மண்

நாற்றங்கால்

பயிர் வடிவமைப்பு

பாசனம்

உரப்பாசனம்

வளர்ச்சி மேலாண்மை

அறுவடை

அறுவடை பின்சார் மேலாண்மை

குழு அமைத்துச் செயல்படும் முறை

சந்தைத் தொடர்புகள்

அதிகாரமளித்தல்

 

மண்ணினைத் தயார் செய்தல்

மண்ணின் ஹியுமிக் அமிலம், நுண்ணுயிரிகள், காற்றோட்டம் மற்றும் வடிகால் வசதி ஆகியவை சரியான அளவில் பேணப்படுவதோடு மண் வளம் கீழ்க்கண்ட முறைகளில் அதிகரிக்கப்படவேண்டும்.

பசுந்தாள் உரம்
வாழை ஒன்றுக்கு ஜிப்சம் 2 கிலோ இடுதல்
வேப்பம் புண்ணாக்கு
பாஸ்போபாக்டீரியா

  • பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பையை பயிரிடுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு விதைத்து, அது பூக்கும் பருவத்தில் வயலினுள் மடித்து உழவு செய்யவேண்டும்

  • செஸ்பேனியா மற்றும் சணப்பையினை வாழைக்கன்று நட்ட பின் விதைத்துப் பின் 60 நாட்களில் அவற்றில் விதை வரும் முன்பு மடித்து உழுது விடவும்.

  • வாழை ஒன்றுக்கு ஜிப்சம் 2 கிலோ, அதோடு ஒரு வாழை மரத்துக்கு 15 கிலோ தொழு உரம் அல்லது ஒரு எக்டருக்கு 45 டன்கள் என்ற அளவில் இடுவதால் மண்ணின் அமில காரத்தன்மை சரியான அளவில் அமைந்து, நுண் மற்றும் பேரூட்டச் சத்துக்கள் பயிருக்குச் சரியான அளவில் கிடைக்கின்றன.

  • எக்டருக்கு 25 லிட்டர் பொட்டாசியம் ஹியுமேட் கன்று நட்ட 3 மற்றும் 5வது மாதங்களில் இடுவதால் அங்ககத் தன்மை அதிகரிக்கச் செய்யும்.

  • வாழைக்கன்று ஒன்றிற்கு 200 கிராம் வேப்பம் புண்ணாக்கு + தென்னை நார்க் கழிவு அல்லது கோழிக் குப்பை அல்லது நெல் உமிச் சாம்பல் 14 கிலோ என்றளவு இடுவதாலும் மண்ணில் அங்கக தன்மை அதிகரிப்பதோடு, நூற்புழுக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகின்றது.

  • வேம் (VAM- வெஸிகுலார் அர்பஸ்குலார் மைக்கோரைசா) 20 கிராம் + பாஸ்போபாக்டீரியா 20 கிராம் + அஸோஸ்பைரில்லம் 50 கிராம் + டிரைக்கோடெர்மா ஹர்ஸியானம் 20 கிராம் கலந்த கலவையினை வாழை ஒவ்வொன்றுக்கும் இடுவதால் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை வேர் மண்டலத்தில் அதிகரிக்கச் செய்யலாம்.

மேலே செல்க

நாற்றங்கால் தயார் செய்தல்

துல்லிய பண்ணைய முறை பயிரிடுதலுக்கு திசு வளர்ப்பு வாழைகளைப் பயன்படுத்தவும், திசு வளர்ப்பு வாழைக்கன்றுகளை சாதாரண இடைக்கன்று வாழைகளைக் காட்டிலும் சீரான மற்றும் வேகமான வளர்ச்சி கொண்டவை. இவை கிட்டதட்ட 20 நாட்களுக்கு முன்பே பூப்பதோடு, 35 நாட்கள் சாதாரண வாழைகளை விட குறைந்த பயிர்க் காலம் கொண்டவை. அதோடு, அதிக மகசூல் தரக்கூடியவை. திசு வளர்ப்பு வாழைகளை தேர்வு செய்யும் போது கீழ்க்கண்ட கருத்துக்களை நினைவில் கொள்ள வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

திசு வளர்ப்பு வாழைக் கன்றுகள்
திசு வளர்ப்பு நாற்றுகள் வளர்ச்சியடைதல்
செடி வளர தேவையான ஊடகமும் மணலும் பாலிதீன் பையில் நிரப்புதல்
5 இலைகளுடன் கூடிய திசு வளர்ப்பு வாழைக்கன்று

  • 45 முதல் 60 நாட்கள் நன்கு கடினப்படுத்தப்பட்ட குறைந்தது 30 செ.மீ. உயரமும், 5 – 6 செ.மீ. வெளித்தண்டுச் சுற்றளவும் கொண்ட கன்றுகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

  • தேர்வு செய்யப்படும் கன்றில் நன்கு ஒளிச்சேர்க்கை நடைபெறும் 5 இலைகள் மற்றும் அவற்றிற்கிடையே உள்ள இடைவெளி 5 செ.மீ. க்கு குறையாமல் இருப்பது மிக முக்கியம்.

  • இரண்டாம் நிலை கடினப்படுத்தலின் முடிவில் சுமார் 25-30 ஆணி வேர்கள் கிழங்கில் இருக்கவேண்டும்.

  • ஆணி வேரின் நீளம் 15 செ.மீ க்கு அதிகமாக, இரண்டாம் நிலைப் பக்க வேர்களுடன் அமைந்திருக்கவேண்டும்.

