|| | | |||
 

வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

மின்சாரம் இல்லாமலே இயங்கும் காய்கறி குளிர் சாதனக் கலன்!

தெம்பான  வருமானம் தரும் தென்னை, பாக்கு, மிளகு..

இயற்கைக் குடமிளகாய்....பசுமைக்குடிலுக்குள் காய்க்குது பணம்!

ஜீரோ பட்ஜெட் முருங்கை

ஈரியோபைட் சிலந்திக்கு கற்றாழை!

பஞ்சமில்லாமல் கொடுக்கும் பசுமைக்குடில்

பாக்கு கை கொடுக்கும் காசு மரம்

பெருத்த லாபம் தரும் பெரு நெல்லி + சப்போட்டா கூட்டணி

பலே வருமானம் தரும் பலா!

ஆலவயல் கத்தரிக்காய்

இடைப் பருவத்திலும் இனிக்கும் வருமானம்! மகிழ்ச்சியான மாம்பழ சாகுபடி…

பட்டதாரிகளின் பலே பப்பாளி - வாழை

ஏக்கருக்கு 2,00,000 ரூபாய் அள்ளிக் கொடுக்கும் இயற்கை குண்டுமல்லி

நிம்மதியான வருமானத்துக்கு வழிகாட்டும் நீளப்புடலை

ஜெட் வேக லாபத்துக்கு ஜீரோ பட்ஜெட் சின்னவெங்காயம்

கடலையோடு கூட்டணிப்போடும் முள்ளங்கி

சபாஷ் போட வைக்கும் சம்பங்கி

சிக்கனமான செலவில் துளசி சாகுபடி

[ மேலும் வெற்றிக் கதைகள் காண.... ]

மின்சாரம் இல்லாமலே இயங்கும் காய்கறி குளிர் சாதனக் கலன்!

காய்கறி மற்றும் பழங்களை அதிக நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டி, மின்சாரம் இருந்தால் மட்டும்தான் இயங்கும். ஆனால், மின்சாரம் இல்லாமலே காய்கறி மற்றும் பழங்களை கூடுதல் நாட்கள் வரை பாதுகாக்கும் காய்கறி சேமிப்புக் கலன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் மத்திய அரசு செயல்படுத்தும் ‘சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரைலேண்ட் அக்ரிகல்ச்சர்’ (கிரிடா) என்ற நிறுவனம்தான் இதை அறிமுகம் செய்திருக்கிறது. தற்போது, தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தில் (வேளாண் பல்கலைக் கழகத்தின் அங்கம்) அந்தக் கலன் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதைப் பற்றி மையத்தின் தலைவரும் இணைப் பேராசிரியருமான ஼தர் கூறும் போது, “சாதாரண பேரல் போன்று இருக்கும் இதன் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியில் வைக்கோல் போன்ற பொருள் வைக்கப்பட்டுள்ளது. ‘இதனுள்ளே தண்ணீர் ஊற்றிவிட்டால், எந்நேரமும் ஈரத்தன்மை காக்கப்படும். அதனால், சாதனத்தின் உள்ளே வைக்கப்படும் காய்கறிகள் வழக்கத்தைவிட கூடுதல் நாட்கள் வரை வாடாமலும், கெடாமலும் இருக்கும். வெளியில் இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை மட்டும் தாக்குப்பிடிக்கும் தக்காளி, கத்திரி, வெண்டை, திராட்சை, கொய்யா, சீத்தா உள்ளிட்ட அனைத்து காய்கறி மற்றும் பழங்களும் சுமார் ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும். விவசாயிகள், சிறு வியாபாரிகள், ஹோட்டல், ஹாஸ்டல், வீடு என அனைத்து இடங்களிலுமே இந்தத் கலனைப் பயன்படுத்தி மின்சாரச் செலவில்லாமல் காய் மற்றும் பழங்களை நீண்ட நாள் பாதுகாக்க முடியும்’ என்கிறார்கள் இதை வடிவமைத்திருக்கும் கிரிடா அமைப்பினர்.

ஐம்பது கிலோ வரை காய்கறிகளை வைக்கும் கலனுக்கு 3,600 ரூபாய் விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இதுபோக 30,15 மற்றும் 5 கிலோ கொள்ளளவு கொண்ட கலன்களையும் வடிவமைத்திருக்கின்றனர். இந்தக் கலன்களை வாங்க விரும்புவோருக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்க பாப்பாரப்பட்டி அறிவியல் மையம் தயாராக இருக்கிறது’ என்று சொன்னார்.

தொடர்புக்கு :
வேளாண் அறிவியல் மையம் , தொலைபேசி : 04342-245860


தெம்பான  வருமானம் தரும் தென்னை, பாக்கு, மிளகு..

பட்டுக்கோட்டை அருகிலிருக்கும் கிளாமங்கலம் கிராமத்திலிருக்கிறது ஆடிட்டர் அய்யாவு அவரின் பண்ணை. வருமானத்தை சரியாக கணக்குப் போட்டுப் பார்த்து, தென்னை, பாக்கு, மிளகு, ஜாதிக்காய், லவங்கம், சர்வ சுகந்தி, குடம்புளி.. என லாபம் கொடுக்கும் பயிர்களாகவே சாகுபடி செய்து வருகிறார் இந்த ஆடிட்டர். அதனால்தனர், சுற்றுப்புறத்தில் உள்ள விவசாயிகளுக்கெல்லாம் கூட பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது, அந்தப் பண்ணை.

40% செலவு... 60% லாபம் இருக்கணும்!
“தோட்டத்திலிருந்து கிடைக்கின்ற மொத்த வருமானத்தில்  40% மட்டும்தான், தோட்டத்திற்காக செலவாகணும். மீதியை லாபமா எடுக்கணும். அப்படி இல்லேனா.. எங்கேயோ தப்பு நடக்குதுன்னு அர்த்தம். அதைக் கண்டுபிடிச்சு, சரி பண்ணணும். அப்பதான் விவசாயத்தில் ஜெயிக்க முடியும்” என்று பேச்சைத் துவக்கினார், ‘ஆடிட்டர்’ அய்யாவு.

தென்னை, பாக்கு, மிளகு!
“மணலும் செம்மண்ணும் கலந்த பூமி. அதனால், முழுக்க தென்னையை நடவு செய்திட்டேன். இடையில பாக்கு இருக்கு. ஒவ்வொரு தென்னையிலும் நாலு மிளகுச் செடியை ஏத்தியிருக்கேன். இது போக லவங்கம், ஜாதிக்காய்.. மாதிரி எல்லாம் கலந்து 650 மரங்கள் இருக்கு. பாலுக்காக 15 எருமை மாடு, 10 பசு மாடு இருக்கிறது. தோட்டத்துக்குத் தேவையான மண்புழு உரத்தை நாங்களே தயாரித்துக் கொள்வோம். பண்ணையோட மேலாளர் கணேசன், முப்பத்தைந்து வருடமாக  இங்க இருக்கிறார். அவர்தான் முழு பண்ணையையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

தெளிப்பு நீரில் கூடுதல் மகசூல்!
ஆரம்பித்தில் வாய்க்கால்லதான் தண்ணீர் விட்டோம். அதில் ஒன்றும் சொல்ற மாதிரி விளைச்சல் இல்லை. மரங்களுக்கு சரியா தண்ணீரும் கிடைக்கலை. அதனால் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்தேன். அதில் உப்பு அடைச்சுக்கிட்டு அடிக்கடி தண்ணீர் வராமப் போயிடும். அதோட இந்த எலிங்க, நைட்டோட நைட்டா குழாயையெல்லாம் கடிச்சுப் போட்டுட்டு போயிடும். ஆனாலும், வாய்க்கால் பாசனத்தை விட சொட்டுநீர் முறையில் விளைச்சல் கொஞ்சம் கூடுதலாகத்தான் கிடைத்தது. அதுக்கப்புறம்தான் தெளிப்பு நீர்ப் பாசனம் பற்றிக் கேள்விப்பட்டு அதை அமைத்திருக்கிறேன்.
இந்த முறையில மரத்து மேலயும் தண்ணீர் படுவதால், மரத்தோட சூடு தணியுது. மண்ணில் சீரா தண்ணீர் படுவதால் ஈரப்பதம் அப்படியே இருக்குது. அதனால்தான் தோப்பு  இவ்வளவு குளிர்ச்சியா இருக்கு. அதோட பலனும் கண்கூடாகத் தெரியுது. ஆரம்பத்தில் ஒரு மரத்தில் வருடத்திற்கு 100 காய்தான் கிடைத்துக் கொண்டிருந்தது. சொட்டுநீர் போட்டப் பிறகு 120 காய் வரைக்கும் கிடைத்தது. இப்போ 200 காய் வரைக்கும் கிடைக்கிறது” என்றவர் நுண் தெளிப்பு நீர்ப்பாசனம் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

தினமும் 2 மணி நேரம் போதும்!
“15 அடி இடைவெளியில் கிளரிசீடியா மரத்தை நட்டு, அதில்தான் தெளிப்பு நீருக்கான குழாய்களைக் கட்டியிருக்கேன். இதுக்கான மெயின் பைப் மண்ணுக்கடியில் மூன்றடி ஆழத்தில் இருக்கும். மரத்தை ஏழடிக்கு மேல வளர விடக் கூடாது. குழாயோட உயரம் எட்டடி இருக்கணும். அதோட தலைப்பகுதியில் சுத்துற வடிவத்தில் ஊசி முனையளவு துளை இருக்கும். தண்ணீர் வேகமா பாயும் போது.. தலைப்பகுதி சுத்த ஆரம்பித்து, எல்லாப் பக்கமும் ஒரே மாதிரி தண்ணீர் தெளிக்கும். மரங்களில் பத்தடி உயரம் வரைக்கும் தண்ணீர் படும். தினமும் இரண்டு மணி நேரம் ஓட விட்டா போதும் .. நிலமே குளுகுளுனு இருக்கும். மண்ணும் எப்பவும் பொளபொளனு இருக்கும். இந்த நுண்தெளிப்புப் பாசன முறைக்கு ஏக்கருக்கு  இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை செலவாகும்” என்றவர் சாகுபடி முறைகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

மூன்றடிக்கு மூன்றடி இடைவெளியில் குழி!
‘நிலத்தில் மூன்று சால் உழவு ஓட்டி, 25 அடி இடைவெளியில் 3 கன அடி அளவில் குழி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 70 குழிகள் வரும். பின் குழி எடுத்துள்ள வரிசைக்கு  இடைவெளியில் தெளிப்பு நீர்க்குழாய்களை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழியிலும் நிலத்தின் மேல்மண், 10 கிலோ மட்கிய தொழுவுரம், 1 கிலோ வேப்பம் பிண்ணாக்கு.. ஆகியவற்றைக் கலந்து நிரப்பி தென்னங்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். பின் குழியை நன்றாக மூடிவிட வேண்டும். தினமும் இரண்டு மணி நேரம் தெளிப்பு நீர் மூலமாக தண்ணீர் கொடுக்க வேண்டும்.

செற்கை பாதி.. இயற்கை பாதி!
ஆறு மாதத்திற்கு ஒரு முறை தென்னைக்கு உரமிட வேண்டும். ஒரு முறை இயற்கை உரத்தையும் (ஒரு மரத்திற்கு 3 கிலோ மண்புழு உரத்தோடு, 30 கிலோ கோழி எரு அல்லது தொழுவுரம்), ஒரு முறை செயற்கை உரத்தையும் (ஒரு மரத்திற்கு ஒன்றரை கிலோ யூரியா, 4 கிலோ பொட்டாஷ், 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 200 கிராம் போரான்) கொடுத்தால்.. மரங்கள் நன்கு வளரும். இயற்கை உரம் கொடுக்கும் போது.. ஒரு தடவை கோழி எரு, அடுத்தத் தடவை தொழுவுரம் என மாற்றி மாற்றிக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

7-ம் ஆண்டில் பாக்கு, மிளகு!
முதல் மூன்று ஆண்டுகளுக்கு கடலை, உளுந்து, எள்.. போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். அடுத்த மூன்றாண்டுகளுக்கு வாழையை சாகுபடி செய்யலாம். 7-ம் ஆண்டில் பாக்கு நடவுக்காக, இரண்டு வரிசை தென்னைகளுக்கு மையத்தில், எட்டடி இடைவெளியில் 3 கன அடி அளவில் குழிகள் எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 210 குழிகள்  வரும். ஒவ்வொரு குழியிலும் நிலத்தின் மேல்மண், மூன்றரை கிலோ மட்கிய தொழுவுரம், 350 கிராம் வேப்பம்பிண்ணாக்கு.. ஆகியவற்றைக் கலந்து நிரப்பி, பாக்குக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். அதன் பிறகு, தென்னையைச் சுற்றி நான்கு புறமும் மூன்று அடி இடைவெளியில், முக்கால் அடி ஆழத்திற்கு குழி எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கிலோ மண்புழு உரத்தைப் போட்டு மிளகு நாற்றை நடவு செய்ய வேண்டும். (ஒவ்வொரு மரத்திற்க்கும் நான்கு மிளகுச் கொடிகள்).
தொடர்ந்து ஒவ்வொரு முறையும் தென்னைக்கு உரமிட வேண்டும். இந்த அளவில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கான உரததை பாக்குக்கு தனியாக இட வேண்டும். ஒவ்வொரு மிளகுச் செடிக்கும் வருடத்திற்க்கு மூன்று முறை இரண்டு கிலோ அளவில் தொழுவுரம் இட வேண்டும். தென்னையில் நடவு செய்த 7-ம் ஆண்டிலிருந்து மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். பாக்கு மற்றும் மிளகு ஆகியவை நடவு செய்ததில் இருந்து ஐந்து ஆண்டுகள் கழித்து பலன் கொடுக்கும்’

களையெடுப்பது வெட்டி வேலை!
சாகுபடி பாடத்தை முடித்துவிட்டு பேசிய அய்யாவு, “எல்லா விவசாயிகளும் தோப்பை சுத்தமா வைத்திருக்கணும்னு நினைக்கிறாங்க. அதுக்காக வருடா வருடம் உழுது விடறாங்க. இது தேவையே இல்லை. என் தோப்புலயெல்லாம் இருபது வருஷமா களை எடுக்கவேயில்லை. அதனால என்ன விளைச்சல் குறைந்து போச்ச? தோப்போட மேற்பகுதி சுத்தமா இருந்தா.. மழை பெய்யும் போது மேல் மண்ணை அடிச்சிட்டுப் போயிடும். மேல் மண்தான் நிலத்திற்கு சத்து இருக்கிற பகுதி. களைகள் இருந்தால், மண் அரிமானத்தை தடுத்துவிடும். களை எல்லாத்தையும் நாம தென்னை நார்க் கழிவுகளைக் கூட போடலாம். நிலம் முழுக்க இப்படிப் போட்டுட்டா அதன் பிறகு களைகளே முளைக்காது.

மட்டைகள் மூலம் 11 டன் உரம்!
ஒரு தென்னை மரத்திலிருந்து வருடத்திற்கு 12 மட்டை கிடைக்கும். ஒரு மட்டை சராசரியாக 8 கிலோ எடை இருக்கும். அப்படிப் பார்த்தால் ஒரு மரத்திலிருந்து 96 கிலோ இயற்கை உரம் கிடைப்பதாக வைத்துக் கொள்ளலாம். ஒரு ஏக்கரிலிருந்து 70 மரத்திற்கு 6,720 கிலோ உரம் கிடைக்கிறது. இதே கணக்கில் பாக்க மூலமா 5.040 கிலோ (1 மட்டை 2 கிலோ, ஒரு மரத்திற்கு 12 மட்டை, மொத்தம் 210 மரம்) உரம் கிடைக்கிறது. இது போக.. மிளகு இலைகள், களைகள்னு ஏகப்பட்ட உரம் கிடைக்கிறது. இவ்வளவு இயற்கை உரம் கிடைப்பதால்தான் மண்ணும் பயிரும் இந்தளவுக்கு வளமா இருக்கிறது. என்றவர், மகசூல் மற்றும் வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரும் ரூபாய்!
“ஒரு தென்னை மரத்தில் வருடத்திற்கு 140 காய்களிலிருந்து 200 காய்கள் வரை கிடைக்கிறது. ஒரு காய் 5 ரூபாய் வரை விலை போகிறது. குறைந்தபட்சமாக 140 காய்கள்னு வைத்துக் கொண்டால் ஒரு ஏக்கருக்கு 9,800 காய்கள் மூலமா 49,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். கொப்பரையாக்கி வித்தா.. கூடுதலா கிடைக்கும். நான் கொப்பரையாத்தான் விற்பனை செய்கிறேன்.
ஒரு பாக்கு மரத்திலிருந்து வருடத்திற்கு குறைந்தபட்சம் 10 கிலோ பழம் கிடைக்கும். காய வைக்கிறப்போது 3 கிலோ பாக்கு கிடைக்கும் ஒரு ஏக்கர்ல இருக்கிற 210 மரங்கள் மூலமா 630 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ 70 ரூபாய் வீதம் விலைபோகிறதால், 44.100 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
வருடத்திற்கு ஒரு மிளகுக்கொடி மூலமாக குறைந்தபட்சம் 1 கிலோ மிளகுனு, ஒரு ஏக்கரில் இருக்கிற 280 மிளகுக் கொடி மூலமா, 280 கிலோ கிடைக்கும். கிலோ 250 ரூபாய்னு விலை போவதால், 70 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மொத்தமா ஒரு ஏக்கர்ல மூணுக்கும் சேர்த்து 1,63,100 ரூபாய் கிடைக்கும். அதில் உரம், பராமரிப்பு, அறுவடை, போக்குவரத்துனு எல்லா செலவுகளும் போக, வருடத்திற்கு 1,20,000 ரூபாய் வரை லாபம் பார்க்க முடியும்” என்றார் சந்தோஷத்துடன்.

தொடர்புக்கு :
அய்யாவு, அலைபேசி : 94433 - 49993இயற்கைக் குடமிளகாய்...பசுமைக்குடிலுக்குள் காய்க்குது பணம்!

