பருவம்

தமிழ்நாடு

நன்செய் நிலம் :

  • நேந்திரன் மற்றும் ரொபஸ்டா ரகங்களை நன்செய் நிலத்தில் பயிரிட ஏற்ற காலம் பிப்ரவரி முதல் ஏப்ரல் மற்றும் ஏப்ரல் முதல் மே மாதமாகும்.

  • பூவன், ரஸ்தாளி, மொந்தன், கற்பூரவள்ளி மற்றும் நெய் பூவன் ரகங்களை பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதங்களில் பயிரிடலாம்.

  • ஏப்லர் முதல் மே மாதங்களில் நேந்திரன் மற்றும் ரொபஸ்டா ரகங்கள் நன்றாக வளரும்.

புன்செய் நிலம்:

  • வாழைகளை புன்செய் நிலங்களில் ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களிலும், நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களிலும் பயிரிடலாம்.

  • ரொபஸ்டா, நேந்திரன், குட்டை கேவண்டிஷ் போன்ற ரகங்களை புன்செய் நிலங்களில் பயிரிடலாம்.

படுகை நிலங்கள்:

  • படுகை நிலங்களில் ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களிலும், ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதங்களிலும் பயிரிடலாம்.

மலை வாழை:

  • மலை வாழையை பயிரிட ஏற்ற காலம் – ஏப்ரல் முதல் மே மற்றும் ஜீன் முதல் ஆகஸ்ட்மாதங்கள்.

  • நமரன், லடான், மனோரஞ்சிதம், சிறுமலை மற்றும் விருப்பாட்சி போன்ற ரகங்கள் நன்றாக வளரும்

திசு வளர்ப்பு வாழை:

  • திசு வளர்ப்பு வாழைகளை வருடம் முழுவதும் பயிரிடலாம்.( வெப்பநிலை மிக குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ இருக்கும் போது தவிர)

  • கிரேண்ட் நைன் ரகம் திசு வளர்ப்பு வாழைக்கு ஏற்றது.

கேரளா:

பாசனப் பயிர்:

  • பாசனப் பயிருக்கு ஏற்ற  காலம் – ஆகஸ்ட் முதல் செப்டம்பர்

  • நேந்திரன் வகைகளான நெடுநேந்திரன், ஜஞ்ஜிபர், செங்கால்கோடன் மற்றும் உண்ணும் வகைகளான மோன்ஸ்மேரி, ரொபஸ்டா, ஜெயிண்ட் கவர்னர், குட்டை கேவண்டிஷ், சென்கதளி, பூவன், பாலையம்கோடன், நிஜிலிபூவன், அம்ரித்ஸாகர், கிராஸ் மைக்கேல், கற்பூரவள்ளி, பூம்காளி, கூம்பிள்ளாகன்னன், சினால் தத்சாகர்), பி.ஆர்.எஸ் -1, பி.ஆர்.எஸ் – 2 போன்ற ரகங்கள் நன்றாக வளரும்.

தென்னையில் ஊடுபயிரிடுதல்:

  • தென்னையில் ஊடுபயிரிட ஏற்ற காலம் – ஏப்ரல் முதல் மே மற்றும் ஆகஸ்ட் முதல் செப்டம்பர்

  • நிஜாலிபூவன், ரொபஸ்டா, பி.ஆர்.எஸ் -1, பி.ஆர்.எஸ் – 2, தத்சாகர் ( பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி வாய்ந்தது) போன்ற ரகங்கள் நன்றாக வளரும். போட்லஸ் அல்டாபோர்ட் போன்ற ரகங்களும் பரிந்துரைக்கப்படுகிறது.

மானாவாரி பயிர்:

  • மானாவாரியாக பயிரிட ஏற்ற காலம் – ஏப்ரல் முதல் மே மாதங்கள்

  • சமைக்க உகந்த ரகங்களான மொந்தன், பத்தீஸா, கஞ்சகேலா, நேந்திரபடாத்தி போன்றவை மானாவாரியாக பயிரட ஏற்றவை.

கர்நாடகா:
  • கர்நாடகாவில் ஜீன் மாத இறுதியில் பயிரிட ஏற்ற காலமாகும்

  • கர்நாடகாவில் பயிரிட உகந்த பருவம்-
  1. ஏப்ரல் – ஜீன்

  2. செப்டம்பர் – மார்ச்

பொந்தா மற்றும் மெளரிசியஸ், பூவன் போன்றவை நவம்பர் முதல் ஜனவரி மாதங்களில் பயிரிட ஏற்ற காலமாகும் 

மேலே செல்க

இரகங்கள் :

 கலப்பின வகைகள்:
     

    கோ-1:

     
  • இந்த கலப்பின வகை கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது

  • இந்த வகை லாடன், கிடோலி மற்றும் மூசா பல்பிசியானா என்ற மூன்று பெற்றோர்களில் இருந்து கலந்து உருவாக்கப்பட்டது.

  • இது விருப்பாட்சி மலை வாழைப்பழத்தை போன்று வாசனை மற்றும் சுவையுடன் இருக்கும்.

  • இந்த வகை கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் அடி வரை உள்ள மலைப் பகுதிகளிலும், சமவெளிப் பகுதிகளிலும் வளரும்.

  • மகசூல் – 22 டன்/எக்டர்

  • பயிர்க் காலம்-14 மாதங்கள்.

உதயம்:

 

சிறப்பியல்புகள்:

  • இந்த கலப்பின வகை திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தில் பிசாங் ஆவாக் (AAB) என்ற துணை தொகுதியிலிருந்து தனிப்பயிர் தேர்வு மூலம் உருவாக்கப்பட்டது.

  • உறுதியான தண்டுடன், உயரமாக, அடர்த்தியாகவும், குலையின் எடை 30-35 கிலோ அளவாகவும் இருக்கும்

  • குலையின் கைகள் நல்ல இடைவெளியுடன், உருண்டை வடிவத்தில் இருப்பதால் பொதி கட்டவும், வண்டிகளில் ஏற்றவும், மிகக் குறைந்த அளவு சேதத்துடனும் கொண்டு செல்லலாம்.

  • பழத்தின் தரம் நடுத்தரமாகவும், சர்க்கரை அமிலக் கலவை நன்றாகவும் இருக்கும். அதிகபட்சமாக 7 நாட்கள் வரை மஞ்சள் நிறத்தில் வைத்திருக்கலாம்.

குறிப்புகள்:

  • காற்று அதிகம் வீசும் பகுதிகளில் பயிரிட மிகவும் ஏற்றது.

  • வாழை முடிக்கொத்து நோய்க்கு எதிர்ப்பு சக்தியுடையது. களர் உவர் தன்மையை தாங்கி வளரும். சாதகமற்ற மண் நிலைகளிலும் நல்ல தரமான குலைகளை தரவல்லது.

  • ப்யூசேரியம் வாடல் நோய்க்கு அதிகளவில் பாதிக்கப்படக் கூடியது.

கிரேணட் நைன்:

 

மாநிலம்: தமிழ்நாடு
பயிரிடும் காலம்: 12-13 மாதங்கள்

சிறப்பியல்புகள்:

  • ஒவ்வொரு குலையும் 10-12 கைகளுடன் 175-225 பழங்களுடன் இருக்கும்

  • பழங்கள் உண்பதற்கு சுவையாகவும், வைப்பு தரமும் நன்றாக இருக்கும்.

  • அதிக விளைச்சல் (ஒரு மரத்திலிருந்து 30 கிலோ)

  • பழங்கள் நீளமாக, உருளை வடிவத்தில் சிறிய வளையுடன் இருக்கும்.