  • பாலித்தீன் பையானது 20 செ.மீ. நீளமும், 16 செ.மீ. விட்டமும் கொண்டதாக இருக்கவேண்டும். இந்த பையின் முக்கால் பாகத்திற்கு மண் கலவையை நிரப்பவேண்டும்.

  • இந்த மண் கலவையானது உலர் எடை அளவில் 750 – 800 கிராம் எடை இருக்கவேண்டும்

  • இலைப்புள்ளி, தண்டு அழுகல் மற்றும் வினையியல் மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் ஏதுமற்று இருக்கவேண்டும்.

  • கன்றுகள் எர்வினியா அழுகல் நோய், நூற்புழுவினால் ஏற்படும் புள்ளிகள், வேர் முடிச்சுகள் போன்ற வேர் நோய்க்காரணிகளற்று ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். கன்றுகளை வாங்குவதற்கு முன் சரி பார்த்து வாங்க வேண்டும்.

  • அபரிமித வளர்ச்சி பெற்றிருக்கும் கன்றுகளை தேர்வு செய்யக்கூடாது.

மேலே செல்க

பயிர் வடிவமைப்பு
  • பயிர்களை அடர்த்தியாக நடும் பொழுது பயிர் வடிவமைப்பு மிகவும் பாதிக்கப்படும். வாழையின் தழை வளர்ச்சி, பூத்தல், காய் வளர்ச்சி போன்றவை பருவத்தினால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், நடவு செய்யும் காலத்தை பொருத்து வேறுபடும். பராம்பரியாக வாழை 1.8 மீ x 1.8 மீ இடைவெளி விட்டு நடவு செய்யப்படுகிறது.

  • துல்லிய பண்ணையத் திட்டத்தில் வாழைக்காக போடப்பட்ட பக்கக் குழாய்களை காய்கறிப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எனவே, பக்கக் குழரய்களை 1.5 மீ இடைவெளியில் அடைத்து, வாழையினை 1.5 x2.1 மீ இடைவெளியில் சுமார் 3175 பயிர்கள் வரை நடலாம்.

பயிர் வடிவமைப்பு
 

மேலே செல்க

பாசனம்
  • துல்லிய பண்ணையத் திட்டத்தில் சொட்டுநீர் அமைப்பு மூலம் நீர் செலுத்தப்படுகின்றது. மணற்பாங்கான வண்டல் மண்ணில், 6 அடி இடைவெளியில் பக்கக் குழாய்களும், 50 செ.மீ. அல்லது 60 செ.மீ. இடைவெளியில் நீர் சொட்டிகளும் அமைக்கப்பட்டு் மணிக்கு 3.5 – 4 லிட்டர் நீர் பாய்ச்சப்படுகின்றது. இந்த 6 அடி பக்கக் குழாய் இடைவெளி வாழைக்கு மட்டுமே உகந்தது.

  • பக்கக் குழாய் இடைவெளி 150 செ.மீ. என அமைத்து, வாழையினை 5x7 அடி இடைவெளியில் நடலாம்.

  • வாழைக்கு அதன் ஆயுட்காலத்தில் 900-1200 லிட்டர் நீர் தேவைப்படும். வாழையின் நல்ல வளர்ச்சி மற்றும் உற்பத்தித் திறனுக்கு அதன் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் சராசரி அளவு ஈரப்பதமும், அதிகளவு நீரை வடிகட்ட முறையான வடிகால் வசதி அமைத்தல் அவசியம்.

  • சொட்டு நீர்ப் பாசன முறையில், நீரானது வேர் மண்டலத்திற்கு அருகிலேயே சிறிய அளவில் அளிக்கப்படுகிறது. வாழையின் ஒவ்வொரு பருவத்திலும் தேவைப்படும் நீரின் அளவுகள் தரப்பட்டுள்ளன.

மேலே செல்க

உரப்பாசனம்

உரப்பாசனம் என்பது நீரில் கரையும் உரங்களைப் பயிர்களுக்கு பாசன நீரின் வழியே சரியான அமைப்பின் மூலம் வழங்குவதாகும். சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நீரில் கரையும் உரங்கள் மற்றும் பிற சத்துக்கள் துல்லியமாக தேவைப்படும் அளவில், சரியான நேரத்தில் மண்ணில் அளிக்கப்படுகின்றது. இந்தச் சத்துக்கள் பயிர் வேரினைச் சுற்றி, மிதமான அளவில் அளிக்கப்படுவதால் பயிர்கள் வேகமாக எடுத்துத் கொள்கின்றன.

உரப்பாசனக் கருவிகள்

மூன்று அடிப்படை அமைப்புகள் மூலம் நீரில் கரையும் உரங்கள் பாசன நீரினுள் செலுத்தப்படுகின்றன. அவை

  1. வெஞ்சுரி அமைப்பு.
  2. உரப்பாசனப் பண்ணை மற்றும்
  3. உரப்பாசன பம்ப் (அ) மாற்றி அமைக்கும் பம்ப்.

வெஞ்சுரி அமைப்பு

வெஞ்சுரி மூலம் வழியும் நீரானது உரக்கரைசலை அதன் வழியே இழுத்துக் கொள்கின்றது. இம்முறையில் அழுத்தம் மற்றும் நீர் வழியும் விகிதம் அடிக்கடி மாறுவதால், இது துல்லியமாக இருப்பது இல்லை.