கால் ஏக்கரே போதுமானது. 50 சதவிகிதம் மானியம். 9 மாதங்கள் காய் கிடைக்கும்.
பருவம் தப்பிய மழை, தாங்க முடியாத நிலைக்குத் தள்ளும் வகையில் தகிக்கும் வெயில்.. போன்றவற்றையெல்லாம் கூட சமாளித்து, ஆண்டு முழுவதும் தேவையானவற்றை விளைவிக்க உருவாக்கப்பட்டதுதான் பசுமைக்குடில்!
வெளிநாடுகள் பெரும்பாலானவற்றில் தக்காளி, கத்திரி உட்பட பல வகைக் காய்கறிகள் பசுமைக்குடிலுக்குள்தான் விளைகின்றன. இந்தியாவில் ஆரம்ப காலங்களில் மலைப்பகுதியில், கொய்மலர்கள் மற்றும் குடமிளகாய் விவசாயத்துக்கு மட்டுமே பசுமைக்குடில்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது சமவெளிப் பகுதிகளிலும் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.பசுமைக்குடில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பம் என்பதால், ரசாயனத்தைக் கொட்டிதான் விவசாயம் செய்கிறார்கள் 99%  விவசாயிகள். அவர்களில் இருந்து வேறுபட்டு பசுமைக்குடிலுக்குள் இயற்கை விவசாயம் செய்கிறார் தர்மபுரி மாவட்டம், அமானிமல்லாபுரம் செளந்திரராஜன்.

கால் ஏக்கரே போதுமானது!
பத்து பதினஞ்சு ஏக்கருல, சுத்தி அலைஞ்சி விவசாயம் பாக்க தோதுப்படாதுனு சொல்றவங்களுக்கு... பசுமைக்குடில் ஒரு வரப்பிரசாதம். ஏக்கர் கணக்கான நிலத்துல சம்பாதிக்கிற பணத்தை, கால் ஏக்கர்ல சம்பாதிக்கலாம் பசுமைக்குடில் இருந்தா” என்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் செளந்திரராஜன்.
“கிணறு, போர் செட்டோட பத்து ஏக்கர் நிலமிருக்கு. அஞ்சு ஏக்கர்ல தென்னை வைத்திருக்கிறேன். இரண்டு ஏக்கர்ல வாழை, மீதி மூன்று ஏக்கர்ல நெல், காய்கறினு மாத்தி மாத்தி பண்ணிக்குவேன். விவசாயம்தான் முழு நேரத்தொழில்ங்கறதால, அதுபத்தி நிறைய விஷயங்களைச் சேகரிக்க ஆரம்பிச்சப்போ..இரண்டு வருடத்திற்க்கு முன்பு பசுமைக்குடில்பற்றிக் கேள்விப்பட்டேன். மானியமும் கிடைத்தால உடனே கால் ஏக்கர் அளவுல பசுமைக்குடில் அமைத்து ரோஜா போட்டேன்.
இயற்கையில் குட மிளகாய்!
ரோஜாவுக்கு முழுக்க முழுக்க ரசாயனம் கொடுத:துதான் வளர்க்கணும். ஆனால், அது ஒண்ணும் சரிப்பட்டு வரலை. என்ன செய்யலாம்னு நிறைய பேர்கிட்ட யோசனை கேட்டப்போதுதான், ‘ஆர்கானிக் உரங்களைப் பயன்படுத்தி, கேப்ஸிகம் (குடமிளகாய்) போடுங்க. நல்லா வரும்னு சொன்னாங்க. உடனே அதையும் செயல்படுத்தினேன். நான் எதிர்பார்த்ததை விட நல்ல மகசூலும் லாபமும் கிடைக்க ஆரம்பிக்கவே, அதையே தொடர முடிவெடுத்திட்டேன்” என்றவர், பசுமைக்குடிலில் குடமிளகாய் சாகுபடி பற்றி கூறினார்.
செம்மண் அவசியம்!
“1,000 அல்லது 500 சதுர மீட்டரில்தான் பசுமைக்குடிலை அமைக்க முடியும். அதிகபட்சம் 1,000 சதுர மீட்டர் அளவுக்கான குடிலுக்கு மட்டுமே ஒருவர் மானியம் பெற முடியும். இதற்கு குறைந்தது கால் ஏக்கர் நிலம் தேவை. செம்மண் பூமியாக இருப்பது நல்லது. பல தனியார் நிறுவனங்களே இதை அமைத்துத் தரும் பணியைச் செய்து வருகின்றன.
கிழக்கு மேற்காகப் பாத்தி!
அடுத்து.. குடிலுக்குள் கிழக்கு மேற்காக மூன்றடி அகலததில் பாத்தி (பெட்) அமைக்க வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கும் இடைவெளி ஒரு அடி, உயரம் ஒன்றரை அடியும் இருக்க வேண்டும். அதையடுத்து, சொட்டு நீர்ப்பாசனக் குழாய்களை அமைத்துக் கொள்ள வேண்டும். 250 அடி நீளம், 50 அடி அகலத்தில் உள்ள குடிலில் 60 பாத்திகள் அமைக்க முடியும்.
குட மிளகாய்க்கு நாற்றைத்தான் நடவு செய்ய வேண்டும் என்பதால், பாத்திகள் அமைக்கத் தொடங்குவதற்கு முன்னரே சிறிய நிழல்வலைப் பசுமைக்குடிலில் குழித் தட்டுகளில் 40 கிராம் அளவுக்கான விதைகளை விதைக்க வேண்டும். குட மிளகாயில் மஞ்சள், பச்சை, சிவப்பு என மூன்று வண்ணங்கள் இருப்பதால், மூன்றையும் சரிக்குச்சமமாக இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். 27 நாட்கள் வளர்ந்த நாற்றை நடவு செய்யலாம்.
முக்கோண நடவு முக்கயம்!
பாத்தியின் இரண்டு ஓரங்களிலும் நாற்றுகளை 40 சென்டி மீட்டர் இடைவெளியில்  முக்கோண நடவு செய்து, இரண்டு நாடகளுக்கு ஒரு முறை மிதமாக தண்ணீர் விட வேண்டும். பத்து நாட்களில் வேர் பிடித்து விடும். அதிலிருந்து பாத்தி காயாத அளவுக்கு தினமும் சிறிது நேரம் நீர் விட்டு வரவேண்டும். தொழுவுரம் இடுவதால், களைகள் முளைத்து வரும். நடவு செய்த 15ம் நாளுக்கு மேல் களை எடுக்க வேண்டும். அதன் பிறகு களைகள் வராது.
கவாத்து முக்கியம்!
ஒவ்வொரு பாத்திக்கும் நேர் மேலே, பாத்திக்கு இணையாக கட்டுக்கம்பிகளை இழுத்து இருபுறமும் கட்ட வேண்டும். குடில் அமைக்கப் பயன்படுத்தப் பட்டிருக்கும் இரும்புக் குழாய்களிலேயே கட்டலாம். ஒரு செடிக்கு நான்கு பிளாஸ்டிக் கயிறகள் என்கிற விகிதத்தில், செடிகளுக்கு மேலே செல்லும் கம்பிகளில் கட்டித் தொங்கவிட வேண்டும்.
செடி வளரும்போது கவட்டை வடிவில் ஒரு தண்டை மட்டும் விட்டு விட்டு மீதித் தண்டுகளைக் கிள்ளிவிட வேண்டும். அந்தக் கவட்டைத் தண்டின் இரண்டு முனைகளில் வளரும் தண்டுகளையும், கவட்டை போலக் கவாத்து செய்து விட்டர்.. மொத்தம் நான்கு தண்டுகள் மட்டும் வளரும். ஒவ்வொரு தண்டையும் மேலே தொங்கும் பிளாஸ்டிக் கயிறு நான்கிலும் ஏற்றி விட வேண்டும். கயிற்றின் கீழ்ப்பகுதியை செடியில் கட்டி விட வேண்டும்.
80 நாட்களில் அறுவடை !
50 – ம் நாளுக்கு மேல் பூவெடுத்துப் பிஞ்சு விட ஆரம்பிக்கும். அதன் பிறகு 15 நாளுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து பயிர்கள் மீது தெளித்து விட வேண்டும். முதல்முறை பஞ்சகவ்யா தெளித்து பத்து நாட்கள் கழித்து ‘பவர் பிளானட் ப்ளூம்’ என்னும் பயோ ஆர்கானிக் மருந்தை டேங்குக்கு (10 லிட்டர்) 20 மில்லி வீதம் தண்ணீரில் கலந்து 10 டேங்க் தெளிக்க வேண்டும். வேறு எந்த ஊட்டங்களும் தேவையில்லை.
பச்சைக்காயாக தேவையென்றால், 65-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம். வண்ணமாக மாற வேண்டும் என்றால், 80 முதல் 90 நாட்கள் காத்திருந்து அறுவடை செய்யலாம். தொடர்ந்து மாதத்துக்கு ஏழு முறை என ஒன்பது மாதங்கள் வரை அறுவடை செய்யலாம்.
மிருதுவாகக் கையாள வேண்டும்!
சாகுபடிப் பாடம் முடித்த செளந்திரராஜன், “பெரும்பாலும் கலர் வந்த காய்களுக்குதான் நல்ல விலை கிடைக்கும். நாங்க, நல்ல நிறம் வந்தபிறகுதான் அறுவடை செய்கிறோம். முதல் முறை அறுவடை செய்த போது 300 கிலோ கிடைத்தது. அதற்கடுத்து, 400 கிலோவிலிருந்து 500 கிலோ வரைக்கும் கிடைத்தது. சராசரியாக 400 கிலோ என்று வைத்துக் கொள்ளலாம். மொத்தம் 63 அறுப்புக்கு 25,200 கிலோவுக்கு மேல கிடைக்கும். காயை ரொம்ப மிருதுவாகத்தான் கையாளனும். இல்லையென்றால் வீணாகிவிடும்.
25 ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும்!
ஒரு தடவை குடில் அமைத்தால் 25 வருடம் வரைக்கும் கூடத் தாங்கும். ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மராமத்து செய்தால் போதும். இந்த பிளாஸ்டிக் ஷீட்டை மாற்றுவதற்கு 87,000 ரூபாய் ஆகும். குடில் அமைப்பதற்கு ஆறு லட்ச ரூபாய் வரை செலவாகும். அதில் 50 சதவிகிதம் மானியம் கிடைக்கும். முதல் வருடத்திலேயே மொத்தச் செலவையும் எடுத்து விட முடியும். இரண்டாவது வருடத்திலிருந்து வருடத்திற்கு 7 லட்ச ரூபாய் வரைக்கும் லாபம் பார்க்க முடியும்” என்றார், சந்தோஷமாக
தொடர்புக்கு,
செளந்திரராஜன், அலைபேசி : 96884 - 74260

 


ஜீரோ பட்ஜெட் முருங்கை

குழம்பு, வெஞ்சனம், அவியல் என அனைத்து வகையான உணவுகளுக்கும் பயன்படும் வெங்காயம், தக்காளி, தேங்காய் போன்ற காய்கறிகளில் முருங்கையும் ஒன்று. அதனால்தான் ஆண்டு  முழுவதுமே அதற்கு சந்தையில் கிராக்கி, அதுவும் முகூர்த்த நாட்கள், விரத காலங்களில் சொல்லவே வேண்டியதில்லை. அவ்வளவு உச்சத்திலிருக்கும் முருங்கையின் விலை. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த அரவிந்தன். இத்தகைய முருங்கையை சாகுபடி செய்து வரும் தன் அனுபவங்களை பற்றி சொல்கிறார். “உழுதவன் கணக்குப் பார்த்தா உழக்கு கூட மிஞ்சாதுனு சொல்லுறதெல்லாம் மத்த பயிர்களுக்கு வேணும்னா பொருந்தலாம். முருங்கைக்குப் பொருந்தாது. ‘முருங்கையைப் போட்டவன் வெறுங்கையா நின்னதுல்ல’னுதான் நாங்களே சொல்வோம். அதனால் எங்கள் பகுதி முழுக்க முருங்கை சாகுபடி செய்துக்கிட்டிருக்கோம்.

“எங்களுக்கு சொந்தமா கிணறோட நாலு ஏக்கர் நிலமிருக்கிறது. செம்மண் பூமிதான். அதில் எங்கப்பா காலத்தில் இருந்தே ரெண்டரை ஏக்கரில் யாழ்ப்பாணம், குருஷ், சாகவச்சேரி, பி.கே.எம்-1 இப்படி மரமுருங்கை, செடிமுருங்கைனு பல ரகங்கள்ல 500 முருங்கை மரங்கள் இருக்கிறது. முருங்கை மரங்களுக்கு இப்போ பதினெட்டு வயதாகிறது. நான் விவசாயத்துக்கு வந்தப்பொழுது ரசாயன முறையில்தான் ஆரம்பித்தேன். இரண்டு வருடத்துக்கு முன்னர் தற்செயலாக பசுமை விகடனைப் படிக்கிற வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்தே தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அப்படித்தான் ஜீரோ பட்ஜெட் எனக்கு அறிமுகம். ‘அப்படி என்னதான் அதுல இருக்கு’னு தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டு நாட்டுமாடு ஒன்றை வாங்கினேன். சாணம், கோமூத்திரத்தை வைத்து ஜீவாமிர்தம் தயாரிக்க, வாழை, முருங்கைனு கொடுத்தேன். இரண்டு தடவை ஜீவாமிர்தம் கொடுத்ததுமே பியிர்ல செழுமை கூடி நல்ல வித்தியாசம் தெரிஞ்சது. அந்த நிமிடமே ரசாயனங்களுக்கு விடை கொடுத்துவிட்டேன். தொடர்ந்து ஜீவாமிர்தம் பாய்ச்சுனப்பொழுது பூச்சிகளோட தாக்குதலும் குறைவாக இருந்ததும், நான் இயற்கை விவசாயத்துக்கு மாறினதுக்கு ஒரு காரணம். என் தோட்டத்து முருங்கை மரங்களில் பூச்சிகள் தாக்காம இருக்கறதைப் பக்கத்து விவசாயிகளெல்லாம் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.விளையாட்டாகி ஆரம்பித்தது இன்னிக்கு எனக்கு வருமானத்தை அள்ளிக் கொடுத்துட்டு இருக்கிறது. நான் செடிகளா எந்த முருங்கையையும் வைக்கவில்லை. என் தோட்டத்தில் இருக்கிற மரங்களில் இருந்து கிளைகளை ஒடித்துத்தான் நட்டேன்.

ரகத்துக்கு ரகம் இடைவெளி மாறும்!

மர முருங்கைக்கு செம்மண் மிகவும் ஏற்றது. மழைக் காலங்களில் முருங்கை நடவு செய்யும்போது ‘முருங்கைப் போத்து’ (முருங்கைக் கிளை ) அழுகி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, வெயில் காலங்களில் (மார்ச் மாதம்) நடவு செய்வது நல்லது. அதிகமாக நீர் பாய்ச்சுவதும் தேவையில்லாத வேலை என்பதால், சொட்டு நீர்ப் பாசம் அமைத்துக் கொள்வது நல்லது. நடவுக்கு இரண்டரை அடி நீளமுள்ள முருங்கைப் போத்துக்களை தரமான தாய்மரத்தில் இருந்து சேகரிப்பது அவசியம். மர முருங்கையைப் பொறுத்தவரை ஒவ்வொரு ரகத்துக்கும் நடவுக்கான இடைவெளி வேறுபடும். யாழ்ப்பாணம் மற்றும் பி.கே.எம்-1 ஆகிய  ரகங்களுக்கு 15 அடி இடைவெளி தேவை.  குருஷ் ரகத்துக்கு 20 அடியும், சாகவச்சேரிக்கு 25 அடியும் இடைவெளி தேவை. பொதுவாக 15 அடிக்கு மேல இடைவெளி தேவை. பொதுவாக 15 அடிக்கு மேல இடைவெளி இருந்தால்… முருங்கை மரங்களில் நல்ல காய்ப்பு இருக்கும். ஒவ்வொரு ரகங்களில் கிடைக்கும் மகசூலும் வேறுபடும் என்பதால், இடைவெளி அதிகரிக்கும் போது மரங்களின் எண்ணிக்கை குறைவதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. சராசரி மகசூல் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கும். தேர்வு செய்யும் ரகத்துக்கேற்ற இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்கு குழி எடுத்து, குழியின் நடுவில் முருங்கைக் கிளையை நடவு செய்து மண்ணை நன்கு அழுத்திவிட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
இரண்டரை அடி நீளக் கம்பில் ஒரு அடி மண்ணுக்குள்ளும் ஒன்றரை அடி குழிக்கு மேலும் இருக்கும். வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். அதிகமாக தண்ணீர் பாய்ச்சினாலும் கம்பு அழுகி விடும் வாய்ப்பு இருப்பதால், காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருக்க வேண்டும். ஜீரோ பட்ஜெட் முறை என்பதால், பெரிய அளவில் பராமரிப்புக்கானத் தேவை இருக்காது.

பத்து நாட்களுக்கு ஒரு முறை, பாசன நீருடன் மரத்துக்கு அரை லிட்டர் என்ற கணக்கில் ஜீவாமிர்தத்தைக் கலந்து விட வேண்டும். அதிகமாகக் கொடுத்தாலும் பிரச்சனையில்லை. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்தின் அடியிலும் சிறிய பள்ளம் எடுத்து மரத்துக்கு பத்து கிலோ தொழுவுரத்தை இட்டுக் குழியை மூடிவிட வேண்டும். வருடத்துக்கு ஒரு முறை மரங்களின் பக்கக் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். காய்ப்பு அதிகம் இல்லாத ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கவாத்து செய்வது நல்லது. முருங்கையில் பொதுவாக நூற்புழுத் தாக்குதல் இருக்கும். இலை, பூ, காம்புகளை இப்புழு சாப்பிட்டுவிடும். இதே போல கங்கணம் பூச்சி, முருங்கையின் வேரைத் தாக்கி மரத்தையே அழித்து விடும். முருங்கையின் இன்னொரு முக்கிய எதிரி தேயிலைக் கொசு. இவை மொத்தமாகப் படையெடுத்து வந்து மரத்தில் உள்ள அனைத்து இலைகளையும் சாப்பிட்டு மரத்தையே மொட்டையடித்து விடும். இவை தாக்கினால் இயற்கைப் பூச்சி விரட்டிகளை உபயோகப்படுத்தி கட்டுப்படுத்தலாம். பொதுவாக ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் பூச்சித் தாக்குதல் அவ்வளவாக இருக்காது. நடவு செய்த நான்காம் மாதத்தில் இருந்தே மரங்கள் காய்க்கத் தொடங்கி விடும். ஆனால், இரண்டாம் வருடத்தில் இருந்துதான் அதிகளவில் காய்கள் கிடைக்கும். வருடத்துக்கு எட்டு மாதங்கள் வரை கிடைக்கும். அதிக மழை பொழியும் நேரங்களில் காய்க்காது.

