பயிர் பாதுகாப்பு

பயிர் பாதுகாப்பு பற்றிய தகவல்கள்



இளங்குருத்துப் புழு: சைலோ இன்பஸ்கேட்டுலஸ் ஸ்நெல்லன்


தாக்குதலின் அறிகுறிகள்:       

  • 1-3 மாத வயதுடைய பயிர்களை இப்பூச்சி அதிகமாகத் தாக்கும் .

  • புழுக்கள் தோகை சேரும் இடத்தில் உள்ள இளந்தண்டுகளை துளைத்து உள்ளே சென்று திண்பதால் நடுக்குருத்து காய்ந்து விடும் . இதனை இழுத்தால் எளிதில் வந்துவிடும்.

  • காய்ந்த குருத்திலிருந்து துர்நாற்றம் வீசும் .

  • நிலமட்டத்திற்கு மேலே பல சிறு துளைகள் குருத்தில் காணப்படும் .


வாழ்க்கைச் சுழற்சி:

  • முட்டை       : அளவுகோல் போன்று முட்டைகள் 3-5 வரிசைகளாக 4-100 முட்டைகள்  கூட்டமாகக் சோகையின்   அடிப்புறத்தில் காணப்படும் .   இக்கூட்டங்கள் டைல்ஸ்கள் போன்று ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்திருக்கும் . இது 4-6 நாட்களில் பொரித்து புழுக்கள் வெளிவரும் .

  • இளம்புழு      :  இது பழுப்பு கலந்த வெண்மை நிறத்தில் 5 ஊதா நிறக் கோடுகளுடன் காணப்படும் . தலை அடர் பழுப்பு நிறத்துடனும் 16-30 நாட்கள் வாழ் நாட்களும் கொண்டது .

  • கூட்டுப்புழு    :  கூட்டுக்குள் செல்லு முன் புழுவானது பயிரின் தண்டில் ஒரு பெரிய துளையிட்டு அதனை பட்டு நுால் கொண்டு மூடிவிடும் . பின் நீண்ட கூட்டுக்குள் அடைந்திருக்கும் .

  • பூச்சி       :  வெளிர் சாம்பல் பழுப்பு நிற பூச்சியில் கருப்பு நிற புள்ளிகள் முன் இறக்கைகளில் காணப்படும் . பின் இறக்கைகள் வெண்ணிறத்தில் இருக்கும் .
    பொருளாதார சேத நிலை : 15% வெண்கதிர் அறிகுறிகள்


கட்டுப்பாடு
உழவியல் முறை:

  • கோ 312, கோ 421, கோ 661, கோ 917 மற்றும் கோ 853 போன்ற எதிர்ப்பு இரகங்களை பயிரிடவும் .

  • சாகுபடிப் பருவத்தில் டிசம்பர்– ஜனவரி முன்பட்டத்தில் பயிர் செய்வது சிறந்தது .

  • தக்கைப்பூண்டினை ஊடு பயிராகப் பயிரிடுவது நல்ல பலனளிக்கும் .

  • நடவு செய்த 3 நாட்கள் கழித்து காய்ந்த சோகையினை 10-15 செ .மீ உயரத்திற்கு பரப்பி மூடி வைக்க வேண்டும் .

  • மண்ணின் வெப்பத்தினைக் குறைக்க போதுமான நீர் பாய்ச்சுதல் மற்றும் ஈரப்பதத்தினை அதிகரிப்பது இளங்குருத்துப் புழுப் பெருக்கத்தினை தடுக்க இயலும் .

இயற்பியல் முறை:

  • இணக்கவர்ச்சி பொறி 8 / ஏக்கர் என 45 செ.மீ உயரத்தில் வயலில் பொருத்த வேண்டும்

  • தாக்கப்பட்ட நடுக்குருத்துகளை சேகரித்து அழித்து விடவேண்டும் .

உயிரியல் முறை:

  • 11.1 x 10 5 ஐ .பி.எஸ் (IBS) / மில்லி அதாவது 750 நோயுற்ற கிரானுலோசிஸ் வைரஸ்களை ஒரு ஹெக்டரில் நடவு செய்த 35 வது மற்றும் 50 வது நாளில் விட வேண்டும் .

  • டாச்சினிட் ஒட்டுண்ணியான ஸ்டர்மியோப்சிஸ் இன்பெரன்ஸ்ன் கிராவிட் பெண் பூச்சிகள் 125 னை ஒரு ஏக்கர் வயலுனுள் விடலாம் .

இரசாயன முறை:

  • பொருளாதார சேத நிலையை 15% தாண்டினால் கீழ்காணும் ஏதேனும் ஒரு மருந்தினை அடிக்கவும் .

  • கார்போரைல் +லின்டேன் (செவிடால்) 4% (குருனைகள் ) 12.5 கி .கி , லின்டேன் 10 கி 12.5 கி .கி , கார்போஃபியூரான் 3 ஜி 33 கி .கி (மண்ணில் இடுதல்).   குருணைகள் இட்ட உடனே நீர் பாய்ச்சுதல் அவசியம் .

  • குளோர்பைரிபாஸ் 1000 மி .லி டீபால் ( 250 மி .லி/ 500 லி நீருக்கு ) உடன் கலந்து தெளிப்பதால் இலைப்பரப்பில் மருந்து நன்கு ஒட்டிக்கொள்ளும் .   உயர் அழுத்தத் தெளிப்பான்களைப் பயன்படுத்தித் தெளிப்பது சிறந்தது .


மேலே செல்க

இடைக்கணுப் புழு :   சைலோ சக்காரிபேகஸ் இன்டிகஸ் (கபூர்)

பரவல்:
இந்தியாவின் வெப்ப மண்டலப் பகுதிகள் அனைத்திலும் இப்பூச்சியின் தாக்குதல் காணப்படுகின்றது.

தாக்குதலின் அறிகுறிகள்:           

  • இடைக்கணுப்புழு கரும்பு நட்ட முன்று மாதங்களுக்கு மேல் தோன்றி அறுவடை வரையும் தொடரும்.

  • தாக்கப்பட்ட கணுவிடைப்பகுதி சிறியதாகச் சுருங்கிப் காணப்படும் .  முதல் ஐந்து கணுவிடைப்பகுதிகளை மட்டுமே அதிகம் தாக்குகின்றது .

  • அதில் பல துளைகளும், துளைகளின் அருகில் புழுவின் எச்சம் காணப்படும் .

  • தாக்கப்பட்ட திசுப்பகுதிகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் .

 


வாழ்க்கைச் சுழற்சி:

  • முட்டை       :  இலைப் பரப்பின் நடுநரம்பிலிருந்து கரும்புத் தண்டில் அருகில் அல்லது 9-11 முட்டைகள் பகுதி பகுதியாக இடப்பட்டிருக்கும் .   முட்டைகள் தட்டையாக நீள் வட்ட வடிவில், மெழுகு போன்று பளப்பளப்புடன் வெண்மை நிறத்தில் இருக்கும் .

  • கூட்டுப்புழு    : பாதி உலர்ந்த நிலையில் சோகையின் பரப்பில் கூடுகட்டி இருக்கும் .   கூட்டுப்புழு நிலை 7-10 நாட்கள் வரை இருக்கும் .

  • இளம்புழு      :  வெள்ளை நிற உடலும் பழுப்பு நிற தலையும் கொண்ட இளம்புழுவில் நான்கு ஊதா நிறக்கோடுகள் காணப்படும் .

  • முதிர்ந்த பூச்சி : முன் இறக்கைகள் இரண்டும் வைக்கோல் நிறத்தில் இருக்கும் .   அவற்றில் சிறு புள்ளிகள் நடுவில் காணப்படும் .


கட்டுப்பாடு முறைகள்:

உழவியல் முறை

  • கோ 97-5, கோ ஜே 46, கோ 7304, போன்ற எதிர்ப்பு இரகங்களைப் பயிரிடலாம் .

  • இடைக்கணுப் புழு தாக்குதலற்ற ஆரோக்கியமான கரணைகளை விதைக்குத் தேர்வு செய்யவேண்டும் .

  • 5 வது, 7 வது மற்றும் 9 வது மாதங்களில் சோகை உரித்து அதனை மண்ணில் பரப்பி அல்லது புதைத்து விட வேண்டும் .

இயற்பியல் முறை

  • இப்பூச்சியின் முட்டைகள் இருப்பின் அவற்றை சேகரித்து அழித்து விடவும் .

  • 150 மற்றும் 210வது நாட்களில் முறையாக சோகை உரித்தல் வேண்டும் .   இதனால் இலைப்பரப்புகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் கூட்டுப்புழுக்கள் நீக்கப்படும் .

உயிரியல் முறை

  • முட்டை ஒட்டுண்ணியான டிரைகோகிரம்மா கைலோனிஸ் அட்டையை 2.5 சி .சி/ஹ என்ற வீதம் 15 நாட்களுக்கு ஒருமுறை என்றவாறு 4வது மாதத்திலிருந்து வயலில் கட்டி விட வேண்டும் .

  • இனக்கவர்ச்சிப் பொறிகளை ஏக்கருக்கு 6 பொறிகள் என்ற வீதம் 15மீ இடைவெளியில் 5வது மாதம் வைக்க வேண்டும் அதில் இனக்கவர்ச்சி மருந்தினை 75 நாட்கள் இடைவெளியில் இருமுறை மாற்ற வேண்டும் .

 

இரசயான முறை:

  • அதிகப்படியான நைட்ரஜன் உரமிடுதலைத் தவிர்க்கவும் .இதனால் இலை தீதலில் இருந்து தவிர்களாம்.

     

 

மேலே செல்க

நுனிக்குருத்துப் புழு :   சிர்ப்போபேகா எக்ஸ்செர்ப்டாலிஸ்


பரவல் :
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இப்பூச்சியின் தாக்குதல் காணப்படுகின்றது.  தமிழகத்தில் குறிப்பாக திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் தாக்குதல் அதிகளவில் இருக்கின்றது.

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இப்பூச்சியின் புழுக்கள் கரும்பின் நுனிப்பகுதியில் அதிகம் காணப்படும் .   வளரும் இளந்திசுக்களைத் துளைத்து, உட்சென்று, தண்டின் சாறுள்ள பகுதியை அடைந்துவிடும் .  

  • வளர்ந்த கரும்பில் நடுக்குருத்து காய்ந்து விடும் . இதனை இழுத்தால் எளிதில் வெளிவராது .

  • வளர்ந்து வரும் இலைகளில் இணைவரிசையில் சிறு சிறு துளைகள் காணப்படும் .