உரப்பாசனத் தொட்டி

60 லிட்டர், 90 லிட்டர், 120 லிட்டர் போன்ற அளவுகளில் இந்த தொட்டிகள் உரப்பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு வால்வுகளில் அழுத்த வேறுபாடுகள் இருப்பதால், சத்துக் கரைசலை தொட்டியிலிருந்து உறிஞ்சி பாசனக் குழரய்களுக்கு அனுப்புகின்றன.

உரப்பாசன பம்ப்/விசைக்குழாய்

இவை உரங்களை நேரடியாக சொட்டு நீர்ப் பாசனக் குழரயினுள் சீரான இடைவெளியில் அனுப்புகின்றன. சிறிய பம்புகள் குறிப்பிட்ட அளவு உரக் கரைசலை பாசனக் குழரயினுள் செலுத்துகின்றன.

உரப்பாசனம்
வெஞ்சுரி அமைப்பு
உரப்பாசனத் தொட்டி
உரப்பாசன பம்ப்/விசைக்குழாய்

 

நீரில் கரையும் உரங்கள்

சாதாரணமாக உள்ள உரங்களை உரப்பாசனத்திற்கு பயன்படுத்த முடியாது. ஏனெனில், அவை 100 சதவிகிதம் நீரில் கரைவதில்லை. நீரில் முழுவதும் கரையும் திட, திரவ உரங்கள் இம்முறைக்கு மிகவும் ஏற்றவை. அவற்றைத் தேர்ந்தெடுக்கும் போது கீழ்க்கண்டவைகளை கவனத்தில் கொள்ளவேண்டும் :

  1. கரைதிறன்: நாம் தேர்வு செய்யும் உரமானது, 100 சதம் நீரில் கரையக் கூடியதாக இருக்கவேண்டும். இரண்டு அல்லது மூன்று உரங்களைக் கலக்கும் போது அதன் கரைதிறன் குறையும். நைட்ரஜனின் கரைதிறனுடன் ஒப்பிடும் போது கீழ்க்கண்டவற்றைக் கருத்தில் கொள்ளவும். ஏ.என், = யூரியா > அம்மோனியம் சல்பேட்> ஒற்றை அம்மோனியம் பாஸ்பேட்< டி.ஏ.பி. மூரேட் ஆப் பொட்டாசியம் > பொட்டாசியம் நைட்ரேட் > ஒற்றை பொட்டாசியம் பாஸ்பேட்> எஸ்.ஓ.பி.

  2. இது பிளாஸ்டிக் குழரய்களில் அரிப்பு மற்றும் பாசன அமைப்பில் அடைப்பு ஏதும் ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும்.

  3. பாசன நீரில் உள்ள உப்பு மற்றும் பிற இராசயனங்களுடன் இந்த உரங்கள் ஏதும் எதிர் வினை புரியாமல் இருக்கவேண்டும்.

  4. உரங்கள் நீரில் முற்றிலும் கரையக் கூடியதாக இருக்கவேண்டும் மற்றும்

  5. ஒன்றிற்கு மேற்பட்ட உரங்களை பயன்படுத்தும் போது, அவை ஒன்றுக்கொன்று வினை புரிந்து வீழ்படிவு ஏற்படாமல் இருக்கவேண்டும்.

உரப்பாசனத்தில் பயன்படுத்தப்படும் உரங்கள்

உரப்பாசன அட்டவணை

திசு வளர்ப்பு வாழைகளுக்கு உரப்பாசன முறை மிகவும் ஏற்றது. மேலும் இவற்றுக்கு சாதாரண கன்றுகளை விட 50 சதம் அதிக உரங்கள் தேவைப்படுகின்றது. ஒரு மரத்திற்கு 200-30-300 கிராம் தழைச்சத்து : மணிச்சத்து : சாம்பல் சத்து என்ற அளவில் கரையும் உரங்களை பயன்படுத்துவது அவசியம். 5 நாட்கள் இடைவெளியில் கீழ்க்கண்ட முறையில் உரப்பாசனம் அளிப்பது அவசியம்.

 

சுருக்கம்

ஒரு எக்டருக்குத் தேவையான உரங்கள்

 

* கன்று நட்ட 60 நாட்களுக்கு பிறகு சூப்பர் பாஸ்பேட்டை ஒரு மரத்திற்கு 180 கிராம் என்ற அளவில் இடவேண்டும்.

உரப்பாசன முறை:

ஒரு எக்டருக்குத் தேவையான சத்துக்களடங்கிய உரப்பாசனம் அளிப்பதில் மூன்று முக்கியக் கருத்துக்கள் கவனிக்கப்படவேண்டும்.

 

மேலே செல்க

வளர்ச்சி மேலாண்மை

நவீன பசுமைக் குடில்:

• பயிரின் சராசரி வளர்ச்சியானது நிலம், நீர், சூரிய ஒளி போன்ற இயற்கை வளங்களின் இருப்பையும், பயன்பாட்டையும் பொறுத்தே அமைகின்றது.

• பசுமைக் குடிலில் பயிரிடுவதன் மூலம் பயிர் விரைவில் முதிர்ச்சியடைதல், அதிக மகசூல், பொருட்களின் தரம் உயர்த்தப்படுவதோடு சில சமயங்களில் பூச்சிக் கொல்லியின் பயன்பாட்டையும் குறைக்கின்றது.