இரண்டரை ஏக்கரில் ஆண்டுக்கு 60 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். சரியான முறையில் கவாத்து செய்து பராமரித்து வந்தால், பல ஆண்டுகள் வரை மரங்கள் காய்த்துக் கொண்டிருக்கும். அதிக வயதாகி மகசூல் குறையும் காலங்களில் மரங்களை அழித்து புதிதாக நடவு செய்து கொள்ளலாம். சாத்தான்குளத்தில் போலையர்புரம் பகுதியில் முருங்கைக்காய் கொள்முதல் செய்யுறதுக்கு ஏகப்பட்ட கடைகள் இரக்கிறது. தினமும் ஏகப்பட்ட விவசாயிகள் டூ விலர்ல, ஆட்டோனு முருங்கைக் காய்களை  கொண்டு போய் கொடுப்பாங்க. இங்கே இருந்து வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதியாகிறது. ஆனால் நான் திருநெல்வேலிச் சந்தையிலதான் காய்கள் விற்கிறேன். எனக்குத் தெரிந்து கிலோ எட்டு ரூபாய்க்கு குறைந்து விற்றதில்லை. நல்ல சீசன் நேரங்களில் கிலோ நாற்பது, ஐம்பது ரூபாய் வரை கூட போகும்.

சராசரியா வருடத்துக்கு 50 டன் காய்களுக்கு குறைந்தபட்ச விலையாக எட்டு ரூபாய்னு வைத்துக் கொண்டாலே 4 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். ரசாயன முறையில் செய்த பொழுது ஆன செலவை விட, இப்போ வருடத்துக்கு முப்பதாயிரம் ரூபாய் வரைக்கும் செலவு குறைந்திருக்கிறது. அதே சமயம், கொஞ்சம் கொஞ்சமாக மகசூல்  கூட  ஆரம்பித்திருக்கிறது. அதில்லாமல் காய்கள் நன்றாக திரட்சியாக இருக்கிறதால் கழிவுகள் அதிகமாக வருவது இல்லை. தோட்டம் முழுவதும் மூடாக்குப் போட்டு, சொட்டுநீர்ப் பாசனத்தைத் தெளிப்பு நீர்ப்பாசனமாக மாற்றலாம்னு இருக்கிறேன். அதே மாதிரி இன்னமும் ஜீவாமிர்தத்தை அதிகப்படுத்தி மழைக் காலங்கள்லயும் காய்களைக் காய்க்க வைக்கிறதுக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கிறேன். அதையெல்லாம் பண்ணிவிட்டால் இன்னும் அதிகமான மகசூல் கிடைக்கும்னு எதிர்ப்பாக்கிறேன்.

தொடர்புக்கு : அரவிந்தன்
அலைபேசி : 99412-04063


ஈரியோபைட் சிலந்திக்கு கற்றாழை! பூச்சிகளை விரட்டும் மூலிகை அஸ்திரங்கள்

விண்ணோடும் முகிலோடும் விளையாடி அருகில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்… காயப்பட்ட பச்சை புடலங்காய்களாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படர்ந்து கிடக்கும் நெல் வயல்கள்… இடையிடையே தோகைத் தோரணம் வீசும் கரும்புத் தோட்டங்கள்… இப்படி இயற்கையன்னை ஜீவனோடு வாழும் கொழுமம் கிராமத்தில்… இயற்கை வேளாண்மையோடு… மூலிகை ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார் 75 வயது பெரியவர் பிறைசூடிப் பித்தன். உடுமலைப்பேட்டையில் இருந்து பழநி செல்லும் வழியில்தான் இருக்கிறது இந்த கொழுமம். இங்கேயுள்ள தன்னுமையத் தோட்டத்தில், மஞ்சள்வெயில் மருதாணி பூசும் மாலை நேரத்தில் உலாவிக் கொண்டிருந்த அந்தப் பெரியவரை சந்திப்போம். மகிழ்ச்சி பொங்க வரவேற்று பேச ஆரம்பித்தார்.

அவருக்கு மொத்தம் 37 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அது 30 ஏக்கருக்கு கிணற்றுப் பாசனம். 7 ஏக்கரில் அமராவதி ஆற்றுப் பாசனம் நடக்கிறது. கடந்த நான்கு வருஷமாக முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் தான் செய்கிறார். 10 ஏக்கர்கரில் தென்னை, 20 ஏக்கரில்70 மாமரங்கள், 300 உரிகம்புளி மரங்கள், 500 பெருநெல்லி, 500 சப்போட்டா மரம் வைத்திருக்கிறார். ஊடுபயிராக ஏகப்பட்ட மூலிகைச் செடிகளை வைத்திருக்கிறார். தென்னை மற்றும் மா ஆகிய பயிர்களில், தான் கடைபிடிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றி விவரித்தார். தென்னை முழுவதும் சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளார். இந்த நிலங்களில் உழவு போட்டு நான்கு வருடமாகிறது. முள், விஷச்செடிகளைத் தவிர மற்றச் செடி, கொடிகளை அகற்றுவதில்லை. பாசன நீருடன் பஞ்ச காவ்யா, அமுதக்கரைசல் கலந்து போகும்படி பம்ப்செட் குழாயில் டேங்க் இணைந்துள்ளேன். ஒவ்வொரு பாசனத்திலும் பஞ்சகாவ்யா, அமுதக்கரைசல் என மாறி, மாறி சென்று கொண்டே இருக்கும். தென்னை மரத்தை சுற்றிலும் சோற்றுக்கற்றாழை பயிர் செய்துள்ளேன். கற்றாழையின் கசப்புத் தன்மை, தென்னை வேர்களுக்கு போகிறது. இணம் குரும்பைகள் அதிக அளவில் உதிர்வதும் நின்றுவிட்டது.

சராசரியாக ஒரு மரத்தில் இருந்து, 40 நாட்களுக்கு ஒரு முறை 20 முதல் 25 முற்றிய காய்களை அறுவடை செய்கிறேன். தேங்காயின் தரம், கொப்பறையின் பிழிதிறன் அதிகரிக்கிறது. ஆண்டுக்கு  இருமுறை மரத்துக்கு மரத்துக்கு 10 கிலோ தொழுவுரமும், ஒரு முறை 5 கிலோ மண்புழு உரமும் கொடுக்கிறார். இயற்கை உரங்களை பருவமழை காலத்துக்கு முன்பாக கொடுப்பது மிகவும் சிறந்தது என்பதால், அதை கடைபிடிப்பதாக கூறுகிறார். தொடர்ந்து தோப்பினுள் விழுகின்ற தென்னை மட்டைகளை வெட்டி, மரத்தைச் சுற்றிலும் முடாக்காகப் போட்டு விடுவதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் வெயில் காலங்களில் ஈரம் காக்கப்படுவதுடன், மட்கி எருவாகவும் மாறிவிடுகின்றன தென்னை கழிவுகள்.

மாமரங்கள், தை மாதம் பூவெடுத்து பிஞ்சு பிடிக்கும் தருணத்தில் 500 மில்லி பஞ்சகாவ்யாவை, 10 லிட்டர் நீரில் கலந்து புகைமூட்டம் போல வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும். இப்படி வாரம் உணுருமுறை தெளிக்க வேண்டும். இப்படி செய்வதால், பூக்கள் எல்லாம் உதிராமல் நிற்கும். காய்கள் வளரும் சமயத்தில் மீன் அமிலம்  50 மில்லியை பத்து லிட்டர் நீரில் கலந்து, இரண்டு முறை தெளிக்க வேண்டும். காய்கள் அமைத்தும் தரமாக வளர இது அவசியம். அமுதக்கரைசல் இரண்டும் கலந்து செல்வதால் வேர் அமுகல் நோய் தாக்குவதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை கவாத்து செய்த கையோடு மழைக் காலங்களில் மரத்துக்கு 10 கிலோ தொழுவுரம் இழுவது அவசியம். பழஈக்களின் ‘ஸார்வாக்கள்’ தோலைச் சுரண்டி, சேதப்படுத்தும். அதைத் தவிர்க்க மூலிகை மருந்து தயாரித்துப் பயன்படுத்துகிறார்.

மாமரத்துக்கு மட்டுமல்ல… தோட்டத்தில் இருக்கின்ற சர்போட்டா, நெல்லி, உரிகம்புளி என எல்லா பழப்பயிர்களுக்கும் அதே முறையைத்தான் கடைபிடிக்கிறார்.தொழில்நுட்பங்களை பேசி முடித்த விறைசூடிப்பித்தன், இயற்கை முறையில் காய்கறி சாகுபடியும் செய்கிறார். ஆற்றுப் பாசனத்தில் 6 ஏக்கர்களில் ஒன்றை நாற்று முறையில் நெல் சாகுபடி செய்து, ஏக்கருக்கு 25 குவிண்டால் மகசூல் எடுக்கிறார். இயற்கை விவசாயம் செய்வதால் அவருக்கு அதிகமான மகசூல் கிடைப்பதில்லை. ஆனால் மற்ற இரசாயன விவசாயிகளுக்கு கிடைக்கிற அதே அளவுக்கு கிடைக்கிறது. அதே சமயம் அவர்கள் அளவுக்கு இவர் செலவு செய்வதில்லை என்கிறார்.நோய் இல்லாத அடுத்த தலைமுறைக்கான உணவையும், மூலிகைகளையும் விட்டுச் செல்கிறேன் என்ற பெருமையே போதும் என விடைபெற்றார்.  


பஞ்சமில்லாமல் கொடுக்கும் பசுமைக்குடில்

காய்கறி சாகுபடிக்கு நாற்றங்கால் அமைத்துவிட்டு ‘மண்ணு சரியில்ல, மழை பெய்யல, வெயில் கொளுத்தது, காத்தடிக்குது’ என்றெல்லாம் புலம்பும் விவசாயியா நீங்கள்? உங்களைப் போன்றோருக்குக் கைகொடுக்கவே காத்திருக்கிறது, நிழல்வலைப் பசுமைக்குடில்’ தொழில்நுட்பம். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்னரே இங்கே இத்தொழில்நுட்பம் அறிமுகமாகிவிட்டாலும், நாற்றுப் பண்ணைகள் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் அதிகமாக இதைப் பயன்படுத்தி வந்தனர். தற்போதுதான் பரவலாக காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளும் நாற்று உற்பத்திக்காக இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அவர்களில் ஒருவராக திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகேயுள்ள குங்குமப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி, இந்தப் பசுமைக்குடில் தொழில் நுட்பத்தில் நல்ல பலன் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர்களின் அனுபவத்தைக் கூறுகையில்!

எனக்கு கிணற்றுப் பாசனத்தோட நான்கு ஏக்கர் நிலம் இருக்கிறது நல்ல செம்மண் பூமிங்கிறதால் மக்காச்சோளம், வெங்காயம், மிளகாய்னு மாற்றி மாற்றி சாகுபடி செய்வேன். சுத்துப்பட்டு முழுக்கவும் தக்காளி, மிளகாய், கத்திரினு காய்கறி விவசாயம்தான் பிரதானம். அதுக்கு விவசாயிகளே நாற்று உற்பத்தி பண்ணிக்குறதால் ஏகப்பட்ட சிரமங்கள் இருந்தது. நாற்றங்கால் போட்டால் விதைத்ததில் முக்காவாசிதான் முளைத்து வரும். அதுலயும் எல்லா நாற்றும் ஒரே அளவாக இருக்காது. வெயில், மழைப் பிரச்னை வேற. அதனால்தான் பெரும்பாலும் நாங்க விலையைப் பற்றிக் கவலைப்படாம நர்சரியில் போய் தேவைப்படுகிற நாற்றுகளை வாங்கிட்டு வந்துகிட்டிருந்தோம். அந்தமாதிரி சமயத்தில்தான் தோட்டக்கலைத்துறை கருத்தரங்கு ஒண்ணுல கலந்துக்குறதுக்கு வாய்ப்பு கிடைத்தது. ‘விவசாயிகள் குழுவா வந்தால் நாற்றுப்பண்ணை, பசுமைக்குடில், பழப்பயிர் சாகுபடி பண்றதுக்கெல்லாம் மானியம் கிடைக்கும்னு சொன்னாங்க. உடனே எங்க பகுதியிலிருந்து இருபது பேரைத் திரட்டி குழுவை உருவாக்கி ‘நிழல்வலைப் பசுமைக்குடில் நாத்துப்பண்ணை’ அமைக்கற வேலைகளை ஆரம்பித்தேன். நீர் வள, நில வளத்திட்டத்தில் ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள உபகரணங்களை மானியமாக கொடுத்தாங்க. அதை வைத்து என்னோட நிலத்துலயே பத்து சென்ட்ல 300 சதுர மீட்டரில் பசுமைக் குடிலை அமைத்தேன்.

ஆரம்பத்தில் எங்க குழு உறுப்பினர்களோட தேவைக்கேற்ற அளவுக்கு ஒரு லட்சம் நாற்றுக்களை உற்பத்தி பண்ணிக்கிட்டிருந்தேன். மற்ற விவசாயிகளும் நாற்று கேட்க ஆரம்பித்ததால் சொந்த செலவுல இப்பு மூன்று லட்சம் நாற்றுகளை உற்பத்தி பண்ணுகிற அளவுக்கு 700 சதுர மீட்டர் அளவுக்கு பசுமைக் குடிலை விரிவுபடுத்தியிருக்கிறேன். நிலத்துல சமமான பகுதியில் பசுமைக் குடிலை அமைத்து அதுல ஃபாகர்னு சொல்ற புகை மூட்டம் மாதிரி நீர் தெளிக்கிற அமைப்பை அமைத்து கொள்ள வேண்டும். பசுமைக் குடில் இருக்குற தரைதளத்தின் மண்ணைப் பயன்படுத்தி, 4 அடி அகலத்தில் ஒன்றரை அடி உயரத்துக்கு பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்தியோட நீளத்தை நம்ம குடிலின் அளவுக்கு ஏற்ற மாதிரி கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். பாத்தி அமைத்து பின்னாடி, பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து அதை மூடி விட வேண்டும். மேலதான் நாற்று உற்பத்தி பண்ற குழித்தட்டை வைக்க வேண்டும். ஒரு தட்டில் 98 குழிகள் இருக்கும். 100 அடி நீளத்துக்குப் பாத்தி அமைத்தால் அதில் 200 தட்டுகளை வைக்க முடியும்.

தட்டுகளில் உள்ள குழிகளில், ஊட்டமேற்றிய தேங்காய் நாரை நிரப்பணும். ஒரு தட்டுக்கு ஒரு கிலோ நார் தேவைப்படும். அதற்குப் பிறகு ஒவ்வொரு குழியிலயும் ஒரு விதையை விதைக்கணம். தினமும் ஃபாகர் மூலமா 10 நிமிஷம் தண்ணி பாய்ச்ச வேண்டும். களைகள் வந்தா எடுத்து விட வேண்டும். வேற பராமரிப்பு எதுவும் தேவைப்படாது. பசுமைக்குடிலுக்கள் ஒரே மாதிரியான வெப்பநிலை பராமரிக்கப்படுறதால் எல்லா நாற்றுகளும் ஒரே அளவுல முளைத்து வரும். அதில்லாமல் பூச்சிகள், பூஞ்சணத் தாக்குதல் இல்லாம இருக்கும். தக்காளி நாற்று 22 நாளில் உற்பத்தியாகிவிடும். காலிஃப்ளவர் நாற்று 25 நாள்லயும்  மிளகாய், ப்பாளி நாற்றுகள்  40 நாள்லயும் உற்பத்தியாகிவிடும்.பப்பாளி நாற்றுக்கு குழித்தட்டு போதாது.

அதற்கு மட்டும் பெரிய அளவுல இருக்கிற பிளாஸ்எக் டம்ளர்களைப் பயன்படுத்தலாம். இதுல முக்கியமானத் தொழில்நுட்பம் நிழல்வலைப் பசுமைக் குடிலும், ஃபாகர் அமைப்பு மட்டும்தான். அது மூலமா எந்த நாற்றுக்களை வேணும்னாலும் உருவாக்கிக்க முடியும். குடிலுக்குள்ள நாற்று உருவாக்குறப்போ அதுக்கு பட்டமெல்லாம் கிடையாது. வருஷம்  முழுதும் உற்பத்தி பண்ண முடியும். பெரியளவுல இந்தக் குடிலை அமைத்து விவசாயம் செய்கிறப்போது பட்டமில்லாமல் வருஷம் முழுதும் காய்கறி சாகுபடி பண்ண முடியும். இந்தக்  குடிலுக்கு பயன்படுத்தற வலை 3 வருடத்துக்குத்தான் தாங்கும். அதற்குப் பிறகு புதிதாகமாத்திவிட வேண்டும். 40 நாளுக்குள்ள சராசரியாக 5 லட்சம்கிற கணக்கில் வருடத்துக்கு 45 லட்சம் நாற்றுகள் உற்பத்தி பண்ண முடியும்.ஒரு நாற்றுக்கு சராசரியாக 7 பைசா லாபம் கிடைக்கும்.17 சென்ட் நிலத்தில் வருடத்துக்கு  சராசரியாக 3 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

தொடர்புக்கு : வேலுச்சாமி
அலைபேசி : 99439-55505


பாக்கு கை கொடுக்கும் காசு மரம்

இந்தியா உட்பட பல நாடுகளில் தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. தாம்பூலத்துக்கு பாக்கு முக்கியமான கூட்டுப்பொருள்.இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 1,50,000 டன்னுக்கு மேல் பாக்கு உற்பத்தியாகிறது.இது பணப்பயிர் வரிசையில் உள்ளது.சில இடங்களில் இதை ‘காசு மரம்’ என்று கூட அழைக்கின்றனர்.
பாக்கு,பருவகால சூழ்நிலையைப் பொறுத்து உயரமாக வளரக்கூடிய, கிளை இல்லா மர வகையைச் சேர்ந்த,வெப்ப மண்டலப் பயிர், கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் வரை உயரம் உள்ள பகுதிகளில்,15 டிகிரி முதல் 38 டிகிரி சென்டி கிரேட் வரையான வெப்பநிலை நிலவுமத் இடங்களில் இம்மரம் நன்கு வளரும்.வடிகால் வசதியுள்ள அனைத்து வகை மண்ணிலும் வளரக்கூடிய இப்பயிருக்கு,கொஞ்சம் நிழல் அவசியம்.அதனால் தென்னையில் ஊடுபயிராக பயிரிடுவது மிகவும் சிறந்தது.ஏறத்தாழ பாக்கு மரத்தின் இலைகள்,தென்னை மரத்தின் இலைகளைப் போலவே இருக்கும்.