  • நுனிக்குருத்தில் பூச்சியினால் துளைக்கப்பட்ட துளைகள் காணப்படுவதோடு, கரும்பின் நுனியில் கிளைப்புகள் தோன்றி பார்ப்பதற்கு முடிக்கொத்துப் போல் தோன்றும் .

தாக்குதலின் தன்மை:

        இப்பூச்சியின் புழுக்கள் கரும்பின் நுனிப்பகுதியில் அதிகம் காணப்படும்.  வளரும் இளந்திசுக்களைத் துளைத்து, உட்சென்று, தண்டின் சாறுள்ள பகுதியை அடைந்துவிடும்.  அங்கே திசுக்களைத் தின்று சேதம் விளைவிக்கும்.  அதோடு இவை மடங்காத (இலையின்) சோகையின் நடுப்பகுதி வழியே ஊடுருவிச் சென்று அடிப்பகுதியை அடைகின்றன.

 




வாழ்க்கைச் சுழற்சி:

  • முட்டை       : மேல் சோகையின் அடிப்புறம் நடுநரம்பின் அருகில் முட்டைகள் இடப்பட்டிருக்கும் . இம்முட்டைக் கூட்டங்கள் ரோமங்களால் சூழப்பட்டிருக்கும் .   10-80 முட்டைகள் வரை ஒரே கூட்டமாகக் காணப்படும் .

  • கூட்டுப்புழு    : கூடானது புழு வெளியேறக்கூடிய ஒரு பக்க துளையுடன் கட்டப்பட்டிருக்கும் .   கூட்டுப்புழுப் பருவம் 6-21 நாட்கள் .

  • இளம்புழு      : வெள்ளை நிற மென்மையான உடலில் சிகப்பு நிற கோடு நடுவே காணப்படும் .   இதன் தலை மஞ்சள் நிறமாக இருக்கும் .

  • பூச்சி :  வெள்ளை நிறமாகவும், வயிற்றுப்பகுதிக்கு கீழ் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற ரோமங்கள் பெண் பூச்சியில் கொத்தாக காணப்படும் .

 கட்டுப்பாடு முறைகள்:


உழவியல் முறை:

  • கோ 419, கோ 745, கோ 6516 போன்ற எதிர்ப்பு இரகங்கள் அல்லது கோ 859, கோ 1158, கோ 7224 போன்ற தாக்குதலைத் தாங்கி வளரக் கூடிய இரகங்களைப் பயிரிடலாம் .

  • சோகை பரப்பிப் பின் மண் அணைத்தல் செய்யலாம் .

  • வெள்ளைச் சோளம், மக்காச் சோளம் போன்றவற்றை ஊடுபயிராக இடுதல் கூடாது .

  • இரட்டைப் பார் முறையைத் தேர்வு செய்வது சிறந்தது .

  • குருத்து வாடியுள்ள பயிர்களை நீக்கி அழித்து விடலாம் .

இயற்பியல் முறை:        

  • முட்டைக் குவியலை சேகரித்து அழித்து விடவும் .

  • இப்பூச்சித் தாக்குதல் கண்ட நாளிலிருந்து 4 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முட்டைக் குவியலைச் சேகரிக்க வேண்டும் .

உயிரியல் முறை:

  • முன் கூட்டுப்புழு ஒட்டுண்ணியான கேம்பிராய்டஸ் (ஐசோதிமா) ஜாவென்சிஸை 100 ஜோடிகள் / ஹெ என்ற அளவில் வயலில் விடலாம் .

  • ஒட்டுண்ணிகளால் அழிக்கப்படாத முட்டைக் குவியலை சேகரித்து 30 சல்லடை நைலான் பைகளில் போட்டு வைத்தால், முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் அழிக்கப்படும் .

 இரசாயன  முறை:

  • வெப்ப மண்டலப் பகுதிகளில் 3வது புழுக்கள் வெளி வருவதற்கு 10 நாட்களுக்கு முன் கார்போஃபியூரான் 3 ஜி 1 கி .கி ர.(a.i)/ஹெ அல்லது திம்மெட் ஜி 3 கி .கி a.i /ஹெ குருணைகளை இடலாம் .

  • வேர் மண்டலத்திற்கு அருகே சிறு பாத்தி அமைத்து குருணைகளை இட்டுப் பின் சிறிது நீர் பாய்ச்சலாம் .

 

மேலே செல்க

கரையான்:ஒடன்டோடெர்மஸ் ஒபிசெஸ்


தாக்குதலின் அறிகுறிகள்:           

  • வளரும் கரும்பின் சோகையின் ஓரங்களில் அரை வட்டமாக கரையான் கடித்தது போல் தென்படும்

  • நடவு செய்த கரணைகள் சரியாக முளைக்காமல் இருத்தல்,

  • முதலில் வெளிப்புற இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து போதல் பின்பு உட்புற இலைகளும் காய்தல்,

  • இறுதியில் முழுக்குருத்தும் காய்ந்து இழுக்கும்போது கையோடு வந்து விடுதல்.

  • விதைக் கரணைகள் உட்புறத் திசுக்களின்றி கரையான்  மண் காணப்படுதல்,  கரும்பு முழுவதும் காய்ந்து போதல் போன்றவை கரையான் தாக்குதலின் அறிகுறிகளாகும்.

கரையான் பூச்சியை இனம் காணுதல்


  • முட்டைகள்           : சிறுநீரக (கிட்னி) வடிவில், சேர்ந்து காணப்படும். 30-90      நாட்களில் பொரித்துவிடும்.

  • இளம்குஞ்சுகள்        : 8-9 முறைகள் தோலுரித்துப் பின் 6-12 மாதங்களில் முழு வளர்ச்சி பெறும்.

  • வளர்ந்த பூச்சிகள்    : பழுப்பு கலந்த வெண்ணிற எறும்பு போன்ற சிறு பூச்சிகள், தலை அடர் நிறத்தில் காணப்படும்.


கட்டுப்பாடு முறைகள்


உழவியல் முறை:

  • நடவு செய்யும்போது வெள்ளநீர்ப் பாசனம் செய்வதால் ஈரத்தன்மை அதிகமாக இருப்பதால் கரையானை கட்டுப்படுத்தலாம்.பாதிப்புள்ள பகுதிகளில் குறைந்த இடைவெளியில் அடிக்கடி நீர் பாசனம் வெய்ய வேண்டும்.

  • வயலில் இடைவேளி உள்ள இடங்களை நிரப்புதல்.

இயற்பியல் முறை:

  • கரையான் கூடுகளைக் கண்டறிந்து அழித்தல். கரையான் மருந்தினை மன்னில் இட்ட பின்பு குறைவாக நீர் பாய்ச்ச வேண்டும்.

  • கரையானால் தாக்கப்பட்ட கரும்பு அல்லது விதைக் கரணைகளை வயலிலிருந்து அகற்றி அழித்து விடவேண்டும்.

இரசாயன முறை:

  • அலுமினியம் பாஸ்பைடு மாத்திரை ஐ 1 மீட்டர் அல்லது ஒரு கூட்டிற்கு 2 என்ற வீதத்தில் வைத்து புகையூட்டுதல் செய்யலாம்.

  • இமிடகுளோப்ரிட் 70 டபிள்யூ.எஸ் மருந்தினை 0.1% அல்லது குளோர்பைரிபாஸ் 20 (இ.சி) சி 0.04% மருந்தில் விதைக் கரணைகளை 5 நிமிடம் நனைத்து எடுத்துப் பின் நடுவது சிறந்த பலன் தரும்.

  • மண்ணில் ஹெக்டருக்கு 50 கி.கி என்ற வீதத்தில் லின்டேன் 1.6 டி மருந்தினை இடலாம். ஹெப்டாகுளோர் 3% டி மருந்தினை ஹெக்டருக்கு 125 கி.கி என்ற வீதம் நடவு செய்யும்போது மண்ணில் பாத்திகளில் இடலாம்.

மேலே செல்க

வேர்ப்புழு : ஹோலோடிரைக்கியா கன்சாங்கினியா


தாக்குதலின் அறிகுறிகள்:


  • முதல் பயிரை விட, மறு தாம்புப் பயிரில் இப்பூச்சித் தாக்குதல் அதிகம் காணப்படுகின்றது .

  • இலைகள் மஞ்சள் நிறமடைந்து வாடி சருகுபோன்று மாறிவிடும் .

  • உச்சிப் (குருத்தின்) பகுதி முழுதும் காய்ந்து விடும்.

  • பாதிக்கப்பட்ட கரும்பினை இழுத்தால், எளிதில் வெளிவந்து விடும் .

  • வேர் மற்றும், அடிக்குருத்து பகுதியில் பெரும் சேதம் விளைவிக்கும் .

  • பாதிக்கப்பட்ட கரும்புகள்  வேரற்று கீழே சாய்ந்து விடும்.

 

வாழ்க்கைச் சுழற்சி:

  • முட்டைகள்   : ஒரு பெண் வண்டானது மண்ணில் 27 முட்டைகள் இடக்கூடியது .   இதன் முட்டைகள் உருண்டை வடிவில் வெண்மையாக, மண் தவரினால் சூழப்பட்டிருக்கும் .

  • புழு            : சதைப்பற்றுடன் ஆங்கில ‘சி’ (C)  எழுத்து வடிவில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படும் .   கரும்பின் வேர் மற்றும் மண்ணில் அதிகம் காணப்படும் .

  • கூட்டுப்புழு    : கூட்டினுள் மண்ணில் ஆழப்பகுதியில் காணப்படும் .   மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தில் இருக்கும் . இதன் கூடு மண்ணால் ஆனது .

  • வண்டு : வண்டுகள் கூட்டிலிருந்து வெளிவந்த உடன் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும் . பின் கருமை நிறமாக மாறிவிடும் .

கட்டுப்பாடு முறைகள்

உழவியல் முறை:        

  • கோடை காலங்களில் அறுவடை முடிந்த உடன் ஒரு ஆழமான உழவு செய்ய வேண்டும் .

  • ஜூன் மாததில் 4-5 முறை உழுவதன் மூலம் மண்ணில் உள்ள புழுக்கள் வெளியே வரும் இதனால் பறவைகள் அதை கொத்தி திங்கும்.

  • வயலில் எப்பொழுதும் ஈரத்தன்மை இருக்குமாறு வைத்திறுக்க வேண்டும் இதனால் புழுக்கள் மண்ணை விட்டு வெளியே வந்துவிடும் .

  • பசுந்தாள் உர பயிர்களை பயிர் சுழற்சி செய்ய வேண்டும். மறுதாம்பு விடுவதைத் தவிர்க்கவும் .