 

பசுமைக் குடில்
பசுமைக் குடிலில் திசு வளர்ப்பு செடிகள்
உலர் இலைகளைக் கொண்டு மூடாக்குதல்

 

உட்புற ஈரப்பத சேமிப்பு:

• பயிரின் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்க, மண்ணில் படரும் தாவரங்களை கொண்டு மண்ணின் மேற்பரப்பை மூடுவது மூடாக்குப் போடுதல் எனப்படும். எலர்ந்த இலைகள், வைக்கோல், கற்கள் போன்ற பொருட்களை மூடாக்குக்குப் பயன்படுத்தலாம்.

• பாலித்தீன் பைகளை உபயோகிக்கும் போது சேமிப்புத் திறன் அதிகரிக்கிறது. பாலித்தீன் பைகளால் மண்ணின் வெப்பநிலை அதிகரித்து, களைகள் வளர்வது தடுக்கப்படுவதால் மகசூல் அதிகரிக்கின்றது. மூடாக்குகள் மண் வெப்பலூட்டலிற்கு உதவுகிறது. இது பகலில் வெப்பத்தை போதுமான அளவு சேமித்து வைத்து இரவிலும் அதைத் தக்க வைத்துக் கொள்கின்றது.

  • 20 கிராம் பியூராடான் + ½ கிலோ எண்ணெய் புண்ணாக்குடன் கலந்து 3 நாட்கள் கழித்து இட்டு பின் மண் தோண்டி அணைக்கவும்.

  • நடவு செய்த 4, 6, மற்றும் 8 வது மாத முடிவில் மண்ணினை வெட்டிப் பின் மண் அணைப்புச் செய்யவேண்டும்.

  • இடைக்கன்றுகள் மற்றும் நோய் வாய்ப்பட்ட, உலர்ந்த இலைகள ஆறு முறையாவது அகற்றவேண்டும். (இடைக்கன்றுகளின் வளர்ச்சி மற்றும் எண்ணிக்கையைப் பொறுத்து)

  • கன்றுகளை நட்ட 4 வது மாதத்தில் 20 கிராம் பியூரான் இடவும்

  • துத்தநாக சல்பேட் (0.5%), இரும்பு சல்பேட் (0.2%), தாமிர சல்பேட் (0.2%), மற்றும் போராக்ஸ் (0.1%) போன்றவற்றை கன்றுகளை நட்ட 3, 5, 7 வது மாதத்தில் இடவேண்டும்

  • ஆண் மொட்டுக்களை கடைசி மொட்டு விரிந்து ஒரு வாரம் கழித்து நீக்கவும்.

  • குலை தள்ளிய ஒரு மாதத்தில் முட்டுக் கொடுத்தல் வேண்டும்.

  • ஊடு பயிர்: வெங்காயம், கொத்தமல்லி, பீட்ரூட், தக்காளி ( இரகங்கள் மட்டும்) போன்றவைகளை ஊடுபயிராக வளர்க்லாம். வாழைக் கன்று நட்ட 90 நாட்களுக்குள் முடிந்து விடுமாறு பயிர்க்காலம் கொண்ட பயிர்களை மட்டுமே ஊடுபயிராகப் பயிரிடலாம். நூற்புழுக்கள் தாக்காத துலக்கமல்லி, சணப்பை போன்றவற்றைப் பயிரிட்டு மண்ணுடன் மட்கச் செய்து விடவேண்டும்.

மெல்லிய பிளாஸ்டிக் சீட் கொண்டு மூடாக்குதல்
வெங்காயப் பயிருடன் ஊடுபயிரிடுதல்
முட்டுக் கொடுத்தல்

 

முட்டுக் கொடுத்தல் :

  • குலை தள்ளிய உடன் ஊட்டச்சத்துத் தெளிப்பு: 1% யூரியாஈ பொட்டாசியம் சல்பேட் 1.5% உரங்களை கடைசி சீப்பு விரிந்த உடனும் பின்பு ஒரு மாதம் கழித்து உரு முறையும் தெளிக்கவேண்டும்.

  • குலைகளை மூடுதல்: (4%) காற்றோட்டமுள்ள பாலித்தீன் இழைகள் (200 x150 செ.மீ.) மூலம் கடைசி சீப்பு விரிந்த 15 நாடகளில் மூடுதல் வேண்டும்.

மண்வெட்டி கொண்டு தோண்டுதல்
குலைகளை மூடுதல்

மேலே செல்க

அறுவடை

1.அறுவடை நிலைகள்

 

பொதுவாக வாழை மரம் குலை தள்ளிய நூறிலிருந்து 110 நாட்களில் காய் முற்றி அறுவடைக்குத் தயாராகி விடும். காய்களின் கோணங்கள் மறைந்து நேராகும்போது முற்றி இருக்கும். முதிர்ந்த குலைகள் மஞ்சளாக மாறும் முன்பே, பச்சை நிறத்தில் இருக்கும் போதே அறுவடை செய்யலாம். காய்களின் நுனியில் இருக்கும் பூ மடல்கள் உலர்ந்து, எளிதில் உதிர்ந்து விடும். காயினைத் தட்டிப் பார்க்கும் போது நல்ல ஒலி எழுப்பும். அறுவடை செய்வதற்கு ஒரு வாரத்திற்கும் முன்பு பாசனத்தை நிறுத்தி விடவேண்டும். இல்லை எனில் பழங்களின் தரம் மற்றும் சேமிப்புக்காலம் குறையும். வாழைக்காய் நன்கு முற்றி, விற்கும் நிலை வரும் போது தான் அறுவடை செய்யவேண்டும். அதாவது உள்ளூர் சந்தையில் விற்கும் போது 80 – 85% முதிர்ச்சியடைந்த பின்பும், ஏற்றுமதி செய்வதாயின் 75 % முதிர்ச்சியிலும் அறுவடை செய்யலாம்.  