பாக்கு மரத்தைப் பொருத்தவரை நாற்றுகளை வாங்கி வந்து நடுவது அவ்வளவாக நல்லதல்ல.நேரடி விதைப்பு செய்வதுதான் சிறந்தது. நாற்பது வயதுள்ள,நல்ல முறையில் வளர்ச்சியடைந்துள்ள தரமான மரத்தைத்தான் தாய்மரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.அதிலிருந்து நன்கு முதிர்ந்து தரையில் உதிரும் விதைகளை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு விதையும் 40 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும்.அப்படிச் சேகரித்து விதைகளை நீரில் போட்டு எந்தெந்நத விதைகளின் காம்புகள் மேல் நோக்கி இருக்கின்றனவோ, அந்த விதைகளை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இவைதான் நடவுக்கேற்ற தரமான விதைகள்.சேகரித்து வைத்திருக்கும் விதைகளை 20 நாட்கள் வரை நிழலில் காயவைத்து,மாட்டுச்சிறுநீர்,கொஞ்சம் நீர், நாட்டுப் பசுஞ்சாணம் ஆகியவற்றோடு சேர்த்து... சேறு போல் பிசைந்து நிழலில் வைத்துவிட வேண்டும்.இரண்டு மாதங்களில் விதைகள் முளை விட்டுவிடும்.முளை விடாத விதைகளை நீக்கிவிட்டு,மற்றவற்றை மீண்டும் ஒரு முறை நிலத்து மண்,சாணம்,நீர் ஆகியவற்றோடு கலந்து நிழலில் வைத்து,ஈர வைக்கோலை மூடாக்காகப் போட வேண்டும்.

நிலத்தில் தென்னைக்கு இடையில் இரண்டு சென்டி மீட்டர் அளவுக்கு குழி தோண்டி, குருத்து மேல் நோக்கி இருக்குமாறு விதைகளை நடவு செய்ய வேண்டும். அதற்கு முன் பீஜாமிர்தத்தில் விதைநேர்த்தி செய்ய வேண்டியது அவசியம். இரண்டு மரங்களுக்கு இடையில் 9 அடி இடைவெளி இருக்க வேண்டும். விதைத்த பிறகு, குழியில் ஆற்றுமணலைப் போட்டு அழுத்தி விட்டு, ஜீவாமிர்தத்தைத் தெளிக்க வேண்டும். பின், அது வளர்ந்து வரும் வரை அதைச் சுற்றியுள்ள களைகளை அகற்ற வேண்டும். அருகில் துவரை விதைகளைத் தூவி விட்டால் ... பாக்குக்குத் தேவையான நிழல் கிடைக்கும். களைகளையும் கட்டுப்படுத்தி விடலாம். நேரடி விதைப்பில்லாமல் நாற்று நடவு செய்ய விரும்புகிறார்கள், நாற்றங்கால் அமைத்து நாற்று உற்பத்தி செய்து கொள்ளலாம். ஆனால், வியாபார ரீதியாக இல்லாமல் சொந்தத் தேவைக்கு மட்டும் நாற்றுகளை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்.

பாக்கு நடவு செய்யப்போகும் நிலத்துக்கு அருகில், அதேசமயம் நீர் ஆதாரம் உள்ள பகுதியாகப் பார்த்து நாற்றங்காலை அமைக்க வேண்டும். மணற்பாங்கான நிலமாகவும், நல்ல சூரிய வெளிச்சம் கிடைக்கும். இடமாகவும் இருக்க வேண்டும். நேரடியாக வெயில் படாமல், சூரிய ஒளி கசிந்து வருவது போல மரங்களுக்கிடையில் நாற்றங்காலை அமைக்கலாம். மரங்கள் இல்லையென்றால், இலை, தழைகளை வைத்து பந்தல் போட்டுக் கொள்ளலாம். வடிகால் வசதியோட கூடிய தளர்வான மண் உள்ள நிலத்திலும் நாற்றங்கால் அமைக்கலாம்.
நிலத்தைத் தேர்வு செய்தவுடன் மரக்கலப்பை கொண்டு அதனை உழுது மட்கிய வைக்கோலை நிலத்தில் பரப்ப வேண்டும். தொடர்ந்து மணல் மற்றும் சலித்த பண்ணை எரு ஆகியவற்றைக் கலந்து தூவ வேண்டும். அதன் மேல் காய்ந்த வேப்பிலைகளைப் பரப்ப வேண்டும். பிறகு, இவை அனைத்தும் நிலத்தின்.

மேல்மண்ணோடு நன்கு கலக்குமாறு நிலத்தை சமப்படுத்தி ஜீவாமிர்தக் கரைசலைத் தெளிக்க வேண்டும். அதன் மீது, சிலத்த பண்ணை எருவைத் தூவி விட வேண்டும். பிறகு, முளை ட்டிய பாக்கு விதைகளை பீஜாமீர்தத்தில் நனைத்து, வரிசைக்கு வரிசை அரை அடியும், விதைக்கு விதை கால் அடியும் இருப்பது போல 2 செ.மீ. ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். விதைகளைச் சுற்றி மணலை இட்டுஅழுத்தி ஜீவாமிர்தக் கரைசலைத் தெளிக்க வேண்டும். தொடர்ந்து ஜீவாமிர்தம் கலந்த நீரைப் பாசனம் செய்ய வேண்டும். மாதத்துக்கு இரு முறை மேல் தெளிப்பாகவும் கொடுக்க வேண்டும். மூன்று மாதத்துக்குள் முளைப்பு எடுத்து ஒன்றரை வருடத்தில் நாற்று தயாராகி விடும்.
தென்னை நடவு செய்யும்போதே அவைகளுக்கு இடையில் 9 அடி இடைவெளியில் பாக்கு நாற்றுகளையும் நடவு செய்து விடலாம். நாற்றுக்குத் தேவையான அளவு குழியைத் தோண்டினால் போதுமானது. பெரியக் குழிகள் தேவையில்லை. ஜீன் மாதம் நடவுக்கேற்றது. நடவு செய்து எரு, ஆற்று மணல் ஆகியவற்றைக் கலந்து நாற்றுக்களைச் சுற்றி இட்டு அழுத்தி விட வேண்டும். தொடர்ந்து தென்னைக்குச் செய்வது போலவே ஜீவாமிர்தம் கலந்த நீரைப் பாசனம் செய்ய வேண்டும். ஜீவாமிர்தத் தெளிப்பும் அவசியம். முதல் இரண்டு ஆண்டுகள் வரை நாற்றுகளுக்கு நிழல் தேவை. அதனால் கிளரிசீடியா, துவரை ஆகியவற்றை பாக்கு நாற்றில் இருந்து இரண்டடி இடைவெளிவிட்டு நடவு செய்யலாம். நாற்றுகளைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாற்று நடவு செய்த ஆறு முதல் எட்டு ஆண்டுகளில் காய்க்கத் துவங்கும். காய்கள் ஆரம்பத்தில் பச்சை நிறத்திலிருக்கும். பின் முற்றி, ஆரஞ்சு கலந்த பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். ஒன்றிரண்டு காய்கள் கீழே விழுந்தால் அறுவடைக்குத் தயாராகி விட்டது என்று அர்த்தம். ஒரு மரத்தில் 3 முதல் 4 குலைகள் இருக்கும். ஒரு குலையில் 250 முதல் 300 காய்கள் காய்க்கும். ஒரு மரத்திலிருந்து ஆண்டு தோறும், ஒன்றரை முதல் இரண்டரை கிலோ வரை பாக்கு கிடைக்கும். சந்தையின் தேவைக்கேற்றவாறு பச்சையாகவோ, பாதி உலர்த்தியோ அல்லது முழுவதும் உலர்த்தியோ விற்பனை செய்யலாம்.


பெருத்த லாபம் தரும் பெரு நெல்லி + சப்போட்டா கூட்டணி

நாகர்கோவிலில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேல தெரிசனங்கோப்பு.தென்னை, பெருநெல்லி என தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்கிறார் மணியன்.“கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த காலகட்டத்திலேலே அப்பாவோட சேர்ந்து விவசாயத்தையும் பார்த்து கொண்டுதான் இருந்தேன். அந்த நேரத்தில் எங்களுக்கு முழுக்க நெல் விவசாயம்தான.கட்டுபடியான விலையில்லை, வேலையாட்கள் பற்றாக்குறைனு ஏகப்பட்ட பிரச்சனை.அதனால் கொஞ்சம் இடத்தில் தென்னை, வாழையை சாகுபடி செய்தோம்.எங்கள் பகுதியில் அதிகமாக காற்று வீசுகிற பகுதி. அதனால் வாழை மரங்கள் சரிந்து பெருந்தொல்லையாக இருந்தது.அந்த சமயத்தில்தான் தற்செயலாக பெருநெல்லி தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டேன். அதுதொடர்பானத்தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டு வந்த நான்,உடனடியா சாகுபடியிலும் இறங்கிவிட்டேன்.
எனக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம்  அதிகம்.நெல்லி போடணும்னு முழவு எடுத்ததும் என்னோட ரெண்டு ஏக்கர் நிலத்தை இயற்கை விவசாயத்துக்குத் தயார்படுத்தினேன். ஒரு வருடத்துக்கு எந்த விவசாயமும் பண்ணாமல், தழைச்சத்துக்காக சணப்பு விதைத்து, மடக்கி உழுது போட்டேன்.நன்றாக பக்குவப்பட்டதும், சோதனை அடிப்படையில் இயற்கை முறையில் ரெண்டு ஏக்காலேயும் பெருநெல்லியை நட்டு, ஊடுபயிரா சப்போட்டாவையும் சாகுபடி செய்தேன்.நல்ல மகசூல் கிடைக்கவே.ஐம்பது ஏக்கரில் பெருநெல்லி போட்டுட்டேன். இன்னும் ஒரு சில மாதத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும்”.

சாகுபடி முறை

நெல்லி சாகுபடிக்கு செம்மண் நிலம் ஏற்றது. அதிலும் மூன்று அடிக்கு கீழ் குறுஞ்சரல்கள் உள்ள மண்ணாக இருந்தால், மிகவும் நல்லது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மே மாதமும், மற்ற மாவட்டங்களில் ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களிலும் நடவு செய்யலாம்.நெல்லியை இயல்பான நடவு முறை, அடர் நடவு முறை என இரண்டு முறைகளில் நடவு செய்யலாம்.இயல்பான நடவு முறையில் செடிக்குச் செடி மற்றும் வரிசைக்கு வரிசை 18 அடி இடைவெளி இருப்பதுபோல நடவேண்டும்.இப்படி நடும்போது ஏக்கருக்கு 130 செடிகள் வரை நடலாம். அடர் நடவு முறையில் மரத்துக்கு மரம் மற்றும் வரிசைக்கு வரிசை பத்து அடி இடைவெளியே போதும்.இதில் ஏக்கருக்கு 430 மரங்கள் வரை நடலாம்.இயல்பு நடவு முறையில் நடவு செய்யும்போது இடைவெளி அதிகமாக இருப்பதால், ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்.
நெல்லியில் மூன்றாவது ஆண்டில் இருந்துதான் வருமானம் என்பதால்,முதல் இரண்டு ஆண்டுகளுக்கான பராமரிப்புச் செலவை ஈடுகட்ட, பயறு வகைகளைப் பயிர் செய்யலாம்.இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.பயறு வகைகளை அறுவடை செய்ததும் அதன் செடிகளையே நெல்லிக்கு மூடாக்காகப் போட்டு விடலாம்.மரவள்ளி, வாழை, சப்போட்டா எனவும் நடவு செய்து பராமரிப்புச் செலவுகளை ஈடுசெய்யலாம்.

‘நெல்லி சாகுபடிக்கு அதிக தண்ணீர் உள்ள நிலம் சரிப்பட்டு வராது, மூன்றடி ஆழம் மற்றும் மூன்றடி அகலத்துக்கு குழி எடுத்து,காய்ந்த இலை,சருகளைப் போட்டு அதன் மேல் மண்ணைப் போட்டு மூடவேண்டும்.அதற்கு மேல் பத்து கிலோ அளவு தொழுவுரத்தைக் கொட்டி,தோண்டி வைத்திருக்கும் மேல் மண்ணை போட்டு மூடிய பிறகு, நெல்லிச் செடியை நடவு செய்ய வேண்டும்.செடியைச் சுற்றி வட்டப்பாத்தி அமைத்து ஒரு கிலோ மண்புழு உரம் போடவேண்டும்.நடவு செய்த முதல் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.தொடர்ந்து முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசனம் செய்யவேண்டும்.ஆறு மாதங்களுக்குப் பிறகு, செடிக்கு வாட்டம் இல்லாமல் அவ்வப்போது தண்ணீர் பாய்ச்சினாலே போதும்.

பெருநெல்லியைப் பொறுத்தவரை ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு சமயத்தில் காய்ப்புக்கு வரும். அதற்கு ஏற்ற மாதிரி, காஞ்சன், கிருஷ்ணா, சக்கையா, என்.ஏ-7 என பல்வேறு ரகங்களையும் கலந்து நட்டால், ஆண்டு முழுவதும் வருமானம் பார்க்கலாம்.நெல்லியை நடவு செய்த நான்கு மாதங்களிலேயே பூ பூக்க ஆரம்பித்து விடும்.அவற்றை உதிர்த்து விடவேண்டும்.மூன்று வருடங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டும். அதன் பிறகு காய்ப்புக்கு அனுமதித்தால் நெல்லி ருசியாக இருப்பதுடன் மகசூலும் கூடும். நெல்லியின் ஆயுள் காலம் நாற்பது ஆண்டுகள்.ஆனால், ஒவ்வொரு பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை காய்ப்புத் திறன் குறையும்.அந்த நேரத்தில் மரத்தின் பக்க கிளைகளை வெட்டி விட வேண்டும். மீண்டும் விரல் தடிமனுக்கு கிளை வந்ததும் காய்க்க ஆரம்பித்து விடும்.

ஒரு ஏக்கரில் பெருநெல்லியும், ஊடுபயிராக சப்போட்டாவும் சாகுபடி செய்ய மணியன்  சொல்லும் செலவு -வரவு கணக்கு

விவரம்

செலவு

வரவு

குழியெடுத்தல் 20 ரூபாய்  X 130 செடி

2,600

 

நாற்று

2,600

 

நடவு

2,000

 

நீர் பாய்ச்சுதல்

1,000

 

தொழுவுரம்

1,200

 

போக்குவரத்து

2,000

 

அறுவடை

2,500

 

சப்போட்டா குழி, நடவு

2,500

 

மகசூல்: நெல்லி 4 டன்  X கிலோ 20

 

80,000

சப்போட்டா
500 கிலோ X  கிலோ 30

 

15,000

மொத்தம்

16,400

95,000

நிகர லாபம்

 

78,600


குழியெடுத்தல், செடி, நடவுச்செலவு ஒரு முறை மட்டுமே. அடுத்தடுத்த ஆண்டுகளில் அவையும் வருமானத்தில் சேர்ந்து விடும். இவர் சப்போட்டா கன்றை அரசுத் தோட்டக்கலைத் துறையில் இருந்து இலவசமாக பெற்றுள்ளதால், அதற்கான செலவும் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை (மேற்படி கணக்கு மணியன் சாகுபடி செய்யும் முறைகளை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இதை ஒப்பீட்டுக் கணக்காக மட்டுமே எடுத்துக் கொள்ளவும்).
நெல்லியை நடவு செய்த முதல் மூன்று ஆண்டுகளுக்கு மண்புழு உரம், கம்போஸ்ட் உரக்கலவையை மரத்துக்கு இரண்டு கிலோ வீதம், ஆறு மாதத்துக்கு ஒரு முறை வைக்க வேண்டும். நான்காவது ஆண்டில் மண்புழு உரம், கம்போஸ்ட் கலவையை மூன்று கிலோ வரை அடிப்பகுதியில்  இருந்து ஒன்றரை அடி தள்ளி குழியெடுத்து  அதில் போட்டு, மேல் மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும். மண்புழு உரத்தில் உள்ள பதினாறு வகை நுண்ணுயிரிகள் வெயில்பட்டு செயல்படாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், மண் போட்டு மூடி விடுவதால் நுண்ணுயிர்களின் செயல்பாடு முழுமையாகக் கிடைக்கும். முதல் நான்கு ஆண்டுகளுக்கு இதேபோல் உரங்களைக் கொடுத்தாலே மண் வளமாகிவிடும். பிறகு எந்த உரமும் தேவைப்படாது. தோட்டத்தில் உள்ள புல், களைச் செடிகளைக் களைத்து செடிகளைச் சுற்றி மூடாக்கு போட்டுக் கொள்ளலாம். இதைத் தவிர வேறு எந்தப் பக்குவமும் தேவையில்லை.

நெல்லியைப் பொறுத்தவரை சாறுண்ணி, தண்டுத் துளைப்பான் தாக்குதல் அதிகமாக இருக்கும். சாறுண்ணிகள் இலையில் உள்ள பச்சயத்தைச் சுரண்டி விடுவதால், இலைகள் வெளிறிப் போய்விடும். தண்டுத் துளைப்பான், தண்டுக்குள் சென்று தங்கி விடுவதால் மகசூலும் குறைந்து விடும். பஞ்சகவ்யா அடிப்பதன் மூலம் சாறுண்ணிகளையும், தண்டுத் துளைப்பானையும் கட்டுப்படுத்தலாம். சாதாரணமாகவே தண்டுத் துளைப்பான்களை அடையாளம் கண்டுவிட முடியும். மரங்களில் இருக்கும் இவற்றை சிறிய குச்சியை வைத்துக் குத்தி, வெளியே எடுத்து விட வேண்டும். பொதுவாக,  பிப்ரவரி முதல் மே ஜுலை முதல் செப்டம்பா என ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்யலாம். பல்வேறு ரகங்களையும் கலந்து நட்டிருந்தால், ஆண்டு முழுவதும் அறுவடை இருக்கும். ஓராண்டுக்கு ஒரு ஏக்கரில் இருந்து சராசரியாக நான்கு டன் முதல் 5 டன் வரை மகசூல் கிடைக்கும். இயற்கை முறை விளைபொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் குறைந்த பட்சம் கிலோவுக்கு 20 ரூபாயும், அதிகபட்சமாக 40 ரூபாயும் கிடைக்கும்.
சப்போட்டாவுக்கு தனியாக எந்தப் பராமரிப்பும் தேவைப்படாது. நான்கு நெல்லிக்கு மத்தியில் ஒரு சப்போட்டா என்ற கணக்கில் நெல்லியைப் போலவே குழி எடுத்து நடவேண்டும்.
“நெல்லிக்கு ஊடுபயிரா சப்போட்டாவை நட்டு வைத்தது தவிர தனியாக எந்தப் பராமரிப்பும் செய்யவில்லை. உரமும் கொடுக்கிறதில்லை. நெல்லிக்கு மட்டும்தான் உரம். ஆனாலும் சப்போட்டா நல்ல மகசூல் கொடுத்து காண்டு இருக்கிறது. சாதாரணமாக சப்போட்டாவை கிலோ 5 ரூபாய்னு வெளிவியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்கிற கடைகளில் கிலோவுக்கு 25 முதல் 30 ரூபாய் வரைக்கும் கிடைக்கிறது.
தொடர்புக்கு
மணியன்,
தெரிசனங்கோப்பு
அலைபேசி: 94431-27132


பலே வருமானம் தரும் பலா!