  • வைப்புக் காலம் நன்றாக இருக்கும்.

  • பழங்கள் முதிர்ச்சி அடையும் போது கவரக் கூடிய மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும்.

  • பழங்கள் உடனே சாப்பிடத் தகுந்தவையாகவும், பதப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.

  • தோலிலிருந்து சதைப் பகுதி விகிதம் அதிகமாக இருப்பதால் பதப்படுத்துவதற்கு மிகவும் ஏற்றது.

    பி.ஆர்.எஸ்.1

சிறப்பியல்புகள்:

  • கேரளா வேளாண் பல்கலைக் கழகத்தின் கன்னாரா வாழை ஆராய்ச்சி நிலையத்தில் அக்னீஸ்வர் மற்றும் பிசாஸ்லிலின் என்ற பெற்றோரை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட இரகமாகும்.

  • இது மிதமான உயரத்துடன், ஆதாரம் (அ) கம்பு எதுவும் இல்லாமல் 14-16 கிலோ எடையுள்ள குலையை தாங்கி நிற்கும்.

  • நீளமான பழங்களுடனும், பழுக்கும் போது கவரக் கூடிய தங்க நிற மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்.

  • சற்று அமிலச் சுவையுடன் இருக்கும்.

குறிப்புகள்:

  • மூன்று வருடங்களில் 4 பயிர்களை தரக்ககூடிய வல்லமை உடையது.

  • குறைந்த பயிர் காலம் இருக்கக் கூடிய கலப்பின வகை. இந்த வகை இலைப் புள்ளி நோய், ப்யூசேரிய வாடல் நோய், நூற்புழுக்களின் தாக்குதலுக்கு எதிர்ப்புச் சக்தியும் உடையது.

பி.ஆர்.எஸ் 2

சிறப்பியல்புகள்:

  • கேரளா வேளாண்மை பல்கலைக் கழகத்தின், கன்னாரா வாழை ஆராய்ச்சி நிலையத்தில் வன்னன் மற்றும் பிசாஸ் லிலின் என்ற பெற்றோர் கலந்து உருவாக்கப்பட்ட கலப்பினமாகும்.

  • இது ஒரு நடுத்தர உயரமுடைய மரம்.

  • குலையின் எடை 15-20 கிலோவும், சிறிதாக தடித்து அடர் பச்சை நிறத்தில் பூவன் பழம் போன்று அடர்த்தியாக அமைந்து இருக்கும்

           குறிப்புகள்:

இலைப்புள்ளி நோய்கள் மற்றும் நூற்புழுக்களின் தாக்கத்தை தாங்க வல்லது.

எப். எச்.ஐ.ஏ-01

சிறப்பியல்புகள்:

  • இது ‘கோல்டு பிங்கா்’ என்றும் அழைக்கப்படும். அதிக விளைச்சல் தரக் கூடியது. பச்சநாடன் மற்றும் ப்ளுகோ இரகங்களுக்கு மாற்றாகும்.

  • ஹோண்டிராஸில் எஸ்.எச்-3142 × குட்டை ப்ராட்டா என்ற பெற்றோர் கலந்து உருவான ‘போம்’ வகை கலப்பினமாகும்.

  • அதிக எடையுள்ள குலைகளை (20-25 ): 14-15 மாதங்களில் ஆதாரம் (அ) கம்பு எதுவும் இல்லாமல் தாங்கி நிற்கும்.

  • பழங்கள் சற்று புளிப்பு சுவையுடன் (அ) ஆப்பிள் வாசனையுடன் காணப்படும்.

  • கருப்பு சிகோடோகா நோய், ப்யூசேரியம் வாடல் நோய்க்கு அதிக எதிர்ப்பு சக்தியுடையது. குழிப்பறிக்கும் நூற்புழுக்களின் தாக்குதலையும் எதிர்த்து நிற்கக் கூடியது.

  • பழங்களின் வைப்புக் காலம் நன்றாக இருக்கும்.

குறிப்புகள்:

  • பழங்கள் இரண்டு விதமாகவும் பயன்படும்.

  • பச்சநாடன் இரகத்தைக் காட்டிலும் நல்ல வளர்ச்சி, உயரிய மகசூலும், தரமும் நன்றாக இருக்கும்.

  • இந்தியாவின் சோடியம் கலந்த களர் மண்ணைத் தாங்கி வளரக் கூடியது.

    சாபா:

     
  • சோடியம் கலந்த களர் மண்ணில் நன்றாக வளரும்.

  • இது பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.

  • மகசூலில் குறைவு ஏற்படாமல் கார அமிலத் தன்மை 8.5-8.75 அளவுள்ள களர் மண்ணிலும் நன்றாக வளரும்.

  • உயரமான தண்டுப்பகுதி உடையது, 16-20 அடி உயரம் வரை வளரும்.

  • உறுதியான மரத்துடன், பனிக்காலத்தை தாங்கி வளரக் கூடியது.

  • பழங்கள் பெரியதாக, முதிர்ந்தாலும் கோண வடிவிலேயே இருக்கும். சதைப்பகுதி வெள்ளை நிறத்தில், பழமாகும் போது நல்ல சுவையுடனும் காணப்படும்

  • இந்த வகை சமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

மேலே செல்க

 

மாவட்டங்கள் பயிரிடப்படும் முக்கிய இரகங்கள்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மொந்தன், கற்பூரவல்லி
கடலூர் பூவன், ரொபஸ்டா
விழுப்புரம் பூவன், ரொபஸ்டா
வேலூர் ரஸ்தாளி, ரொபஸ்டா
திருவண்ணாமலை ரஸ்தாளி, ரொபஸ்டா, பூவன்
சேலம், நாமக்கல் ரொபஸ்டா, செவ்வாழை,கற்பூரவல்லி, மொந்தன், மோரிஸ், மலை வாழை
தர்மபுரி குட்டை கேவண்டிஷ், லகாடான், ரொபஸ்டா
ஈரோடு ரஸ்தாளி, மொந்தன், பூவன், குட்டை கேவண்டிஷ், ரொபஸ்டா, நேந்திரன்
திருச்சி, கரூர், பெரம்பலூர் ரஸ்தாளி, கற்பூரவல்லி, நாடன், நேந்திரன், பூவன்
கோயமுத்தூர் ரொபஸ்டா, நேந்திரன்
புதுக்கோட்டை பூவன், ரஸ்தாளி
தஞ்சாவூர் பூவன், ரஸ்தாளி
நாகப்பட்டினம், திருவாரூர் பூவன், ரஸ்தாளி
மதுரை, தேனி பூவன், ரஸ்தாளி, வயல் வாழை, ரொபஸ்டா, குட்டை கேவண்டிஷ்
திண்டுக்கல் பூவன், ரொபஸ்டா, செவ்வாழை, மலை வாழை, (விருப்பாட்சி மற்றும் சிறுமலை)
ராமநாதபுரம் பூவன், வயல் வாழை
விருதுநகர் பூவன், திழுவன்
சிவகங்கை பூவன்
திருநெல்வேலி ரொபஸ்டா, வயல் வாழை
தூத்துக்குடி மோரிஸ்
நீலகிரி பூவன், செவ்வாழை
கன்னியாகுமரி செவ்வாழை, நேந்திரன், ரொபஸ்டா, மட்டி, பூவன், ரஸ்தாளி

 


சமைக்க உகந்த இரகங்கள்:

1.மொந்தன்

    மாநிலம்:  தமிழ்நாடு
    ‌பயிர்க்காலம் :  12 மாதங்கள்                        
    குலையின் எடை:  18‌‌‌‌‌‌‌ - 20 கிலோ

சிறப்பியல்புகள்

  • காய்கள் பெ‌ரிதாகவும், நடுப்பகுதி தடித்தும், நுனி‌ப்பகுதி வளைந்தும், வெளி‌‌ர் பச்சை நிறத்தில் இருக்கும்.

