிருக்கேன். மூணு ஏக்கர்ல தனியா செளசெள இருக்கு. சிறுமலையில இருந்து தான் எங்களுக்கு விதைக்காய் வருது. அங்க புரட்டாசி மாசம் நடுவாங்க. நாங்க பங்குனியில நடுவோம்.  சிறுமலையில விடக் காய் அளவ கொஞ்சம் பெருசா இருக்கு. இதனால எடைக் கூடுதலா இருக்கும். லாபமும் அதிகமா கிடைக்குது. இங்க விளையறதெல்லாம் திருநெல்வேலிக்குத்தான் போகுது.

நாங்க எடைக்கணக்கு போட்டுத்தான் விற்பனை செய்வோம். நாலாவது மாசத்திலிருந்து வாரத்துக்கு ஒரு அறுப்பு. சராசரியாக அறுப்புக்கு ஒண்ணரை டன்னுக்கு கொறையாம மகசூல் கிடைக்கும். மொத்தமா பார்த்தா, 40 டன்னுக்குக் கொறையாது. கிலோ சராசரியாக ஆறு ரூபாய்க்கு போகும். 40 டன்னுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் வரைக்கும் கிடைக்கும்.

[ 1 2 3 ]

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்