இயற்பியல் முறை:              

  • கோடை மலை தொடங்கியதும் விளக்குப் பொறிகள் @ 5பொறி / ஹெ என்று 7-8 நாட்கள் தொடர்ந்து வைக்கவும்.

  • வயல் அருகில் உள்ள தொளு உர குளியில் வண்டுகள் இருப்பின் அவற்றைச் சேகரித்து அழிக்கலாம் .

இரசாயன முறை:

  • போரேட் 10 ஜி / கார்போபியுரான் 3 ஜி / கியுனால்பாஸ் 5ஜி @ 25 கி .கி/ஹெ என்ற அளவில் பயன்படுத்தவும்.

  • லின்டேன் 1.6 டி 50 கி .கி/ஹெ என்ற அளவில் வேர் மண்டலத்திற்கு அருகே இடலாம்.

மேலே செல்க

பஞ்சு அசுவினி: செரட்டோவாகுனா லானிஜெரா


பரவல்:

        முதன்முதலில் 1987ம் ஆண்டு ஜாவா நாட்டில் இப்பூச்சி கண்டறியப்பட்டது.  பின்பு ஆசிய வெப்ப நாடுகளான பிலிப்பைன்ஸ், தைவான், இந்தோனேசியா, சீனா, ஜப்பான், கொரியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் காணப்பட்டது.  இந்தியாவில் முதலில் மேற்கு வங்கத்தில் (1958ல்) பின்பு அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து (1995) மாநிலங்களில் அறியப்பட்டது. தற்போது மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் 2002ம் ஆண்டு இதன் தாக்குதல் இருந்தது.


அறிகுறிகள்:
           

  • இலைகளின் அடியில் கூட்டம் கூட்டமாக குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் சாற்றை உறிஞ்சி வாழும். 

  • தாக்கப்பட்ட இலைகளில் வெள்ளை நிற துாள்கள் படிந்திருக்கும்.  இவை சோகையின் நிறத்தினை ஓரங்களில் மஞ்சளாக மாறி காய்ந்து போகும்.

  • பின்பு இலைகள் உடைந்து முழுவதுமாக காய்ந்துவிடும்

  • பூச்சிகள் இலைப் பரப்பில் தேன் போன்ற திரவத்தினை  சுரக்கச் செய்வதால் கரும்பூசணப் படலம் காணப்படும். எனவே இலைகள் எரும்பினால் கவரப்பட்டு கருமையாக மாறிவிடுகின்றது.  

  • வெள்ளை நிறத் துகள்கள் நிலம்/மண் மீதும் கொட்டிக் காணப்படும்.

பரவுதலுக்கான காரணிகள்:

  • தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் கரும்பில் ஊடுபயிரின்றித் தனியாகப் பயிர் செய்தல்.

  • மேகமூட்டமான தட்பவெப்பநிலை, 1000 மி.மீ க்கு அதிகமான மழைப்பொழிவு.

  • குளிர்ந்த வெப்பநிலை, 19-35° செ வெப்பநிலை 80-90 % ஒப்பு ஈரப்பதம்.

  • மழைப்பொழிவின் அளவு மற்றும் அதன் பரவல்.

  • பயிரின் வயது.

  • காற்றின் வேகத்தினையும் பொறுத்தது.  இப்பூச்சி காற்றில் சுமார் 450 கி.மீ வரை பரவக் கூடியது. காற்று வீசும் வேகம் மற்றும் தொலைவு.

  • தேன் போன்ற திரவம் எறும்பினை ஈர்க்கும். எறும்புகள் குஞ்சுகளைக் கொண்டு வருவதால் பூச்சித் தாக்குதல் மேலும் அதிகரிக்கிறது.

  • பாதிக்கப்பட்ட கரும்புகளை ஒரு பகுதியிலிருந்து தாக்குதல் அற்ற பகுதிக்கு எடுத்துச் செல்லுதல்.

  • தாக்குதல் உள்ள விதைக் கரணைகள், சோகைள் மூலமும் இப்பூச்சித் தாக்குதல் பல இடங்களுக்குப் பரவுகின்றது.

 

வாழ்க்கைச் சுழற்சி

        அசுவினிகள் குட்டி போடும் இனப்பெருக்க முறை கொண்டவை. நான்கு முறை தோலுரித்தப்பின் முழு பூச்சியாக உடலுறுப் பெறுகின்றன.  இறக்கைகளற்ற பெண் பூச்சி பாலினச் சேர்க்கை (இல்லாமலே) நடைபெறாமலே கருவுறுகின்றது.  கருவுற்ற 24 மணி நேரத்தில் 15-35 குஞ்சுகளை பெண் அசுவினிகள் ஈனுகின்றன. ஒவ்வொரு பெண் பூச்சியும் 217 குஞ்சுகள் வரை தன் 20 நாட்களில் ஈனுகின்றன.  இதில் பெண் குஞ்சுகள் அதிகமாக இருப்பதே இதன் விரைவான பெருக்கத்திற்குக் காரணம் ஆகும்.  இக்குஞ்சுகள் 6-22 நாட்களில் 4 இளங்குஞ்சு நிலைகளைக் கடந்து முதிர்ச்சி அடைந்து விடுகின்றன.
        பெண் பூச்சிகள் ஒரு மாத காலம் மட்டுமே வாழும். வளர்ந்த பூச்சிகளின் நெடுநாள் வாழ்வு 32-57 நாட்கள் வரை மட்டுமே.  இனம் மற்றும் தட்பவெப்பநிலையைப் பொறுத்து வாழ்க்கைச் சுழற்சி வேறுபடும்.  பெரும்பாலான தாக்கப்பட்ட வயல்களில் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த அசுவினிகள் காணப்படும். அரிதாக குளிர்காலங்களில் மட்டுமே முந்தைய இலையுதிர் காலத்தில் இனச்சேர்க்கை செய்யும் பெண் அசுவினிகளால் இடப்பட்ட முட்டையைக் காண இயலும். வசந்த காலங்களில் அவை பொரித்து இனப்பெருக்கம் செய்யும் இறக்கைகளற்ற பெண் அசுவினி வெளி வந்திருக்கும். இறக்கைகளுடன் கூடிய பெண் அசுவினிகள் இடம்பெயரும்போது கூட்டமாக செல்லும்.  அப்போது வானம் இருண்டது போல், தாவரங்களை மூடிவிடுவது போல் இருக்கும்.  இடம் பெயராத பூச்சிகள் வாழ்நாள் முழுவதையும் ஒரே தாவரத்தில் மீதே கழித்து விடும்.

இனப்பெருக்க செயல்முறை:

  • பாலினச் சேர்க்கையற்ற கன்னி இனப்பெருக்க முறை

  • குட்டி ஈனுபவை/போடுபவை

  • ஒற்றைப் பூச்சி உற்பத்தி

        ஒரே இனத்தைச் சார்ந்த வெவ்வேறு பூச்சிகளை உற்பத்தி செய்யும்.  சில பூச்சிகள் வளர்ச்சியற்ற வாய் அமைப்பினையும் சில முழு வளர்ச்சி அடைந்த வாயினையும் கொண்டிருக்கும். ஆண், பெண் இரு இனப்பெருக்க உறுப்புகள் கொண்ட பூச்சிகளையும் சில சமயங்களில்  இவ்வனைத்துவித உயிரிகளையும் மாற்றி மாற்றி உற்பத்தி செய்கின்றன.

 

கட்டுப்பாடு


உழவியல் மற்றும் இயற்பியல் முறைகள்

  • இரட்டைப் பார் நடவு முறையைப் பின்பற்றுதல்.

  • அதிகப்படியான நைட்ரஜன் அல்லது அம்மோனியம் உரமிடுதலைத் தவிர்க்கவும்.

  • தொளு உரம், பசுந்தாள் உரம், உயிர் உரம் ஆகிய அங்கக உரங்களை முடிந்த அளவு பயன்படுத்துதல்.

  • வரிசையாக கரும்புகளை விட்டம் கட்டவேண்டும்.

  • பூச்சித் தாக்குதல் உள்ள கரணைகளை நடவுக்குப் பயன்படுத்தக்  கூடாது.

உயிரியல் முறை

  • டையப்போ அபிடிவோரா மேரிக் போன்ற பைராலிடே குடும்பத்தினைச் சார்ந்த ஒட்டுண்ணிகளை வயலில் வளரச் செய்யலாம்.

  • பிவேரியா பாஸியானா, கிளாடாஸ்போரியம், ஆக்ஸிஸ்போரம், மெட்டாரைஸோபியம் அனிசோபிலே, வெர்டிசிலியம் லெகானி போன்ற உயிரிகளையும் ஒட்டுண்ணியாகப் பயன்படுத்தலாம்.

கட்டுப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகள்:

  • 6 மாதங்களுக்குப் பின் வயலினுள் நுழைந்து சென்று பூச்சி நடமாட்டத்தை அறிவது கடினம்.

  • வரிசையற்ற கோணல் மானலான நடவு முறை.

  • இயற்கை எதிரிகளின் நடமாட்டம் குறைதல்.

  • விவசாயிகளிடம் தெளிப்பான் இல்லாமை.

  • சரியான தகவல் தொடர்பற்ற நிலை

  • பூச்சிக் கொல்லிகளின் தன்மை 15-21 நாட்கள் மட்டுமே நீடித்திருக்கும்.

  • பாதிக்கப்பட்ட சோகைகளை அகற்றி அழித்தல்.

  • சோகை உரித்தலில் கீழ் இலைகள் மற்றும் உலர்ந்தவற்றை நீக்குதல்.

  • சோகை உரித்து, (7-8 மாதங்களில்) கரும்பினைக்  கட்டுதல்.

  • சரியான நீர் மற்றும் உர மேலாண்மை.

 

இரசயான முறை

  • குளோர் பைரிபாஸ் 20 ஈ.சி கரைசலினை 2 மி.லி/லி என்ற அளவில் எடுத்து விதைக் கரணைகளை நனைத்துப் பின் நடலாம். 

  • போரேட் 10 ஜி (நி) 5 கி.கி/ஏக்கர் அல்லது அசிப்பேட் 75 எஸ்.பி 1 கி/லி குளோர்பைரிபாஸ் 20 ஈ.சி 2 மி.லி/லி, மாலத்தியான் 50 ஈ.சி 2 மி.லி/லி, டைமெத்தோயேட் 30 ஈ.சி 1.7 மி.லி/லி ஆக்ஸிமெட்டான்மீதைல் 25 ஈ.சி 1.3 மி.லி/லி போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றினைத் தெளிக்கலாம். 