2.அறுவடை செய்யும் முறைகள்

ஆட்கள் மூலம் அறுவடை செய்தல்:

வாழை தார் அறுவடை செய்த தார் (குலை) வெட்டுபவர், எடுத்துச் செல்பவர் என இரண்டு ஆட்கள் தேவை. சிறிய பரப்பளவு எனில் ஒருவரே இரண்டு வேலைகளையும் செய்து கொள்ளலாம். வெட்டுபவர் குலையினை மரத்தில் இருந்து வெட்டி, சீப்புகளைச் சீவி, கொண்ணைகளை துண்டு துண்டாக வெட்டி வைப்பார். பின்பு சீவப்பட்ட சீப்புகளை சேமித்து வைக்கும் கிடங்கிற்கு மற்றொருவர் எடுத்துச் செல்வார்.

நைலான் கயிறு கொண்டு அறுவடை செய்தல்:

இது ஒரு நவீன முறை. இத்தொழில் நுட்பத்தில் குலையிலிருந்து சீப்புகளை நைலான் கயிறு மூலம் தனித்தனியாக வெட்டிப் பிரித்து வைக்கலாம். இக்கயிறினை குலைக்கும், சீப்புகளுக்கும் நடுவில் வைத்து, இழுக்கும் போது சீப்புகள் அனைத்தும் வரிசையாக தாரிலிருந்து கீழே விழும். இம்முறையில் சீப்புகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. மேலும் இதனைக் கட்டி வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வது எளிது.

மேலே செல்க

அறுவடை பின்சார் மேலாண்மை

• வாழையினை சற்று குளிரான பகுதிகளில் ஒரு வாரம் வரை சேமித்து வைக்கலாம். வாழைக்காய் பழுக்கும் முன்பு குளிர்சாதனப் பெட்டியினுள் வைப்பதால், அதன் பழுக்கும் திறன் பாதிக்கப்படும். வாழைக்காயின் பச்சை நிறம் மாறி பழுக்க ஆரம்பித்த பின் ஒரு வாரம் வரை மட்டுமே சேமித்து வைக்கமுடியும். வாழைக்காய்/பழங்களை 13 முதல் 14 செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைப்பது சிறந்தது.
• குலைகளை எப்போதும் ஒளி அற்ற பகுதியில் சேமித்து வைக்கவேண்டும். இல்லையென்றால், காய்கள் எளிதில் பழுத்து, மென்மை தன்மையை அடைந்துவிடும். ஏற்றுமதி செய்யும் வாழைக்காய்களை 4-16 காய்கள் சீப்புகளாக வெட்டி, அதன் நீள, அகலங்களை சரி பார்த்துப் பின், ஏற்றுமதித் தேவைக்கேற்ப 12-18 கிலோ கொள்ளளவு பொண்ட பாலித்தீன் உறையிடப்பட்ட பெட்டிகளில் அடுக்கி வைக்கவேண்டும். இவ்வாறு பெட்டியில் அடைக்கும் முன்பு அதன் மெழுகுத் தன்மையைப் போக்க நீர் அல்லது நீர்த்த சோடியம் ஹைப்போகுளோரைடில் சுத்தம் செய்து பின் தையோபெண்டலோஸ் கொண்டு நேர்த்தி செய்வது அவசியம்.

நிளம் மற்றும் தடிமன்
சுத்தம் செய்தல்
தரம் பிரித்தல்
மூட்டை கட்டுதல்

சுத்தம் செய்தல்:

குலையிலருந்து சீப்புகளை வெட்டி எடுத்த பின்பு, அவைகளை ஓடும் நீரில் கழுவுவதன் மூலம், அதன் மேல் ஒட்டியுள்ள மெழுகுத் தன்மையினை நீக்கலாம். இதனால் பழங்களின் தோற்றம் நன்றாக இருக்கும். பின் காய்களை திறந்த வெளியில் சற்று உலர்த்தி குளிர்விக்கும் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

தரம் பிரித்தல்:

சீப்புகள் அதில் உள்ள காய்களின் எண்ணிக்கை மற்றும் அளவினைப் பொறுத்துப் பிரிக்கப்படுகிறது. அதிகம் பழுத்து, அடிபட்ட பழங்கள் இங்கு நீக்கப்படுகின்றன. பின்பு இவை உள்ளூர் சந்தைகளுக்குக் குலையாகவே அனுப்பப்படுகின்றது.

மூட்டை கட்டுதல்:

  • வாழை குலைகளை படுக்க வைத்தோ, நிற்க வைத்தோ உலர்ந்த வாழை இலைகளை வைத்து சுற்றி வைக்கலாம். குலைகளுக்கு இடையில் பஞ்சு போன்ற அட்டைகளை வைப்பதால் எடுத்துச் செல்லும் போது காய்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நசுங்குவது தடுக்கப்படுகிறது.

  • ஏற்றுமதி செய்யப்படும் வாழைகளில் கொண்ணையிலிருந்து சீப்புகள் மற்றும் காய்களை வெட்டி எடுத்து பாலித்தீன் வரிகளுடன் கூடிய துளையிடப்பட்ட பெட்டிகளில் வைத்து பேக் செய்யப்படுகின்றது. காயின் வளைந்த பகுதி மேல் நோக்கிய வகையில் மேலே உள்ள காய்கள் அடியில் உள்ளவற்றை நசுக்காவண்ணம் பார்த்து அடுக்கவேண்டும்.