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள மகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் உரக்கடை வைத்துள்ளார். ஆனால் அவருடைய தோட்டத்தில் இயற்கை விவசாயம் செய்கிறார். பத்து ஏக்கரில் வாழை, அரை ஏக்கரில் உரிய பலா மரங்கள் வைத்து சாகுபடி செய்கிறார்.

பருவ மழையே பலாவுக்கு போதும்!
வண்டல், செம்மண் மற்றும் மணல் கலந்த மண்ணில் பலா சிறப்பாக விளையும். தண்ணீர் தேங்காத வடிகால் வசதியுடைய மேடட்ட நிலத்தில் மட்டுமே பலா சாகுபடி செய்ய வேண்டும். விதை மூலம் உற்பத்தி செய்த கன்றை, நல்ல காய்ப்புள்ள தாய்மரத்தில் ஒட்டக்கட்டிஇ நடவு செய்தால்தான் மரத்தின் வளர்ச்சி சிறப்பாக இருப்பதுடன், தரமான காய்களும் கிடைக்கும். முப்பது அடி இடைவெளியில் மூன்றடி ஆழமும், மூன்றடி சுற்றனவும் கொண்ட குழி எடுத்து நட வேண்டும். அதிகபட்சம் ஒரு ஏக்கரில் 50 கன்றுகள் நட முடியும். நடவுக் குழியில் 75 சதவிகிதம் தொழுவுரம் , 15 சதவிகிதம்  மண்புழு உரம், 5 சதவிகிதம் செம்மண், 5 சதவிகிதம் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து குழியை நிரப்பி, லேசாக தண்ணீர் ஊற்ற வேண்டும். மறுநாள் காலையில்தான்  கன்றை நடவு செய்ய வேண்டும்.
ஒரு மாதம் வரை, வாரம் இருமுறையும், அதன்பிறகு வாரம் ஒரு முறையும் தண்ணீர் கொடுக்க வேண்டும். இரண்டாவது ஆண்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுத்தால் போதும். மூன்றாம் ஆண்டு, கடும் கோடையாக இருந்தால் மட்டுமே தண்ணீர் தர வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் தண்ணீர் தர வேண்டியதில்லை…
நடவிலிருந்து 5-ம் ஆண்டு காய்ப்புக்கு வரும். அப்போது ஒரு மரத்துக்கு 3 முதல் 4 காய்கள்தான் கிடைக்கும். 6-ம் ஆண்டு சுமார் 8 காய்களும், 7-ம் ஆண்டு 10 காய்களும் கிடைக்கும். அதன் பிறகுதான் படிப்படியாக மகசூல் அதிகரிக்கும். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 50 முதல் 100 காய்கள் கிடைக்கும். பூ வந்ததிலிருந்து சுமார் 95-ம் நாள் காய் பரறிக்கலாம். நன்கு பழுக்கும் முன்பே பறித்துவிடவேண்டும். பழுத்துவிட்டால், இதன் வாசனை தெரிந்து பறவைகள் பழத்தை சேதப்படுத்திவிடும். அதேசமயம் இளங்காயாகவும் பறிக்கக் கூடாது. காயில் உள்ள முள்ளை ஒடித்து பார்த்தால் தண்ணீர் போல் ஒரு திரவம் வர வேண்டும். பால் போல் வந்தால் அந்தக் காயை பறிக்கக் கூடாது. காயில் உள்ள முட்கள், நன்கு அகன்று விரிந்து, கையில் குத்தாத நிலையில் இருக்கும் போது பறிக்கலாம். அப்போது காய் நன்கு முற்றி, மிக லேசான மஞ்சள் நிறத்துக்கு மாறியிருக்கும். அதுதான் பறிப்பதற்கு சரியான தருணம். பறித்த சில நாட்களிலேயே பழுத்துவிடும்.

பலா இலைகள் மண்ணில் விழுந்து மட்கி உரமாகி விடுவதால், தனியாக எந்த உரமும் தேவையில்லை. இருந்தாலும், ஆண்டுக்கு ஒரு முறை. மரக்கழ்ன் கிளைகளின் நிழல் முடியும் எல்லையில், மரத்தைச் சுற்றி ஒரு அடி ஆழமும், ஒன்றரையடி அகலமும் கொண்ட குழியை எடுத்து… அதில், மரத்துக்கு 50 கிலோ வீதம் தொழுவுரம் போட வேண்டும். ஒரு கொத்தில் இரண்டு காய்கள் மட்டும் இருந்தால்தான் தரமான பெரிய பழங்கள் கிடைக்கும். அதனால், கொத்துக்கு இரண்டு காய்களை மட்டும் வைத்தக்கொண்டு, கூடுதலாக உள்ள காய்களை மட்டும் வைத்துக்கொண்டு, கூடுதலாக உள்ள காய்களை கறியாக சமைத்துச் சாப்பிடலாம்.
மரத்தின் கீழ்ப்பகுதியில் காய்ப்பு இருந்தால், மண்ணில் பட்டு, அந்தக் காய்கள் அழுகிவிடும். அதனால் எந்த பலனும் இல்லை. மேற்பகதியில் உள்ள காய்களுக்குக் கிடைக்க வேண்டிய சத்துக்களையும் இவை எடுத்துக்கொண்டு விடும். எனவே, மிகவும் கீழ்ப்பகுதியில் பூவிடும் போதே அகற்றிவிட்டால், மற்ற காய்கள் தரமானதாக உருவாகும்.
“பூச்சினு பெருசா வர்றதில்ல. சில காய்கள்ல மட்டும் துளைப்பான் தாக்குதல் இருக்கும். ஆனா, ரசாயனப் பூச்சிமருந்துகள அடிச்சும் பலனில்லாததால நான்கு வருடமாக பூச்சிமருந்து அடிக்கறது இல்லை. அதனால, துளைப்பான் தாக்குதலால சேதமாகும். அதனால, அதை நான் பெருதாக  எடுத்துக் கொள்ளவதில்லை. ஆனா, அந்த ஐந்து சதவிகிதத்தைக் கூட கட்டுப்படுத்துவதற்கு ஏதாவது இயற்கை பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்தலாமானு யோசிச்சிட்டிருக்கேன். அதே சமயம், மேலே சொன்ன வழிமுறைகளைச் சரியா கடைபிடிச்சாலே தரமான பிலாப் பழங்களை உருவாக்கலாம்”
ஒரு ஏக்கர்ல பிலா நடவு செய்ய 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். மகசூல் கொடுத்த மரத்துக்கு, தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் அதிகபட்சமா ஆயிரம் ரூபாய் வரை செலவா வருமானமோ 10 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்”
இதுல வருஷத்துக்கு தலா 100 பழங்கள் நடுத்தரமான அளவுல இருக்கு. மரத்துக்கு மரம் சுமார் 30 அடி இடைவெளியில மொத்தம் 27 மரங்கள் இருக்கு.  இதுல வருஷத்துக்கு தலா 100 பழங்கள் கிடைக்கிற மரங்கள் 14 இருக்கு. அதுல 60 முதல் 100 சுளைகள் இருக்கும். பழம் ஒவ்வென்றும் 100 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரைக்கும் விலை போகுது.
வருஷத்துக்கு 50 பழங்கள் வரைக்கும் தர்ற மரங்கள் 13 இருக்கு. இதோட பழங்கள் ரொம்பவே பெருசா இருக்கும். அதுல 200 சுளைகள் வரை இருக்கும். ஒரு பழம்,200 முதல் 300 ரூபாய் வரைக்கும் விலை போகுது.
திருக்காட்டுப்பள்ளியில் உள்ள வியாபாரிகள் எப்போதுமே இந்தப் பழங்களை விரும்பி வாங்குவாங்க. இது எல்லாமே நாட்டுப் பிலா. தாய்மரம் நல்லா இருக்கிறதுனால இதுல ஒட்டக்கட்டின கன்றுகள் இல்லாமே அற்புதமா மகசூல் கொடுக்குது.”
தொடர்புக்கு : சுந்தரம்
திருவையாறு அருகில் , மகாராஜபுரம் கிராமம்
தஞ்சாவூர் மாவட்டம்
தொலைபேசி : 04362 - 229570

 


ஆலவயல் கத்தரிக்காய்

புதுக்கோட்டை மாவட்டம், மலையாண்ட்புரம், நடேசன்…’ஆலவயல்’ என்ற பெயரில் அழைக்கப்படும் நாட்டுக் கத்தரிக்காயைத் தொடர்ந்து  தன்னுடைய வயலில் சாகுபடி செய்து கொண்டிருக்கிறார்.
சின்னப் பிள்ளையில் இருந்தே விவசாயம்தான். எங்க அப்பாவோட சோர்ந்து வயலில் இறங்கி விவசாயத்தைக் கத்துக்கிட்டேன். இப்போ, எனக்கு சொந்தமா ரெண்டு கிணறோட நாலரை ஏக்கர் நிலமிருக்கு. மணல் கலந்த கரிசல் மண்தான். அதில. மா, பலாவும் ஒரு சிறிது நிலத்தில்  மீதியில் செண்டுமல்லி, மல்லிகை, நெல், கடலை காய்கறினு மாத்தி மாத்தி சாகுபடி செய்துகொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் நானும் ரசாயன விவசாயம் தான் செய்து கொண்டிருக்கிறேன். பின் இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். ஆலவயல் கத்தரிக்காய் சாதாரணமாகவே நல்ல ருசியோடு இருக்கும். நான் இயற்கை முறையில விவசாயம் பண்றதால கூடுதல் ருசி கிடைக்குது. அதுவே கூடுதல் விலையையும் கொண்டு வருகிறது. உழவர் சந்தையில் தான் கத்தரியை வித்துக்கிட்டு இருக்கேன். மத்தக் கத்தரிக் காய்களைவிட இதுக்கு கூடுதலாக அஞ்சு ரூபாய் விலை வைத்துத் தருகிறார்கள்.

ஆலவயல் கத்தரியை வருடம் முழுவதும் சாகுபடி செய்யலாம். குறிப்பாக ஆடிப் பட்டத்தில் செய்யும் போது விளைச்சலும் நன்றாக இருக்கும். நல்ல விலையும் கிடைக்கும். களிமண் தவிர, மற்ற எல்லா வகையான மண்ணிலும் வரும். விதைப்பதைவிட நாற்று நடவு செய்யும் போது பயிர் நன்றாக வரும். நன்றாக முற்றிப் பழுத்த காய்களில் இருந்து விதைகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். 40 சென்ட் நிலத்துக்கு நாற்று தயாரிக்க, அரைசென்ட் நிலத்தைக் கொத்திக் களை நீக்கி, இரண்டு கூடை எருவைக் கொட்டிக் கிளறி சமப்படுத்த வேண்டும். கால் கிலோ கத்தரி விதையைத் தூவி, மண்ணால் மூடி அதன் மேல் வாழைச் சருகு அல்லது தென்னை மட்டையால் மூடிவிட வேண்டும். தினம் பூவாளியால் தண்ணீர் தெளித்து வந்தால் போதும். 10ம் நாள் 300 மில்லி பஞ்சகாவ்யாவை 1 டேங்க் (16 லிட்டர்) தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 30ம் நாளில் நாற்று தயாராகி விடும். அதற்கு முன்னரே நிலத்தைத் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏர் மூலமாக குறுக்கு நெடுக்காக ஐந்து சால் உழவு செய்ய வேண்டும். டிராக்டர் என்றால், இரண்டு சால் உழவு போதுமானது. பின் ஒன்றரை அடி அகலத்தில் நீள நீளமாக பார் பிடிக்க வேண்டும். பாருக்கு குறுக்காக பத்தடிக்கு ஒரு வாய்க்கால் இருப்பது போல் அமைத்துக் கொள்ள வேண்டும். நாற்று தயாரான உடன் நிலத்தில் தண்ணீர் கட்டி, பாரின் ஒரு பக்கத்தில் ஒன்றரை அடிக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். 40 சென்டில் 2,500 செடிகள் வரை நடலாம். செடி காயாத அளவுக்கு தொடாந்து வாரம் ஒரு தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

600 கிலோ மண்புழு உரம், 20 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். இந்த உரத்தை, 15-ம் நாளில் முதல் களை எடுத்ததும், ஒவ்வொரு செடியின் தூருக்கு அருவிலும் நான்கு விரல் அளவு இடைவெளியில் ஒரு கையளவு வைக்க வேண்டும். பின் பாரைக் கலைத்து, கத்தரிச் செடி மையமாக இருப்பது போல மண்ணை அணைத்துவிட வேண்டும். 25-ம் நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை டேங்கருக்கு (16 லிட்டர்)300 மில்லி பஞசகாவ்யா கலந்து தொடர்ந்து (அறுவடை முடியும் வரை) தெளித்து வர வேண்டும். 30, 45 மற்றும் 60-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். 55-ம் நாள் மீண்டும் ஒரு முறை 200 கிலோ மண்புழு உரம் 20 கிலோ வேப்பம் பிண்ணாக்கைக் கலந்து தூருக்குத் தூர் ஒரு கையளவு வைத்து வைத்து தண்ணீர் கட்ட வேண்டும்.
நான்கு நாளைக்கு ஒரு பறிப்புனு தொடர்ந்து எட்ட மாசம் வரை காய் பறிக்கலாம். மேட்டுப்பகுதியாக இருந்தால், ஒரு வருஷத்துக்குப் பிறகும் கூட காய் கறிச்சுக்கிட்டே இருக்கலாம். ஆனா, ஏதும் நோய் வராட இருக்கணும். ஒரு பறிப்புக்கு 70 முதல் 80 கிலோ வரை காய் கிடைக்கும். ஓரு கிலோ 15 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரைக்கும் இப்ப விற்பளையாகுது.
நான் இது வரைக்கும் 35 தடவை காய் பறிச்சிருக்கேன். இதுவரை 2,450 கிலோ கிடைத்திருக்கிறது. அது மூலமா 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல வருமானம் கிடைத்திருக்கிறது. என்னோட நிலம் மேட்டுப்பகுதியத இருக்கிறதால இன்னும் நாப்பகு தடவைக்கு காய் பறிக்க முடியும். அதுல இன்னும் 2,800 கிலோவுக்கு மேல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்” என்றார் உற்சாகத்துடன்.

இடைப் பருவத்திலும் இனிக்கும் வருமானம்! மகிழ்ச்சியான மாம்பழ சாகுபடி…

 

அகஸ்தீஸ்வரம் சிற்றூரிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் இருக்கிறது முகிலன் குடியிருப்பு. இந்தப் பகுதியீல், மா விவசாயத்திலும், வியாபாரத்திலும் தனக்கென தனி முத்திரையுடன் கொடி கட்டிப் பறந்து வருகிறார் பாலகிருஷ்ணன்.
கன்னியாகுமரி மாவட்ட சீதோஷண நிலைதான் எங்களுக்கு நல்லாவே கைகொடுக்குது. சீஸன்லயும் நல்லாவே காய்க்கிற மாங்காய், இந்த இடைப்பருவத்துலயும்கூட நல்ல விளைச்சல் கொடுக்குது. என்ன.. அதுக்காக கொஞ்சம் மெனக்கெட்டு உழவு, களைனு சில வேலைகளை பாத்துட்டா போதும். இடைப் பருவத்துல காய் வரத்து ரொம்பவும் குறைவுங்கறதால.. நல்ல விலை கிடைக்கும். எனக்குப் பதினஞ்சு ஏக்கர் நிலமிருக்கு. ரெண்டு ஏக்கர்ல நெல், மூணு ஏக்கர்ல தென்னை போக, மீதி பத்து ஏக்கர்ல மாமரங்கள்தான் நிக்குது. இதுபோக தனியார் நிலம், அரசு நிலம்னு ஒரு நூறு ஏக்கரை குத்தகைக்கு எடுத்து மா அறுவடை பண்ணிகிட்டிருக்கேன். நீலம், பெங்களூரா, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த், காலப்பாடு, ஜஹாங்கீர், சுவர்ணரேகா, சுந்தரி, பைரி ஏராளமான ரகங்கள் இருக்க. இதெல்லாமே இடைப்பருவத்திலும் நல்ல மகசூலைக் கொடுக்கும்.

மா சாகுபடிக்கு, மண்ணின் மேற்பரப்பில் செம்மண்ணும், அதிலிருந்து ஐந்து அடிக்கு கீழ் சரளை மண்ணும் (கிராவல்) இருந்தால் ரொம்பவும் நல்லது. வைகாசிப் பட்டம் உகந்தது. வரிசைக்கு வரிசை முப்பதடி, மரத்துக்கு மரம் முப்பதடி இடைவெளி இருக்குமாறு.. மூன்றடி சதுரம், மூன்றடி ஆழத்துக்கு குழி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 45 குழிகள் வரும். இந்த அளவுக்கு இடைவெளி இருந்தால்தான் மாமரத்தின் காய்க்கும் காலம் அதிகமாக இருக்கும்.
குழிகளை பதினைந்து நாட்கள் ஆற விட வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழியிலும் தலா 50 கிலோ தொழுவுரத்தோடு, இரண்டு கைப்பிடி சுண்ணாம்புத் தூளை கலந்து இடவேண்டும். சுண்ணாம்புத்தூள் கலந்தால்தான் மாங்கன்றினை கரையான்கள், பூச்சிகள் அரிக்காது. சுண்ணாம்புக்கு பதிலாக பூச்சிக்கொல்லிகளையும் இடலாம். அதன்பிறகு, குழியின் நடுவில் கன்றை நடவு செய்து நீர் பாய்ச்ச வேண்டும். நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து நீர் பாய்ச்சினால் போதுமானது. மழைக் காலங்களில் நீர் பாய்ச்சத் தேவையில்லை. ஒட்டுரகக் கன்றுகளாக இருந்தால், அதில் சுற்றப்பட்டிருக்கும் துணி மண்ணில் படாமல் இருக்குமாறு நடவேண்டும். ஆறு மாத காலத்துக்கு அந்தத் துணி மண்ணில் அமிழ்ந்து விடாதபடியும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் மண்பட்டால், கரையான் ஏறி செடியை அரித்து விடும். சொட்டுநீர் அமைப்பதாக இருந்தால் நடவுக்கு முன்பே அமைத்திட வேண்டும். (இவர் சொட்டுநீர் பாசனம் அமைத்திருக்கிறார்.)