  • தோல் பொதுவாக பச்சை நிறமாக இருக்கும்.

  • நடுத்தண்டு நல்ல வளர்‌ச்சியுடன் பல மருத்துவ குணங்களை கொண்‌டது

  • இதன் இலைக‌ளுக்காகவும் இவை சாகுபடி செய்யப்படுகின்றது.

கு‌றி‌‌‌‌‌‌‌ப்புகள்

வாழை முடிக்கொத்து நோய்க்கு எதிர்ப்பு திறனுடையது.  களர் உவர் நிலையை தாங்கும் தன்மையுடையது. சாதகமற்ற சூழ்நிலையிலும் இயல்பாக குலை தள்ள கூடியது .
பியூசேரியம் வாடல் ‌நோயின் தா‌க்குதலுக்கு எளிதில் உள்ளாகும்.

2. நெய் மன்னன்:

  • தஞ்சாவூரில் வயல் வாழை என்றும், கொங்காடில் நெய் மன்னன் என்றும், பண்ணைக் காட்டில் நாட்டு வாழை என்றும் அழைக்கப்படுகிறது.

  • வாழை மரம் அடர்த்தியாக, மிதமான உயரத்துடன் இருக்கும்

  • குலைகள் பெரியதாக, அடர்த்தியாக, 18 கிலோ எடையுடன், 10 கைகள் வரை இருக்கும்.

  • பழங்கள்-சிறியது முதல் நடுத்தர அளவுடன், அடிப்பகுதியில் தடித்தும், நுனியில் சிறுத்தும், 5 பக்கங்களுடன் ஒழுங்கற்று அமைந்து கெட்டியான வளைவுடன் காணப்படும்.

  • தோல்-கெட்டியாக இருக்கும். உரிப்பதற்கு எளிது, பழமாகும் போது அடர் பச்சை நிறத்திலிருந்து ஆரஞ்சு மஞ்சள் நிறத்திற்கு மாறும்.

  • சதைப்பகுதி-கெட்டியாக, வெள்ளை நிறத்தில், அதிக சுவையில்லாமல் இருக்கும்.

  • பயிரிடும் காலம்-12 மாதங்கள்

2.உண்ணத் தகுந்த இரகங்கள்:
  1. குட்டை கேவண்டிஷ்

 

மாநிலம் தமிழ்நாடு.
‌பயிர்க்காலம்:  10 - 12 மாதங்கள்
குலை‌யின் எடை : 15 - 25 கிலோ

சிறப்பியல்புகள்

  • இது குட்டையாக இருப்பதால் பலத்த காற்று வீசும் பகுதிகளில் சாகுபடி செய்யலாம்.

  • குலையின் அளவு,  பழத்தின் நீளம் மற்றும் தடிமன் ஆகியவை நன்றாக இருந்த போதிலும்,  வைப்புக்காலம் குறைவு.

  • குலையில் 6 முதல் 7 சீப்புகள் வரை இருக்கும்.

  • பழங்கள் பழுத்தாலும், பழத்தின் தோல் சற்று தடிமனாக இருப்பதால் பச்சை நிறத்தையே கொண்டிருக்கும்

  • சாதாரண மண் வகைகளில் அதிக அளவு இ‌டுபொருள்கள் அளிக்கப்பட்டால் நன்கு வளரும்.

  • சொட்டு நீ‌ர் பாசனத்துடன் கூடிய அடர்மிகு சாகுபடியில் இது நல்ல இலாபத்தை ஈட்‌டித்தரும்.

குறிப்புகள்

பனி பொ‌ழிவுள்ள வெப்ப மண்டல பகுதிகளில் ‌ சிகாடகா இலைப்புள்ளி ‌ நோய் தாக்குதல் அதிகம் ஏற்படுவதால் பயிரிட ப‌ரிந்துரைக்கப்படுவதில்லை.

2. சக்கரகேளி

  • தமிழ்நாட்டில் குளித்தலை & தஞ்சாவூர் பகுதிகளில் பயிரிடக்கூடிய இரகமாகும்.

  • அதிகச் சுவையுடன் இருக்கும்.ஆனால் வைப்புக் காலம் மிகக் குறைவு.

  • மரம்-மெலிதாக, நடுத்தர அளவுடன், இலைக்காம்பு ஒரங்கள் திறந்து, தெளிவான சிவப்பு நிறத்தில் காணப்படும்.

  • பயிரிடும் காலம்-13 மாதங்கள்

  • குலைகள் 8 கைகளுடன் ஒவ்வொரு கையிலும் 12 பழங்களும் 10 கிலோ எடையுடன் இருக்கும்

  • பழங்கள்-நடுத்தர அளவுடன், உருண்டையாக, 5 பக்கங்களுடன், தெளிவற்ற வரிகளுடன், காம்பு நீளமாக, கெட்டியாகவும், பழத்தின் தோல் மெல்லியதாகவும், எளிதாக உரிக்கக் கூடியதாகவும் காணப்படும். சதைப்பகுதி-மஞ்சள் நிறத்தில், சாறுடன் சுவையாக இருக்கும்

3.ரொபஸ்டா

  • உயரமான லகாடானின் சற்று குட்டையான இரகம்.

  • மரம்-அளவான உயரத்துடன், தண்டுப் பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் பச்சைநிற புள்ளியுடன் காணப்படும்.

  • குலைகள்-“பெண்டுலம்” போன்று இருக்கும். ஒரு குலைக்கு 7-9 கைகள், ஒரு குலையில் உள்ள 100 பழங்களின் எடை 25-30 கிலோ.

  • பழங்கள்-பெரிதாக,  தோல் மிதமான கெட்டியாக இருக்கும். முதிர்ந்த பழங்கள் எளிதாக உதிர்ந்து விடும். பழங்கள்-பச்சை நிறத்திலிருந்து மங்கிய மஞ்சள் நிறத்திற்கு மாறும்.

  • சதைப்பகுதி-சுவையாக,  சாறுடன், வாசனையுடன் குட்டை கேவண்டிஷை விட நல்ல வைப்புக் காலத்துடன் காணப்படும்.

  • இலைப்புள்ளி நோய், தண்டுக் கிழங்கு வண்டு, வேர்க்கிழங்கு  அழுகல் மற்றும் தேமல் நோய் தாக்குதலுக்கு ஆளாகும்.

  • பயிரிடும் காலம் 12-14 மாதங்கள்

4. ரஸ்தாளி:

  • ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் பயிரிடப்படும் சுவையான இரகம்.

  • மரம்-உயரமாக (4-4.5 மீ), தண்டுப்பகுதி-மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் பழுப்பு நிறத் திட்டுகளுடன், இலைக்காம்பு மற்றும் இலையுறைகள் சிவப்பு கலந்த விளிம்புகளுடன் காணப்படும்.

  • குலை 15-20 கிலோ, 8-16 கைகள், 60-80 பழங்கள்.