  • 400 காஜ் குறைந்த அடர்த்தி கொண்ட பாலித்தீன் பைகளில் காற்றோட்டம் கொண்டோ அல்லது இல்லாமலோ சாதாரண வெப்பநிலையிலோ அல்லது 13 செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருப்பதன் மூலம் இதன் சேமிப்புக் காலம் அதிகரிக்கும்.

வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல்:

  • ஜிப்பரல்லிக் அமிலம் 150 பி.பி.எம். (150 மி.கி./1 லி. நீரில்) + பினோமைல் 500 பி.பி.எம்.(500 மி.கி. 1 லி. நீரில் கலந்தது) _ வேக்ஸால் 6% கலவையை வாழைக் காய்களின் மீது தெளிப்பதால் குளிர் பதன அறையில் 14 நாட்கள் வரை பழுக்காமல் வைத்திருக்கலாம்.

  • வாழைக் காய்களை ஜிப்பரல்லிக் அமிலம் 500 பி.பி.எம்.+ சிட்டின் 2 பி.பி.எம்.(2 மி.கி. 1 லி. நீரில் கலந்தது) என்ற வளர்ச்சி ஊக்கிகளில் நனைத்து எடுத்தால் பழுக்கும் திறன் தாமதப்படுத்தப்படுவதோடு, சேமிப்புக் காலமும் அதிகரிக்கின்றது.

  • காய்கள் விரைவில் பழுக்க வைக்க எத்திரல் 5000 பி.பி.எம்.(5 மி.லி. / லிட்டர் நீர்) சோடியம் ஹைட்ராக்ஸைடு உருண்டைகள் கலந்த மருந்தினைத் தெளிக்கலாம்.

சேமித்து வைத்தல்:

• வாழைக்காய்களை காற்றுப் புகாத பாலித்தீன் பைகளில் இட்டு குறைந்த வெப்பநிலையில் வைத்திருப்பதால் அதன் சேமிப்புக் காலத்தினை அதிகரிக்கலாம். 90 – 95% ஒப்பு ஈரப்பதமும், 13.5 செ. வெப்பநிலையும் கொண்ட குளிர் பதன அறையில் காய்கள் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் காய்கள் பழுக்காமல் 20 நாட்கள் வரை இருக்கும். வாழைக்காய்களின் எத்திலீன் அடர்வு நிலை 1 பி.பி.எம்.- க்கு கீழே அருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். முற்றிய வாழைகளை எத்திலீன் இல்லாத காற்றில் 3 வாரங்கள் வரையிலும், கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் 14செ. வெப்பநிலையில் 6 வாரங்கள் வரையிலும் வைத்திருக்கலாம்.

மேலே செல்க

குழு அமைத்துச் செயல்படும் முறை:

தொழில்நுட்பங்களை எளிய முறையில் செயலாக்கம் செய்திடவும், உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்து ஏற்பாடுகளுக்கும் குழு அமைத்து செயல்படும் முறை ஏற்றதாக இருக்கும். கூட்டு விற்பனைக்கும், சந்தை தகவல் பரிமாற்றத்திற்கும் இம்முறை உறுதுணையாக இருக்கும்.

வாழை விவசாயிகள் சங்கம்
குழு அமைத்துச் செயல்படும் முறை

 

1.ஒரு குழுவில் எத்தனை உறுப்பினர்கள் சேரலாம்?
20 -25 விவசாயிகள் இணைந்து ஒரு குழுவை அமைக்கலாம். ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்தது ஒரு எக்டர் (2.5 ஏக்கர்) நிலமாவது இருக்கவேண்டும். இதுவே ஓரலகுப் பரப்பளவாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.


2.குழு ஒரே இடத்தில் இருக்க வேண்டுமா அல்லது பிரிந்து இருக்கலாமா?
ஒரு குழு என்பது ஒரு வருவாய் கிராமத்திற்குள் அடங்கி இருக்கவேண்டும் அல்லது இரண்டு அருகருகே உள்ள கிராமங்களிலிருந்தும் இருக்கலாம். ஆனால் ஆங்காங்கு ஒருவர் என்றவாறு சிதறி இருத்தல் கூடாது.


3.குழுவில் சேரத் தேவையான குறைந்தபட்சத் தகுதி என்ன?
குழுவில் உறுப்பினராகக் குறைந்தபட்சம் ஒரு எக்டர் விவசாய நிலம் வைத்திருப்பது அவசியம்.


4.ஒரு எக்டருக்குக் குறைவான விவசாயிகள் குழுவில் சேர இயலுமா?
இயலும், ஒரே பாசன ஆதாரம் கொண்ட இரண்டு மூன்று விவசாயிகள் சேர்ந்து ஓரலகுப் பரப்பிற்கான பயன் பெறலாம்.
5. இச்சிறு குழுக்கள் எவ்வாறு சங்கங்களாக பதிவு செய்யப்படுகின்றன?
விவசாயிகள் ஒரு குழுவாகச் சேர்த்து பின்பு குழுச் சட்டத்தின் கீழ் சங்கமாகப் பதிவு செய்துள்ளனர்.


6. அரசிடமிருந்து அவர்கள் எவ்வளவு மானியம் பெறலாம்?
இக்குழுக்கள் அரசிடமிருந்து 65% மானியம் பெறலாம். 40% மானியம் பணமாகவும், 25% விதை, உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற இடுப்பொருட்களாகவும் அரசால் வழங்கப்படுகிறது. இக்குழுக்கள் முறையில் எந்த நிறுவன சொட்டு நீர்ப் பாசனம் வேண்டியும் அரசிற்கு மனு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கப்பட்ட மனுக்களின் பேரில் குழுக்களுக்கு அரசு 40% மானியம் வழங்கும்.