செடிகள் வேர் பிடித்து வளரத் தொடங்கியவுடன், ஒவ்வொரு மரத்துக்கு அருகிலும் அரை அடிக்கு குழி எடுத்து, அதில் 100 கிலோ சாணி, 1 கிலோ சூப்பர் பாஸ்பேட்,  1 கிலோ பொட்டாஷ், அரை கிலோ யூரியாவை வைத்து மூடி, பின் நீர் பாய்ச்ச வேண்டும். இந்த உரங்களை ஆண்டுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பருவம் முடிந்த பிறகும் இரண்டு உழவு போட்டு களைகள், புற்களை அகற்ற வேண்டும். இடைப்பருவத்தில் மகசூல் எடுக்க களைகளை அகற்ற வேண்டியது கட்டாயம். அப்போதுதான் அதிக மகசூல் எடுக்க முடியும். அதேப் போல மரங்களுக்கு அருகில் இருக்கும் புற்களையும் மண்வெட்டியால் அப்புறப்படுத்த வேண்டும்.
நான்காம் ஆண்டிலிருந்து மா காய்க்கத் தொடங்கும். வழக்கமான பருவம், இடைப்பருவம் இரண்டும் சேர்த்து நான்காம் ஆண்டில் ஒரு ஏக்கருக்கு நான்கு டன்களுக்கு மேல் மகசூல் கிடைக்கும். அதற்கடுத்த ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடத் தொடங்கும். முறையாகப் பராமரித்து வந்தால், இரண்டு பருவங்களுக்கும் சேர்த்து ஏழாம் ஆண்டிலிருந்து பத்து முதல் பதினைந்து டன் வரை மகசூல் எடுக்கலாம்.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிகமாக பனி அடித்தால், வெள்ளைப் பூச்சி தாக்குதல் இருக்கும். ‘பூ’ வில் வெண்னை நிற மாவு போல படர்ந்திருந்தால் வெள்ளைப் பூச்சி தாக்கியிருக்கிறது என்ற அர்த்தம். இது தாக்கினால் பூக்கள் கருகி விடும். லிட்டர் நீரில், ஒரு தீப்பெட்டி மூடியளவு சல்ஃபர், 20 மில்லி மோனோகுரோட்டோபாஸ், 20 மில்லி வேப்பெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இக்கலவை மூன்று மரங்களுக்குப் போதுமானதாக இருக்கும். 15 நாட்களுக்குள் சரியாகவில்லையென்றால் எண்டோசல்பான் அடிக்கலாம்.

முதல் மூன்ற ஆண்டுகளில் மரவள்ளி, முருங்கை உள்ளிட்ட ஊடுபயிர்களை சாகுபடி செய்து கூடுதல் வருமானத்தை எடுக்கலாம். அப்படிச் செய்யும் போது, ஊடுபயிர்களுக்கு இடப்படும் உரமே போதுமானது. மாமரங்களுக்காக தனி உரம் இட வேண்டியதில்லை. ஆனால், மூன்றாம் ஆண்டுக்குப் பிறகு, கண்டிப்பாக  ஊடுபயிரைத் தவிர்த்திட வேண்டும். அப்போதுதான் மாவில் நல்ல மகசூல் எடுக்க முடியும். ஆண்டுக்கொரு தடவை உரம், இரண்டு தடவை உழவு, தேவைப்பட்டால் பூச்சிக்கொல்லி இதைச் சரியாகக் கடைபிடித்து வந்தால் போதும். இரண்டு பருவங்களிலும் நல்ல மகசூலை எடுக்கலாம்.
என் தோட்டத்துக்கு மரங்களுக்கு 25 வயசு ஆச்சு. முக்கியப் பருவத்தில ஏக்கருக்கு 10 டன் மகசூலும், இடைப்பருவத்தில் 5 டன் மகசூலும், இடைப்பருவத்தில் 5 டன் மகசூலும் கிடைக்குது. இடைப்பருவத்தில் தேவையும், அதிகம் இருக்கறதால நாமளே விலை நிர்ணயம் செய்ய முடியும். முக்கியப் பருவத்தில கிலோ 10 ரூபாய்க்கு குறைவில்லாமலும், இடைப்பருவத்தில 60 ரூபாய் வரையும் விக்கும். நான் மாம்பழங்களை நேரடியா பாம்பே, டெல்லினு வியாபாரிகளுக்கு அனுப்புறதால கூடுதல் லாபம் கிடைக்குது என்றார் உற்சாகமாக.
ஒரு ஏக்கர் மா சாகுபடியில் பாலகிருஷ்ணன் சொல்லும் செலவு – வரவு கணக்கு

விபரம்

செலவு

வரவு

45 கன்றுகள்

900

 

நடவு

3,000

 

நீர்பாய்ச்ச

4,000

 

உரம்

16,000

 

உழவு

8,000

 

களை

4,000

 

பறிப்பு

10,000

 

3 டன் மாங்காய் மூலம் வரவு

 

75,000

மொத்தம்

47,900

75,000

நிகர லாபம்

 

27,100

தொடர்புக்கு:
பாலகிருஷ்ணன் 94436-07690
ரிச்சர்ட்கென்னடி 04651 - 281191


பட்டதாரிகளின் பலே பப்பாளி - வாழை

 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில், காயாமொழி என்ற இடத்தில் இருக்கிறது சக்திகுமார் தோட்டம்.  நாலரை ஏக்கர்ல பப்பாளி, 7 ஏக்கர்ல வாழை, மூணரை ஏக்கர்ல காய்கறினு ஒதுக்கி வெச்சுருக்கோம். வழக்கமான முறையில் விவசாயம் செய்யாம பப்பாளி, வாழையை முக்கிய விவசாயமா வெச்சுகிட்டு, சாமந்தி, துவரை, பயறு வகைகள்னு நிலத்தோட ஒரு இடத்தைக்கூட சும்மா வைக்காம உயிர்மூடாக்கு முறையில் விவசாயம் செய்றோம்.
தைவான் ரக விதை, பெங்ளூரு மற்றும் புனே ஆகிய இடங்களில்தான் கிடைக்கிறது. நாங்கள் பெங்களூருவிலிருந்து வாங்கி வந்து நாற்று தயாரித்தோம். 4 7 அளவுள்ள பையில் பப்பாளி விதையை விதைத்து, நிழலில் வைத்து தினமும் இரண்டுவேளை தண்ணீர் தெளித்து, குறைந்தபட்சம் 40 நாட்கள் பராமரிக்க வேண்டும். விதைத்த 10ம் நாளில் முளைக்கத் தொடங்கும். அரையடி உயரத்துக்கு வளர்ந்ததும் பையிலிருந்து எடுத்து. நிலத்தில் நடலாம். நாற்றுப் பையில் வளரும் நேரத்தில் வயல் தயாரிப்புப் பணிகளைச் செய்ய வேண்டும்

நிலத்தை சட்டிக் கலப்பையால் நன்றாக உழுது, பார் பிடிக்காமல் அப்படியே சொட்டுநீர்ப் பாசனக்  குழாய்களை அமைத்தோம். தயாரான வயலில் முதலில் தர்பூசணியை நடவு செய்தோம். அதை அறுவடை செய்துவிட்டு பப்பாளியை நட்டோம். (தர்பூசணி நடவு செய்து 25 நாட்கள் கழித்து, பப்பாளி விதைத்து, அந்த நாற்றுகளை 40 நாள் கழித்து நடவு செய்துள்ளனர்). தர்பூசணிக்கு ஜீவாமிர்தம் கொடுத்து வந்தால், முப்பது டன் தர்பூசணி மகசூல் கிடைத்தது. ஜீன் மாதத்தில் பப்பாளியை நட்டோம். கன்றுக்கு கன்று 6 அடியும், வரிசைக்கு வரிசை 9 அடியும் வைத்து நடவு செய்தோம். ஆனால், கன்றுக்கு கன்று 8 அடியும். வரிசைக்கு வரிசை 8 அடியும் வைத்து நட்டால் நல்லது என்பதைப் பிறகுதான் புரிந்துகொண்டோம். பப்பாளியை நடும்போதே இரண்டு பப்பாளிக்கு இடையில் ஒரு துவரையை நட்டோம். பப்பாளியைப் பொறுத்தவரை தண்டை விட்டு தள்ளித்தான் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்டில் தண்ணீர் படுவது போல பாய்ச்சினால் தண்டு அழுகல் நோய் தாக்கும். நோய் வந்தாலும் வராவிட்டாலும் மோர்க்கரைசல் தெளிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். நன்றாகப் புளித்த 10 லிட்டர் மோரில், 200 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் மோர்க்கரைசல் தயாரிக்க வேண்டும். தேவைப்படும் அளவுக்கு தயாரித்து, செடிகள் முழுக்க நனையுமாறு தெளிப்போம். நடவு செய்த 6ம் மாதத்துல பப்பாளி, பூ பூக்கும். 8ம் மாதத்திலிருந்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வரை காய் பறிக்கலாம். சொட்டுநீர்ப் பாசனம் என்பதால், பப்பாளிக்கு மாதம் ஒருமுறை  ஜீவாமிர்தத்தை வடிகட்டி, பாசன நீர் மூலமாகக் கொடுக்கிறோம்.

ஜீவாமிர்தம் தயாரிக்க பெரும்பாலும், தேங்காய் தண்ணீர் அல்லது பனம்பழத்தைப் பயன்படுத்துவோம். இதனால் வெல்லத்துக்கு செலவிடும் பணம் மிச்சமாகிறது. மொத்தம் 3,000 பப்பாளிக் கன்றுகளை நடவு செய்துள்ளோம். தற்போது வாரம் 500 கிலோ வீதம், மாதம் இரண்டு டன் மகசூல் கிடைக்கிறது. “நாட்டு வாழை ஈ கதலி, பூவாஞ்செண்டு, ரஸ்தாளி, பச்சை(ரொபஸ்டா) என ஐந்து ரக வாழைகளை ஏழு ஏக்கரில் நடவு செய்துள்ளோம். உயிர்மூடாக்கு முறையில்தான் பப்பாளி, வாழை பயிரிடுகிறோம். இதனால் அதிகமான வெயில், பயிரின் மீது விழாது. வேர்முடிச்சுப் பயறுகள், காற்றிலிருந்து நைட்ரஜனை நிலத்துக்குக் கொண்டு வரும் வேலையைச் செய்கின்றன. அதேபோல, நிலத்திலிருந்து பயிர்களால் சுலபமாக எடுத்துக் கொள்ள முடியாத பாஸ்டே் சத்துக்களை உடைத்து, இலகுவாக எடுத்துக் கொள்ளும் வகையில் உதவுகிறது கம்புப் பயிர். அதனால் கம்பையும் பரலாக விதைத்துள்ளோம்.
ஊடுபயிராக விதைத்துள்ள அகத்திக்கீரை, வாழைக்கு வைரஸ் நோய் வராமல் தடுக்கிறது. செண்டு, பூ வாழையைத் தாக்கும் நூற்புழுவைக் கட்டுப்படுத்துகிறது. மற்ற பயிர்கள் உயிர்மூடாக்காகப் பயன் தருகின்றன. தட்டைப்பயறை ஜீவாமிர்தத்துக்குப் பயன்படுத்தியது போக, இதுவரை 10 ஆயிராம் ரூபாய்க்கும், செண்டுப்பூவை 4 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளோம்.

வாழைக் கன்றுகளைத் தேர்வு செய்யும்போது, நோய் தாக்காத வாழைத் தோட்டத்திலிருந்து, அனைத்துக் கன்றுகளும் சமஅளவு எடையிருப்பது போல பார்த்து தேர்வு செய்ய வேண்டும். நடவுக்கு முன்பாக அவற்றை, விதைநேர்த்தி செய்ய வேண்டும். பசுமாட்டுச் சாணம் 10 கிலோ, கோமூத்திரம் 5 லிட்டர், 2 கைப்பிடி மண், தேவைக்கேற்ப தண்ணீர் இவற்றை ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு நன்றாகக் கலக்கி, 12 மணி நேரம் நிழலில் வைக்க வேண்டும். விதைநேர்த்தி செய்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக இரண்டு கிலோ சுண்ணாம்பை கலவையில் கொட்டி கலக்க வேண்டும். பிறகு அந்த கலவையில் வாழைக்கன்றின் அடிப்பகுதியை இரண்டு முறை நனைத்து எடுக்க வேண்டும். இது, வேர் சம்பந்தமான நோய்களை தடுக்கும் .
ஏற்கெனவே தயார் செய்த நிலத்தில் வரிசைக்கு வரிசை 5 அடியும், கன்றுக்கு கன்று 6 அடியும் இடைவெளி விட்டு வாழையை நடவேண்டும். வாழைக்கும் சொட்டுநீர் மூலம்தான் தண்ணீர் பாய்ச்சுகிறோம். 15 நாளைக்கு ஒரு தடவை ஜீவாமிர்தம் தெளிப்பதால், நோய்த் தாக்குதல் இல்லாமல் வாழையின் வளர்ச்சி அதிகரிக்கிறது. மூன்றாவது மாதம் வாழை நன்றாக வளர்ந்துவிடும். ஐந்தாவது மாதம் முட்டு கொடுக்கவேண்டும். ஆறாவது மாதம் குலை தள்ளும். அதன்பிறகு தார் விளைய மூன்று மாதம் ஆகும்.
எங்களிடம் உள்ள ஐந்து ரக வாழையிலும் சேர்த்து மொத்தம் 6,800 வாழைகள் உள்ளன. இவற்றின் இலைகளை மொத்தமாக ஒரு லட்ச ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுள்ளோம். வாழை அறுவடை முடிந்தவுடன் நாருக்காக ஒரு மரத்துக்கு ஒரு ரூபாய் 50 பைசா வீதம் கொடுத்து நாரை உறித்துக் கொள்வார்கள். அந்த வகையில் 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

தொடர்புக்கு
சக்திகுமார் -  94443-36353
ஜெயசேகரன்  - 94444-90779
காயாமொழி
திருச்செந்தூர் அருகில்
தூத்துக்குடி மாவட்டம்


ஏக்கருக்கு 2,00,000 ரூபாய் அள்ளிக் கொடுக்கும் இயற்கை குண்டுமல்லி

 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒதிச்சாமி அவர்கள் 15 வருஷமா பூ விவசாயம் செஞ்சுட்டு வர்றேன். ரெண்டு வருஷமாத்தான் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்கேன்.இப்ப ஒரு ஏக்கர்ல குண்டுமல்லி இருக்குது. நல்ல செம்மண் பூமி. அதோட பவானி தண்ணி வேற. இது ரெண்டும் சேர்ந்துட்டதால, வெளைஞ்சு கிடக்கு குண்டுமல்லி” ஆடி முதல் மார்கழி வரை குண்டுமல்லி நடவுக்கு ஏற்ற பட்டம். கோடை உழவு செய்து நிலத்தைப் புழுதியாக்கி, 1.5 டன் தொழுவுரத்தைப் பரவலாக இறைத்துவிட்டு, மறுபடியும் இரண்டு முறை ஏர் உழவு செய்ய வேண்டும். நான்கு அடி இடைவெளியில் பார் முறை பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளில் நான்கு அடி இடைவெளியில், ஒரு அடி ஆழம், அரை அடி அகலம் கொண்ட குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு 2,500 குழிகள் வரை எடுக்கலாம். ஐந்து மாத வயதுடைய நாற்றுகளைக் குழிக்கு இரண்டாக பதியம்போட்டு மூடி, உடனே உயிர்த் தண்ணீர் கொடுக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியில் இருந்துதான் தமிழகம் முழுக்க மல்லி நாற்றுகளை விவசாயிகள் வாங்கி நடுகிறார்கள். நாற்று ஒரு ரூபாய் என்கிற விலையில், அங்கிருந்து கொண்டு வந்து நேரடியாகக் கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.

நடவு முடிந்ததும் வாரம் ஒரு தடவை தண்ணீர்ப்பாசனம் செய்ய வேண்டும். (சொட்டு நீர்ப்பாசனமும் அமைக்கலாம்). முதல் ஐந்து மாதத்துக்கு மாதம் ஒரு களை எடுக்க வேண்டும். இரண்டாவது களை மற்றும் ஐந்தாவது களைக்குப் பிறகு, செடிக்கு இரண்டு கிலோ வீதம் மண்புழு உரத்தை வைத்துப் பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து 2 மாதத்துக்கு ஒரு முறை 500 லிட்டர் கோமூத்திரத்துடன், 50 கிலோ சாணத்தைக் கலந்து பாசனத் தண்ணீரோடு கொடுத்தால் வேர் நன்றாக பிடித்து, செடிகள் ஒரே சீராக தளதளப்புடன் வளரும். செம்பேன், மொக்குப் புழு, வேர்ப்புழு, இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதலை சமாளிக்க மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்தாலே போதும். நடவு செய்த 150-ம் நாளில் பூ மொட்டுகளை அறுவடை செய்யலாம்.
ஆரம்பத்தில் 10 கிலோ என்று இருக்கும் மகசூல், மெள்ள உயர்ந்து அதிகபட்சமாக 150 கிலோ வரைக்கும்கூட செல்லும். குறிப்பாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகபட்ச மகசூல் கிடைக்கும். ஜீன், ஜீலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் 10 கிலோ என்கிற அளவில்தான் கிடைக்கும். ஆனால், அந்த சமயத்தில்தான் குண்டுமல்லியின் விலை உச்சத்தில் இருக்கும்.
அறுவடை 35 நாள், இடைவெளி 35 நாள் என்கிற வகையில்தான் குண்டுமல்லி அறுவடை இருக்கும். அதிலும் கவாத்து செய்யும்போது சுத்தமாக அறுவடையே இருக்காது. ஆகக்கூடி, சராசரியாக ஆண்டுக்கு 3 டன் மகசூல் கிடைக்கும்.