  • பழங்கள்-நடுத்தர அளவுடன், உருண்டை மற்றும் கோல் போன்ற வடிவத்திலும் பலமில்லாத காம்புடன் காணப்படும்

  • தோல்-மெல்லியதாக, உரிப்பதற்கு எளிதாகவும், சாம்பல் கலந்த மஞ்சள்  நிறத்தில் காணப்படும்.

  • சதைப்பகுதி-திடமாக சுவையுடன், நறுமணத்துடன் இருக்கும்.

  • பனாமா வாடல் நோய் தாக்குதலுக்கு ஆளாகும். சதைப் பகுதியில் கட்டி கட்டியாக உருவாகும். குலையிலிருந்து பழங்கள் கீழே எளிதாக உதிர்ந்து விடும்.

  • பயிரிடும் காலம் 14-15 மாதங்கள்.

5. ஆயிரங்கா ரஸ்தாளி:

  • பொள்ளாச்சிப் பகுதிகளில் பூவிலாக் கொன்னை என்றழைக்கப்படுகிறது.

  • ரஸ்தாளி இரகத்தின் மொட்டிலிருந்து உருவாக்கப்பட்ட இரகம்.

  • ரஸ்தாளி இரகத்திலிருந்து வேறுபட்டது. இதில் ஆண் பூக்கள் இல்லை என்பதால் முழுவதும் பழங்களால் சூழ்ந்திருக்கும்.

  • முதல் 5-6 கைகள் ரஸ்தாளி இரகம் போன்று இருக்கும். மீதி உள்ள பழங்கள் அளவில் வேறுபட்டிருக்கும்.

  • ஒரு குலையில் 500 பழங்கள் இருக்கும். 25 கிலோ எடையுடையதாக இருக்கும்.

  • பயிரிடும் காலம் 15 மாதங்கள்.

6.கற்பூரவள்ளி:

  • நடுத்தர மண் வளமுடைய பகுதிகளில் பயிரிடப்படும் ஒரு இரகம். விருந்துகளில் வழங்குவதற்கான நோக்கத்தில் பயிரிடப்படுகிறது.

  • தமிழ்நாட்டின் மத்திய, தென் மாவட்டங்களில் பரவலாகப் பயிரிடப்படும் இரகம்.

  • இந்திய வாழைப் பழங்களிலேயே மிகவும் சுவையான ஒன்று.

  • மரம்-தடித்து, அடர்த்தியாக, உயரமாக, பெரிய இலைகளுடன் காணப்படும். தண்டுப்பகுதி-இளம் பச்சை நிறத்தில் இளர் சிவப்பு நிற சாயத்துடன் காணப்படும்.

  • குலைகளில் 8-9 அடர்த்தியான கைகள் இருக்கும். ஒரு கையில் 13-14 பழங்களும், ஒரு குலையில் 100-120 பழங்கள் இருக்கும்.

  • பழங்கள்-நடுத்தர அளவுடன், பழுத்தாலும் காம்பு உதிராமல் நிலையாக இருக்கும். தோல்-மிதமான கெட்டித் தன்மையுடன் சாம்பல் பூச்சுடன் மஞ்சள் நிறத்தில் காணப்படும்

  • சதைப்பகுதி-சுவையுடன் சாறு மிகுந்து திடமாக, நறுமணத்துடன் காணப்படும்.

  • காரத் தன்மை உள்ள மண்களிலும் நன்கு வளரும்.

  • இலை பயன்பாட்டிற்காகவும் பயிரிடப்படுகிறது.

  • தண்டுக் கிழங்கு வண்டின் தாக்குதலை ஒரளவிற்கு தாங்கும்.

  • பயிரிடும் காலம் 12-14 மாதங்கள்.

7. விருட்பாட்சி:

  • தமிழ்நாட்டில் கொடைக்கானல் மலைத் தொடரில் மற்றும் பழனி மலையின் அடிவாரங்களில் பயிரிடப்படும் உன்னத இரகமாகும்.

  • பல வருடங்கள் வாழும் இந்த இரகம் அதிக தரத்துடன், காபித் தோட்டத்தில் கலவைப் பயிராகவோ (அ) தனித் தோட்டப் பயிராகவோ, மானாவாரி நிலங்களிலும் வளரும்.

  • மரம் 4.5 – 5 மீ உயரத்துடன் இருக்கும்.

  • குறைவான விளைச்சலுடையது. சிறு குலைகள் 8-12 கிலோ எடையுடன், 7-8 கைகள், ஒவ்வொரு கையிலும்10-12 பழங்கள், ஒரு குலையில் 80-90 பழங்களுடனும் இருக்கும்.

  • பழங்கள்-சிறியது முதல் நடுத்தர அளவுடன், தெளிவான விளிம்புடன் காணப்படும். தோல்-கெட்டியாக, பச்சை கலந்த மஞ்சள்  நிறத்திலிருந்து பழுக்கும் போது கருப்பு நிறமாக மாறும். உரிப்பதற்கு எளிது.

  • சதைப்பகுதி - வெள்ளை (அ) மங்கிய மஞ்சள் நிறத்தில், உலர்ந்து சுவையாக, நல்ல நறுமணத்துடன் காணப்படும்.

  • நல்ல வைப்புக் காலத்துடன் இருக்கும்.

  • பழுத்தாலும் காம்புப்பகுதி குலையுடன் நன்றாக ஒட்டியிருக்கும்.

  • அதிக உயரத்தில் பயிரிடும் போது ஒரு வித வாசனையுடன் இருக்கும்.

  • பல்லாண்டு பயிரிடுவதால் வாழை குலை நச்சுயிரி நோயால் பாதிக்கப்படுகிறது.

8. சிறுமலை:

  • சிறுமலைப் பகுதியில் பயிரிடப்படும் இரகமாகும்.

  • விருட்பாச்சி இரகத்திலிருந்து வந்த இரகம்.

  • சிறுமலை வாழைப் பழத்தின் சதைப்பகுதி உலர்ந்து இருக்காது. ஆஸில் சாற்றுடன், சுவையுடன், நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

  • விருட்பாச்சி போன்று பழுத்தாலும் காம்புப்பகுதி பழத்துடன் ஒட்டியிருக்கிறது.

  • பயிரிடும் காலம் 14 மாதங்கள்.

9. பூவன்:

  • தமிழ்நாட்டில் வருடம் முழுவதும்அதிகளவில் பயிரிடப்படும் வணிக ரீதியான இரகம்.

  • மரம் உயரமாக, அடர்த்தியாக இருக்கும்.

  • குலை- பெரிதாக, 25 கிலோ எடையுடன் 12 கைகள், 18 பழங்களுடன் 200 (அ) அதற்கு அதிகமான பழங்களுடன் காணப்படும்.

  • பழங்கள்-நடுத்தர அளவுடன், உருண்டை வடிவத்தில், தெளிவான காம்புடன் காணப்படும்.

  • தோல்-மெலிதாக, அடர் மஞ்சள் நிறத்தில், உரித்தால் எளிதில் வந்து விடும்.

  • சதைப்பகுதி-மென்மையாக, சாறுடன், மஞ்சள் நிறத்தில், புளிப்பு சுவையுடன், நல்ல மணத்துடன் இருக்கும்.

  • பயிரிடும் காலம் 11-14 மாதங்கள்

  • வாழை தேமல் நச்சுயிரி, வாழை கோடு நச்சுயிரி தாக்குதலுக்கு அதிகளவில் பாதிக்கப்படும். இதனால் விளைச்சல் குறையும்.

10. செவ்வாழை:

  • இது அதிக இன்சுவையுடைய, அதிக விலையுடைய இரகமாகும்.

  • தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வணிக ரீதியில் பயிரிடப்படுகிறது.

  • கடல் மட்டத்திலிருந்து 1300 மீ உயரத்திலும் வளரும். குறைவாகப் பயிரிடப்படுகிறது.

  • மரம்-உயரமாக, அடர்த்தியாக, தண்டுப்பகுதியில் உள்ள காம்பு ஒரு வித அடர் சிவப்பு நிறத்துடன் காணப்படும்.

  • குலை 20-25 கிலோ எடையுடன், கதிர் வடிவத்துடன், குட்டையான காம்புடன், மழுங்கிய நுனியுடன் காணப்படும்.

  • தோல் பகுதி-கெட்டியாக, சிவப்பு நிறத்தில், உரிப்பதற்கு எளிதாக இருக்கும்.

  • சதைப்பகுதி-ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில், சாறுடன், சுவையுடன் தனிப்பட்ட மணததுடன் காணப்படும்.

  • வாடல் நோய்க்கு எதிராக சற்று தாங்கி நின்று வளரும்.

  • பயிரிடும் காலம்-18 மாதங்கள்.

  • முடிக்கொத்து நோய், ப்யூசேரியம் வாடல் மற்றும் நூற்புழு தாக்குதலுக்கு அதிகளவில் பாதிக்கப்படும்.

11. சன்ன சென்கதளி:

  • திடமான இரகம்.

  • சிவந்த நிறமுடைய தண்டு, இலைக்காம்பு, இலை நடு நரம்பு பார்பதற்கு செவ்வாழை போன்றே காணப்படும்.                       

  • இலைகள் நடுத்தர அளவுடன் இருக்கும்.

  • பழங்கள்-சிறியதாக, மெலிதாக தெளிவான நுனியுடன், தோல் சிவந்த நிறத்தில் காணப்படும்.

  • சதைப்பகுதி-இளம் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும்.

  • தென்னந்தோப்புகளில் முழுவதும் நிழல் மூடிய நிலைகளிலும் நன்றாக வளரும்.

  • இலைப்புள்ளி நோயை தாங்கி வளரும்.

  • பயிரிடும் காலம்-12 மாதங்கள்

12.மட்டி:

  • தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் பயிரிடப்படும் ஒரு இரகம்.

  • மரம் சற்று திடமாக இருக்கும்.

  • குலைகள்-மிகச் சிறந்த தரமாக, 30 கிலோ எடையுடன், 18 கைகளுடன் காணப்படும்.

  • பழங்கள்-சிறியதாக, நீளமாக, தெளிவான நுனியுடன் காணப்படும்.

  • சதைப்பகுதி நல்ல சுவையுடன் இருக்கும்.

  • ஆண், பெண் வளமாக இருந்தால் கலப்பினம் செய்ய மிகவும் உகந்த இரகம்.

  • பயிரிடும் காலம்-12 மாதங்கள்

13.நமரை:

  • கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுவாக பயிரிடப்படுகிறது.

  • மரம் திடமாக இருக்காது.

  • ஆண் பெற்றோர் மரம் கலப்பினம் செய்ய ஏற்றது.

  • பழங்கள் சிறியதாக நல்ல சுவையுடன் காணப்படும்.

  • பயிரிடும் காலம்-12 மாதங்கள்

14.பச்சநாடன்:

  • தமிழ்நாட்டில் கோடையில் வெப்பம் அதிகம் நிலவும் பகுதிகளில் குளிர்ந்த சீதோஷ்ண விளைவை ஏற்படுத்துவதற்காக பயிரிடப்படும் ஒரு பிரபலமான இரகம்.

  • தென்னை/பாக்கு தோப்புகளில் ஊடுபயிராக பயிரிட ஏற்ற இரகம்.

  • பயிரிடும் காலம்-15 மாதங்கள்.

  • குலையின் எடை 12-15 கிலோ (11-12 மாதங்களுக்கு பிறகு)

  • பச்சையாகவோ, பழுத்தோ இரண்டு வகையிலும் பயன்படுத்தபடுகிறது.

  • நேந்திரன் வாழைத் தோட்டத்தில் இடைவெளிகளை நிரப்ப பச்சநாடன் பயிரிடப்படுகிறது. இது நேந்திரன் அறுவடை செய்யும் போது அறுவடைக்குத் தயாராகி விடும்.

  • இலைப்புள்ளி நோய், வாழை முடிக்கொத்து நோயை தாங்கி நிற்கும். ஆனால் வாடல் நோய் தாக்குதலுக்கு ஆளாகும்.

15.லகாடான்:

  •  இது சந்தைகளில் உண்ணும் பயன்பாட்டிற்காக விற்கப்படும் ஒரு வித இரகமாகும்.

  • பழம் பழுக்கும் போது கவரக்கூடிய தங்க மஞ்சள் நிறமாக இருக்கும்.

  • தோலை எளிதாக உரிக்கலாம். சதைப்பகுதி இளம் ஆரஞ்சு முதல் ஆரஞ்சு நிறமாக இருக்கும்.

  • நல்ல நறுமணத்துடன் காணப்படும்.

  • பழத்தின் அளவு 10-20 செ.மீ நீளத்துடன் இருக்கும்.

இரு பயன்பாடுள்ள இரகங்கள்:

1.நேந்திரன்

  • திருச்சி மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்களில் பெருமளவு பயிரிடப்படும் இரகமாகும்

  • பதப்படுத்தலுக்கு ஏற்ற முக்கிய இரகம்

  • பழமாக உண்ணலாம் அல்லது பழுக்காத போது காய்கறியாக பயன்படுத்தலாம்

  • நடுப்பகுதியில் தெளிவான இளஞ்சிவப்பு நிறமாற்றம் இருக்கும்

  • குலைகள் அடர்த்தியாக இல்லாமல், 12 – 15 கிலோ எடையுடன், 4-6 கைகள், தெளிவான மூன்று விளிம்புகளுடனும், தெளிவாகத் தெரியும் காம்புடனும் காணப்படும்

  • பழங்கள் பெரிதாக, நீளமாக, கெட்டியாக காணப்படும், தோல் கெட்டியாக, தங்க மஞ்சள் நிறத்தில், உரிப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும்

  • சதைப்பகுதி – திடமாக, சதைப்பாக, நல்ல வாசனையுடன், மிதமான சுவையுடன் இருக்கும்.

  • நீண்ட வைப்புக்காலம்

  • மறு தாம்பு பயிருக்கு ஏற்றதல்ல

  • பயிரிடும் காலம் – 11-12 மாதங்கள்

2. சக்கை

  • குறைவான இடுபொருள்கள் இடும் நிலைகளிலும், வறட்சி, களர், நூற்புழுத் தாக்குதலை தாங்கும் நிலைகளிலும் வர்த்தக ரீதியாக பயிரிடப்படும் இரகமாகும்.

  • இது இரு பயன்பாடுள்ள இரகமாகும்

  • தமிழ்நாட்டின் மதுரை திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பயிரிடப்படும் இரகமாகும்.

  • நடுத்தர உயரமுடையது. அறுவடை செய்ய 12-14 மாதங்கள் ஆகும்

  • குலை 15-18 கிலோ எடையுடன் காணப்படும்

  • பழங்கள் சிறியதாக, தடித்து, முளைக்குமிழ் இல்லாமல் இருக்கும்.

மேலே செல்க

சமைக்க உகந்த இரகங்கள்

மொந்தன் / கரி பேல்

  • கர்நாடகாவின் அனைத்து வாழை விளையும் பகுதிகளில் பரவலாக பயிரிடப்படும்   இரகம்.