  • மாலத்தியான் 5% பொடியினை ஏக்கருக்கு 10 கி.கி என்ற வீதம் வயலில் இடலாம்.


மேலே செல்க

வெள்ளை ஈ: அலிரோலோபஸ் பாரோ டென்சிஸ்


தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகள் மஞ்சள் நிறமாதல்.

  • சோகைகள் இளஞ்சிவப்பு அல்லது கரு ஊதா/நாவல் நிறமாக மாறிப் பின் உலர்ந்து காய்ந்து  போதல்.

  • பாதிக்கப்பட்ட சோகைகளில் வெள்ளை மற்றும் கறுப்புப் புள்ளிகள் காணப்படும்.

  • தாக்குதல் அதிகரிக்கும் போது இலைகள் எரிந்ததுப்போல் தோற்றமளிக்கும்.

  •  கரும்பின் வளர்ச்சி தாமதமாகும்.

 

வாழ்க்கைச் சுழற்சி


  • முட்டை  : சோகைகளின் அடிப்பகுதியில் முட்டைகள் இடப்பட்டிருக்கும்.  சிறிய வளைந்த காம்புடன் மஞ்சள் நிறமான முட்டைகள் இடப்பட்ட 2 மணி நேரத்தில் இது கருப்பு நிறமாக மாறிவிடும்.

  • குஞ்சுகள் மற்றும் கூட்டுப்புழு: வெளிர் மஞ்சள் நிற முட்டைகள் தட்டையாகவும் பின்பு பளபளக்கும் கருமைநிறமாக மாறி விடும்.நீள்வட்ட வடிவிலும் இருக்கும்.  மெழுகினால் சூழப்பட்டுக் காணப்படும்.  நான்காவது புழு நிலை கூட்டுப்புழுவாக தட்டையாக, சாம்பல் நிறத்தில் குஞ்சுகளை விட சற்று பெரிதாகத் தெரியும். முன் மார்பில் டி ‘T வடிவில் வெள்ளை நிறக் கோடு காணப்படும். இக்கோடு புழு வண்டாக மாறும்போது மார்பினை இரண்டாகப் பிரிக்கும்.

  • முதிர்ந்த பூச்சி: வெளிர் மஞ்சள் நிற உடலில் இறக்கைகள் மெழுகினால் சூழப்பட்டிருக்கும்.

கட்டுப்பாடு முறைகள்


உழவியல் முறை

  •   வயலில் நீர் தேங்காமல் முறையான வடிகால் வசதி செய்து வைக்க வேண்டும்.

  • 5 மற்றும் 7 வது மாதங்களில் சோகை உரித்தல் வேண்டும்.

  • அதிகளவு உரமிடுவதைத் தவிர்க்கவும்.

  • பைரில்லா, கருப்பு வண்டு, பஞ்சு அசுவினி போன்ற பூச்கிளைக் கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லிகள் அதிகம் உபயோகிப்பதைத் தவிர்த்தல்.

இயற்பியல் முறை:

  • சோகைகளில் கூட்டுப்புழுக்கள் கூடுகட்டி இருப்பதால், சோகைகளை உரித்து உடனே எரித்து விட வேண்டும். இது வெள்ளை ஈக்களாக வெளி வருவதைத் தடுக்கும்.

இரசயான முறை:

  • 2 கி அசிப்பேட் மருந்தினை 1 லி நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.1 மாதம் கழித்து மீண்டுமொரு முறை தெளிப்பதன் மூலம் முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் அழிக்கப்படும்.

  • க்ளோர்ப்பயிரிபாஸ் 1250 லி நீரில் கரைத்து கைத்தெலிப்பான் முலம் தெளிக்க வேண்டும்

  • பெனிட்ரோதியான் 50 இ. சி  2 லிட்/ஹ (1000 லி தெளிப்பு மருந்து) மருந்தினைத் தெளிக்கவும்.

மேலே செல்க

மாவுப் பூச்சி: சச்சாரிகாக்கஸ் சச்சாரி


தாக்குதலின் தன்மை:

        இப்பூச்சியும், குஞ்சுகளும் காற்றினை உறிஞ்சக் கூடியவை. கணுப் பகுதிக்குக் கீழே குறிப்பாக  இலையின் அடிப்பரப்பில் இவை கூட்டமாகக் காணப்படும்.  இதனால் இலையின் அடிப்பரப்பு செந்நிறமாக மாறிவிடும். இதனால் கட்டைக் கரும்புகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.  கரும்பில் சாற்றை உறிஞ்சுவதால் சர்க்கரை அளவு குறைகின்றது.  இப்பூச்சி “ஸ்பைக்” எனும் நோய்க் கடத்தியாகவும் உள்ளது.


தாக்குதலின் அறிகுறிகள்:
          

  • இளஞ்சிவப்பு  நீள் வட்ட வடிவ பூச்சிகள் கணுக்களுக்கு கீழே இலைப் பரப்புகளின் நிற அடியில் காணப்படுகின்றன .  

  • வெள்ளை நிற மாவுத்துகள்கள் கரும்பின் வளர்ச்சியைக் குறைப்பதோடு வேரினையும் பாதிக்கின்றன .  இதனால் கட்டைக் கரும்புகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன .

  • தேன் போன்ற திரவத்தின் மேல் கரும்பூசனப் படலம் உருவாகிக்  கரும்பி கருநிறமாகக் காட்சி அளிக்கும் .

வாழ்க்கைச் சுழற்சி


  • முட்டை       : முட்டைகள் முதிர்ச்சி அடையும் வரை பெண் பூச்சியின் இனப்பெருக்க உறுப்பில் பாதுகாக்கப்படுகின்றன .   இதன் உள்வளர்நிலை குறைவே .   கன்னி இனப்பெருக்க முறையில் பெண் பூச்சிகள் 400 குஞ்சுககள் வரை பெற்றெடுக்கும் .   முட்டைகள் மஞ்சள் நிறமாக, இருபுறமும் வட்டவடிவமான உருளை வடிவத்துடன் மென்மையாக இருக்கும் .

  • இளங்குஞ்சுகள்      : முட்டையிலிருந்து வெளி வந்த உடன் குஞ்சுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிபுகும் தன்மையுடைய உடலுடன் சுறுசுறுப்பாக இருக்கும் .

  • முதிர்ந்த பூச்சிகள் :   வெண்மை நிறத்தில் மாவுப் படலங்களால் சூழப்பட்டு காம்பற்று தட்டையாக இருக்கும் .

கட்டுப்பாடு முறைகள்:


உழவியல் முறை:

  • விதைக்கரணைகளை நோய்யற்ற கரும்பிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.

  • கோ 439, கோ 443, கோ 720, கோ 730 மற்றும் கோ 7704 போன்ற எதிர்ப்பு இரகங்களைப் பயன்படுத்தவும் .

  • நடுவதற்கு கரும்பில்cள்ள கணுப்பகுதியை தேர்ந்தெடுத்து நடுவும்

  • வயலில் தேங்கியுள்ள அதிகப்படியான நீரை வடித்து விடவும் .

இயற்பியல் முறை

  • வெப்ப சிகிச்சைக்கு பின்பு கரணைகளை அரிடான் / அகலால் (0.1 %யை நீரில்கரைத்து ) நினைத்து அதன்பின் நடவும்.

  • கரணைகளை சாக்குப்பை வைத்து துடைத்த பின் மாலத்தியான் (0.1 %யை நீரில்கரைத்து )யில் நினைத்து நடவும்.

  • 150 மற்றும் 210 வது நாட்களில் சோகை உரித்தல் .

இரசாயன முறை:

  • இப்பூச்சியின் தாக்கம் தென்படும்போது கரும்புத் தண்டுகளின் மீது மட்டும் படுமாறு மீதைல் பாரத்தியான 50 EC 1000 மி .லி , மாலத்தியான் 50 EC 1000 மி .லி மருந்துகளில் ஒன்றைத் தெளிக்கவும் .

  • கரணைகளை நடுவதற்கு முன்பு மாலத்தியான் (0.1 %யை நீரில்கரைத்து ) அல்லது டைமீதோயேட் (0.06 %யை நீரில்கரைத்து ) 15 நிமிடங்கள் நினைத்து வைத்து அதன்பின் நடவும்.

 

மேலே செல்க

செதில் பூச்சி: மெலானாஸ்பிஸ் கிளாமரேட்டா


தாக்குதலின் தன்மை:

        குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த பூச்சிகளும் செதிலின் உட்புறம் இருந்து கொண்டு சாறினை உறிஞ்சுகின்றன.  இதனால் கரும்பு சிறுத்து வளர்ச்சி குன்றிவிடும்.  அறுவடையின் போதும் இப்பூச்சித் தாக்குதல் தொடர்வதால் விதைக்கரணைகள் மூலம் அடுத்த பயிருக்கும் பரவுகின்றது.


தாக்குதலின் அறிகுறிகள்:

  • இப்பூச்சிகளால் தாக்கப்பட்ட கரும்புகள் நுனி முதலில் காய ஆரம்பிக்கும்.,  பின்பு அவை வெளிர் பச்சை நிறமாக மாறும்.  தொடர்ந்த பூச்சி தாக்குதலால் சோகைகள் மஞ்சள் நிறம் பெற்று விடும்.

  • சோகையின் சாற்றினை உறிஞ்சுவதால், இளம் இலைகள் விரியாமலேயே மஞ்சள் நிறமாகிப் பின் காய்ந்து விடும்.

  • இடைகணுப்பகுதியை விட கணுப்பகுதிகளில் தாக்குதல் அதிக அளவில் இருக்கும்.

  • தாக்கப்பட்ட பயிரின் வளர்ச்சி குன்றி, கரும்பு சுருங்கி கணுவிடைப் பகுதியின் நீளம் குறைந்து விடும்.

  • பின்பு கரும்பு முழுதும் காய்ந்து விடும்.  இக்கரும்பினைப் பிளந்து பார்த்தால் உட்பகுதி செம்பழுப்பு நிறமாகக் காணப்படும்.

வாழ்க்கைச் சுழற்சி


  • குஞ்சுகள்: பெண் பூச்சிகள் குட்டி போடும் இனப்பெருக்கம் செய்கின்றன.  பெண் பூச்சியின் வயிற்றுக்குள்ளேயே குஞ்சுகள் பொரித்து வெளிவருகின்றன (முட்டையிலிருந்து).  இவை பெண் பூச்சியின் புறப் பாலுறுப்புகள் மூலம் வெளிவருகின்றன.  இவை தவழும் பூச்சிகள் எனப்படும்.  இவை சாறினை உறிஞ்ச சரியான இடத்தினைத் தேர்வு செய்தபின் அங்கேயே ஒட்டிக்கொள்கின்றன.