7. இக்குழு முறையின் பயன்கள் யாவை?

  • குழு முறை விவசாயிகளுக்கு ஒரு புதிய அடையாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது..

  • இம்முறை அரசு மற்றும் தனியாரின் பல்வேறு சுவைகளைப் பெற உதவுகின்றது.

  • விவசாயிகளின் அறிவனை பரிமாறிக் கொள்ள, தகவல் பெறப் பயன்படுகிறது. .

  • அரசு, சந்தையில் வாங்குபவர் மற்றும் பிற நிறுவனம் (அ) சங்கங்களிடமிருந்து தகவல் பெற்று அளிக்கும் பணியைச் செய்கின்றது

  • மேலும் இவை தொழில்நுட்பங்களைப் பரப்பும் செயல்முறை வாகனமாகவும் செயல்படுகின்றன.

  • விளைபொருளுக்கும், இடுபொருட்களுக்கும் உரிய விலையைப் பெற்று தருகின்றது.

  • இடுபொருட்களை தயாரிப்பாளரிடமிருந்தே குறைந்த விலையில் வாங்கித் தரவும், விளைபொருளுக்கு அதிக விலை கிடைக்கவும் விவசாயிகளின் பேரம் செய்யும் திறனை பலப்படுத்தவும் செய்கின்றது.

  • பயிரிடும் முறைகளில் விவசாயிகளின் திறமையை அதிகரிக்க செய்கின்றது.

  • சிறந்த முறையில் நல்ல தரம், உரிய அளவுகள், சீரான தன்மை மற்றும் உரிய நேரத்தில் விளைபொருட்களை ஒப்படைக்கச் செய்யும் திறமைகளை ஊக்குவிக்கின்றது.

  • புதிய மேம்பாட்டு நடவடிக்கை பற்றிய கொள்கை உருவாக்கத்தில் விவசாயிகளின் கருத்துக்களை எடுத்துரைக்கச் செய்கின்றது.

மேலே செல்க

சந்தைத் தொடர்புகள்:
  • வாழைக் குலையினை சந்தைப்படுத்துதலில் விவசாயிகள்/உற்பத்தியாளர்கள், ஒப்பந்த அறுவடைதாரர்கள், மொத்த விற்பனையாளர், இடைத்தரகர்கள், சில்லறை விற்பனையாளர் எனப் பலர் பங்கு பெறுகின்றனர்

  • வாழை வர்த்தகத்தில் உள்ள பொதுவான விற்பனை வழித் தடங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.:

    • உற்பத்தியாளர் - மொத்த விற்பனையாளர் – சில்லறை விற்பனையாளர் – நுகர்வோர்
    • உற்பத்தியாளர் - உள்ளுர் வியாபாரி - மொத்த விற்பனையாளர் – சில்லறை விற்பனையாளர் – நுகர்வோர்
    • உற்பத்தியாளர் - உள்ளுர் வியாபாரி -– சில்லறை விற்பனையாளர் – நுகர்வோர்
    • உற்பத்தியாளர் - சில்லறை விற்பனையாளர் – நுகர்வோர்
    • உற்பத்தியாளர் - நுகர்வோர்

அறுவடை மற்றும் சந்தைப்படுத்துதல் கீழ்க்கண்ட ஒருவரால் செய்யப்படுகின்றது.

    • வாழை உற்பத்தியாளர்கள்
    • ஒப்பந்த அறுவடைதாரர்கள்
    • உள்ளுர் வியாபாரி.

     

    ஒப்பந்த அறுவடைதாரர்கள்
    உள்ளூர் வியாபாரிகள்

     

i) வாழை உற்பத்தியாளர்கள்

  • விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் குலைகளை சீரான முதிர்ச்சி அடையும் முன்பே அறுவடை செய்து உடனடியாக சந்தைக்கு எடுத்துச் செல்வர்.

  • குலைகள் உள்ளூர் சந்தைகளிலேயே வைத்து விற்கப்படுகின்றது. அதனால் இடைத்தரகர்களின் பங்களிப்பால் விவசாயிகளுக்குக் கிடைக்கும் லாபம் குறைகின்றது.

ii) ஒப்பந்த அறுவடைதாரர்கள்

  • ஒப்பந்த அறுவடைதாரர்கள் அடிக்கடி வாழைத் தோட்டத்திற்கு வந்து சிறு விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வர். அறுவடை செய்து கொள்ள விவசாயிகளுக்கு முன் பணமும் கொடுப்பர்.

  • இவ்வாறு ஒப்பந்தாரரோ, அவரது முகவர்களோ குலைகளை அறுவடை செய்து, சந்தைக்கு எடுத்துச் செல்வர்.

  • அனைத்து மாவட்ட சந்தைகளை சுற்றியும் ஒப்பந்த அறவடைதாரர்கள் செயல்படுவார்கள். இவர்கள் விவசாயிகளுக்கு நிதி உதவி செய்யும் முகவர்களாக இருக்கின்றனர்.

  • தோட்டத்தில் மரங்கள் குலை தள்ளும் முன்பே, இவர்கள் வந்து ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர்.

  • சில சமயங்களில் குலைகளின் எண்ணிக்கைக்கேற்ப ஒப்பந்தம் செய்யப்படும்.