  • சற்றே உயரமாக, அடர்த்தியாக, 8-20 கிலோ எடையுள்ள குலையுடன்  காணப்படும்.

  • பழங்கள் தடித்து, காம்புடன், இளம் பச்சை நிறத்தில் காணப்படும்.

  • சமைக்க உகந்தது மட்டுமல்லாமல், தண்டின் நடுப்பகுதி மருத்துவ குணங்களையும் கொண்டது.

  • மகரந்த சேகரம் இல்லாமல் உள்ள ஆண் பூக்கள் பிரபலமான உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.

  • வாழை பூக்காம்புச் செதில் தேமல் நோய் மற்றும் ப்யூசேரியம் வாடல் நோய் தாக்குதலுக்கு அதிகம் ஆளாகும்.

பொந்தா:

பயிரிடும் காலம்  : 13 மாதங்கள்

குலையின் எடை : 12-15 கிலோ

சிறப்பியல்புகள்

  • குலைகள் 5-6 கைகளுடன் இருக்கும். சமைக்க உகந்த இரகமாகும்.

  • பழங்கள் சிறியதாக, சிறிது வளைந்து, தெளிவான விளிம்புடன், நுனியில் கூர்மையற்று காணப்படும்.

  • தோல் கெட்டியாக பச்சை நிறத்திலும், சதைப்பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படும்

  • ஆண் பூ சமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறகது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகலிலும் பயிரிட ஏற்ற இரகம்.

உண்ணத் தகுந்த இரகங்கள்:

1. குட்டை கேவண்டிஷ்

சிறப்பியல்புகள்

  • கர்நாடகாவில் உண்ணுவதற்கும், பதப்படுத்துவதற்காகவும் வர்த்தக ரீதியாகப்   பயிரிடப்படுகிறது.

  • மரம் குட்டையாக, மிகக்குறைவான அளவே காற்றின் சேதத்திற்கு ஆளாகும்.

  • குலையின் அளவு, பழத்தின் நீளம் மற்றும் அளவு சரியான அளவில் இருக்கும்.   வைப்புக்காலம் குறைவு.

  • குலை 15-25 கிலோ எடையுடன், 6-7 கைகள், ஒவ்வொரு கையிலும் 13 பழங்களுடன் காணப்படும்.

  • தோல் கெட்டியாக, பச்சை நிறத்தில் இருக்கும், பழுத்தாலும் பச்சை நிறத்திலேயே காணப்படும்.

  • மென் மண்ணில் அதிக இடுபொருள்கள் இடும் நிலையில் நன்றாக வளரும்.

  • அடர் நடவு முறை மற்றும் சொட்டு நீர் பாசனம் இணைந்த நிலையில், இந்த   இரகத்தை வெற்றிகரமாக பயிர் முடிகிறது.

  • பனிப்பகுதிகளில் சிகாடோகா இலைப் புள்ளி நோய் தாக்குதலுக்கு அதிகளவில்   ஆளாகும்

2.ரொபஸ்டா

சிறப்பியல்புகள்

  • இது கர்நாடகாவின் சில பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் உண்ணும் பயன்பாட்டிற்காக பயிரிடப் படுகிறது.

  • ஓரளவு உயரம் உடையது.

  • அதிக விளைச்சல் தரும்.  குலைகள் பெரியதாக, நன்கு வளர்ச்சியடைந்த பழங்களை உற்பத்தி செய்யும்.

  • அடர்பச்சை நிறத்தில் இருக்கும் பழங்கள் பழுக்கும் போது அடர் மஞ்சள் நிறமாக மாறும்.

  • பழங்கள் அதிக சுவையுடன், நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

  • குலைகள் 25-30 கிலோ எடையுடன் இருக்கும். முட்டுத் தருவதற்கு கம்பம் தேவைப்படும்.

  • வைப்புக் காலம் குறைவு. பழமாகிய பின்னர் சதைப்பகுதி தோலை விட்டு வெளியே வரும்.

  • அதனால் நீண்ட தூர போக்குவரத்துக்கு ஏற்றதல்ல.

  • பனி பிரதேசங்களில் சிகாடோகா இலைப்புள்ளி நோய் தாக்குதலுக்கு அதிகம் ஆளாகும்.

3.அமிர்தபாணி / ரஸ்தாளி :

சிறப்பியல்புகள்

  • கர்நாடகாவில் வர்த்தக ரீதியாக பயிரிடப்படும் மிதமான உயரம் உடைய இரகம்.

  • தனிப்பட்ட பழத் தரம் இருப்பதால் அதிக விலையுடையதாக உள்ளது. உண்ணும் பயன்பாட்டிற்கு ஏற்றது.

  • பழத்தின் வளர்ச்சி முழுவதும் மஞ்சள் கலந்த பச்சை நிறமாக இருக்கும். ஆனால் பழுத்தவுடன் இளம் மஞ்சள் நிறத்திலிருந்து தங்க மஞ்சள் நிறத்திற்கு மாறும்.

  • பழம் மிகுந்த சுவையுடன், நல்ல வாசனையுடன் காணப்படும்.

  • நீண்ட பயிரிடும் காலம், ப்யூசேரியம் வாடல் நோய்க்கு அதிகமாக தாக்கப்படும்.

  • வெயில் அதிகம் பட்டு பழங்கள் சேதமடைவதைத்தடுக்க குலைகளை பிளாஸ்டிக் உறை போட்டு மூடவேண்டும் மற்றும் பழங்களின் சதைப்பகுதி கட்டியாவதாலும் பயிர் சாகுபடி அதிக செலவுடையதாகிறது.

4.பூவன்:

சிறப்பியல்புகள்

  • வர்த்தக ரீதியாக அனைத்து பகுதிகளிலும் பயிரிடக்கூடிய இரகம்

  • இது ஒரு பல்லாண்டு பயிராக பயிரிடப்படுகிறது.

  • பழம் சற்று புளிப்பு சுவையுடன், சதைப்பகுதி திடமாக, புளிப்பு - இனிப்பு நறுமணத்துடன் இருக்கும். பழங்கள் பழுக்கும் போது காய்கள் மஞ்சளாக மாறும்.

  • நடுத்தர அளவுடைய குலையுடன், மிக நெருக்கமாக அமைந்த பழங்களுடன், நீண்ட வைப்புக் காலம், பழங்களில் பிளவு ஏற்படுவதற்கு எதிர்ப்புசக்தியுடையது.

  • வாழை பூக்காம்பு செதில் தேமல் நோய், வாழை கோடு உடைய நச்சுயிரி தாக்குதலுக்கு அதிகம் பாதிக்கப்படுவதால் விளைச்சல் குறையும்.

5.இலக்கிபேல் :

சிறப்பியல்புகள்

  • இது பொதுவாக நெய் பூவன் என்றழைக்கப்படுகிறது.

  • கர்நாடகா மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் வர்த்தக ரீதியாக பயிரிடப்படுகிறது.

  • மெலிதான மரத்துடன், குலைகள் 15-30 கிலோ எடையுடன் காணப்படும்.பயிரிடும்  காலம் 12-14 மாதங்கள்.

  • அடர் பச்சை நிறத்தில் இருக்கும் பழங்கள் தங்கமஞ்சள் நிறத்திற்கு மாறும். நீண்ட  வைப்புக்காலம்.

  • பழங்கள் நல்ல நறுமணத்துடன், சுவையாக, மாவு போன்று திட்டமாக இருக்கும்.