  • முதிர்ந்த பூச்சிகள்    : சாம்பல் கலந்த கருப்பு அல்லது பழுப்பு நிற வட்ட வடிவச் செதில்கள் அடைஅடையாக கணுப்பகுதிக்கு அருகில் ஒட்டியிருக்கும்.

கட்டுப்பாடு முறைகள்:


உழவியல் முறை:

  • கோ 439, கோ 443, கோ 453, கோ 671, கோ 691, கோ 692 போன்ற செதில் பூச்சிக்கு எதிர்ப்புத் தன்மை வாய்ந்த இரகங்களைப் பயிரிடவும்.

  • செதில் பூச்சித் தாக்குதலற்ற விதைக் கரணைகளைத் தேர்வு செய்து வென்ணீரில் நினைத்த பின் நடவேண்டும்.

  • வரப்பு மற்றும் வயல்களை களைகளின்றி சுத்தமாக வைத்திருக்கவும்.

  • தகுந்த நேரத்துக்கு நீர் பாயிச்ச வேண்டும், நீண்ட நேரத்திற்கு வயலில் நீர் தேங்கா வண்ணம் பார்த்துக்  கொள்ளவும்.

  • அதிக முறை கட்டைக் கரும்புகள் பயிரிடுவதைத் தவிர்க்கவும்.

இயற்பியல் முறை:

  • 150 - 210 வது நாட்களில் சோகை உரித்தல் அவசியம் இதனை தொடர்ந்து பார் வரிசையாக விட்டம் கட்ட வேண்டும்.

  • விதைக் கரணைகளை டைக்குளோர்வாஸ் மருந்தினில் 1 மி.லி/1லி நீர் என்ற கரைசலில் நனைத்து எடுத்து, சிமெண்ட் பைகளில் இட்டுக் கட்டி நடவு வயலுக்கு எடுத்து வரவும்.

உயிரியல் முறை:

  • ஹைமனோப்டிரான் ஒட்டுண்ணிகளான அனபிரோடிபிஸ், மயூராய், கைலோனியூரஸ் ஸ்பீசிஸ் மற்றும் பூச்சிகளை உண்ணும் சிலந்திகளான சேனிலேசுலஸ் நுாடஸ், டைரோபாகஸ் புட்செர்டியா போன்றவை செதில் பூச்சிகளை உண்ணக் கூடியவை.

  • வயலில் சில்லோக்கேரஸ் நைய்கிரிட்டஸ் அல்லது பேராஸ்கைநஸ் ஹர்னி முட்டை அட்டைகளை @ 1.5 சி.சி / வெளியிடு / ஹெ  என்று கட்டவேண்டும்

இரசாயன முறை:

  • டைக்குளோர்வாஸ் அல்லது எதாவது தொடுப் புச்சிக்கொல்லிகள் 2 மி.லி/லி என்ற அளவில் தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

  • 1 லி நீரில் 1 கி மாலத்தியான் கலந்த கரைசலில் விதைக் கரணைகளை 30  நிமிடம் நனைத்துப் பின் நடவும்.

  • டைமேத்தோயேட 0.06% (1 லி நீரில் 6 கி டைமேத்தோயேட)  மருந்தினை 120 அல்லது 150 வது நாளில் சோகை உரித்த பின் தெளிக்கவும்.

மேலே செல்க

நுாற்புழு:


அறிகுறிகள்:

  • இலை நிறம் இலேசாக வெளிருதல் முதலில் கோடுகள் போன்று தோன்றும் பின்பு இலைமுழுதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும் .   ஆரம்பத்தில் ஆங்காங்கு தோன்றிப் பின் முழு வயலினையும் ஆக்கிரமித்துவிடும் .   இந்த மஞ்சள் நிறம் நீண்டு இளம் மற்றும் மறுதாம்புக் கரும்பில் சோகையின் நுனி ஓரங்கள் காய ஆரம்பிக்கும் .

  • இடைக்கணுப் பகுதிகளின் நீளம் மற்றும் எண்ணிக்கை குறைவதால் கரும்பின் அளவு சிறுத்து விடும் .

  • வேர்கள் குட்டையாகவும், மெலிந்தும் காணப்படும் .

  • நுாற்புழுக்களால் தாக்கப்பட்ட வயல்கள் வெளிர் பச்சை முதல் வெள்ளை நிறம் வரை மாறிக் காணப்படும் .பாதிக்கப்பட்ட கரும்புகள் கீழே சாய்ந்து விடும் .

  • முதல் பயிரை விட, மறு தாம்புப் பயிரில் இப்பூச்சித் தாக்குதல் அதிகம் காணப்படுகின்றது.

நுாற்புழுக்களின் வகைகள்


        பல வகையான நுாற்புழுக்கள் கரும்பை தாக்கினாலும் 4 வகையான நுாற்புழுக்கள் கரும்பில் அதிகமாகக் காணப்படுகின்றன .

லெசியன் நுாற்புழு - பிராட்டிலென்கஸ் காஃபியே

வேர் லெசியன் நுாற்புழுக்கள் என்பவை இடம்பெயரும் அக ஒட்டுண்ணிகள் ஆகும் . பிராட்டிலென்கஸ் பெனட்ரன்ஸ் எனும் நுாற்புழுவின் பெண் புழுக்கள் 1 அல்லது 2 முட்டைகள் நாளொன்றுக்கு என்ற அளவில் 35 நாட்களில் 68 முட்டைகள் இடுகின்றன . வேர் மற்றும் மண்ணில் முட்டைகள் தனியாகவோ கூட்டமாகவோ இடப்படுகின்றது . இளம்புழுக்களில் முட்டைகள் அடைகாப்பில் வைக்கப்பட்டு 9 (30° செ ) 25 (15° செ ) நாட்களில் பொரித்து வெளிவருகின்றன. பெனட்ரன்ஸில் ஆண் புழுக்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன . ஆனால் பிராட்டிலென்கஸ் நெக்லெக்டஸ் வகைகளில் அவை தேவைப்படுவதில்லை .

லேன்ஸ் நுாற்புழு - ஹோப்லோலெய்மஸ் இன்டிகஸ்

இவை பெரும்பாலும் புற ஒட்டுண்ணிகள் சில சமயம் அக ஒட்டுண்ணிகளாகவும் செயல் புரிகின்றன . இப்புழுக்கள் அதிக வெப்பநிலையையும் தாண்டி, வறண்ட மண்ணிலும் வளரக் கூடியவை .   இளம் நிலைப் புழுக்கள் அளவில் சிறியவை.  மற்ற பண்புகள் வளர்ந்த புழுக்களைப் போலவே காணப்படுகின்றன .   மண் மாதிரியைச் சோதித்துப் பார்ப்பதன் மூலம் இப்புழுக்கள் உள்ளதா என எளிதில் அறிந்து கொள்ளலாம் .

வேர்முடிச்சுப் புழு  - மெலய்டோகைனி ஸ்பீசிஸ்

வட்ட வடிவமான இப்புழுக்கள் அதன் வாழ்க்கைச் சுழற்சியின் பெரும்பகுதியைத் தாவர வேர்களுக்குள்ளேயே கழித்து விடுகின்றன . நுண்ணோக்கி மூலம் மட்டுமே இவற்றை காண முடியும். மண்ணில் இதன் முட்டைகள் மற்றும் இரண்டாம் நிலைப்புழுக்களைக் காணலாம் .

ரெனிஃபார்ம் புழுக்கள்  -  மராட்டிலென்கஸ் ரெனிஃபார்மிஸ்

        ரெனிஃபார்ம் எனும் சொல் முதிர்ந்த பெண் புழுக்களின் சிறுநீரக வடிவினைக் குறிக்கின்றது . பகுதி  அக ஒட்டுண்ணியாகவும், மீதம் புற ஒட்டுண்ணியாகவும் வாழும். இப்புழு வேர்களைத் துளைத்து ஊடுருவிப் பின் உள்ளே பாதி உடலும், வேரின் வெளிப்பகுதி பாதி உடலும் இருக்கும் வண்ணம் எங்கும் இடம்பெயராமல் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கி விடுகின்றன .

கட்டுப்பாட்டு முறைகள்


உழவியல் முறை:

  • ஆழமாக உழவு செய்தல், வெள்ள நீர்ப்பாய்ச்சல், பயிர் சுழற்சி, அங்கக உரமிடுதல் போன்றவற்றைக் கடைபிடிக்கலாம் .

  • நன்செய் நிலங்களில் தக்கைப்பூண்டு, துலுக்கமல்லி அல்லது சணப்பையுடன் ஊடுபயிர் செய்தல் .

  • சர்க்கரை எடுத்தபின் வெளிவரும் சக்கைகளை ஹெக்டருக்கு 15 டன் அல்லது கோழிப்பன்னை கழிவு அல்லது வேப்பம் புண்ணாக்கு 2 டன் என்ற ஏதேனும் ஒன்றை கடைசி உழவு செய்யும் முன் தோட்ட வயல்களில் இடலாம் .

உயிரியல் முறை:

  • போசோனியா கிளாமிடோஸ்போரியா, பேசிலோமைசிஸ் லிலாசினஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி, (அல்லது)சூடோமோனகஸ் ஃபுளுரஸன்ஸ் ஏதேனும

  •  ஒரு உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை 20 கி .கி/ஹ என்ற அளவில் நடவு செய்யும்போது தொழு உரத்துடன் கலந்து இடலாம்  அல்லது கரும்புச் சக்கையிடுவதும் ஒட்டுண்ணி நுாற்புழுக்களை ஒடுக்க உதவும் .

இரசாயன முறை:

  • கார்போஃபியூரான் 3ஜி குருணைகளை 33 கி .கி/எக்டர் என்ற அளவில் நடவு செய்யும்போது இடலாம்.

  • நடவு செய்த பின் இரு மாதங்கள் கழித்து கார்டாப் 3 கி .கி/ ( 1.5 கி .கி) / எக்டர் என்ற மருந்தினையும் இடலாம் .

  • லின்டேன் 1.3% @ 50 கி .கி/எக்டர் என்ற அளவில் வேர் பகுதியில் இட வேண்டும், மீண்டும் 30 நாள் களித்து இதே அளவு இட வேண்டும்

வெட்டுக்கிளிகள்:ஹைரோகிளைபஸ் பேன்யான்


தாக்குதலின் அறிகுறிகள்:

  • முதிர்ந்த மற்றும் குட்டி வெட்டுக்கிளிகள் இலைத்தாள் விளிம்புகளிலிருந்து உண்ண ஆரம்பிப்பதால் இலைகள் வெட்டுப்பட்டது போல் காட்சி அளிக்கும்.