  • இவர்கள் ஒப்பந்தம் இட்ட உடன் முன் பணமும், பிறகு அறுவடையின் போது முழுப் பணமும் கொடுப்பர். சிலர் அறுவடையின் முடிவில் தான் முழுப்பணமும் அளிப்பர்.

  • சந்தைப்படுத்தப்படும் வாழைகளில் 80 சதம் இந்த ஒப்பந்ததாரர்களுடையதாகவே இருக்கும்.

iii)உள்ளூர் வியாபாரிகள்

  • கிராம சந்தைகளுக்கு அருகில் இந்த வியாபாரிகள் இருப்பர். இவர்கள் குலைகளை வாங்கி வந்து சந்தையில் வைத்து விற்பர்.

  • இவ்வியாபாரிகள் வெளியில் வாங்கி வந்தோ அல்லது இடைத்தரகர்களாகவே செயல்படுவர்.

மேலே செல்க

அதிகாரமளித்தல்
  • வாழை பயிரிடுதலைத் தொடர விவசாயிகளுக்கு நீண்ட கால நன்மைகளான விளைபொருட்களுக்கு உரிய, நிலைத்த விலை கிடைக்கச் செய்தல்வேண்டும்.

  • அதோடு அவர்கள் வறுமையைத் தாண்டி தங்கள் சமூகத்தினை உயர்த்த கூடுதல் முதலீடு மற்றும் வருமானம் செய்தல் அவசியம்.

  • இதற்கென விவசாயிகள் மாநில அளவில் குழுக்கள் மற்றும் சங்கங்களை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றம் காண்பர்.

சமூக ரீதியான முன்னேற்றம்:

  • துல்லிய பண்ணைய விவசாயிகள் மாநில அளவில் சங்கங்களை உருவாக்கிப் பதிவு செய்துள்ளனர்.

  • இச்சங்கங்களின் மூலம் விவசாயிகள் விளைபொருள் சார்ந்த குழுக்களின் செயல்பாடுகளை வலுப்படுத்தி, அதில் பல குழுக் கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.

  • தொழில் நுட்ப அறிவினை அனைத்து விவசாயிகளும் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வர்.

  • அதிக மகசூல் பெறுவதால் சமூகத்தில் அவர்களின் நிலை உயர்ந்துள்ளது..

பொருளாதார ரீதியான முன்னேற்றம்:

  • இச்சங்கங்கள் விவசாயி குழுக்களின் பேரம் செய்யும் திறன் மூலம் சந்தைபடுத்துதலை அதிகரித்துள்ளதோடு, பல நிறுவனங்களைக் கவர்ந்து, விவசாயிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள வழி வகை செய்துள்ளது.

  • இக்குழு விவசாயிகளைத் தேடி வந்து இடுபொருள் விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களின் தரம், விலை பற்றி எடுத்துரைப்பதால் சரியான நேரத்தில், உரிய விலையில் விற்பனையாளர்களிடமிருந்து விவசாயிகள் எளிதில் இடுபொருட்களைப் பெறுகின்றனர்.

  • இச்சங்கங்கள் மூலமாக குளிர் பதனக் கிடங்குகள, சேகரிப்பு மையம், பதப்படுத்தும் அமைப்பும், விளைபொருள் எடுத்துச் செல்லுதல் போன்ற வசதிகளை மேம்படுத்துகின்றது.

  • இவர்கள் அனைத்து விவசாயிகளின் விளைபொருட்களையும் சேர்த்து சந்தைக்கு எடுத்துச் செல்வதால் ஆட்கூலி, திறன், நேரம் மிச்சப்படுத்துவதோடு விளைபொருட்களை உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பதில் உறுதியளிக்கின்றனர்.

  • துல்லிய பண்ணைய விவசாயிகளின் குலைகள் நல்ல தரமுள்ளவையாக இருப்பதால் ஆண்டு முழுவதும் சந்தையில் அதிக விலை பெறுகின்றது.

  • இக்குழுக்கள் மூலம் பல அறுவடைப் பின்சார் கையாளும் அமைப்புகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு குழுக் கலந்துரையாடல் மூலம் நல்ல ஒரு அனுபவமும், லாபமும் விவசாயிகள் பெறுகின்றனர்.

  • இக்குழுக்கள் மூலம் பல அறுவடைப் பின்சார் கையாளும் அமைப்புகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு குழுக் கலந்துரையாடல் மூலம நல்ல ஒரு அனுபவமும், லாபமும் விவசாயிகள் பெறுகின்றனர்.

  • இக்குழுக்கள் விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்துவதில் துணைபுரிகின்றன.

அரசியல் சம்பந்தமான முன்னேற்றம்:

  • துல்லிய பண்ணைய விவசாயிகள் சங்கம் மானியம், பயிர்க்கடன், பயிர்க்காப்பீட்டுத் திட்டம் போன்ற உதவிகளைப் பெற எளிதில் அரசாங்கத்தைத் தொடர்பு கொள்ள இயலும்.

  • சுய உதலிக் குழுக்களைப் போல் அச்சங்கங்களும் சுழற்சி முறை நிதி உதவியினைப் பெற முடியும்.

  • மேலும் இக்குழு விவசாயிகள் மத்திய மற்றும் மாநில அரசாங்க அதிகாலிகள் பங்கு பெறும் புதிய மேம்பாட்டுத் திட்டக் கூட்டங்களில் கலந்து கொண்டு கொள்கை மாற்றங்களுக்கான தமது கருத்துக்களை வழங்க முடியும்.

மேலே செல்க