6.சேவட் வேலச்

சிறப்பியல்புகள்

  • உண்ணும் பயன்பாட்டிற்கான நல்ல தரமுடைய பழங்களைக் கொண்ட இரகம்.

  • கர்நாடகா மாவட்டத்தின் தெற்கு கன்னாரா மாவட்டங்களில் பாக்குத் தோப்புகளின் நிழலில் பயிரிடப்படுகிறது.

  • மிதமான உயரத்துடன், மெலிதான மஞ்சள் கலந்த பச்சை நிறத் தண்டுடன், சிவப்பு நிற விளிம்புடைய காம்புடன் இருக்கும்.

  • பழங்கள் பெரிதாக , மிக மெலிதாக, தோல் பேப்பர் போன்று மெலிதாக, சதைப்பகுதி திடமாக காணப்படும்.

  • குலை 12 கிலோ எடையுடன், ஒரு குலையில் 150 பழங்களுடன் காணப்படும்.
    பயிரிடும் காலம் 13 மாதங்கள்.

7.நஞ்சன்குட் ரசபேல்

சிறப்பியல்புகள்

  • கர்நாடகாவின் நஞ்சன்குட் பகுதிகளை சுற்றி விளையும் ஒரு தனிப்பட்ட இரகம்.

  • பழம் பழுக்கும் போது ஒரு தனிப்பட்ட வாசனை வெளி வருவதை வைத்து இந்த இரகத்தை கண்டறியலாம்.

  • பழங்கள் நடுத்தர அளவுடன் காணப்படும். சதைப்பகுதியில் கட்டி உருவாகும்.

  • நீண்ட வைப்புக்காலம், பழுக்க ஆரம்பித்து 15 நாட்கள் வரை இதை அப்படியே வைத்திருக்கலாம்.

  • எலக்கி, பச்சமேல் இரகங்களைக் காட்டிலும் பனாமா வாடல் நோய்க்கு அதிகம் தாக்கப்படும்.

8.சந்திரபேல்

சிறப்பியல்புகள்

  • இது ‘செவ்வாழை’ என்றும் அழைக்கப்படுகிறது.

  • தண்டுப்பகுதி, காம்பு, குலை காம்பு செதில் ஒரே மாதிரியான கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும்.

  • மரம் உயரமாக, அடர்த்தியாக காணப்படும்.

  • குறைவான மகசூல், 30-40 கிலோ எடையுள்ள குலைகள்

  • வாழை முடிக்கொத்து நோய், வாடல் நோய், நூற்புழுக்கள் தாக்குதலுக்கு அதிகம் ஆளாகும்.

9.மரபேல்

சிறப்பியல்புகள்

  • இது ‘மலை வாழை’ என்றும் அழைக்கப்படுகிறது.

  • மரம் உயரமாக உறுதியாக இருக்கும்.

  • பழங்கள் கோண வடிவில், கெட்டியான தோலுடன், பெண்பூவின் மீது தளர்வாக அமைந்திருக்கும்.

  • பழங்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறமாக மாறும். சதைப்பகுதி வெள்ளையாக, தனிப்பட்ட வாசனையுடன் காணப்படும்.

  • காபித் தோட்டங்களில் நிழல் தரும் பயிராக பயிரிட ஏற்றது.

  • பல்லாண்டு பயிரிடுவதால் முடிக்கொத்து நோய் தாக்குதலுக்கு ஆளாகும்.

10.நெய்பூவன்

சிறப்பியல்புகள்

  • கர்நாடகாவில் அதிகளவில் வர்த்தக ரீதியாக பயிரிடப்படும் ஒரு இரகம்.

  • மரம் மெலிதாக, மிதமான உயரத்துடன், 10-15 கிலோ எடையுள்ள குலையுடன் இருக்கும்.

  • பழங்கள் சிறியதாக, மெலிதாக, தெளிவான காம்புடன், அடர்த்தியாக இருப்பதால் காற்று அடித்தால் விழுவது போன்ற தோற்றத்துடன் காணப்படும்.

  • பழம் பழுக்கும் போது அடர் மஞ்சள் நிறமாக மாறும். சதைப்பகுதி வெண்மையாக இருக்கும்.

  • நீண்ட வைப்புக் காலம், பழுத்தாலும் பழம் காம்பை விட்டு உதிராது, இதனால் நீண்ட தூர போக்குவரத்திற்கு ஏற்றது.

  • இலைப்புள்ளி நோயை தாங்கி வளரும். ஆனால் ப்யூசேரியம் வாடல் நோய், நூற்புழுக்கள், பூக்காம்பு செதில் தேமல் நோய் தாக்குதலுக்கு அதிகமாக
    பாதிக்கப்படும்.

மேலே செல்க

சமைக்க உகந்த இரகங்கள்:

நேந்திரன்

சிறப்பியல்புகள்

காய் சற்று வளைந்து, கெட்டியான பச்சை நிற தோலுடனும்,  பழுக்கும்போது நல்ல மஞ்சள் நிறமாகவும் மாறிவிடும்

பழுத்த நிலையிலும் நல்ல மா‌‌‌‌வு சத்துடன் கெட்டித் தன்மையாக இருக்கும்.

குறிப்பு

தண்டுத் துளைப்பான், பூமடல் தேமல் நோய் ,நூ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ற்புழுக்கள் ஆகியவற்றால் இவை எளிதில் பாதிக்கப்படும்.

உண்ணத் தகுந்த இரகங்கள்:

  1. பாலயம் கோடான்

சிறப்பியல்புகள்

  • கேரளாவில் பரவலாக பயிரிடப்படும் இரகமாகும்.

  • பழங்கள் மிக மென்மையாக இருக்கும்.

  • அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள நிலைகளில் குளிர்ச்சி ஏற்படுத்த  பயிரிடப்படுகிறது.

    2. செவ்வாழை/கப்பவாழை:

சிறப்பியல்புகள்

  • கேரளாவில் இது ‘கப்ப வாழா’ (அ) சென்கதளி என்றும் அழைக்கப்படுகிறது.

  • மற்ற இரகங்களைக் காட்டிலும் அதிக விலையுடையது.

  • பழம் சிவந்த தோலுடன் இருக்கும்.

  • பழங்கள் பெரிதாக, பழுக்கும் போது அடர் பழுப்பு நிறத்திலிருந்து அடர் சிவப்பு  நிறமாக மாறும்.

  • உண்ணும் பகுதி மிக மென்மையாக இருக்கும்.

    3.ரஸ்தாளி:

சிறப்பியல்புகள்

  • நடுத்தர உயரமுடையது. இதன் பழங்கள் மிகுந்த சுவை மற்றும் நறுமணம்
    கொ‌‌ண்டவை

  • தனித்தன்மையான பழத் தரத்தால் ரஸ்தாளி மிக பிரபலமாக இருக்கிறது. உண்ண தகுந்த இரகங்களில் இது அதிக விலையுயைடய இரகமாகும்.

  • தண்டு மஞ்சள் கலந்த பச்சை நிற‌த்தில் ஆங்காங்கே  பழுப்‌‌புநிற திட்டுக்களுடன் இருக்கும். இலைக்காம்பு மற்றும் இலையுறை    இளஞ்‌சிவப்பு நிறத்திலும்
    பெண் மலர்களுக்கு அடுத்து சில நிலையான ஆண் மலர்களை கொண்டிருக்கும்.ஒரு குலையில் 5 முதல் 7 சீப்புகள் காணப்படும்.