  • இலைத்தாள் முழுதும் தின்ற பின் நடுநரம்பு மட்டும் தனியாகத் தெரியும்.

பூச்சியினை இனங்கண்டறிதல்


  • முட்டை       : முட்டைகள் பை வடிவில், பத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இலை மட்குகளில் அல்லது மண்ணில் காணப்படும். ஒவ்வொரு முட்டைப் பையிலும் 10-300 முட்டைகள் வரை அரிசி வடிவில் காணப்படும்.

  • குட்டி  வெட்டுக்கிளிகள்: முதிர்ந்த வெட்டுக்கிளிளைப் போலவே, அளவில் சிறியதாகவும் வெளிர் நிறத்தில் இறக்கைகள் இன்றிக் காணப்படும்.இப்பருவம் 5-10 நாட்கள் வரை இருக்கும்.

  • முதிர்ந்த வெட்டுக்கிளிகள்: குஞ்சுகள் ஒரு மாதங்களில் முதிர்ச்சி அடைகின்றன.  இவை 1-2 மாதங்கள் வரை வாழ்கின்றன.

கட்டுப்பாடு முறைகள்:


உழவியல் முறை:
     

  • நன்கு உழவு செய்வதல் மற்ற செடிகள் பொதைந்து போவதால் வெட்டுக்கிளிகள் தங்கி வாழ்வதற்கும் சாப்பிடுவதற்கும் பயிர் இல்லாமல் அவை மடிந்து விடும்.


உயிரியல் முறை:     

  • நாசிமா லொகஸ்டா எனும் புரோட்டோசோவா அடங்கிய பொறிகளை வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் வைக்கலாம். 

  • நாசிமா லொகஸ்டா ‘நோலோபெய்ட்’, ‘செமாஸ்போர்’ எனும் பெயர்களில் கடைகளில் கிடைக்கின்றது. இவை வெட்டுக்கிளிகளை தாக்குகின்றது.  இவை வெட்டுக்கிளிகளை முற்றிலும் அழிக்காது. பூச்சியில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

இராசாயன முறை:

  • பென்சையன் எக்சா க்ளோரைய்டு (பி.ஹெச்.சி) 5% எனும் பொடியினை ஹெக்டருக்கு 20-25 கி.கி அளவில் 10 நாள் இடைவெளியில் ஓரிரு முறை போடலாம்.

மேலே செல்க

நோய்கள் மேலாண்மை

செவ்வழுகல் நோய் (கோலிடோடிரைக்கம் ஃபால்கேட்டம்)


நோய் பரவும் விதம்:

  • செவ்வழுகல் நோய் தாக்கிய வயலில் கட்டைக் கரும்பு சாகுபடியைத் தவிர்த்தல் வேண்டும்.

  • அறுவடைக்குப் பின் வயலில் விடப்பட்ட கழிவுகள், நோய் பாதிக்கப்பட்ட வயல், நீர் பாய்ச்சல், மழை, காற்று ஆகியவற்றின் மூலமாகவும் இப்பூஞ்சை பரவுகிறது.

  • இந்நோய் கரணைகளில் மூலமாகப் பரவுகின்றது. அறுவடைக்குப் பின் நிலத்தில் தங்கியிருக்கும் கரும்பு செடியின் சருகுகள் போன்ற பகுதிகளில் இப்பூசணம் தங்கும்.


அறிகுறிகள்                                                                                           

  • இந்நோய் தாக்கப்பட்ட கரும்பின், 3 அல்லது 4வது இலைகள் முதலில் ஆரஞ்சு நிறம் கலந்த மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.  பின் சோகைகள் கீழிருந்து மேலாகக் காய ஆரம்பிக்கும். 

  • பூசண வித்துக்கள் இலையின் உள்ளே சென்று, நடுநரம்பில் அடர்சிவப்பு நிறப்புள்ளிகளைக் காணலாம். பின்பு இலைகளிளும் தேன்றும்.

  • வெளிப்புற அறிகுறிகள், நோய் தாக்கப்பட்ட 16-21 நாட்களுக்குப் பிறகே தெரிய வரும்.

  • கரும்பைப் பிளந்து பார்த்தால் உட்பகுதியில் சிவப்பு நிறக் கோடுகளைக் காணலாம்.இவற்றிற்கு குறுக்காக வெண்மை நிறப் பகுதிகளையும் காணலாம்.

  • கரும்பு மேல் அழுக்கடைந்த பழுப்பு நிறத்திட்டுகள் காணப்படும்.  சில சமயங்களில் கரும்பின் உட்பகுதியில் உள்ள திசுக்கள் அழுகி கரும்பழுப்பு நிற திரவம் வழியும்.  இதிலிருந்து சாராய நெடி வீசுவதிலிருந்து, இந்நோயினை உறுதி செய்து கொள்ளலாம்.

பூஞ்சையை இனம் காணுதல்


இந்நோய் குலோமெரெல்லா டுகுமெனன்சிஸ் எனும் பூஞ்சை மூலம் பரவுகிறது.  இதன் பழைய பெயர் கோலிடோடிரைகம் பால்கேட்டம் என்பதாகும்.
இலைத்தாள், இலைப்பரப்பு பகுதிகளில் காணப்படும் பூஞ்சை தனியாகவோ அல்லது குழுவாகவோ வாஸ்குலார் கற்றைகளுக்கிடையே வரிகளைத் தோற்றுவித்தப்படி இருக்கும்.  இலை அடர் பழுப்பு நிறத்தில் மூழ்கியவாறு 65-250 மைக்ரான் மீ விட்ட அளவும், 8 செல்கள் அளவு தடித்த சுவரும் கொண்டிருக்கும், ஆஸ்டியோல் சற்று வெளி அமைந்தபடி வட்டவடிவமாக இருக்கும்.

 

 

மேலாண்மை முறைகள்


உழவியல் முறைகள்:

  • செவ்வழுகல் நோயினைத் தவிர்க்க, நோயற்ற பகுதிகளில் ஆரோக்கியமான விதைக் கரணைகளை நடவேண்டும்.

  • நோய் கண்ட வயல் வழியாக நீர்ப்பாய்ச்சுவதைத் தடுக்க வேண்டும்.  நோய் தோன்றிய  அதே நிலத்தில் கரும்பைத் தொடர்ந்து பயிரிடுவதைத் தவிர்த்து நெல் போன்ற மாற்றுப் பயிர்களைப் பயிரிட வேண்டும்.

  • நோய் எதிர்ப்பு சக்தியுடைய கோ 86249, கோ 85019, கோ.கு 93076, கோ.சி 95071, கோ.க 98061, கோ.க 99061 மற்றும் கோ.க 22 இரகங்களைப் பயிரிடுதல் வேண்டும்

இயற்பியல் முறைகள்:

  • தூர் அகற்றிய இடத்திலும் அதைச்சுற்றியுள்ள இடங்களிலும் கார்பன்டசிம் 50 டபிள்யூ.பி பூசனக்கொல்லி மருந்தை (ஒரு லிட்டரில் நீரில் ஒரு கிராம்) என கலந்து ஊற்ற வேண்டும்.

  • 1% போர்டியாக்ஸ் கலவை அல்லது பிற பூஞ்சானக் கொல்லி கரைசலில் விதைக் கரணை முழுவதும் நனையுமாறு நனைத்து எடுத்துப் பின் நடலாம்.

  • வயலில் இந்நோய் பாதிப்பு தென்பட்டால் உடனே பாதிக்கட்ட இலைகளைச் சேகரித்து அழிக்க வேண்டும்.

வேதியியல் முறைகள்:

  • கரணைகளை நேர்த்தி செய்து பின் நடுதல் வேண்டும்.  இதற்கு எக்டருக்கு 125 கிராம் கார்பன்டாசிம் 50 டபிள்யூ.பி அல்லது 250 கிராம் கார்பன்டாசிம் , பூசணக் கொல்லி மருந்தை 2.5 கிலோ யூரியாவுடன் சேர்த்து 250 லிட்டர் தண்ணீரில் கலந்து கரணைகளை ஐந்து நிமிடம் நனைத்து நடுதல் வேண்டும்.

  • பெவிஸ்டின், பெனோமைல், டாப்ஸின் மற்றும் அரிட்டான் ஏதேனும் 1% பூஞ்சாணக் கொல்லி மருந்தினை 52  செ வெப்பநிலையில் 18 நிமிடங்கள் விதைக்கரணை நேர்த்தி செய்யலாம்.  இதனால் இக்கிருமிகள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன.

மேலே செல்க

கரணை அ


ழுகல் நோய்: செரட்ரோசைட்டிஸ் பாரடாக்ஸா

அறிகுறிகள்

  • நோயுற்ற கரணைகளை நடுவதற்குப் பயன்படுத்தும்போது அவை முளைக்காமல் அழுகிவிடும்  அல்லது 6-12 அங்குலம் உயரம் வளர்ந்து பின் வாடி விடும்.

  • இந்நோய் பாதிக்கப்பட்ட கரணை வளர்ந்தாலும், நாற்றுக்கள் வளர்ச்சி குன்றி மஞ்சள் நிறமாகக் காணப்படும்.

  • சோகைகள் உதிர்ந்து கரும்பு வாடி விடும்.

  • பாதிக்கப்பட்ட கரணைகளை நீளவாக்கில் பிளந்து பார்த்தால் உட்திசுக்கள் அழுகியும் செந்நிறமாக மாறியிருப்பதையும் காணலாம்.

  • கரணை காய்ந்தபின் அது சிவப்பு நிறமாக மாறி அதனுள் பல கருப்பு நிற பூசண வித்துத் திரள்கள் ஒட்டிக் கொண்டிருக்கும்.

  • இக்கரணைகளைப் பிளந்து நுகர்ந்து பார்த்தால் அன்னாசிப்பழ வாசனை வீசுவதால் அன்னாசிப்பழ நோய் எனவும் அழைக்கப்படுகிறது.