குண்டுமல்லிச் செடியை ஒரு தடவை பயிர் செய்துவிட்டால், சுமார் 15 ஆண்டுகள் வரை தொடர் மகசூல் கொடுக்கும். எனவே, தொடர்ந்து 6 மாதத்துக்கு ஒரு தடவை செடிகளைக் கவாத்து செய்வது அவசியம்.
கிலோ 70 ரூபாய்க்கு குறைச்சு இதுவரைக்கு விலை போனதில்ல. போன வருஷம் டிசம்பர் மாசம் 10-ம் தேதி ஒரு கிலோ பூ 700 ரூபாய்க்கு விலை போச்சு. சராசரியா கிலோவுக்கு 80 ரூபாய் கிடைக்கும்.
நான் இயற்கை முறையில் உற்பத்தி செய்றதால, ரெண்டு நாள் வரைக்கும் பூ வாடாம, மலர்ச்சியா இருக்கறது பெரிய வரப்பிரசாதம். அதனால் சில வியாபாரிக, தோட்டத்துக்கே வந்து கிலோவுக்கு 20 ரூபாய் கூடுதலா கொடுத்து வாங்கிட்டுப் போறாங்க. ஒரு நாளைக்கு, ஒரு மாடு, சராசரியா 10 லிட்டர் கோமூத்திரம், 8 கிலோ சாணம் கொடக்குது. எங்கிட்ட ரெண்டு மாடுக இருக்கு.  என் இடுபொருள் தேவையைப்பூர்த்தி செய்ய இதுவே போதுமானதா இருக்கு.
தொடர்புக்கு :
ப.ஒதிச்சாமி
சத்தியமங்கலம் (அருகில்)
சிக்கரசம்பாளையம் கிராமம்
ஈரோடு மாவட்டம்,
அலைபேசி : 97897-15898


நிம்மதியான வருமானத்துக்கு வழிகாட்டும் நீளப்புடலை


காய்கறி சாகுபடி என்றாலலே மூட்டைக் கணக்கில் ரசாயன உரத்தையும், லிட்டர் கணக்கில் பூச்சிக்கொல்லிகளையும் கிடைக்கும் என்று விவசாயிகள் பலரும் எண்ணி வருகின்றனர். அதிலும் பந்தல் காய்கறிகள் என்றால் சொல்லவே வேண்டாம். ‘அதுக்கெல்லாம் யாரு பண்டுதம்  பார்க்கறது”  என்று ஒதுங்கிப் போகும் விவசாயிகள்தான் அதிகம்.
இந்நிலையில் இயற்கை இடுபொருட்களைக்கூட தயாரித்து உபயோகப்படுத்தாமல் எரு, கடலைக்கொடி, கொளுஞ்சி ஆகியவற்றை மட்டுமெ பயன்படுத்தி புடலை சாகுபடி செய்து மனம் நிறைவான மகசூலை எடுத்து வருகிறார். மயிலாடு துறைக்கு அருகே உள்ள சிங்கான் ஒடையைச் சேர்ந்த பாஸ்கரன்.
“ ஆரம்பத்துல நான் கடலை வியாபாரம்தான் பாத்துக்கிட்டு இருந்தேன். அதுல பெருசா வருமானம் கிடைக்காததால விவசாயம் பண்ணிப் பாக்கலாம்னு 100 குழி (33 சென்ட் ) நிலத்தை குத்தகைக்கு எடுத்து, புடலங்காயை நட்டு வெச்சேன். ஒரளவுக்கு வருமானம் கிடைக்கவே, புடலங்காய் விவசாயத்தையே தொடர ஆரம்பிச்சுட்டேன். விவசாயத்துக்கு வந்து இப்ப பதினாறு வருஷமாச்சு, குத்தகை நிலத்துல விளைஞ்ச புடலங்காயை வித்துக் கிடைச்ச வருமானத்துல, கொஞ்சம் கொஞ்சமா சேத்து வெச்சு ஆறு வருசத்துக்கு முன்ன ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன்.

நான் வாங்கின நிலம் கடலுக்குப் பக்கத்துல இரக்கறதால, ஒரு குளத்தை வெட்டி அதுல ஊறுற தண்ணியைத்தான் பாசனத்துக்காகப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். இது மணல் பாங்கான நிலம். வருஷம் முழுக்க நிலத்தை சும்மா போடாம, இந்த நிலத்துக்கேத்த, வருஷம் முழுக்க நிலத்தை சும்மா போடாம, இந்த நிலத்துக்கேத்த, கடலை, வெள்ளரி, கொத்தவரை, பாகல், நீளப்புடலைனு மாத்தி மாத்தி வெள்ளாமை செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். ரெண்டு வருஷமாதான் இயற்கை விவசாயத்தக்கு மாறியிருக்கேன். ஆனா, பஞ்சகவ்யா, அமுதக்கரைசலனு எதையும் தயாரிச்சுப் பயன்படுத்தறது இல்லை. எரு கடலைக் கொடி, கொளுஞ்சிச் செடி இது மூணை மட்டுமே வெச்சுதான் முழு வெள்ளாமையும் செய்றேன். புடலையில் காய்ப்பு ரொம்ப நல்லாவே இருக்குது. எப்பவும் சித்திரைப் பட்டத்துல அரை ஏக்கர்லயும், தை பட்டத்துல கம்மியாவும்தான் சாகுபடி செய்வேன்” என்று முன்னுரை கொடுத்த பாஸ்கரன் பத்து சென்ட் நிலத்தில்புடலை சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்த பாடத்தை ஆரம்பித்தார்.
பொதுவாக, நீளப்புடலையின் வயது ஏழு மாதம். சில இடங்களில் மண் வாகைப் பொறுத்து வயது மாறுபடலாம். உப்பு மற்றும் காரத்தன்மை அதிகமில்லாத, தண்ணீர் வளம் உள்ள எல்லா நிலமும் புடலைக்கு ஏற்றது. புடலையை சித்திரை மற்றம் தை பட்டம் இரண்டிலும் நடவு செய்யலாம். பத்து சென்ட் நிலத்தையும் களைகள் நீங்கும்படி ஒரு அடி ஆழத்துக்கு கொத்திவிட்டு, 21 அடி நீளம் 7 அடி அகலத்தில் பாத்தி எடுக்க வேண்டும். பாத்தியை ஒட்டி நீளவாக்கில் ஒன்றரை அடி அகலத்தில் வாய்க்கால் எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு பாத்தியின் மையத்திலும் நேர் வரிசையில் மூன்று மூன்று குழிகள் எடுக்க வேண்டும். நீளவாக்கில் குழிக்கு குழி 7 அடி இடைவெளி விட்டு எடுத்தால் சரியாக அமையும். குழியின் அளவு ஒன்றரை அடி சதுரம் ஒன்றரை அடி ஆழம் இருக்க வேண்டும். பத்து சென்டில் நிலத்தின் வாகைப் பொறுத்து அறுபது குழிகள் வரை எடுக்க முடியும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கூடை எரு, அரைக் கூடை மேல் மண் ஆகியவற்றைக் கலந்து நிரப்ப வேண்டும். பின், அதில் தண்ணீர்விட்டு ஒரு நாள் முழுவதும் ஆற வைக்க வேண்டும்.
மறுநாள், குழியின் மையத்தில் ஒரு அங்குல ஆழத்தில் ஒரு விதையை விதைத்து, அந்த விதைக்கு நான்கு பக்கமும் அரையடி இடைவெளியில் பக்கத்துக்கு ஒன்றாக நான்கு விதைகளையும் விதைக்க வேண்டும். அதாவது ஒரு குழிக்கு ஐந்து விதை என்ற கணக்கில் விதைக்க வேண்டும். பின் வாழைச் சருகு அல்லது தென்னை மட்டையால் குழியை மூடி வைத்து, தொடர்ந்து மூன்று நாட்கள் பூவாளியால் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன்பிறகு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்ற வேண்டும். பூவாளியால் தண்ணீர் ஊற்றுவது சாத்தியப்படா விட்டால், விதைகள் முளைத்து வரும் வரை, கொஞ்சமாகத் தண்ணீர் கட்டிக் கொள்ளலாம்.
விதைத்த 8-ம் நாள் முளைத்து வரும். அந்த சமயத்தில் மூடாக்கை அகற்றிவிட்டு, ஒரு தண்ணீர் கட்ட வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்து நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். 25-ம் நாளுக்கு மேல் கொடி படரத் தொடங்கும். அந்த சமயத்தில் கொடிக்கு இடையூறு இல்லாமல் ஒவ்வொரு குழியிலும் பத்தடி உயரமுள்ள மூன்று சவுக்குக் குச்சிகளை ஊன்றி கொடிகளை இதில் இழுத்துச் சுற்றிவிட வேண்டும். இது கொடி படர்வதற்காக. பிறகு பத்தடி நீளம் உள்ள ஒதியன் மர போத்துக்களை ஏழடிக்கு ஏழடி இடைவெளியில் இரண்டடி ஆழத்துக்கு குழியெடுத்து ஊன்ற வேண்டும். இது பந்தல்காலுக்காக என்பதால் உறுதியாக இருக்க வேண்டும். ஒதியன் மரங்களின் மேல்பக்கத்தை சவுக்குக் குச்சிகளால் குறுக்கும் நெடுக்கமாக இணைத்து, கயிறு அல்லது பனை நார் மூலம் கட்ட வேண்டும். அவற்றின் மேல், ஆற்றில் மண்டிக் கிடக்கும் கட்டுக் கொடியைச் சேகரித்து இரண்டாகப் பிளந்து காய வைத்து, தண்ணீரில் நனைத்து பந்தல் பின்ன வேண்டும். இந்தப் பந்தல் ஒரு வருடம் வரை அப்படியே இருக்கும். இது கிடைக்காதவர்கள், வழக்கமான முறையில் கல்தூண், கம்பிகளை வைத்து பந்தல் போட்டுக் கொள்ளலாம்.

30 ம் நாளுக்கு மேல் பூவெடுக்க ஆரம்பித்த உடன், பக்கவாட்டில் கிளை அடிக்கும் தேவையற்றக் கொடிகளைக் கிள்ளிவிட வேண்டும். 55-ம் நாளில் வேரைச் சுற்றி உள்ள களைகளை அகற்றி, கொடியின் அடிபாகத்தில் இருந்து ஒன்றரை அடி இடைவெளியில் கொடியைச் சுற்றி உரக்குழிக்காக கொஞ்சம் பள்ளம் பறிக்க வேண்டும். அதில் ஒரு குழிக்கு மூன்று கூடை எரு, பத்து கிலோ காய்ந்த கடலைக் கொடி, 10 கிலோ காய்நத கொளுஞ்சி இலை ஆகியவற்றைப் போட்டு மூட வேண்டும். வேறு உரம் எதுவுமே தேவையில்லை. 60-ம் நாளுக்கு மேல் பிஞ்சு எடுக்கும். பிஞ்சு எடுத்த ஐந்தாவது நாளுக்கு மேல் சுருளும் காய்களுக்கு மட்டும் அடியில் கல்லைக் கட்டிவிட வேண்டும். நீளப்புடலையில் பெரிய அளவில் நோய், பூச்சித்தாக்குதல் இருக்காது. அப்படியே வந்தாலும், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. 70-ம் நாளுக்கு மேல் காய்கள் பெரிதாகி அறுவடைக்குத் தயாராகிவிடும்.
சாகுபடி பாடத்தை முடித்த பாஸ்கரன், வருமானத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
“பறிக்க ஆரம்பிச்சுதுல இருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள்னு எழுபது தடவை காய் பறிக்கலாம். அதாவது, 140 நாட்கள் வரை பறிக்கலாம். ஆரம்பத்துல ஒரு பறிப்புக்கு 40-ல் இருந்து 50 காய்கள் வரை கிடைக்கும். அதுக்கப்புறம் படிப்படியா அதிகரிச்சு, அஞ்சாவது பறிப்புக்கு மேல ஒரு பறிப்புக்கு 150 காய்கள் வரை கிடைக்க ஆரம்பிச்சுடும். ஒவ்வொரு காயும் ஏழிலிருந்து பத்தடி வரை நீளமும் ஒரு கிலோ வரை எடையும் பத்தடி வரை நீளமும் ஒரு கிலோ வரை எடையும் இருக்கும். சராசரியா ஒரு பறிப்புக்கு 70 காய்னு வெச்சுக்கிட்டாலே, மொத்தமாக 4,900 காய்கள் வரை கிடைக்கும். ஒரு காய் ஆறு ரூபாய் வரை விலை போகுது. சராசரியாக அஞ்சு ரூபாய்ன வெச்சுக்கிட்டா 24,500 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும். செலவெல்லாம் போகபத்து சென்ட் நிலத்துல 17 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் “. என்றார், மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு
பாஸ்கரன்
மயிலாடு துறை
சிங்கான் ஒடை, அலைபேசி: 93645-29720


ஜெட் வேக லாபத்துக்கு ஜீரோ பட்ஜெட் சின்னவெங்காயம்

 

‘சாம்பார் வெங்காயம்’ என்றழைக்கப்படும் சின்னவெங்காயத்தை, ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்து, சிறப்பான மகசூல் கண்டு வருகிறார்கள் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள எரசினம்பாளையம் விவசாயத் தம்பதியர்  சுப்பிரமணியம் - வஞ்சிக்கொடி. இத்தம்பதி, ஏற்கெனவே பசுமை வாசகர்களுக்கு அறிமுகமானவர்கள்தான். ஜீரோ பட்ஜெட் முறையில் மா சாகுபடியில் மகுடம் சூட்டிய இவர்களைப் பற்றி 2009 ஜீன் 10 தேதியிட்ட இதழில் ‘ஜீவாமிர்தம் தந்த தேவாமிர்தம்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
வெங்காய அறுவடை மும்மரமாக நடந்து கொண்டிருக்க, நம்மிடம் பேச ஆரம்பித்தார் சுப்பிரமணியம். “ ஏற்கெனவே மூணு வருஷமா தென்னை, மா, செடி முருங்கைனு ஜீரோ பட்ஜெட்லதான் சாகுபடி செய்றோம். முதல் போகத்துல கொஞ்சம் மகசூல் குறைஞ்சாலும், போகப் போக ஏறுமுகம்தான்ங்கிறத கண்கூடாவே பார்த்துக்கிட்டிருக்கோம்’ என்று எடுத்த எடுப்பிலயே ஜீரோ பட்ஜெட்டுக்குக் கட்டியம் கூறியவர், தொடர்ந்தார்.
“இதுவரைக்கும் நீண்ட வயசுள்ள பயிர்களை மட்டுமே ஜீரோ பட்ஜெட்ல செஞ்சுட்டு வந்த நாங்க, குறுகிய வயசுள்ள காய்கறியையும் ஒரு கை பாத்துடலாம்னு முடிவு பண்ணி, முதல் முயற்சியா வெங்காயத்தை நட்டோம்.ரெண்டு வருஷமா எந்த வெள்ளாமையும் செய்யாம போட்டு வெச்சுருந்த நிலத்தைத்தான் இதுக்கு தேர்ந்தெடுத்தோம். முதல் தடவையா நடுறதால அரை ஏக்கர்ல மட்டும்தான் நட்டோம். கோடை மழைக்குப் பிறகு சட்டிக்கலப்பை வெச்சு ஆழமா உழுது,  நிலத்துல வளந்துகிடந்த புதர்களை அப்படியே நிலத்துல அமுக்கினோம். அதெல்லாம் மக்கிய பிறகு, அதாவது ஒரு மாசம் கழிச்சு ரெண்டு உழவு போட்டு, மண்ணை இளக்கினோம். நிலம் ஆறின பிறகு ஏர் உழவு போட்டு வெங்காயத்தை விதைச்சோம். எந்தக் கஷ்டத்தையும் கொடுக்காம, அருமையா விளைஞ்சு வந்தது. பெருசா பராமரிப்பு இல்லைங்கறதால ஜெட்வேகத்துல எல்லா வேலையும் முடிஞ்சு, ஜீரோ பட்ஜெட் வெங்காயத்தை அறுவடையும் பண்ணிட்மோம்.

இதோ நல்ல ரோஸ் நிறத்துல, ஒரே சீரா, அழுகல், குத்தல் எதுவும் இல்லாம, கெட்டித் தன்மையா கோலிக்குண்டுகள் கொட்டி வெச்ச மாதிரி கிடக்கிறதைப் பாருங்க. எல்லாம் ஜீவாமிர்தம் செஞ்ச சித்துவேலைதானுங்க” என்று குவியல் வெங்காயத்தைக்  கைநீட்டி பெருமைப்பட்டவர், சாகுபடி முறை பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
சின்னவெங்காயத்தின் மொத்த வயது 60 முதல் 70 நாட்கள். வடிகால் வசதியுள்ள மணல் கலந்த, செம்மண் நிலங்களில் நல்ல மகசூல் கொடுக்கும். இரண்டு மூன்று உழவு போட்டு நிலத்தை பொலபொலப்பாக்க வேண்டும்.கடைசி உழவுக்கு முன்பாக, அரை ஏக்கருக்கு மூன்று டன் தொழுவுரத்தை இறைத்துவிட்டு உழவு செய்ய வேண்டும். (இவருடைய நிலம் ஏற்கெனவே மேய்ச்சல் நிலமாக இருந்ததால், கால்நடைகளின் கழிவுகள் நிலத்தில் மண்டிக் கிடக்கின்றன. அதோடு செடி, கொடிகளையும் மடக்கி உழுததால் தனியாக அடியுரம் எதுவும் போடப்படவில்லை). பிறகு, ஏர் மூலமாக ஓர் உழவு போட வேண்டும். இரண்டு அடி இடைவெளியில் பார் அமைத்து, பாத்தி நிறைய தண்ணீர் பாய்ச்சி, தண்ணீர் நன்றாக வற்றிய பிறகு, அரையடிக்கு ஒரு காய் வீதம் வெங்காயத்தை ஈர நடவு செய்ய வேண்டும் ( நாற்று  உற்பத்தி செய்தும் நடலாம்). அரை ஏக்கருக்கு, 250 கிலோ விதை தேவைப்படு். அறுவடைக்குப் பிறகு 60 நாட்கள் இருப்பு வைக்கப்பட்ட, நேர்த்தி செய்யப்பட்ட விதை வெங்காயம் விவசாயிகளிடமே கிடைக்கும். பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு ஒரு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பத்து நாளைக்கு ஒருமுறை பாசன நீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் கொடுக்க வேண்டும். அதைத் தவிர, வேறு எந்த இடுபொருளும் தேவையில்லை. 15, 30, 45-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். ஜீவாமிர்தம் தொடர்ந்து கொடுத்து வந்தால், பயிர் நன்றாக பச்சை பிடித்து, 45 நாளுக்குப் பிறகு காய் பெருக்கத் தொடங்கும். பச்சை பிடித்து நிற்கும் தாள்கள் வெளுத்துப் போய் கீழே சாயும் சமயத்தில் (55 - 60 நாட்கள்) அறுவடையை ஆரம்பிக்ககலாம்’.