  • காய்கள் பழுக்கும் வ‌ரை மஞ்சள் கலந்த பச்சையாகவும் பழுத்த பின் வெளிர் அல்லது தங்க மஞ்சள் நிறத்திற்கு மாறும்.

குறிப்புகள்

  • நீண்ட பயி‌‌ர்க்காலம் கொண்ட இது, ஃபு‌ஸேரியம் வாடல் நோய்த் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகும்.

  • சூரிய வெப்பத்தால் பழங்களில்  வெடிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், குலையினை பாலீத்தின் பை கொண்டு மூடி வைப்பது அவசியம்.

    4.மொந்தன்

பயிர்க்காலம்:  12 மாதங்கள்    

குலையின் எடை:  18 - 20 கிலோ

சிறப்பியல்புகள்

  • காய்கள் பெ‌ரிதாகவும், நடுப்பகுதி தடித்தும், நுனி‌ப்பகுதி வளைந்தும், வெளி‌‌ர் பச்சை நிறத்தில் இருக்கும்.

  • தோல் பொதுவாக பச்சை நிறமாக இருக்கும்.

  • நடுத்தண்டு நல்ல வளர்‌ச்சியுடன் பல மருத்துவ குணங்களை கொண்‌டது

  • இதன் இலைக‌ளுக்காகவும் இவை சாகுபடி செய்யப்படுகின்றது.

கு‌றி‌‌‌‌‌‌‌ப்புகள்

  • வாழை முடிக்கொத்து நோய்க்கு எதிர்ப்பு திறனுடையது.  களர் உவர் நிலையை தாங்கும் தன்மையுடையது. சாதகமற்ற சூழ்நிலையிலும் இயல்பாக குலை தள்ள கூடியது .

  • பியூசேரியம் வாடல் ‌நோயின் தா‌க்குதலுக்கு எளிதில் உள்ளாகும்.

    5. எத்தக்கா (அ) நேந்திரன்

 சிறப்பியல்புகள்

  • காய் சற்று வளைந்து, கெட்டியான பச்சை நிற தோலுடனும்,  பழுக்கும்போது நல்ல மஞ்சள் நிறமாகவும் மாறிவிடும்.

  • பழுத்த நிலையிலும் நல்ல மா‌‌‌‌வு சத்துடன் கெட்டித் தன்மையாக இருக்கும். 

குறிப்பு

  • தண்டுத் துளைப்பான், பூமடல் தேமல் நோய் ,நூ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ற்புழுக்கள் ஆகியவற்றால் இவை எளிதில் பாதிக்கப்படும்.

    6. சேவட் வேலச்:

 சிறப்பியல்புகள்

  • தென்னை மற்றும் பாக்குத் தோப்புகளில் ஊடுப‌யி‌ராகப் பெரும்பாலும் பயிரிடப்படுகின்றது.

  • நடுத்தர உயரத்துடன், தண்டுப்பகுதி மெலிந்தும் காணப்படும். மஞ்சள் நிற நடுத்தண்டும், இலைக்காம்பின் நுனி சிவப்பு நிறமாகவும் இருக்கும். 

  • பழங்கள் சிறியதாக, சதைப்பற்றுடன், சுவையாகவும் இருக்கும்.

    7. ரொபஸ்டா

சிறப்பியல்புகள்

  • இது ‘மோரிஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.

  • கேரளா முழுவதும் பயிரிடப்படுகிறது.

  • பழம் பழுத்தாலும்பச்சை நிறத்தை அப்படியே வைத்திருக்கும்.

    8.கற்பூரவள்ளி

சிறப்பியல்புகள்

  • இந்த இரகம் உயரமாக, அடர்த்தியாக வளரு. வளம் குன்றிய மண் வகைகளிலும்  கூட நன்கு செழித்து வளர்பவை.

  • பயிரிடும் பருவ கால வேறுபாட்டை‌ப் பொறுத்து, இவை சில சமயங்களில் விதையுடன் இருக்கும்.

  • பழ‌ங்கள் சாம்பல் பூசப்பட்ட தங்க மஞ்சள் நிறமாகவும்,  இனிப்பாகவும், நீண்ட  வைப்புக் காலமும் கொண்டது.

குறிப்பு

  • வாடல் நோயால் அதிக  பாதிப்புள்ளாகும். எனினும் இலைப்புள்ளி நோயை தாங்கி  வளரும். வறண்‌ட, உவர் நிலங்களிலும் பயி‌ரிட உகந்தது.

    9.கதளி

சிறப்பியல்புகள்

  • கேரளாவில் பரவலாகப் பயிரிடப்படும் இரகம்.

  • பழங்கள் மிகுந்த சுவையுடன், சிறிய அளவில் காணப்படும்.

  • ஒரு குலையில் 5-8 கைகள், 85 பழங்கள், 7-9 கிலோ எடையுடன் இருக்கும்.

  • ஹிந்து கோயில்களில் இறைவனுக்குப் படைக்கவும், உண்ணும் பயன்பாட்டிற்கும், மருத்துவ பயன்பாட்டிற்கும் பயனாகிறது.

    10. நிஜலிபூவன்

சிறப்பியல்புகள்

  • நிழலைத் தாங்கி வளரும் ஒரு இரகம்.

  • பாலயன்கோடான் இரகத்தை விட விலை உயர்ந்தது.

  • பழங்கள் மிக இனிப்பாக, மென்மையான, மெலிதான தோலுடன் இருக்கும். வைப்புக்காலம் குறைவு. குலையிலிருந்து பழங்கள் எளிதில் உதிர்ந்து விடும்.

  • மானாவாரி மற்றும் இறவைப் பாசன நிலைகளில் தென்னந் தோப்புகளில் ஊடு பயிராக பயிரிட ஏற்றது.

  • பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு குறைவாக ஆளாகும். மறுதாம்பு பயிராக மானாவாரி நிலைகளில் பயிரிட ஏற்றது.

    11. குன்னன்

சிறப்பியல்புகள்

  • கேரளாவில் பரவலாக பயிரிடப்படும் இரகமாகும்.

  • இது இரு பயன்பாடுள்ள இரகமாகும்.

  • பயிரிடும் காலம் : 6 மாதங்கள்

  • நல்ல வைப்புக் காலம்

  • பழங்கள் உண்ணவும், குழந்தைகளுக்கான இணை உணவில் இதன் பழத்தூள்
    சேர்க்கப்படும். 

  • ஒவ்வொரு குலையிலும் 7-9 கைகள், 11-17 கிலோ எடையுடன் இருக்கும்.

12. ஆயிரங்க பூவன்

சிறப்பியல்புகள்

  • பொள்ளாச்சிப் பகுதிகளில் பூவிலாக் கொன்னை என்றழைக்கப்படுகிறது.

  • ரஸ்தாளி இரகத்தின் மொட்டிலிருந்து உருவாக்கப்பட்ட இரகம்.

  • ரஸ்தாளி இரகத்திலிருந்து வேறுபட்டது. இதில் ஆண் பூக்கள் இல்லை என்பதால்  முழுவதும் பழங்களால் சூழ்ந்திருக்கும்.

  • முதல் 5-6 கைகள் ரஸ்தாளி இரகம் போன்று இருக்கும். மீதி உள்ள பழங்கள் அளவில் வேறுபட்டிருக்கும்.

  • ஒரு குலையில் 500 பழங்கள் இருக்கும். 25 கிலோ எடையுடையதாக இருக்கும்.

  • பயிரிடும் காலம் 15 மாதங்கள்.

 

மேலே செல்க