நோய் பரவும் விதம்:


இந்நோய் பரப்பும் பூஞ்சான் மண்ணில் 20 மாதங்கள் வரை வாழக்கூடியது.  இது கரணைப் பிளவுகளின் வழியே உட்சென்று திசுக்களை அழுகச் செய்து முளைப்புத் திறனைப் பாதிக்கின்றது.  இவ்வாறு கரணையினுள் இனப்பெருக்கமடையும் இது, மண்ணிற்குள் சென்று தங்கி, அடுத்த மறுதாம்புக் கரும்புப் பயிரையும் பாதிக்கின்றது.  மேலும் முற்றிய கரும்பின் அடிப்பாகத்திலிருந்து எடுக்கப்படும் கரணை 6-7 மாத வயதுடைய இளம் கரும்பின் மேல்பகுதியிலிருந்து எடுக்கப்படும் கரணையைவிட வீரியம் குறைந்ததாக இருக்கும்.  எனேவ முளைப்பதற்கு அதிக காலம் எடுப்பதோடு முற்றிய கரணைகள் எளிதில் அழுகல் நோய்க்கு உள்ளாகும்.

மேலாண்மை முறைகள்


உழவியல் முறைகள்:

  • இந்நோய்க்கு எதிர்ப்புத் தன்மை வாய்ந்த இரகங்களை பயிரிடவும்.

  • நோயற்ற வயல்களிலிருந்து ஆரோக்கியமான விதைக்கரணைகளைத் தேர்வு செய்யவும்.

  • சரியான வடிகால் வசதி அமைத்து, கரணைகளை 1-2 செ.மீ ஆழத்திற்கு நடவேண்டும்.

  • வயலில் கிருமி நாசினி பயன்படுத்துவதோடு, இராசாயண மருந்துகள் கொண்டு விதைநேர்த்தி செய்வதும் சிறந்தது.

  • மழைக் காலங்களில் கரணைகளை ஆழமாக ஊன்றி நடுதல் கூடாது.

இரசாயன முறைகள்:

  • நடுவதற்கு முன் பூஞ்சாணக் கொல்லிக் கரைசலில் நனைத்துப் பின் நடுதல் அவசியம்.

  • கரணைகளை நடுவதற்கு முன் கார்பென்டஸிம் 50 டபிள்யூ.பி 0.5 கி 1 லி நீரில் கலந்தது அல்லது பெவிஸ்டின் 1 சதவீதம் 1 லி நீரில் கலந்தது அல்லது கார்பன்டாசிம் 25 டி.எஸ் பூசணக்கொல்லி மருந்தை 2.5 கி.கி யூரியாவுடன் சேர்த்து 250 லி தண்ணீரில் கலந்து கரணைகளை 5 நிமிடம் நனைத்து நடுதல் வேண்டும்.

  • அதேபோல் நடுவதற்கு முன்பு கரணைகளை வெந்நீரில் நனைத்தும் எடுத்து நடுவதால் முளைப்புத்திறன் அதிகப்படுத்துவதோடு வளரும் இளம் பயிர்கள் பூஞ்சாண உயிரிகளோடு போட்டியிட்டு நன்கு வளர ஏதுவாகின்றது.

மேலே செல்க

கரிப்பூட்டை நோய்: உஸ்டிலாகோ ஸைட்டாமினியா


பரவும் விதம்:

நோய் தாக்கப்படட கரும்பிலிருந்து கரணை எடுப்பதே இந்நோய் பரவ முக்கியக் காரணம்.  எனினும் சில சமயங்களில் மண் மற்றும் தண்ணீர் மூலமாகவும் பரவுகின்றது.


அறிகுறிகள்

  • வளரும் கரும்பின் வளர்ச்சிப் பகுதியிலிருந்து இச்சாட்டை வடிவம் 25 முதல் 150 செ.மீ வரை காணப்படும்.

  • கருமை நிற பூஞ்சாணத் துகள்களைக் கொண்ட, ஒளி ஊடுருவக் கூடிய வெள்ளி போன்ற சவ்வினால் இச்சாட்டை சூழப்பட்டுள்ளது.

  • கணுவிடைப்பகுதி நீண்டு ஆரம்பத்தில் தடிமன் குறைய ஆரம்பிக்கும்.  பின்பு கரும்பின் நீளமும் குன்றிவிடும்.

  • கட்டைக் கரும்பில் (மறுதாம்புப் பயிரில்) பக்க மொட்டுகள் அபரிமிதமாக முளைவிட ஆரம்பிகும்.  அதன் இலைகள் குறுகலான செங்குத்தான தோகைகளாக உருவாகும்.

பூஞ்சாண உயிரியை அடையாளம் காணுதல்


உஸ்டிலாகோ ஸைட்டானிமியா:

  • இப்பூசண இலை ஸ்போர்கள் வட்ட வடிவில், வெளிர்பழுப்பு நிறமும், 6.5-8.5 மைக்ரான் விட்ட அளவும் கொண்டவை.

  • நீரில் எளிதில் முளைக்கக் கூடிய இவை, 2-3 செல்கள் உடைய  முன்பூசண இலைகளை (புரோ மைசீலியா) உற்பத்தி செய்கின்றன.

  • மெல்லிய சுவர் கொண்ட, நிறமற்ற, ஒரு செல் கொண்ட, உருண்டை நீள் வட்ட முதல் நீண்ட வடிவம் கொண்ட பூசண வித்துக்கள் பக்கங்களில் அல்லது நுனிப்பகுதியில் தோன்றுகின்றன.

மேலாண்மை முறைகள்


உழவியல் முறைகள்:

  • மிதமான மற்றும் நன்கு எதிர்ப்புத் திறன் கொண்ட கோ.சி 22, கோ 86249, கோ.ஜி 93076, கோ.எஸ்.ஐ.6 மற்றும் கோ.ஜி 5 போன்ற இரகங்களைப் பயிரிடவேண்டும்.
    10 சதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட வயல்களில் மறுதாம்புப் பயிர் விடுவதைத் தவிர்க்க வேண்டும்.

  • துவரை பயிரை கரும்பு வரிசைகளுக்கிடையே பயிடுவதால் இப்பூஞ்சாணங்களின் இரண்டாம் நிலைப் பரவல் குறைக்கப்படுகின்றது.

இயற்பியல் முறைகள்:

  • விதைக் கரணைகளை காற்றேற்றப்பட்டநீராவி முறை (AST) மூலம் 50° செ. முதல் 1 மணி நேரம் அல்லது சுடுநீரில் 50 செ அரை மணி நேரம் அல்லது 52° செ 18 நிமிடங்களுக்கு பதப்படுத்தி நேர்த்தி செய்தல் வேண்டும். 

  • கரிப்பூட்டை நோய் தாக்கிய துாரை சாட்டையிலிருந்து பூசண வித்துக்கள் காற்றில் பறக்காமல் இருக்கும்படி ஒரு கோணி அல்லது பாலித்தீன் பை கொண்டு நுழைத்து, கரிச்சாட்டையை மட்டும் ஒடித்துப் பின் இத்துாரையும் பெயர்த்து யாவற்றையும் சேர்த்து எரித்து விட வேண்டும்.

     

இரசாயன முறைகள்:

  • டிரையடிமெஃபான் 1 கி/ 1 லி நீரில் கலந்தது அல்லது கார்பென்டஸிம் 1கி/1லி நீரில் கலந்தது.  இதில் ஏதேனும் ஒரு மருந்தினைக் கொண்டு கரணை நேர்த்தி செய்தல் வேண்டும்.

  • கைத்தெளிப்பான் கொண்டு 10% ரவுண்டப் கரைசலை பாதிக்கப்பட்ட பகுதிகளின்மீது தெளிக்கவும்.

  • நோய் முற்றிய நேரத்தில் கிளைப்போயேட் (360 ஜி/எல்) மருந்தினை 5-7 லி/ஹெ என்ற அளவில் தெளிக்கவும்.

மேலே செல்க

வாடல் நோய்:  ஃபுஸேரியம் சச்சாரி


அறிகுறிகள்: 

  • கரும்பு 4-5 மாதங்கள் வளர்ச்சியடைந்த பின்பே இந்நோயின் தாக்குதலைக் காண முடியும்.

  • நோய் தாக்கப்பட்ட கரும்பின் குருத்து இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் முழுவதுமாகக் காய்ந்து விடும்.  கரும்பு சுருங்கி இலைகள் உதிர்ந்து விடும்.

  • வெண்ணிற பஞ்சு போன்ற மைசீலியங்கள் இதன் சதைப்பகுதியில் தென்படும்.

  • கரும்பைப் பிளந்து பார்த்தால், உட்பாகம் இளஞ்சிகப்பு அல்லது இளம் ஊதாநிறத்தில் இருக்கும்.  கணுவிடைப் பகுதி உட்பாகம் குழிவடைந்து படகு வடிவில் இருக்கும்.

  • இந்நோய் தாக்கிய கரும்பிலிருந்து ஒரு வித துர்நாற்றம் வெளிவரும்.

பூஞ்சாண் உயிரியை இனம் காணுதல்


கொனிடியோஸ்போர்கள் பொதுவாக செங்குத்தாகவும் கிளைத்தும் காணப்படும்.  பெரும் கொனிடியாக்கள் அதிகளவில் நேரடியாகவும், 3-5 தடுப்புக்களைப் பெற்றிருக்கும்.  இதன் தனித்த அடிச்செல் 27-73 × 3.4-5.2 மி.மீ அளவு கொண்டவை.  பிளாஸ்டோகொனீடியா நேராகவோ, சிறிது வளைந்தோ, 2-3 தடுப்புகளையும், பிறை அல்லது ஈட்டி வடிவமும் கொண்டிருக்கும்.  மேலும் ஒரளவு கூராகவும், பெரும்பாலும் சமச்சீரற்ற தனித்த எப்பிகல்  செல் கொண்டும் அடித்தண்டு   செல் 16-43 × 3.0-4.5 மி.மீ அளவு கொண்டதாகவும் இருக்கும்.

மேலாண்மை முறைகள்


உழவியல் முறைகள்:

  • நோயற்ற ஆரோக்கியமான விதைக் கரணைகளைப் பயன்படுத்துதல், கோ 617, பி .ப்பி 17 போன்ற எதிர்ப்பு இரகங்களை வளர்க்கவும் .

  • பயிர் சுழற்சியை மேற்கொள்ளுதல், வேர்த்துளைப்பானைக் கட்டுப்படுத்துதல், நீண்ட வறட்சி அல்லது நீர்த்தேக்கப் பிரச்சினை ஏற்படாமல் வயலைப் பராமரித்தல்.

  • பூஞ்சாணக் கொல்லிகளுடன் விதை நேர்த்தி செய்தல்.

வேதியியல் முறைகள்:

  • பெவிஸ்டின் 0.1% கரைசலுடன் விதை நேர்த்தி செய்யவும்.

  • 2 கி/லி நீரில் கார்பன்டஸிம் கலந்து கரும்பின் வேர் மண்டலப் பகுதிகளில் 15 நாட்கள் இடைவெளியில் ஊற்றவும்.