தாங்கள் பயன்படுத்திய சாகுபடி தொழில் நுட்பத்தை சுப்பிரமணியம் பாடமாகச் சொல்லி முடிக்க அங்கிருந்து தொடங்கினார் வஞ்சிக்கொடி அரை ஏக்கர்ல 2,500 கிலோ மகசூல் கிடைச்சுது. இதுவே ரசாயன முறையில் சாகுபடி செஞ்சுருந்தா அரை ஏக்கர்ல 3,500 கிலோ வரைக்கும் மகசூல் எடுத்திருக்கலாம். ஆனா, இடுபொருள் செலவு, பூச்சிக்கட்டுப்பாடு செலவு எல்லாம் சேர்ந்து, அந்த கூடுதல் மகசூலை சாப்பிட்டும். நாங்க ஜீரோ பட்ஜெட் முறையில செஞ்சதால, அதுக்காக நாங்க நிறைய செலவு செய்யல. மனசுக்கும் நிம்மதியா இருக்கு அது போதுமுங்க” என்றார் நிம்மதி பெருமூச்சோடு.
மீண்டும் ஆரம்பித்த சுப்பிரமணியம், “வெங்காயம் சீக்கிரமா அழுகிப் போற பொருள. அதனால, பட்டுனு விதைச்சோம். சட்டுனு அறுத்தோம்னு வித்துடணும். அதுலயும் ரசாயனம் போட்டு வளர்த்த வெங்காயமா இருந்தா 10 நாள்ல கெட்டுப் போயிடும். பட்டறையெல்லாம் போட்டு பாதுகாப்பு  பண்ணித்தான் விக்க முடியும். ஆனா, ஜீரோ பட்ஜெட்ல விளைஞ்ச வெங்காயத்தை  பட்டறை போடாம வெச்சுருந்தாலும், மூணு மாசம் வரைக்கும் அழுகாது. அதனால்தான் அறுவடை செஞ்ச வெங்காயத்தை ஒட்டுமொத்தமா விக்காம, தினமும் கொஞ்சம்கொஞ்சமா கொண்டு போயி உழவர் சந்தையில விக்க முடியுது. இன்னிய தேதியில் கிலோ 14 ரூபாய்னு விலை போயிக்கிட்டிருக்கு.
நான் மாசிப்பட்டத்துல போட்டிருந்தேன். பொதுவா வெங்காயத்துக்கு ஏத்தது வைகாசி, கார்த்திகைப் பட்டங்கதான். சிலுசிலுனு வீசுற ஈரக்காத்து, மிதமான தட்பவெப்பம் அப்பப்ப கிடைக்கிற சாரல் மழை எல்லாம் ஒண்ணா சேர்ந்து கிடைக்கும். அதுலயே பயிர் நல்லா வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கும். மண்டை எரியுற மாசிப் பட்டத்துல போட்டதும்கூட மகசூல் குறைஞ்சதுக்குக் காரணம். இப்ப   வைகாசிப் பட்டத்திலயும் நடவு செய்யப்போறோம். நிச்சயமா கூடுதல் மகசூலை அள்ளப்போறோம்” என்று நம்பிக்கையுடன் சொன்னார்.

தொடர்புக்கு
ஆர் . சுப்பிரமணியம்
தாராபுரம்
திருப்பூர் மாவட்டம்
அலைபேசி 9942596971


சபாஷ் போட வைக்கும் சம்பங்கி

 

திருச்சி மாவட்டம், துறையூர் தாலூகா, வெங்கடாசலபுரம் கிராமத்தில் சம்பங்கி விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் சுந்தர்ராஜ்.
அரை ஏக்கர் சம்பங்கித் தோட்டத்தில் ‘நெகிழி மூடாக்கு முறையில் சாகுபடி செய்வதால் ஆள் தேவை வெகுவாக குறைந்திருப்பதோடு செலவும் கட்டுக்குள் இருக்கிறது.
ஆரம்பத்துல ரசாயன உரம், பூச்சிக்கொல்லியெல்லாம் போட்டுதான் செஞ்சோம். அப்ப, இலைச்சுருட்டுப் புழு, வெட்டுக்கிளி, சாறு உறிஞ்சும் பூச்சி, நூற்புழுத் தாக்குதல்னு மாறி மாறி வந்து கிட்டே இருக்கும். விதவிதமான பூச்சிக்கொல்லிகளை வாங்கி அடிச்சுக்கிட்டேதான் இருந்தோம். ஆனாலும், நோய்ங்க கட்டுப்படல. ஒரு கட்டத்துல விதைக்கிழங்கு அழுகி, செடியோட வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மகசூலே கிடைக்காமப் போயிடுச்சு.
மக்கிய தொழுவுரம், மண்புழு உரம், கடலைப் புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, ஆமணக்குப் புண்ணாக்கு போட்டு சாகுபடி  செஞ்சேன். பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் எல்லாம் தயாரிச்சு பயன்படுத்தினேன்.
“இது வீரிய ரச சம்பங்கி. எங்க பகுதியில கோரை (களை) அதிகமாக வரும். அரை ஏக்கர்ல களை எடுக்க வருஷத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவாகும். மல்ச்சிங் ஷீட் (நெகிழி மூடாக்கு) முறையில சொட்டுநீர் போட்டு சம்பங்கியை சாகுபடி செஞ்சேன். இதோ ஒன்பது மாசம் ஆகியிருக்கு. சுத்தமா களையே இல்ல. மகசூலுக்கும் குறைவில்லை” என்றவர்.

சம்பங்கி அனைத்து மண்ணிலும் நன்றாக வரும். என்றாலும், சரளை கலந்த செம்மண் பூமியாக இருந்தால் அமோக மகசூல்தான் தண்ணீர் தேங்காத, வடிகால் வசதியுடைய நிலத்தில் மட்டுமே சாகுபடி செய்ய வேண்டும். சித்திரை முதல் புரட்டாசி வரை நடவு செய்யலாம். பனிக்காலத்தில் நடவு செய்தால், செடியின் வளர்ச்சி பாதிக்கும்.முதலில் நிலத்தை மூன்று சால் உழவு ஓட்டி, அரை ஏக்கரக்கு அடியுரமாக 20 டன் தொழுவுரம் போட்டு, அதற்கு மேல் ஒரு டன் மண்புழு உரத்துடன் 200 கிலோ எண்ணெய் நீக்காத வேப்பம் பிண்ணாக்கு, 10 கிலோ பாஸ்போபாக்டீரியா, 10 கிலோ அசோஸ்பைரில்லம், 10 கிலா சூடோமோனஸ், 10 கிலோ டிரைக்கோடெர்மாவிரிடி ஆகியவற்றைக் கலந்து தூவி, மீண்டும் இரண்டு சால் உழவு ஓட்ட வேண்டும்.
பிறகு, மூன்றரை அடி அகலம் கொண்ட பார் அமைக்க வேண்டும். உயரம் முக்கால் அடி இருக்க வேண்டும். பாருக்கு பார் ஒன்றரை அடி இடைவெளி தேவை. பாருக்கு மேல் நான்கு அடி அகலமுள்ள நெகிழியை(ஷீட்) விரித்து, அதன் இரு ஓரங்களிலும் கொஞ்சம் மண்ணைப் போட வேண்டும். நெகிழியின் மீது நடுப்பகுதியில் சொட்டுநீர்க்குழாயை அமைக்க வேண்டும்.
இரண்டரை அடி இடைவெளியில் விரிப்பில் துளையிட்டு, மெல்லிய சொட்டுநீர்க் (மைக்ரோ டிரிப்) குழாயை பார் மண் மீது படுமாறு அமைக்க வேண்டும். இதன் மூலம் தண்ணீர் கொடுப்பதால் மண்ணுக்குள் தண்ணீர் இறங்கி, எப்போதும் ஈரம் இருந்து கொண்டே இருக்கும். செடிக்கும் முழுமையான தண்ணீர் கிடைக்கும்.
பார் ஈரமாக இருக்கும்போதே, அதன் இரண்டு ஒரங்களிலும் இரண்டு அடி இடைவெளியில் வரிசையாக நான்கு சென்டி மீட்டர் அளவுக்கு, பெருக்கல் குறியீடு போல பிளேடால் கீறிவிட்டு, சம்பங்கி விதைக்கிழங்கை நடவேண்டும். அரை ஏக்கருக்கு 125 கிலோ விதைக்கிழங்கு தேவைப்படும்.

விதைக்கிழங்கின் கூர்மையான, வெள்ளைப்பகுதி மேற்புறம் இருக்கு மாறு நடவு செய்ய வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை 100 லிட்டர் அமுதக்கரைசலை சொட்டுநீர் உரடேங்க் மூலமாக கொடுக்கலாம். 15 நாட்களுக்கு ஒருமுறை 2 லிட்டர் பஞ்சகவ்யாவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பயிர் வளர்ச்சி ஊக்கி மற்றும பூக்களின் செழுமைக்காக கொள்ளு, மொச்சை, தட்டைப்பயறு, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, சோயாபீன்ஸ் ஆகியவற்றை தலா 250 எடுத்து ஒன்றாகக் கலந்து, ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, மெல்லியத் துணியில் கட்டி வைத்தால் முளை விடும் இவற்றை கிரைண்டரில் நன்கு அரைத்து, 10 லிட்டர் பங்சகவ்யாவில் ஊறவைத்தால், இரண்டு நாட்களில் நொதிக்கும். இதனை 250 லிட்டர் தண்ணீரில் கலந்து, தெளிக்க வேண்டும். இப்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தெளிப்பது அவசியம். இதேபோல இரண்டு லிட்டர் பழக்கரைசலை, 250 லிட்டர் தண்ணீரில் கலந்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.
பூச்சித்தாக்குதல் இருந்தால், இரண்டரை லிட்டர் மூலிகைப் பூச்சி விரட்டியை, 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக் வேண்டும். நூற்புழுவைக் கட்டுப்படுத்த, இரண்டு பார்களக்கு நடுவில், 6 அடிக்கு ஒரு செண்டுமல்லிப் பூ நாற்றை நடவு செய்ய வேண்டும். இதை, மார்கழியில் நடவு செய்து, சித்திரையில் வேரோடு அப்புறப்படுத்த வேண்டும்.
நெகிழி மூடாக்கு, பார்களின் மீது சூரியஒளி படாதவாறு முழுமையாகத் தடுப்பதால் களையே இருக்காது. இரு பார்களுக்கு நடுவில் உள்ள பகுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக லேசாக களை வந்தால், உடனே அகற்றிவிடலாம்.
50 கிலோ மண்புழு உரத்தோடு, தலா இரண்டு கிலோ பாஸ்போபாக்டீரியா, அசோஸ்பைரில்லம், டிரைக்கோடெர்மாவிரிடி ஆகியவற்றைக் கலந்து, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பார்களில் தூவ வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 25 கிலோ கடலைப் பிண்ணாக்கும், இரண்டு மாதங்களக்கு ஒரு முறை 40 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கும் தூவ வேண்டும். ஆண்டுக்கு ஒரு மறை ஒரு டன் மண்புழு உரத்தையும், 200 கிலோ வேப்பம் பிண்ணாக்கையும் பார்களில் தூவ வேண்டும். நெகிழி மூடாக்கு ஷீட்டை லேசாக கையால் தூக்கிக் கொண்டு, இந்த உரங்களைத் தூவி விடலாம்.

தினசரி வருமானம்
நடவிலிருந்து 90-ம் நாள் அறுவடையைத் தொடங்கலாம். சராசரியாக தினமும் 23 கிலோ மகசூல் கிடைக்கும். முதல் ஆண்டு முடிவில் மொத்த மகசூலாக 6,210 கிலோ கிடைக்கும். இரண்டாவது ஆண்டு 8,280 கிலோ, மூன்றாவது ஆண்டில் 8,640, நான்காவது ஆண்டில் 9,000 கிலோ என மகசூல் உயரும். அதன்பிறகு, படிப்படியாக குறையத் தொடங்கும்.
ஒரு கிலோ குறைந்தபட்சம் 30 ரூபாயிலிருந்து, அதிகபட்சமாக 400 ரூபாய் வரை விலை போகும். இந்த விலையை விசேஷ காலத்துல எதிர்ப்பார்க்கலாம். பெரும்பாலான சமயங்கள்ல சராசரியா 40 ரூபாய் கிடைக்கும்.
“எங்க பகுதியில அரை ஏக்கர்ல களையெடுக்கறதுக்கு வருஷத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் செலவு செய்ய வேண்டியிருக்கு. ஆனா, மூடாக்கு விரிப்பு போக 15 ஆயிரம் ரூபாய்தான் செலவு. இது களைகளைக் கட்டுப்படுத்தறதோட செடிகளையும் செழிப்பாவெச்சுருக்கு கூடவே, சொட்டுநீர் போட்டோம்னா கவலையில்லாம இருக்கலாம். இதுக்கு 13 ஆயிரம் ரூபாய் செலவாகும். நான் சொட்டுநீர், தெளிப்புநீர் ரெண்டு முறையையும் அமைச்சுருக்கேன் சம்பங்கி சாகுபடிக்கு இதுபோல் மூடாக்கு விரிப்பும், சொட்டுநீர் பாசனமும் அமைச்சுட்டா பல வருஷத்துக்கு கவலையே இல்லை.
“முழுக்க இயற்கை முறையில விளையறதால எங்களோட சம்பங்கி பறிச்சப் பிறகும், பல மணிநேரம் மொட்டாகவே இருக்கும். இரண்டு நாட்கள் வரைக்கும், வாடாமல் அதிக வாசனையா இருக்கு. இரண்டு நாட்கள் வரைக்கும், வாடாமல் அதிக வாசனையா இருக்கு. இதனால இயற்கை சம்பங்கிக்கு சந்தையில எப்பவுமே கிராக்கிதான்”.
தொடர்புக்கு
சுந்தர்ராஜ்
வெங்கடாசலபுரம்,  துறையூர் தாலூகா
திருச்சி மாவட்டம்
அலைபேசி : 98432-47106


 

சிக்கனமான செலவில் துளசி சாகுபடி செய்து, லாபத்தை அறுவடை செய்து வருகிறார்கள் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சிலர்!
ஏக்கருக்கு அதிகபட்சமாக ஐயாயிரம் ரூபாய் செலவு செய்தால், நடவு செய்த நாற்பத்தி ஐந்தாவது நாளிலிருந்து சுமார் ஐந்து ஆண்டுகள் வரை தினமும் துளசியை அறுவடை செய்து பணம் பார்க்கலாம் என்கின்றார் இந்தப் பகுதி விவசாயிகள்!
திண்டுக்கல் மாவட்டம், கல்லுப்பட்டி விவசாயி சூசைமாணிக்கம் கூறுகையில் ஒய்.நியூ (Y.New) டிரஸ்ட் நடத்துகிறவர்கள் துளசி சாகுபடியை பத்திச் சொன்னார்கள்.
60 சென்ட் நிலத்தில் துளசியை நட ஆரம்பிச்சிட்டேன். மொத்தம் இருபத்தி இரண்டு நிறை (பாத்தி) இருக்கிற மாதிரி பிரிச்சு ஒரு டன் தொழுஉரத்தை மட்டும் போட்டு மார்கழி கடைசியில் துளசியை நட்டேன். நாற்பத்து ஐந்தாவது நாளில் இருந்து தினமும் அறுத்துகிட்டு இருக்கேன். 
ஒரு அறுப்புக்கு ஒரு நிறையில்.. நூறுல இருந்து நூத்திபத்து முடி (கட்டு) கெடைக்கும். பச்சைத் துளசியை திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு போயிடுவேன். ஓரு முடி ரெண்டு ரூவா வரைக்கும் விக்கும்.
மருந்தடிக்கிற வேலையே இல்லை. நாள்தோறும் நூத்தம்பதுல இருந்து இருநூறு மூபாய் வரைக்கும் கிடைக்கிறது. மாதத்தில் சராசரியாக மூணாயிரத்து ஐநூறுலிருந்து நாலாயிரம் வரைக்கும் கிடைக்கும்.
மொத்த செலவு 5 ஆயிரம் ஆகியிருக்கு. இனி வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் செலவும், மாதத்திற்கு ஒரு களையும் எடுத்தால் போதும். காலையிலையும், மாலையிலையும் இரண்டு மணி நேரந்தான் வேலை இருக்கும். முன்னர் எல்லாம் நாள் முழுக்க மாடா உழைத்தாலும் கடந்தான் மிஞ்சியது. இப்ப வேலையும் குறைவு, வருமானமும் அதிகம் என்று பூரித்தார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி (94430-70089), 40 ஏக்கரில் பயிரிட்டு அசத்தி வருகிறார்.

“இரண்டரை வருடமாகத்தான் துளசி சாகுபடியை செய்கிறேன். 10 ஏக்கரில் ஆரம்பம் வைத்து இப்பொழுது 40 ஏக்கர் வரைக்கும் வந்தாச்சி. 25 ஏக்கர் அளவில் இருக்கிற நெல்லிக்கு ஊடுபயிரா துளசியை போட்டிருக்கிறதும் இதுல, அடக்கம் ஊடுபயிராக போடுவதற்கு ஏத்தப் பயிர்தான் துளசி, பச்சை இலையாக அறுக்குவதை விட, விதைக்காகத்தான் நான் அதிகம் வளர்க்கிறேன்.  வருஷத்துக்கு ஒரு ஏக்கருல இருந்து நாலு தடவை விதை எடுக்கலாம். ஒரு எடுப்புக்கு மூணுல இருந்து நாலு கிலோ விதை கிடைக்கும். வருடத்திற்கு பன்னிரெண்டு கிலோவுக்கு குறையாது. கஜலோ 1,200 ரூபாய் வரைக்கும் விற்கிறது.
விதை போக கூடுதலா வருடத்திற்கு ஒரு ஏக்கரில் இருந்து இரண்டு டன் பச்சை இலை கிடைக்கிறது. டன் ஆறாயிரம் ரூபாய்க்கு விக்குது. பச்சை இலையை பெங்களூரில் இருந்தும் விதையை சித்த மருத்துவ கம்பெனிகாரங்களுக்கும் வாங்கிக் கொள்கிறார்கள். விவசாயிகளும் வாங்குகிறார்கள் என்றார்.
ஒய்.நியூ ட்ரஸ்ட்டின் செயலாளர் திரவியராஜிடம் (9842780640) கூறுகையில், “விவசாயிகள் முன்னேற்றத்துக்காக சேவை செய்யக்கூடிய தன்னார்வ அமைப்பு நடத்துகிறோம். இருக்கும் தண்ணியை வைத்து என்ன பயிர் சாகுபடி செய்யலாம் என்று விவசாயிகளை கலந்து பேசி குறைந்த நீரில் வளரும் ஒரு சில மூலிகைகளில்.. முதலில் துளசியை விவசாயிகளுக்கு கொடுத்துப் பார்த்ததில் சிறப்பான பலன் கிடைத்தது. துளசி சாகுபடி சம்பந்தமான இலவச ஆலோசனைகள் பெற விவசாயிகள் எங்களை அணுகலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்புக்கு:
மைதீன் அப்துல்காதர்
அலைபேசி: 94427-17442

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்
நன்னெறி ஆய்வக
முறைகள்
நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்
கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்
தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்
முக்கிய வலைதளங்கள்