  • 40 பி.பி.எம் போரான் அல்லது மாங்கனீசு கரைசலில் விதைக் கரணைகளை நனைத்துப் பின் நடுதல்.  அல்லது நுண்ணுாட்டச் சத்துக்கரைசலை தெளிப்பதன் மூலமும் ஓரளவு குறைக்கலாம்.

மேலே செல்க

துரு நோய்: (பக்ஸீனியா இரியான்த்தி)


பரவும் விதம்:

இது காற்றில் பரவும் நோய்.  இப் பூஞ்சாணம் திசுக்களின் ஸ்டொமாட்டா வழியே ஊடுருவி நோயினைப் பரப்புகின்றது.  இப்பூஞ்சை வித்துகள் கடல் பகுதிகளில் 15 கி.மீ காற்றில் எடுத்துச் செல்லக் கூடியவை.


அறிகுறிகள்

  • கரும்பில் துரு நோய் இலையைத் தாக்கும் முக்கிய நோய்

  • இலையின் இருபுறங்களிலும் மஞ்சள் அல்லது பழுப்பு நிற சிறிய கொப்புளங்கள் போன்ற புள்ளிகள் காணப்படும்.

  • இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிதாகும்போது சோகைகளில் ஆரஞ்சு பழுப்பு அல்லது செம்பழுப்பு நிறத்தில் தோன்றும்.

  • இந்நோயினை தோற்றுவிக்கும் வித்துகள் இலையின் அடிப்பக்கம் தங்கி இருந்து உற்பத்தியாகும்.

  • இளம் இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும்.

பூஞ்சானை இனம் காணுதல்


பக்ஸீனியா இரியான்த்தி

  • யுரிடினியா நீண்டு, செம்பழுப்பு நிறம் கொண்டிருக்கும.  இதன் பாராபைசஸ் வெளிர் பழுப்பு நிறம் முதல் நிறமற்றதாகவும், தலை வடிவிலும் (கேப்பிடேட்) இருக்கும்.

  • யுரினியோவித்துகள் தடித்த சுவர் கொண்டு, ஆரஞ்சுப் பழுப்பு நிறத்தில் 26-34 x 16-20 மைக்ரான் மீ அளவுடையவை.  யுரிடினியோ வித்துக்களின் மேற்பகுதி 4-5 மத்திய ரேகைத் துளைகளுடன் எக்கினுலேட் ஆகும்.

  • டீலியோஸ்போர்கள் (வித்துகள்) அடர் பழுப்பு நிறமும் 30-43 x 17-23 மைக்ரான் மீ அளவும், செப்டத்தில் சுருங்கியும்,  இரு செல்லுடனும் அமைந்துள்ளன.

       

மேலாண்மை முறைகள்


உழவியல் முறைகள்:

  • பாதிக்கப்பட்ட இலைகளை உடனே அகற்றி எறித்துவிட வேண்டும்.

  • ஆலைகளின் கழிவுகளை வயல்களில் இடும்போது, இந்நோய் பரவ அதிக வாய்ப்புள்ளது.எனவே அவற்றை பயன்படுத்தகூடாது

  • இந்நோயை கட்டுப்படுத்த ஒரே வழி துரு நோய் எதிர்ப்பு இரகங்களை பயிரிடலாம்.

  • கோ 91010 (தனுஷ்), கோ 87025 (கல்யாணி) போன்ற எதிர்ப்பு இரகங்கள் பயிரிடலாம

     

வேதியியல் முறைகள்

  • டிரைடிமார்ப் 1 லி அல்லது மேன்கோஷெப் 2.0 கி.கி/ஹெக்டர் என்ற அளவு தெளிக்கலாம்.

  • டயத்தேன் எம் 45 2 கி/லி மருந்தினை ஒரு முறை தெளிக்கவும்.

  • டிரையஸோல் அல்லது ஸ்டிரோபிலியூரின் அல்லது பைரகுளோஸ்டிரோபின் பூஞ்சானக் கரைசலை 1 லி நீரில் 3 கி என்ற அளவில் தெளிக்கவும்.

மேலே செல்க

புல்தண்டு நோய்


அறிகுறிகள்    

  • கரும்பின் 3-4  மாத பயிரில் ஒரு கிளைப்பில் உள்ள குருத்து சோகைகள் மட்டு வெண்மையாகவும் அதற்குக் கீழ் உள்ள சோகைகள் பசுமையாகவும் காணப்படும்

  • பின் இத்துாரின் கீழ் வெண்மையான அல்லது வெளிர் மஞ்சள் சோகைகளுடன் கூடிய அளவுக்கதிகமான கிளைப்புகள் மெலிந்த சிம்புகள் போன்று கிளம்பும். 

  • சோகைகள் சிறுத்தும், குறுகியும் காணப்படும்.  நோய் தாக்கிய துாரில் சில சமயங்களில் ஒன்றிரண்டு கரும்புகள் நன்கு வளர்ந்து பசுமையான சோகைகளுடன் நல்ல கரும்பு மாதிரியே காணப்படும். 

  • பச்சையம் இல்லாமல் இச்சோகைகள் காய்ந்து விடும்.  பாதிக்கப்பட்ட கரும்பின் வளர்ச்சி குன்றி விடும். இடைக்கணுக்களின் நீளம் குறைந்து காணப்படும்.

பூஞ்சானை இனம் காணுதல்


  • இந்த நோய் மைக்கோ பிளாஸ்மா கிருமிகள் மூலம் இலைகளிலுள்ள உணவுக் குழாய்களில் இருந்து உண்டாகின்றது. மைக்கோ பிளாஸ்மா உயிரணு சிறியதாகவும், 1 மை.மீ. அளவு குறைவாகவும் இருக்கும், இதை நுண்நோக்கி மூலம் காண்பது கடினம்.

மேலாண்மை முறைகள்


உழவியல் முறை:

  • விதைத்த 2 வாரங்களில் இந்நோய் தென்பட்டால், பாதிக்கப்பட்ட நாற்றுகளை அகற்றிவிட்டுப் புதிய கன்றுகள் நடவும்.

  • பிடுங்கப்பட்ட நோய் தாக்கிய கன்றுகளைப் எரித்து விட வேண்டும்.

  • கோ 86249, கோ.ஜி 93076 மற்றும் கோ.க 22, போன்ற எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களை வளர்க்கலாம்.

  • புல்தண்டு நோய் பாதிப்பு 15% மேல் இருக்கும்போது மறுதாம்புப் பயிர் விடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இயற்பியல் முறைகள்:

  • பாதிக்கப்பட்ட பயிர்களை மறுதாம்பு பயிர் மற்றும் நாற்றங்காலிலிருந்து அகற்றி விட வேணடும்.

  • விதைக் கரணைகளை நீராவிக் காற்றில் 50° செ 1 மணி நேரம் வெப்ப நேர்த்தி செய்து, கரணையிலுள்ள நோய்க்கிருமிகளை செயலிழக்கச் செய்ய வேண்டும்.

  • சூடான 54° செ காற்றைக் கொண்டு 8 மணி நேரம் விதைக்கரணைகளை வெப்ப நேர்த்தி செய்யலாம்.  அசுவினி மருந்தை மாதம் இருமுறை தெளிக்கலாம்.

வேதியியல் முறை

  • மெத்தில்டெமட்டான் 2 மி /லி மருந்தினை இடுவதால் அசுவிணியைக் கட்டுப்படுத்தலாம்

  • டைமெத்தோயேட் @ 1 மி.லி 1 லி நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

 

மேலே செல்க

மஞ்சள் இலை நோய்


அறிகுறிகள்

  • 5-லிருந்து 6 மாத கால வயதுடைய பயிரினை இந்நோய் அதிகம் தாக்குகின்றது. குறிப்பாக  கணுவிடைப் பகுதிகள் சுருங்கி வளர்ச்சி குன்றும்.

  • இலைகளின் நடுநரம்பு மஞ்சள் நிறமாக மாறி அதனை ஒட்டி உள்ள பகுதியிலும் பரவிக் காணப்படும்

  • சில சமயங்களில் நடுநரம்பு சிவப்பு நிறமாக மாறி காணப்படும்

  • இதனைத் தெடர்ந்து 3 முதல் 5 இலைகள் பழுப்படைந்து காய்ந்துவிடும்.

  • சில சமயம், நோய்த் தாக்குதல் அதிகமான நிலையில் கரும்பின் உச்சியில் முடிக்கொத்து போல் காட்சியளிக்கும்.

  • முதிர்ந்த கரும்புகளில்தான் இந்நோய் அதிகம் பரவும். துாரத்திலிருந்து பார்க்கும்போதே இந்நோயினை காணலாம்.

பரவும் விதம்


  • இந்நோய் தாக்கும் வைரஸ் மெலனாபிஸ் சச்சாரி, ரோபலோசிபம் மெய்டிஸ் எனும் அசுவினிகளால் பரவுகிறது.

  •         (SCYLV) எஸ்.சி.ஒய்.எல்.வி என்பது ஸியூட்டேவிரிடே குடும்பத்தைச் சார்ந்தது.  இவ்வைரஸ் பயிரின் போலியம் செல்களுக்குள் வாழ்கின்றது.

 

மேலாண்மை முறைகள்


உழவியல் முறைகள்:

  • நாற்றங்கால் அமைத்துப் பின் நாற்றுக் கரணைகளை வயலில் நடுவதன் மூலம் இந்நோய் தாக்குதலைத் தவிர்க்கலாம்.

  • திசு வளர்ப்பு முறையில் வளர் திசுக்களிலிருந்து பெறப்படும் நாற்றுகளை நடுவது சிறந்தது.

  • ஆரோக்கியமான விதைக்காரணிகளைப் பயன்படுத்தவும்.

  • வயல்களை சுத்தமாக பராமரித்தல் வேண்டும்.

  • சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்குமாறு தேவையான நீர் மற்றும் உர நிர்வாகம் செய்தால் இந்நோயினைப் பெருமளவு குறைக்கலாம்.

வேதி முறைகள்:

  • கார்போஃபியூரான் 2 கி.கி அல்லது போரேட் 6 கி.கி/ஹெ என்ற அளவில் மண்ணில் இடவும்.

  • மாலத்தியான் 1.5 கி.கி/ஹெ மருந்தினை செப்டம்பர் மற்றும் அக்டோபரில் சோகை உரித்தப்பின் இருமுறை தெளிக்கவும்.

  • மாலத்தியான் (0.1%) அல்லது டெமக்ரான் (0.2%) தெளிப்பதன் மூலமும் இந்நோய் மேலும் பரவுவதைத் தடுக்கலாம்.

 

அனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்